இது கொரோனா கால முடக்கத்தில் மக்கள் சந்திக்க நேர்ந்த கொடூரங்களை சொல்கிறது! அன்று அதிகார வர்க்கம் போட்ட ஆட்டங்கள்! மத துவேஷங்களை பரப்பிய நிகழ்வுகள், மோசமான நிர்வாக அணுகுமுறைகள், எளிய மக்கள் அலைகழிக்கப்பட்ட துயரங்கள்.. போன்றவை கலை நேர்த்தியோடு காட்சிப்படுகிறது!
விடுதலைக்குப் பிறகு, இந்தியாவில், கொரோனா காலத்தில்தான், ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவே இடம் பெயர்ந்தனர். அதனை ‘பீட்’ ( BHEED) என்ற திரைப்படமாக எடுத்துள்ளார் அனுபவ் சின்ஹா. பீட் என்ற இந்தி சொல்லுக்கு கூட்டம் அல்லது கும்பல் என்பது பொருளாகும்.
பெருந்தொற்று கால நினைவுகளை நாம் இன்னும் மறக்கவில்லை. சொந்த நாட்டிற்குள்ளேயே மாநில எல்லைகள் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. சமுதாயத்தின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்தவர்கள் இதில் பாத்திரங்களாக வருகின்றனர். வயதான, குடிகாரத் தந்தையை சைக்கிளில் வைத்து, மிதித்து அழைத்துச் செல்லும் மகள் பாத்திரம்; தனியாக இருக்கும் தனது மகளை, கணவன் நீதிமன்ற ஆணை மூலம் அழைத்துச் செல்வதற்கு முன்பு, காரில் சென்று அழைத்து வரப் பார்க்கும் மேல்தட்டைச் சார்ந்த கீதாஞ்சலி,(இப்பாத்திரத்தில் டையா மிர்சா நடித்துள்ளார்), செய்தித் தாளை சானடரி நாப்கினாக பயன்படுத்தும் பெண்கள் என பல சம்பவங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன.
![](https://aramonline.in/wp-content/uploads/2023/06/sinha1200.jpg)
புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வை திரையில் எடுத்ததற்காகவே நாம் இதனைப் பார்க்கலாம். ‘ஆர்ட்டிக்கிள்’ – 15, ANEK, ‘தப்பட்’ போன்ற சமூகம் சார்ந்த படங்களை நேர்த்தியாக எடுத்த அனுபவ் சின்ஹா இந்தப் படத்தை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.
தேஜ்பூர் எல்லையில் உள்ள சாலையை மூடி, யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சூரியா என்கிற காவல் துணை ஆய்வாளருக்கு கொடுக்கப்படுகிறது. இதுவரை மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்த அவனுக்கு இந்த அதிகாரம் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான். ஆனால், கள நிலவரம் தெரியாமல், மேலே இருந்து வரும் உத்தரவை அப்படியே அமலாக்குவது என்பது அவனை நிலைகுலைய வைக்கிறது. இந்தப் பாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் அற்புதமாக நடித்துள்ளார்.
சாலைகளில் செல்பவர்கள் அடித்து விரட்டப்படுவதால், ரயில் பாதை வழியாக நடந்து, தங்கள் ஊருக்குச் செல்ல தொழிலாளர்கள் முற்படுகிறார்கள். எந்த இரயிலும் வராது என்ற எண்ணம். தங்கள் விதியை நொந்து, அயர்ந்து தூங்குகையில், ரயில் ஏறி 13 பேர் மரணிக்கிறார்கள். விதவிதமாக தண்டவாளத்திற்கு ஏற்ப, தங்கள் உடலை வளைத்து உறங்கும் காட்சி கையறுநிலையை உணர்த்துகிறது. முதல் பாதி கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் போல செல்கிறது.
