தன்பாலினத்தார்கள் சமூகத்திற்கு சவாலா..?

-பீட்டர் துரைராஜ்

 தன்பாலினத்தார்கள் உலகம் முழுமையும் கோடிக்கணக்கில் உள்ளனர். இந்தியாவில் 1.35 கோடி பேர் உள்ளனர்!  இன்னும் இவர்களுக்கு சமூக அங்கீகாரமோ, சட்ட அங்கீகாரமோ  நிறைவாக  கிடைக்கவில்லை. பலவித சவால்களை, பிரச்சினைகளை, அவமானங்களை சந்திக்கும் இவர்களை எப்படி புரிந்து கொள்வது..?

ஒரு காலத்தில் மூன்றாம் பாலினத்தவரை அலிகள், ஆண்மையற்றவர்கள், ஒன்பது..என்றெல்லாம் வசைபாடி ஒதுக்கி வைத்திருந்தது  நம் சமூகம். பிறகு அவர்கள் ‘திருநங்கைகள்’ என அங்கீகாரம் பெற்றனர்.

கார்த்திக், கிருஷ்ணா என்ற இரு இளைஞர்கள் கடந்த ஜூலை மாதம் ஊரறிய தாலிக்கட்டி, மெட்டி போட்டு, சேலத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர்களுக்கு முதலில் இதில் விருப்பமில்லை; தங்களது பிள்ளைகளின் விருப்பத்திற்கு இணங்கி, பிறகு ஒப்புக் கொண்டுள்ளனர். திருமணச் சட்டங்களின் கீழ், தன் பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ், தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நடந்துவருகிறது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பை வழங்க உள்ளது. சட்ட அங்கீகாரம் கோருவதன் அவசியம் என்னவென்று பார்ப்போமா !

தன் பாலின உறவு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 பிரிவின் கீழ் ஒரு குற்றமாக கருதப்பட்டது. உச்சநீதிமன்றம்,  இந்தப் பிரிவு செல்லாது என 2018 ல் தீர்ப்பு வழங்கியது. அதாவது தன்பாலின உறவு கொள்பவர்களைத் தண்டிக்க முடியாது என்பது இதன் பொருளாகும். தன்பாலின உறவைச் சித்தரிக்கும் சிற்பங்கள் கோவில்களில் இருப்பதை நாம் பார்க்கமுடியும். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டவுடன், தன்பாலின உறவு குற்றம் என்று ரஷ்யாவில் இருந்த சட்டப்பிரிவை லெனின் நீக்கிவிட்டார். ”தன்பாலின உறவு என்பது ஒரு நோய் அல்ல” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தன்பாலின உறவு  கொண்டவர்களை அவமானப்படுத்துவது, வேலையில் இருந்து நீக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு. குடும்பத்தினரே கொலை செய்து விட்டு, விபத்தாக காட்டியதும் உண்டு.  இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், அறிவியலுக்கு ஏற்ப, ஜனநாயக விழைவுகளுக்கு ஏற்ப, உலகமெங்கும் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றப்பட வேண்டும்.

லெஸ்பியன் உறவு கொண்டவர்களை வைத்து  பா.ரஞ்சித் தயாரிப்பில் Ladies and Gentlewomen என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் மாலினி ஜீவரத்தினம். இந்த ஆவணப்படம், தன்பாலின உறவு பற்றி தமிழில் வந்த முதல் படமாகும். இவரிடம் தன்பாலின திருமணத்திற்கு வரும் எதிர்ப்பு பற்றி கேட்டதற்கு “எதிர்பாலின உறவு கொள்பவர்கள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். லெஸ்பியின், Gay, transgender போன்றவர்களின்  உரிமைகளையும் அங்கீகரிக்கும் சமூகம் தான் ஒரு மேம்பட்ட சமூகமாக இருக்கமுடியும். என்றார்”

தன் பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கக் கோரி, தன் பாலின உறவு  கொண்டவர்களின்  பெற்றோர்கள் நானூறுக்கும் மேற்பட்டோர்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பல தன்பாலின திருமணங்கள் பூசாரிகளின்  உதவியோடு, விமரிசையாக சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தருவதற்கு, ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.”சட்டம் இயற்றுவது என்பது பாராளுமன்றங்களின் வேலை. எனவே நீதிமன்றமானது இந்தக் கோரிக்கையை ஏற்க கூடாது” என்றார் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் சார்பாக வாதாடிய எஸ்.ஜி.துஷார் மேத்தா.

பாராளுமன்றம் ஐம்பது ஆண்டுகள் கழித்து சட்டம் கொண்டு வரும். அதற்குள்ளாக என் கட்சிக்காரர் இறந்துவிடுவார் என்று  வழக்கறிஞர் எதிர்வாதம்  செய்தார்.

“தத்தெடுத்தல், சொத்துரிமை,  விவாகரத்து போன்ற உரிமைகளைப் பெண்களுக்குத் தரும் இந்துச் திருமணச் சட்டத்தை அரசாங்கம் 1950 ல் கொண்டு வந்தபோது பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது ” என்றார் அந்த வழக்கில் வாதிட்ட வேறொருவர்.

தன்பாலின திருமணங்களை ஏற்கக் கூடாது என்று ஜாமியாத் – உலமா-  இ – ஹிந்த் என்ற அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த வழக்கில் மாநில அரசுகளும் எதிர் மனுதாரர்களாக உள்ளனர்.  தன்பாலின உறவு என்பது பாகிஸ்தான், ஈரான், சௌதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது.

தன்பாலின உறவு குற்றமல்ல என்று தீர்ப்பு வந்த மறு வருடம்,   மேனகா குருசாமி என்பவரும் அருந்ததி என்பவரும் தங்களை இணையர்களாக அறிவித்துக் கொண்டார்கள். அந்த மேனகா குருசாமி இந்த வழக்கில் ஆஜராகி,” உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வழங்கும் மருத்துவக் காப்பீட்டை எனது கூட்டாளிக்கு (partner) வழங்க முடியவில்லை. இவ்வாறே வங்கிக் கணக்கு, ஆயுள் காப்பீடு போன்ற சாதாரண உரிமைகளைக் கூட திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லாததால் பெறமுடியவில்லை” என்றார்.

“திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில்  நடப்பதுதான்” என்று அரசின் சார்பாக துஷார் மேத்தா வாதிட்டார். “குழந்தை வேண்டாம் என முடிவுசெய்து கொண்டே ஒருசிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். மருத்துவக் காரணங்களுக்காக குழந்தை பெற இயலாதவர்களும் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனவே மற்றவர்களுக்கு கிடைக்கும் உரிமையை என் கட்சிக்காரர்களுக்கும் வழங்குங்கள்”  என பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக  வாதாடப்பட்டது. சிறப்புத் திருமணச் சட்டத்தில் உள்ள ஓரிரு வரையறைகளைத் திருத்துவதன்  மூலம் உச்சநீதிமன்றம் இதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் தன் பாலின திருமண அங்கீகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதே சமயம், டில்லி மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


உச்சநீதிமன்றத்தில்  பத்து நாட்களாக, கிட்டத்தட்ட நாற்பது மணிநேரத்தி்ற்கும் மேலாக, விவாதம் நடைபெற்று, வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘தனது செய்கை மீதே கட்டுப்பாடு இல்லாத அவர்களை நாம் என்ன செய்ய முடியும்’ என்று அனுதாபம் தெரிவிக்கும் தொனியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கின் போது கூறியிருக்கிறார்.

LGBTQ என்று அழைக்கப்படும் பாலியல் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தனித்த வகையானவை. அவை குறித்த புரிதல்  பொது சமூகத்திற்கு இல்லை.” பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பற்றி முடிவெடுக்க முடியாது. ஜி்20 நாடுகளில் 12 நாடுகளும், இதைத் தவிர 34 நாடுகளும் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வங்கியுள்ளன. எனவே, இந்தியாவும்  தன்பாலின திருமணத்தை ஏற்று முற்போக்கு நாடுகளின்  பட்டியலில் சேர வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறினார் கீதா லுத்ரா என்ற வழக்கறிஞர்.

கணவன்- மனைவி, மகன் – மகள், தாத்தா – பாட்டி என பல்வேறு உறவுகள் இருப்பது போல இந்த தீர்ப்பின் மூலம் ‘கூட்டாளி’ (partner) என்பது வரட்டும் என ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

முகநூல் போன்ற சமூக ஊடகங்களை பாலியல் சிறுபான்மையினர் சரியாகப் பயன்படுத்தி வருகின்றனர். “ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு சார்பாக பேரணி நடத்துவோம். 15 வது ஆண்டாக, வருகிற ஜூன் 25 ஆம் நாள் சென்னையில்  பேரணி நடக்கும்” என்றார் மாலினி ஜீவ ரத்தினம்.

ஆச்சரியம் அடையும் வகையில், இது குறித்த விவாதத்தை ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி சில வாரங்களுக்கு முன்பு நடத்தியது. அதில் பேசிய ஜமதக்னி என்ற ஆன்மீகவாதி” தன் பாலின திருமணத்தில் அப்பா யார் ! அம்மா யார் ! இரண்டு பேரும் அப்பாவா அல்லது இரண்டு பேரும் அம்மாவா !  பெண் குழந்தைகளை அம்மாதான் வளர்க்க முடியும்” என்றார்.

ஸ்ரீஜித் சுந்தரம்

அதில் பேசிய ஸ்ரீ ஜித் சுந்தரம் என்பவர் “மற்றவர்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதை தன்பாலினத்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும். பள்ளி அனுமதி, வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், குடும்ப அட்டை வாங்குதல்” போன்றவைகளைப் பெற வேண்டுமானால் தன்பாலின உறவு சட்டப்பூர்வமாக வேண்டும்” என்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞரும், நடிகையுமான கஸ்தூரி ” நமது வரலாற்றில் ‘ஹரிஹரன்’ என்பதே தன்பாலின திருமணத்தில் வந்தது தான். தற்பாலின திருமணத்தை ஏற்பதில் தவறில்லை” என்றார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான மேனகா குருசாமி தற்பாலின தம்பதிகள் வளர்க்கும் குழந்தைகளுக்கு எவ்வித உளவியல் சிக்கலும் இல்லை என்பதற்கான ஆய்வு வந்துள்ளது என்றார். சேர்ந்து வாழ்வது என வந்த பிறகு பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவ வசதி போன்ற  உரிமைகள் (கணவன்- மனைவிக்கு  கிடைப்பது போல), மருத்துவமனையில் அவசர வார்டில் இருக்கும்போது பார்ப்பது, சிறையில் இருப்பவர்களைப் பார்ப்பதில் குடும்பத்தினருக்கு  உள்ள உரிமை போன்றவைகளைப் பெற வேண்டுமானால்  தன் பாலின திருமணம் என்பது சட்டப்பூர்வமாக  வேண்டும்.

நமக்கு ஒரு விஷயத்தில் முற்றிலும் உடன்பாடு இல்லாவிட்டாலும், இயற்கையின் மானுட படைப்பில் இவர்களும் ஓர் அங்கமே! ஒரு சாரரின் இயல்பை ‘அவர்கள் அவ்விதம் உள்ளனர்’ எனப் புரிந்து கொள்வது தான் நாகரீக மேம்பாட்டிற்கான அடையாளமாகும்.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time