கார்ப்பரேட் கைகளில் ஊடகங்கள் படும்பாடு!

-பீட்டர் துரைராஜ்

ஊடகச் சுதந்திரம் மிகுந்த கவலை அளிக்கிறது. சமூக ஊடகங்கள் ஜனநாயக வெளியை உருவாக்கி உள்ளன. ஒரு சில யூ டியூப் சேனல்கள் தவறான செய்திகளை பரப்புகின்றன. ஒரு சிலரை திட்டமிட்டு அவதூறு செய்கின்றன. இன்றைய ஊடகங்களின் உண்மையான நிலை குறித்து பத்திரிகையாளர் விஜயசங்கர் பேச்சு!

பத்திரிகையாளரான விஜயசங்கர் ராமச்சந்திரன், ஃப்ரண்ட் லைன் இதழில் பல்லாண்டுகள் பணியாற்றியவர்.  “தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்”  என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச – காப்பீட்டு கிளை)  சென்னை சூளைமேட்டில் நடத்திய கூட்டத்தில் ஜுன் – 9 மாலை உரையாற்றினார்.

இருமொழி தெரிந்தவர்கள், விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலத்தில் வந்த செய்திகளை தமிழில்  கொண்டு வந்து தேசிய உணர்வை உசுப்பி விட்டனர். ‘முதலாளித்துவ ஊடகம்’ என்று ஒட்டு மொத்தமாக ஒருவரியில் ஊடகங்களை நிராகரிப்பதற்கு பதில், அதனை புரிந்து கொண்டு எதிர் கொள்வது தான் சரியாக இருக்கும் என்று தனது உரையில் குறப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

“வரலாற்றை கிமு/கிபி என்று எப்படி சொல்கிறோமோ, அதேபோல ஊடகங்களைப் பொறுத்தவரையில் மோடி ஆட்சிக்கு வந்தது என்பது ஓர்  அடையாளமாகி விட்டது. 2014 க்கு முன்பு, 2014 பின்பு என்று நாம் ஊடகங்களை பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் அச்சு ஊடகத்தில் நம்பகத்தன்மை இருந்தது. செய்தியை சரிபார்க்காமல் போட மாட்டார்கள். ஒரு நிருபர் கொடுக்கும் செய்தியை பலர் சரி பார்ப்பர். அவதூறு செய்யும் மஞ்சள் பத்திரிகைகள், மக்களின் நம்பகத்தன்மையை இழந்து நின்று போனதும் உண்டு.

அரசியல் பொருளாதாரத்தின் நீட்சிதான் ஊடகமாகும். யார் நடத்துகிறார்கள் ! எதற்காக நடத்துகிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலைப் பொறுத்து ஊடகத்தின் தன்மை மாறும். முதலாளித்துவ ஊடகம் என்றாலும், அதற்கும் அரசியல் உண்டு. முதலாளித்துவ ஊடகம் என்று ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரை கிராமப்புற செய்திகள் வராது. அவைகளுக்கு நகர்புறச் சாய்வு (urban bias) உண்டு. விவசாயிகள் தற்கொலையை அவைகள் மேலோட்டமாக கடந்து சென்றுவிடும்; பங்குச் சந்தை வீழ்ந்தால் அதைப் பெரிய செய்தியாகக் காட்டும். நகரத்தில் கூட, வட சென்னை பற்றிய செய்திகள் அதிகம் வராது. பெசண்ட் நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளின் செய்திகள் அதிகம் வரும். அப்பகுதி மக்கள் ஆங்கில நாளிதழ்களின் நுகர்வோர்களாகவும் உள்ளனர்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கலை எதிர்த்து காப்பீடு நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களின் போராட்டத்தை ஊடகங்கள் வலுவான செய்தியாக்கவில்லை. மத்தியதர அரசு ஊழியர்களின்  போராட்டங்களை, ஊடகங்கள் போக்குவரத்து பாதிப்பு என சித்தரித்து செய்தி வெளியிட்டன.

சிவசுப்பிரமணியம், பாலா, விஜயசங்கர்

ஒரு சில நிறுவனங்கள்தான் செய்திக்காக பத்திரிகை நடத்தி வருகின்றன. பெரும்பாலானவை மற்ற தொழில் நடத்தி, அதில் வரும் இலாபத்தை வைத்து செய்தி ஊடகங்கள் நடத்துகின்றன. ஒரு புறம் இலாபம், மறுபுறம்  சேவை என்ற எல்லைகளுக்கு இடையில் ஒரு பத்திரிகையை நடத்த வேண்டி உள்ளது.

