அமுல் வருகையை ஆவின் தாக்கு பிடிக்குமா?

-சாவித்திரி கண்ணன்

ஆவின் தற்போது ஊழல், ஊதாரித்தனம், மோசடி, பித்தலாட்டம்..என சீரழிந்து வருகிறது! தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களே கொடி கட்டி பறக்கின்றன! இந்த நிலையில் பிரபல அமுல் நிறுவனத்தின் வருகையை தமிழக பால் விவசாயிகள் எப்படி பார்க்கிறார்கள்? ஆவின் தன் அழிவுப் பாதையில் இருந்து மீளுமா..?

பால் விவசாயிகள் பால் நுகர்வோர்வோர் ஆகிய இரு தரப்பினரும் பயனடையும் விதத்தில் காமராஜரால் 1956ல் தொடங்கப்பட்ட பால் வளத்துறை 1981ல் எம்.ஜி.ஆர் காலத்தில் மூன்றடுக்கு கூட்டுறவு நிர்வாக அமைப்பாக விஸ்வரூபம் எடுத்தது. அமுல் நிறுவனம் தமிழகத்தில் காலடி பதிக்க உள்ளதைக் கண்டு, கதிகலங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு அதை தவிர்க்க கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு அமுல் வருவது குறித்து தமிழக பால் உற்பத்தியாளார்கள் சிலரிடம் பேசினேன். தங்கள் பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் சில உண்மைகளை அவர்கள் சொன்னார்கள்! அவை அதிர்ச்சி ரகம்!

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் ஆவின் ஒரளவு கொடி கட்டிப் பறக்கிறது! ஏனென்றால், ஆவினின் மொத்த விற்பனையில் சரிபாதி சென்னையில் மட்டுமே நடக்கின்றது! ஒட்டுமொத்த தமிழகத்திற்கு தினசரி இரண்டு கோடி இருபது லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது! ஆனால், ஆவினோ தற்போதைய நிலவரப்படி 27 லட்சம் லிட்டர் பால் தான் கொள்முதல் செய்கிறது! ஆனால், மிகைப்படுத்தி 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்வதாக சொல்லிக் கொள்கிறார்கள்! ஒரு கட்டத்தில் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது என்னவோ உண்மை தான்!

தமிழக கூட்டுறவு சொசைட்டிக்கு பால் ஊற்ற காத்திருக்கும் பால் விவசாயிகள்!

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பால் கொள்முதல் படிப்படியாகக் குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், மிகக் குறைவான கொள்முதல் விலை. அதையும் இரண்டு மாதம் தாமதித்து தான் தருகிறார்கள்! பால் கொடுக்கும் விவசாயிக்கு பணம் கொடுக்க இரண்டு மாதங்கள் ஏன் இழுத்தடிக்க வேண்டும்? நுகர்வோர்கள் பணம் கொடுத்து தான் பால் வாங்குகிறார்கள். இன்னும் சொல்வதென்றால் பால் அட்டைதாரர்கள் முன்கூட்டியே ஒரு மாதப்பாலுக்கான மொத்த பணத்தையும் கட்டிவிடுகிறார்கள். அப்படி இருக்க ஏழை, எளிய கிராமப்புறத்து விவசாயிக்கு பாலுக்கான காசை உடனே கொடுக்க கசக்கிறதா அரசுக்கு? அந்த அளவுக்கு நிர்வாக சீர்கேட்டில் புழுத்துக் கிடக்கிறது ஆவின் நிர்வாகம் என்பதே உண்மை!

ஊழலில் ஊறித் திளைக்கும் ஆவின்!

ஆவின் கூட்டுறவு சொசைட்டிக்குள் என்று அரசியல் நுழைந்தததோ, அன்று முதல் அநீதிகளும், அட்டூழியங்களும் தலை தூக்கின! போலி உறுப்பினர்கள் சேர்ப்பது, பணம் தந்து கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெறுவது, பிறகு பணத்தை எடுக்க எல்லா வழிகளும் அநீதி செய்வது என்றாகிவிடுகிறது!

