மதத் துவேஷம் தலை விரித்தாடும் மணிப்பூர்!

ச.அருணாசலம்

மணிப்பூர் கலவரம் எண்ணற்ற பழங்குடி மக்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. தேடித் தேடி அழிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ  தேவாலயங்கள், வெளியேற்றப் பட்டுள்ள கிறிஸ்துவர்கள், தீக்கிரையாக்கப்பட்டுள்ள அவர்களின் சொத்துக்கள் … சொல்ல வரும் செய்தி என்ன?

ஏராளமான இளைஞர்களின் எதிர்காலத்தை தொலைத்துள்ளனர். கணக்கற்ற இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கும், தாக்குதலுக்கும் பலியாகி உள்ளனர். குழந்தைகள் நிர்கதியாகியுள்ளனர்.

இக்கலவரம் கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தவரும் சந்திக்காத கொடுமை என்ற போதும், கலவரம் 2002 குஜராத் கலவரத்தின் சாயலைக் கொண்டுள்ளதாக பத்திரிக்கையாளர்கள் வருணித்துள்ளனர். ஆனால், இக் கலவரம் 2008ல் நடந்த கந்தமால் (ஒரிசா) கலவர பாணியை ஒத்திருந்ததாக மணிப்பூர் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

ஆம், திட்டமிட்டு பரப்பப்பட்ட  ‘இந்து மக்களுக்கு ஆபத்து ‘, மணிப்பூரில் இந்துக்கள் சிறு பான்மையினராக ஆகி விட்டனர் என்ற பரப்புரை, கிறித்தவர்கள் மேல் வெறுப்புணர்வை மெய்தீ மக்களிடையே விதைத்தது .

போலித்தனமான சமயஞ் சார்ந்த (தேசீய ) வாதம், இனத்தை முன்னிறுத்தும் இனவாதமாக சீரழிந்தது, ஆனால், இந்த கருத்து சீரழிவை “வேதமாக” ஏற்றுக் கொள்ள ஏராளமான மெய்தீ இன மக்களும் தயார்படுத்தப்பட்டு விட்டனர் என்பது தான் வேதனை!

பஜ்ரங் தல், விஸ்வ இந்து பரிஷத் , ஆர் .எஸ்.எஸ் போன்ற அமைப்புகளால் பல காலமாக முன்னெடுக்கப்பட்ட இந்த பிரச்சாரம் 2017-ல் கொல்லைப்புற வழியாக, பா ஜ க ஆட்சியை பிடித்த பிறகு, அரசின் கொள்கையாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது.

மலைவாழ் பழங்குடி இனத்தவரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் ஆட்சியமைப்பிலும், நில உடமை விவகாரங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை காங்கிரசு ஆட்சிகாலத்தில் துளிர் விட்டிருந்தாலும், பா ஜ க ஆட்சிக்கு வந்த பின் (2017க்குப்பின்)
தலை விரித்து ஆடியது.


# மெய்தீ இன மக்களை  பட்டிலினத்தவராக அறிவிக்க எடுத்த முயற்சி,

# கிறித்தவர்களான குக்கி – நாகா பழங்குடி மக்களின் நில உரிமைகளை மறுதலித்தல்,

# அவர்களது பூர்வீக நிலங்களை அரசு நிலங்களாக, வனத்துறை நிலங்களாக அறிவித்தல்,

# குக்கி இன மக்கள் பயிரிடும் நிலங்களை ‘கஞ்சா பயிரிடுகின்றனர் ‘ என குற்றஞ்சாட்டி அபகரித்தல்,

# பழங்குடி மக்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் காரணமாக ஏற்பட்ட ராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை திரும்ப பெறுதல்…

போன்ற மணிப்பூர் பைரன் சிங் அரசின் நடவடிக்கைகள் 43% சதவிகிதம் உள்ள கிறித்தவ பழங்குடி இனத்தவரை மணிப்பூர் மாநிலத்தின்  இரண்டாந்தர’ குடிமக்களாக மாற்றியுள்ளது.
வசதியும், வளமும், அதிகாரமும் நிரம்ப பெற்ற மெய்தீ இன மக்களை (பட்டியலினத்தில் இணைப்பதன் மூலம்) மலைவாழ் பழங்குடி மக்களுக்கெதிராக களத்தில் இறக்கியது பா ஜ க.