அதனால்தான் விடுதலை இயக்க காலத்தில் சுதேசமித்திரன் போன்ற கொள்கை சார்ந்த பத்திரிகைகள் வந்தன. சமூக நீதி இயக்கங்கள் 257 பத்திரிகைகள் நடத்தியதாக திராவிட இயக்க ஆய்வாளரான  க.திருநாவுக்கரசு  கூறுகிறார். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் பத்திரிகைகளை  நடத்தி இருக்கிறார்கள். உதாரணமாக, அண்ணா நடத்திய home land பத்திரிகையில் வியட்நாம் நாட்டு புரட்சியாளர் ஹோசிமின் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. திராவிட இதழ்களில் பிரெஞ்சு புரட்சி பற்றி எழுதியிருக்கிறார்கள். ஜனசக்தி, patriot போன்ற இதழ்களும் வந்திருக்கின்றன. இப்போது நாம் நடத்தும் தீக்கதிர் போன்ற கட்சிப் பத்திரிகைகளில் இன்னார், கொடியேற்றினார், இன்னார் கலந்துகொண்டார் என்ற பட்டியலே பாதி பக்கத்தை நிரப்பி விடுகிறது. இவையெல்லாம் செய்தி அல்ல.

அமெரிக்க சிந்தனையாளரான நோம் சாஸ்கி  ‘இசைவை உருவாக்குதல்’ (manufacturing consent) என்ற  நூலில் செய்தி வருவது குறித்து ஐந்து சல்லடைகளை குறிப்பிடுகிறார்.


மணற்கொள்ளை அடித்த வைகுந்த ராஜன் நடத்தும் நியூஸ் 7 சேனல்  நடத்துகிறார். அதில் மணற்கொள்ளை குறித்த செய்தி வராது. புதிய தலைமுறை தொலைக்காட்சியை பச்சைமுத்து நடத்தி வருகிறார். எனவே இந்த ஊடகங்கள் கல்விக் கட்டண கொள்ளை பற்றியோ, தனியார் மருத்துவமனை செயல்பாடு பற்றியோ செய்தி வெளியிடாது.

விளம்பர வருவாய்

இந்து நாளிதழை அச்சடிக்க கிட்டத்தட்ட ஒரு இதழுக்கு 35 ரூபாய் வரை செலவாகும். எனவே விளம்பர வருமானம் இல்லாமல் ஒரு பத்திரிகையை நடத்த முடியாது. இதில் அரசு விளம்பரம் மூலம் வரும் வருமானமும் உள்ளது. தனியார் மூலம் வரும் விளம்பர வருவாயும் உள்ளது. விளம்பர நிறுவனங்கள் இதமான கதைகளை (feel good stories) வெளியிடச் சொல்லுவார்கள். பிரச்சினை வரும் செய்திகளை தவிர்க்கச் சொல்லுவார்கள்.

செய்தி மூலம் (source)

செய்தி தருபவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்களை பகைக்கவும் முடியாது. அதிகாரப் போட்டியில் ஒருசில  செய்திகள் நமக்கு கிடைக்கும். மக்களிடம் இருந்தும் செய்திகளைப் பெறமுடியும். ஆனால் மக்களைச் சந்தித்து செய்தி சேகரிப்பது குறைவாகவே உள்ளது.

எதிர் வினை

இதழ்களில் வரும் ‘ஆசிரியருக்கு கடிதங்கள்’ தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல அரசு தொடுக்கும் அவதூறு வழக்குகள் செய்தி வருவதை தடுக்கும். வழக்குகளை நடத்துவதே ஒரு தண்டனை போல ஆகிவிடும். கேரவன், வயர் போன்ற இதழ்கள் அவதூறு வழக்குகளை சந்தித்து வருகின்றன. எனவே வழக்கு வராமல் செய்தி போடச்  சொல்லுவார்கள். எனவே பெயரைக் குறிப்பிடாமல் எழுதுவோம். இராணுவ அதிகாரியாக இருந்து அமைச்சரான வி.கே.சிங் ஊடகங்களை presstitute (பத்திரிகையாளர்களை, பாலியல் தொழிலாளர்களோடு   தொடர்புபடுத்தி) முதலில் அழைத்தார். கிரண் ரிஜ்ஜூ என்ற அமைச்சர் பத்திரிகையாளர்களை கேள்வி கேட்பதை விட்டு விடுங்கள் என்கிறார். கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார். இது போன்ற எதிர்வினைகள் செய்தி கிடைப்பதை தடுக்கும்.