பால் கொள்முதலில் பாலின் தரத்தை குறைத்து மதிப்பீடு செய்து குறைந்த பணம் கொடுப்பது! பாலை கொள்முதல் செய்த இடத்திலிருந்து மூன்று கட்டங்களாக அது பயணப்படும் போது அதில் தண்ணீர் கலப்பது என்பது ஒரு வகை மோசடி!

அடுத்ததாக தேவைக்கும் அதிகமாக நிர்வாக அலுவலகங்கள், ஏகப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளை வேலைக்கு எடுப்பதன் மூலம் காசு பார்ப்பது! காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் வேலை செய்யாமல் ஊழல் மட்டும் செய்து திளைப்பது!

அதே சமயம் உடல் உழைப்பு சார்ந்த அடித்தள வேலைகளான பாலை வேன்களில் ஏற்றி, இறக்குதல், பேக்கிங் செய்தல் போன்ற வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அவுட் சோர்சிங் செய்து குறைந்த கூலி தந்து, ஒப்பந்த நிறுவனங்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிப்பது! இந்த வகையில் ஒப்பந்த நிறுவனங்கள் நூறுபேருக்கு ஒப்பந்தம் போட்டு அம்பது ஊழியர்களை அனுப்புவது, அதிலும் குறைந்த கூலி என்பதால் சிறுவர்களை பணியாற்ற வைத்தது என்பதில் தான் தற்போது மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொண்டது!

இவை தவிர ஆடம்பரச் செலவுகள், பயன்பாடில்லாத பெரிய இயந்திரங்களை கொள்முதல் செய்து கமிஷன் பார்ப்பது, அளவு குறைத்து பேக்கிங் செய்வது, கொள்முதல் பால் குறைவானதால் அதிக அளவு பால் பவுடர் கலந்து தரத்தை குறைப்பது…என நடக்கும் விவகாரங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது! முக்கியமாக அட்டைதாரருக்கு ஒரு விலை, அட்டை இல்லாமல் வாங்க வருவோருக்கு ஒரு விலை என்ற வகையில் மட்டும் தினசரி கோடிகளில் முறைகேடு நடக்கின்றன! இடைத்தரகரான டிஷ்டிரிபூட்டர் என்ற வகையில் பல கோடிகள் இழப்பு தெரிந்தே நடக்கிறது.

பால்வளத்துறை அமைச்சர்கள்!

பால்வளத்துறைக்கு எம்.ஜி.ஆர் காலத்தில் கே.ஏ.கிருஷ்ணசாமி இருந்த காலம் ஒரு பொற்காலமாகும். அப்போது ஒன்றேகால் லட்சம் கொள்முதல் செய்த பால் அளவை படிப்படியாக இரண்டு மடங்கு உயர்த்தினார். ஊழல், முறைகேடுகளை நினைத்துக் கூட பார்க்காத காலமாக அது இருந்தது! கூட்டுறவு சங்கங்களை விவசாயிகள் மலைபோல நம்பினார்கள்! இன்றோ நிலைமை தலைகீழ்! அதிமுக ராஜேந்திரபாலாஜி அனைத்து நிலைகளிலும் ஆனவரை கொள்ளை அடித்தார். ஆட்சி முடியும் தருவாயில் தேவையில்லாத பணி இடங்களை உருவாக்கி வேலைக்கு ஆள் எடுப்பதில் பெரும் பணம் பார்த்தார்!

திமுக ஆட்சியில் மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கையை பொய்க்க வைத்தார், ஆவடி நாசர்! அதிமுக ஆட்சி காலத்து ஊழல் அதிகாரிகளை பெரிதும் நம்பி அதீத கொள்ளையில் இறங்கினார்! பால் விவசாயிகள், முகவர்கள், ஊழியர்கள் நுகர்வோர்கள் யார் நலனையும் பொருட்படுத்தாமல் ஊழல் ஒன்றே குறிக்கோளாக இயங்கினார். நிலைமை வரலாறு காணாத வகையில் மோசமானது! தற்போது மனோ தங்கராஜ் வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கனிம வளக் கொள்ளை, குவாரி முதலாளிகளோடு கூட்டணி போன்ற கெட்ட பிம்பங்கள் உள்ளன! ஊழல்களுக்கு காரணமான யாரும் இது வரை தண்டிக்கப்படவில்லை!