இந்த தீய எண்ணங்களுக்கு தூபம் போட “பொய்ப் பிரச்சாரத்தை” பாஜக செய்கிறது! பழங்குடி மக்கள் “கஞ்சா” பயிரிடுகின்றனர், சர்வதேச போதைப் பொருள் மஃபியாவின் கைப்பாவைகள் இந்த குக்கி இன மக்கள். இவர்களின் நடவடிக்கைகள் தேச விரோதமானவை, இவர்கள் சர்ந்திருக்கும் மதமும், அந்நிய சக்திகளின் மதம் என்ற பிரச்சாரங்கள் வலுவாக முன்னெடுக்கப்பட்டன!  இதற்கு  மெய்தீ  இன மக்களின் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார தலைமையும் அங்கீகாரம் கொடுக்கிறது! பழங்குடியினர் எதிராக ‘தொண்டர் படை’ யைத் திரட்டி வருகிறது. இந்த கலாச்சார சீரழிவு மெய்தீ இன மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பல்கிப் பெருகியுள்ளது.

இதன் வெளிப்பாடே மணிப்பூர் உயர்நீதி மன்ற தீர்ப்பும்,  மணிப்பூர் மாநில பார் கவுன்சிலின் பழங்குடிக்களுக்கு எதிரான தீர்மானமும் ஆகும்.

மணிப்பூர் அரசு உச்ச நீதி மன்றத்தில் கலவரத்திற்கான காரணமாக சொல்லியவை ; பழங்குடியினர் கஞ்சா பயிரிடுகின்றனர், மியான்மரிலிருந்து ரோகிங்யா மக்கள் (இஸ்லாமியர்) ஊடுருவுகின்றனர். இவைகளை எதிர்த்து அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் தான் இனக் கலவரங்களை ஏற்படுத்தி உள்ளன, மெய்தீ இன மக்களுக்கு எஸ் டி. அந்தஸ்து வழங்குவது அல்ல, என்று  பிரச்சினையை திசை திருப்பி உள்ளது.

குக்கி பழங்குடி இனப் பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ள அதிரடிப் படை!

மணிப்பூர் பார் கவுன்சிலும் இதையே தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிடம் தெரிவித்துள்ளது. ”எஸ் டி அந்தஸ்து வழங்குவதை ‘ சாக்காக வைத்து , கஞ்சா பயிரிடலை எதிர்த்த அரசின் நடவடிக்கையை முறியடிக்கவே, இந்த இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று பார் கவுன்சில் தீர்மானம் கூறுகிறது.

கலவரம் வெடித்து இருபது நாட்கள் ‘ தூங்கி விட்டு’ மே 26-ல் மணிப்பூர் வந்த உள்துறை அமைச்சர் அமீத் ஷா கூறியதென்ன?  ‘கலவரத்திற்கான காரணம் மணிப்பூர் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு தான், யாருடைய  நலனுக்கும் ஊறு இன்றி பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவை எட்டுவோம், அமைதியை நிலை நாட்டுவோம்’ என்று அமீத் ஷா கூறியுள்ளார் . ‘இஞ்சி தின்றவர் போல்’ முதல்வர் பிரேன் சிங்கும், கடப்பாரையை முழுங்கியவர் போல், பார் கவுன்சிலும் முழிக்கின்றன.

உண்மையை மறைக்க முடியாத நிலையில், அமீத் ஷா இருந்தாலும், தனது கட்சியின் போலி பரப்புரையையும், கிறித்தவ வெறுப்பு பிரச்சாரத்தையும் கண்டிக்க முடியாமல், குற்றம் சாட்ட முடியாமல் ஒளிந்து கொண்டார் என்றே கூற வேண்டும்.

கிறித்தவர்களின் வேத ஆலயங்களை மணிப்பூர் முழுவதும் தீக்கிரையாக்கியது, மெய்தீ இன மக்களின் பயங்கர வாத அமைப்புகளான  ஆரம்பை தெங்கோல், மெய்தீ லீபுன் ஆகியவற்றின் உறுப்பினர்களே.


இந்த வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டது  குக்கி இன பழங்குடியினர் அதிகம் வாழும் சூரசந்த்பூர் மாவட்டத்திலும் நடந்தேறியது. மெய்தீ மக்கள் அதிகம் வாழும் பிஷ்ணுபூர் (57) இம்பால் (கிழக்கு) மாவட்டம் (15), இம்பால் (மேற்கு) மாவட்டம் (53) ஆகியவற்றிலும் நடந்தேறியுள்ளது. இதன் பொருள் இக்கலவரம் குக்கி இனத்தை சார்ந்த கிறித்தவர்களை மட்டும் குறி வைக்கவில்லை, மெய்தீ இனத்தை சார்ந்த கிறித்தவர்களை எதிர்த்தும் குறி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மணிப்பூர் கலவரத்தில் குக்கி இன மக்களின் தேவாலயங்கள் மட்டுமல்ல, மெய்தீ இனக் கிறிஸ்துவர்களின் 247 தேவாலயங்களும் சூரையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாக பிரபல பத்திரிகையளர் ஆண்டோ அக்காரா தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட தேவாலயங்களின் நிர்வாகிகளிடம் ”இனி திரும்பி வரப் போவதில்லை” என இந்துத்துவ தீவீரவாதிகள் கையெழுத்தும் வாங்கியதாக சொல்லப்படுகிறது. காவல்துறை முழுக்கவே இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவாக இருந்த நிலையில், காவல்துறையில் குக்கி இன கிறிஸ்துவ மக்களின் புகார்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நிர்கதியான நிலையில் குக்கி பழங்குடிகள்!

சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாராயினும் அவர்கள் எங்களது எதிரிகளே என்று கூறுகின்றனர் சங்கிகள். இந்த தேசம் இந்துக்களுக்கானதே என்று கொக்கரிக்கும் இவர்கள் சனாதன தர்மமே இந்த தேசத்தின் பூர்வீக தர்மம் மற்றவை எல்லாம் வந்தேறிகளால் மடைமாற்றம செய்யப்பட்டவை என்கின்றனர்.

மூன்று நூறாண்டுகளுக்கு முன்பு வரை குறிப்பாக 1700 க்கு முன்பு மெய்தீ பிரிவு மக்கள் சனமாயி  அல்லது மெய்தீ என்ற மத்த்தையே பின்பற்றினர். அதன் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டனர். இந்திய வட கிழக்கு பகுதியில் வசித்து வந்த மெய்தீ பிரிவு மக்களுக்கு மன்னராக சாராஇரங்போ இருந்து வந்தார் . 1704ம் ஆண்டு வாக்கில் சண்மதங்களில் ஒன்றான வைணவ மத போதகர்ளின் வாத்த்தை ஏற்றுக்கொண்ட சாராஇரங்போ வைணவத்தை தழுவினார் . மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி (வேறு வழி?) என மெய்தீ மக்கள் பெரும்பாலும் சனமாயி மத்த்தை விட்டு அரசனின் மதத்தில் ஐக்கியமாயினர் . மன்னர் சாராஇரங்போ தன் பெயரை பீதாம்பர சிங் என மாற்றிக் கொண்டார். இந்த சம்பவத்திற்கு முன்பே மணிப்பூரில் இஸ்லாமியர்ளும் உள்ளனர்.


1993ல் பங்கல் மக்களுக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்கல் முஸ்லீம் மக்கள் மெய்தீ இந்துக்களின் வன்முறைக்கு பலியாயினர். இன்றும் கூட, மெய்தீ மக்களுக்கும் குக்கி பழங்குடியினர் இடையே உள்ள மோதலில் மெய்தீ இந்துக்களும், மெய்தீ இஸ்லாமியரும் வெவ்வேறு திசையில் தான் பயணிக்கின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

இதே பிரித்தாளும் வேலையை கிறித்தவ போதகர்கள் பழங்குடியினரிடையே பள்ளிக் கூடங்களை நிறுவிய போதும் செய்தனர். ஆனால், 1860 களுக்கு பின்னால் வந்த கிறித்தவர்கள் வட கிழக்கில் பரவினர் .

இதில் யார் வந்தேறிகள் ? யார் பூர்வீக மதத்தினர்? இந்த தேசம் யாருக்கு சொந்தம்? மனிதர்களை பிரித்தாண்டு தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயலும் சனாதனவாதிகள் தங்களது ஆளுமைக்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பர் , பரிசோதனைகள் செய்வர். அதற்கு மெய்தீ இன மக்களும் விதி விலக்கல்ல.

இந்த சூழ்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பொய் செய்திகள் பரவுவதற்கு பெருமளவு துணை புரிகின்றன. பொய் செய்திகளும், வதந்திகளும், ஜோடிக்கப்பட்ட செய்திகளும் இன்று சங்கிகளின் ஆயுதமாக மாறியுள்ளன. இதில், பெரும்பாலும் பெண்களை மையமாக வைத்தே வதந்திகள் பரப்பப் படுகின்றன. மெய்தீ இன பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் என்ற பொய்ச் செய்தியை பரப்பி
பழி வாங்கல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் சங்கிகள் இந்த பழிவாங்கலுக்கு ஆண்மக்களை மட்டுமின்றி, பெண்களையும் தயார்படுத்தி வருகின்றனர். இம்பால் பள்ளதாக்கில் வசிக்கும் குக்கி இன மகளிர் , பங்கல் முஸ்லீம் மகளிர், மெய்தீ கிறித்தவ மகளிர் இவர்களை குறிவைத்து தாக்க இந்து மெய்தீ பெண்கள் இன்று துணை போகின்றனர் .

இப்படியாக மக்களை கூறுபடுத்தி மோதவிட்டு, நாட்டையே சுடுகாடாக்கி விட்டு, சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time