செயற்பாட்டாளர்களுக்கு எதிரான நிலை

கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நிலையை ஊடகங்கள் எடுக்கும் என முன்பு நோம் சாஸ்கி சொல்லி வந்தார். தற்போது தீவிர செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவான செய்தியை வெளியிடக் கூடாது என்பதில் பத்திரிகைகள் கவனமாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். தேவைப்பட்டால் அவர்கள் தருவதை ஒரு மூலமாக (source) எடுத்துக் கொள்வார்கள், ஆனால் செயற்பாட்டாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடமாட்டார்கள். அதானல்தான் அண்ணாமலை போன்றவர்களுக்கு கிடைக்கும் ஆறு பத்தி செய்தி, உண்மையான செயற்பாட்டாளர்களுக்கு கிடைப்பதில்லை.

நிறுவனங்களில் உயர்சாதி சாய்வு (caste bias) இருக்கும். உதாரணமாக  கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் இந்து நாளிதழைப் பொறுத்தவரை கலாச்சார செய்திகள். இதழ்களில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. அப்படி இருப்பவர்களும் சிறப்பாகச்  செயல்படுவதாக சொல்ல முடியாது. ஒரு செய்தியை எப்படி தலைப்பாக்குவது, எந்தப் பக்கத்தில் வெளியிடுவது என்பதையும் கவனமாகச் செய்வார்கள்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு தொழில் அதிபர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு வந்தார்கள். என்டிடிவி அதானியிடம் உள்ளது. அம்பானியிடம் நியூஸ் 18 உள்ளது. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்துவது ஊடகத்திலும் வந்துவிட்டது. 2014 க்கு பிறகு வந்துள்ள பாஜக அரசு கார்ப்பரேட் நலனைப் பாதுகாக்கும் அரசு மட்டுமல்ல. அது மதவாத  அரசு; மொழிவாரி உரிமைகளுக்கு எதிரானது: மாநில சுயாட்சிக்கு எதிரானது. டாடாதான் முதலில் நரேந்திர மோடியை முதலில் ‘வளர்ச்சி மனிதன்’ என்று வருணித்தார். அதன்பிறகு ஊடகங்கள் அவ்வாறே எழுத ஆரம்பித்தன.

இப்போது தொலைக்காட்சி ஊடகங்களை முழுமையாக பாஜக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. ஆனால் சமூக ஊடகங்கள் ஜனநாயக வெளியை உருவாக்கியுள்ளது. எனவே அதைப் பயன்படுத்திக் கொண்டு நாம் செய்திகளைத் தர வேண்டும். ஏராளமான செய்திகள் இணைய வெளியில் கொட்டிக் கிடக்கின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் மக்களுக்குள் பிரிவினை வந்து விட்டது. ஆர்எஸ்எஸ் ஆட்கள் ஒரு செய்தியை கடைசி வரை கொண்டு செல்கிறார்கள். பாஜகவை கட்டுப்படுத்தும் ஆர்எஸ்எஸ் – ன் ஏழு பேர் கொண்ட குழுவையே மோடி இரண்டு பிரிவாக்கி விட்டார் என்று டைம் இதழ் ஒரு செய்தி வெளியிட்டது.

ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்திற்கும், மோடிக்கும் பூசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். மோடியின் விதவிதமான படங்கள் அவரது ஒப்புதலோடு தினமும் வெளிவருகின்றன. கர்நாடக தேர்தலில் பாஜக ஜெயித்தால் அதற்கு மோடி காரணம்,  இப்போது தோற்றுவிட்டது எனவே பாஜக தலைவர் நட்டா  காரணம் என சொல்லி வருகின்றனர்.  வெளிவருகிற பொய்ச் செய்திகளை கண்டுபிடித்துச் சொல்வதற்காகவே alt news என்ற செய்தி நிறுவனம் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஐயன் கார்த்திகேயன், you turn என்ற தளம் மூலம் இதனைச் செய்து வருகிறார். ரங்கராஜ் பாண்டே, இப்போது சனாதனம், பழம் பெருமை என்பதை விளக்குவதற்காகவே ஒரு யூ டியூப் சேனல் நடத்துகிறார். அதேபோல கோலாகல ஸ்ரீ நிவாஸ் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இலட்சக் கணக்கில் பணம் வருகிறது.

இது போன்ற சூழலில் நமது பொறுப்பு அதிகமாகிறது. நாம்,  நம்மிடம் நல்ல கொள்கை இருந்தும் செயலூக்கத்தோடு எதிர்வினை ஆற்றுகிறோமா?  மக்கள் மனங்களை வெல்வது என்பது ஒரு நெடிய போராட்டமாகும். இணையங்களில் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அதில்  சரியானதை தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் பொறுப்பு நடுத்தர வர்கத்தினருக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலா வரவேற்புரை  நிகழ்த்தினார். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

எழுத்து வடிவம்: பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time