அமுல் வருகையும், அதிர்ச்சியில் ஆவினும்!

பிரபல அமுல் நிறுவனம் தமிழகத்தில் கால் ஊன்ற திட்டமிட்டு அதற்கான ஆயத்த வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது! இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்! தமிழகத்தில் ஏற்கனவே தனியார் பால் ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கிறது! ஆரோக்கியா, ஹெரிடேஜ், ஹட்சன், திருமலா, ஜெர்ஸி, சீனிவாசா..போன்ற பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்றன! இதில் வெளி மாநில நிறுவனங்கள் பலவும் உள்ளன! இந்த நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு பால் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறார்கள்!

இந்தியாவில் எந்தப் பொருளையும் எங்கு விற்பனை செய்யவும் தடையில்லை. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்கின்றன! ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கு பாலுக்கான காசை தந்து விடுகின்றன! பாலின் தரத்தை மதிப்பிடுவதில் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கின்றன! எனவே தனியார் நிறுவனங்களுக்கு பால் தருவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் விவசாயிகள் மீது நாம் குறை காண முடியாது! தங்கள் உழைப்புக்கு ஏற்ற பணத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தனை தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் கோலோச்சும் போது அமுல் மட்டும் வரக் கூடாது என்றால், என்ன நியாயம்? ஏன் பயம்?

ஆவின் தரப்பு பலவீனங்களே பயத்திற்கு காரணமாகும். அதுவும் அமல் தனியார் நிறுவனங்களை போல இருக்காது. கூட்டுறவு முறையிலே தான் தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய உள்ளது. அமுல் நிறுவனம் ஆவினைவிட பத்து மடங்கு பெரியது. அது பல வட இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது. அதன் கொள்முதல் நாளொன்றுக்கு மூன்றுகோடியே அறுபது லட்சமாகும். 32 லட்சம் பால் விவசாயிகள் அதனுடன் பயணிக்கிறார்கள்! அவ்வளவு ஏன் நம்மைவிட சிறிய மாநிலமான கர்னாடகா அரசின் பால் நிறுவனம் நந்தினி! அதே சமயம் அது நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாக வளர்ந்துள்ளது. அங்கே அமுல் போட்டியிட வந்து தோல்வி அடைந்துவிட்டது. காரணம், அது பால் விவசாயிகளை ஏய்த்து பிழைக்கவில்லை. அத்துடன் கர்நாடக மக்கள் நந்தினியுடன் விடுபட முடியாத அளவுக்கு பழகிவிட்டனர்!

தமிழகத்தில் அமுல் கண்டிப்பாக வர வேண்டும். அவர்கள் இங்குள்ள பால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, இங்கேயே பதப்படுத்தி, பேக்கிங் செய்து விற்பனை செய்ய உள்ளனர்! இதனால் தமிழக விவசாயிகளும், பணியாளர்களும் பயன் பெறுவர். அவர்கள் பால் கொள்முதலுக்கு நியாயமான விலையை தாமதப்படுத்தாமல் தருவார்கள். அதற்குள் அரசியல் நுழைய முடியாது! அவர்களின் தரத்தோடும், செயல் திறனோடும் போட்டி போடும் போது தான் ஆவின் தன் சுயத்தை உணரும். தன்னுடைய தகுதியையும் உயர்த்திக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படும். என்பதே தமிழக பால் விவசாயிகளின் பார்வையாக உள்ளது.

ஆவினை நிர்வகிக்கும் அமைச்சருக்கு உண்மையிலேயே பொறுப்பு வந்தால், அமுல் போட்டியை எதிர்கொண்டு ஆவின் தாக்கு பிடித்துவிடும். தனியார் மார்க்கெட் மட்டுமே சரியும்! அமுல் வரட்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time