மாட்டிக் கொண்டவர்கள் உணவுக்கு தத்தளிக்கிறார்கள். நடுவழியில் மாட்டிக்கொண்ட அவர்களுக்காக அரசாங்கம் கூட்டம் போட்டு, ஏதேனும் முடிவெடுக்கும் என அவர்களுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு, வாட்ஸ் அப் செய்திகளை பரப்பிக் கொள்கிறார்கள். பிழைக்க வழியில்லாமல், வெளியூரில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தாலும், தங்கள் மனதிற்குள் ‘சாதிப் பெருமிதத்தோடு’ இருக்கிறார்கள். காவல் அதிகாரி சூரியாவின் பெயரைப் பார்த்து தங்கள் சாதி என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
கதாநாயகன் சூரியாவோ, அதிகாரத்தை இன்னமும் முழுமையாக சவைக்காதவன். கதையின் தொடக்க காட்சியில், கோவில் அடிபம்பில் தண்ணீர் எடுத்த, தலித்தை கட்டி வைத்து அடித்த குற்றவாளிகளைக் கூட அவனால் ஏதும் செய்யமுடியவில்லை. அவனுக்கோ ரேணு ஷர்மா காதலி. மருத்துவரான அவளுக்கு, சூரியா இருக்கும் பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் வேலை. இவனது போதாமைகளை சுட்டிக் காட்டுகிறாள். உணவுக்கு பரிதவிக்கும் மக்களிடம், இவன் காட்டும் கறார் தன்மையைப் பார்த்து எள்ளி நகையாடுகிறாள். ‘ஷர்மா’ வை, ‘தாஸ்’ ஆன சூரியாவால் திருமணம் செய்து கொள்ள முடியுமா ? ரேணு ஷர்மாவாக, பூமி பட்டேனகர் நடித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைச் சார்ந்த – ‘விதி’, செய்தி சேகரிக்கும் பணியில் இவர்களோடு இருக்கிறாள். நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியாது. விதி பேசும் வசனங்கள் அரசாங்கத்தின் பாராமுகத்தை, சமூகத்தின் போதாமையைக் காட்டுகின்றன.
‘நாட்டின் வளர்ச்சி’ பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சிமெண்ட் கலவை கலக்கும் லாரி அனுமதிக்கப்படுகிறது. அதனுள்ளே தொழிலாளர்கள் அடைந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். நெருக்கடி விதவிதமாக தப்பிக்க முனைவதை, பணம் சேர்க்கும் ‘கலையைக்’ காட்டுகிறது.
குழந்தைகள் பட்டினியால் அலறினாலும், முஸ்லிம்களிடம் உணவுப் பொட்டலத்தை வாங்க மறுக்கும் ‘திரிவேதியின்’ ஜம்பம் பல் இளிக்கிறது. திரிவேதியாக பங்கஜ் கபூர் நடித்துள்ளார். நெருக்கடியிலும் மத வெறுப்பை பரப்ப நினைப்பவர்களை என்ன செய்யலாம்?
குழந்தைகளின் பசிக்காக, சட்டத்தை மீறும் ‘திரிவேதியை’ என்ன செய்வது என்ற சினிமாத்தனமான முடிவோடு கதை முடிகிறது. திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதியில் நம்பகத் தன்மை சற்று குறைகிறது.
Also read
இது ஒரு கறுப்பு வெள்ளை படம். பிரிவினை கால நினைவுகளை இது சித்தரிப்பதால், கறுப்பு வெள்ளைப் படமாக எடுத்துள்ளதாக அனுபவ் சின்ஹா கூறுகிறார். ஜெர்மனி இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, யூதர்களை தனது தொழிற்சாலையில் பணி அமர்த்தி, ஆயிரக்கணக்கான யூதர்களின் உயிரைக் காப்பாற்றிய புகழ்பெற்ற படமான ‘ஷிண்டலர்ஸ் லிஸ்ட்’ – டின் பெரும்பகுதி படமும் கறுப்பு வெள்ளை தான்.
மோசமான நிர்வாகம், தவறாக செய்தி பரப்புதல், மக்களை பிளவுபடுத்துதல், சாதி அமைப்பு என எல்லாமும் இதில் வருகின்றன. இரண்டு மணி நேர படம், தற்போது நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது. யதார்த்தத்திறகு அணுக்கமாக இருக்கும் இப்படம் திரை வரலாற்றில் தவறாது இடம் பெறும்.
விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply