திமுக அரசின் ஆபத்பாந்தனா ஆளுநர் ஆர்.என்.ரவி?

-சாவித்திரி கண்ணன்

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

திமுக அரசின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

திமுக அரசின் மீது, முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பாசம், அக்கறை என நான் ஆச்சரியப்படுகிறேன்.

ஆளுநர் தன்னுடைய கர்ண கடூரமான, முட்டாள்தனமான, ஏற்றுக் கொள்ளவே முடியாத அடாவடி பேச்சுக்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் தன்பால் திருப்பிக் கொள்கிறார்!

எதையாவது அடிக்கடிப் பேசி, நம் அனைவரையும் சரியாக உசுப்பிவிடுகிறார்! அடுத்த பத்து, பதினைந்து நாட்களுக்கு அதுவே நமது பேசு பொருள் ஆகிவிடுகிறது.

திமுக அரசின் மீதான மக்கள் அதிருப்திகள் அனைத்தையும் நொடியில் திசைமாற்றி, திமுக அரசை காப்பாற்ற வேண்டிய கடமையை, அதை கறாராக விமர்சிக்கும் என்னைப் போன்றோர்களுக்கே ஏற்படுத்திவிடுகிறார் என்றால், பாருங்களேன்.

திமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகள் மீதான  கோபங்களை மிக வீரியமாக மடைமாற்றம் செய்கிற இந்த ஆளுனர், ‘ஒரு வகையில் திமுக அரசுக்கு அனுகூலம் செய்யும் சத்ருவாக உள்ளா’ர் என்றே தோன்றுகிறது! ஆக, திமுக அரசின் ‘ஆபத்பாந்தனே’ ஆளுனர் ஆர்.என்.ரவி தான்!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

கரூரில் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய நிகழ்வில் – குறிப்பாக ஒரு பெண் அதிகாரி பொதுவெளியில் மானபங்கத்திற்கு ஆளான நிகழ்வில் – இது வரை யாரேனும் தண்டிக்கப்பட்டுள்ளனரா?

சும்மா முதல் நாள் கைதாகி அடுத்த நாளே விடுதலை செய்துவிட்டனர்! ஒருவரும் இது வரை உரிய முறையில் எப்.ஐ.ஆர் போட்டு தண்டிக்கப்படவில்லை. இது திமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்குமான பரஸ்பர புரிதல் சம்பந்தப்பட்டது. நமக்கெல்லாம் புரியாது.

கு.மஸ்தான், ராணிப்பேட்டை

தமிழகத்தில் டாஸ்மாக்கில் உச்சபட்ச ஊழலில் திளைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் எட்டு நாட்கள் ரெய்டுகள் நடந்துள்ளதன் விளைவு என்னவாக இருக்கும்?

திமுக அரசு இன்னும், இன்னும் பணிந்து போகத் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை யார் வேண்டுமானாலும் வங்கிகளில் தந்து சில்லரையாக மாற்றிக் கொள்வதற்கு தடை வேண்டும். ஏனென்றால், மாவோயிஸ்டுகளும், பயங்கரவாதிகளும் இதை மாற்றுவதாக தகவல் வந்துள்ளது என ஒருவர் வழக்கு போட்டுள்ளாரே?

சபாஷ். இது வரை 80,000 கோடிகள் மாற்றப்பட்டுள்ளன! ஆக, பாஜக சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் மாற்றியாகிவிட்டது போலும்.

மாவோஸ்ட்களும், பயங்கரவாதிகளும் மாற்றுகிறார்கள் என்றால், இதையே வாய்ப்பாக்கி அவர்களை பிடிக்க வேண்டியது தானே! விஷயம் என்னவென்றால், தங்களைத் தவிர அனைவரும் இவர்கள் கண்களுக்கு மவோயிஸ்ட்கள், பயங்கரவாதிகள்!

ம.ஏழுமலை, திருத்துறைப் பூண்டி

விழுப்புரம் மேல்பாதி ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் நுழைய மறுக்கப்பட்டதால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதே? இது போல தமிழகத்தில் பல கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறதே?

55 ஆண்டுகால திராவிட ஆட்சியின் தாக்கத்திற்கு இவையே சாட்சி!

கு.தங்கவேல்,விருதாச்சலம்

அதிமுகவின் எதிர்கட்சி பணிகள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

எதிர்கட்சிப் பணிகளில் அதிமுக எப்போதுமே பெயில் மார்க் தான்! இப்போதோ இன்னும் மோசம்!

ம.ஏழுமலை, திருத்துறைப் பூண்டி

”இரண்டாயிரம் நோட்டின் புழக்க காலம் முடிவுக்கு வந்துவிட்டது! ஆகவே தான் வாபஸ் வாங்கப்பட்டது” என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

மற்ற நோட்டுகளின் புழக்க காலமெல்லாம் எப்போது முடிவுக்கு வருமாம்?

உண்மையை மென்று முழுங்க நினைத்தால், இப்படித் தான் மாட்டிக் கொள்ள நேரும்!

புழங்காமலே பாதுகாக்கப்பட்டு வரும் காரணத்தால் தான், அதன் புழக்கத்தை நிஜமாகவே முடிவுக்கு கொண்டு வந்துட்டோம் என சொல்ல முடியவில்லை, ஐயோ பாவம்!

என்.அபிராமி, நங்கநல்லூர், சென்னை

கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், அறிவிப்புகளை கேட்டீரா…? இது பற்றி உமது கருத்து என்ன?

யேங்கப்பா…! எத்தனையெத்தனை அறிவிப்புகள்!

மெரினாவில் அழகிய சமாதி ஏற்கனவே உள்ளது.

கிண்டியில் கருணாநிதி பெயரில் பெரிய மருத்துவமனை!

மதுரையில் கருணாநிதி பெயரில் பிரம்மாண்ட நூலகம்.

இவை போதாது என்று கருணாநிதி நினைவிடம் அமைக்கபடுமாம்!

கடலுக்கு மேல் 134 அடியில் பிரம்மாண்ட பேனா!

மாதந்தோறும் கருணாநிதி நினைவாக ஏதேனும் ஒன்று நிறுவப்படுமாம்!

தமிழ்நாட்டிற்கு ‘கருணாநிதி தேசம்’ என பெயர் வைக்காதது தான் குறை!

திராவிடம் என்றால், கருணாநிதி மட்டுமல்ல, கருணாநிதியின் முன்னோடிகளான பெரியார், அண்ணா, அன்பழகன், நெடுஞ்செழியன் போன்ற பலரும் அதில் அடக்கம். ஆக, திராவிடத்தின் ஒற்றை அடையாளமாக கருணாநிதியை கட்டமைப்பது போலத் தெரிகிறது!

கோமதிநாயகம், கோவை

செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்களே?

உணவு உற்பத்தி செய்யும் தகுதி இயற்கைக்கு மட்டுமே உரியதாகும். அதை சமைக்கும் தகுதி மட்டுமே மனிதனுக்கு உள்ளது.

சத்தான உணவு வேண்டும் என்றால், மண்ணைத் தான் இயற்கை உரம் போட்டு செறிவூட்ட வேண்டும்.

க.அப்துல்கலாம், ஹைதராபாத்.

இது சிறுதானிய வருடமாம்! அதனால சிறுதானியத்தை ‘புரமோட்’ பண்ண நிறைய நிகழ்ச்சிகள் செய்யறாங்க கவனிச்சீங்களா?

எந்த ஒன்றிலும் கார்ப்பரேட்டுகள் காலூன்ற வாய்ப்பிருந்தால் தான் இந்திய அரசாங்கம் அதை முன்னெடுக்கும். சிறுதானியத்தை சீரழிக்காமல் விடமாட்டார்கள் போல!

எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம்

‘அரசு போக்குவரத்து நிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்கி வருகிறார்கள்’ என்பது உண்மையா?

ஆமாம். தற்போதே அரசு போக்குவரத்து நிறுவனங்களின் வேலைகளுக்கான ஆட்களை தனியார் நிறுவனங்கள் தான் தருகிறார்கள்!

கருப்பசாமி , அருப்புகோட்டை

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு திமுக அமைச்சர்கள், முக்கியஸ்தர்களை அழைத்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்!

க.செபாஷ்டின், வேலூர்

பிரிஜ்பூஷன் மீது பாலியல் புகார் கொடுத்த சிறுமியின் தந்தை அதை வாபஸ் வாங்கிக் கொண்டு ‘பொய்புகார் தந்துவிட்டதாக’ சொல்லியுள்ளாரே…?

புகார் தந்து பல மாதங்கள் கடந்தும்,

ஜனவரி தொடங்கி பல கட்டப் போராட்டம் நடத்தியும்,

நடத்தப்பட்ட விசாரணையில் எல்லா உண்மைகளை உரைத்த பின்னும்,

எல்லா ஊடகங்களும் வெளிச்சம் போட்டு காட்டிய பின்னும்,

அரசாங்கம் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தால்…,

பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாட்கள் தான் தாக்குபிடிப்பார்கள்!

க.லஷ்மணன், பெங்களூர்

பிரிஜ்பூஷன் தண்டிக்கப்பட வாய்ப்புண்டா?

கெளரவர் சபையிலே பாஞ்சாலி துகில் உரியப்பட்ட போது, நெட்டை மரங்களென நின்ற பஞ்ச பாண்டவர்களைப் போல,

இன்றைய மோடி, அமித்ஷா ஆட்சியிலே நவீன துச்சாதனன் பிரிஜ்பூஷன் நமது வீரங்கனைகளின் கற்பை களவாடிய நிலையில், நாம் கையறு நிலையில் கோழைகளாக வேடிக்கை பார்க்கின்ற நிலையில், தண்டிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஆனால், சற்று குறைவாகவே உள்ளது.

தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

‘யார் தன்னுடைய பாஸ்’ என்பதில் எந்த தடுமாற்றமும் இல்லாமல், மத்திய ஆட்சியாளர்களின் மதிப்பை பெற்றவர்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time