விலங்குகள்,பறவைகள் அழிவு நமக்கே பேராபத்தாக முடியும்! – சிவசுப்பிரமணியன்.

நேர்காணல்; செழியன்.ஜா

பகுதி-3

காட்டுயிர்களுக்கான  இரையைக் காடுகளே வழங்கிவிடுகிறது. பல்லாயிரம் வருடமாக தொடர்ந்த இந்த நிலையை மிகச் சமீபத்தில் நாம் மாற்றிவிட்டோம். நகரவாசிகள் மலையில் இடம் வாங்கி வாழையை பயிரிட்டனர்.ஆனால் அது யானைகள் நடமாடும் இடம் .அவற்றுக்குப்  பசித்தால் இருப்பதை சாப்பிடுவது இயல்பு தானே! இதை ஏற்காமல் யானை தவறு செய்ததாக, ’’எங்கள் நிலத்தில் யானை புகுந்தது, அட்டகாசம் செய்கிறது’’ என்று நாம் பேசத் தொடங்கி இன்று அனைவரின் மனதிலும், ’’யானை தான் ஏதோ தவறு செய்கிறது’’ என்று தோற்றத்தையும் உருவாக்கிவிட்டோம்.

தொடர்ந்து பத்திரிகையிலும் இப்படியே செய்திகள் வருகின்றன. தவறு செய்தவர்கள் பக்கமும் கருத்துக்களைக் கேட்டுப் பிரசுரிக்கும் பத்திரிகைகள் யானையிடம் அதன் கருத்தைக் கேட்க முடியாதது நகர மனிதனுக்கு இன்னும் வசதியாகி விட்டது. அதனால் நாம் செய்வதே சரியானது என்று இன்னும் வாழை போன்று கரும்பையும் பயிரிடத் தொடங்கினர்.. இப்பொழுது யானையை விரட்ட மின்சார வேலியை அமைக்கின்றனர். இங்குதான் காட்டுயிர்களின் அழிவு மனிதர்களால் அதிகரித்தது.

 யானைகள் இறப்பு மின்சார வேலியால் அதிகரித்தது. இந்த பூமியின் மிகப் பெரும் உயிரி மிகச் சாதாரணமாக இறக்கத் தொடங்கின. இந்த இறப்பை  விவசாய நிலத்தில் யானைகள் அட்டகாசம் அதனால் ஏற்பட்டது என்று அரசாங்கம் கடந்துவிட்டது. ஒரு காட்டின் மிகப் பெரிய பணியைச் செய்து கொண்டு இருக்கும் மிக முக்கிய உயிரினம் தொடர்ந்து இறக்கத் தொடங்கின. இன்று புலி  அழிவைப்  பெரிதுபடுத்திப் பேசுகிறோம். அதே நிலை விரைவில் யானைக்கும் வரும்.

இதுவரை எந்த பழங்குடிகள் நிலத்திலும் மின்சார வேலி கிடையாது. எந்த பழங்குடியும் யானை மீது பழி சுமத்தியது கிடையாது. அவன் நிலத்திலும் யானைகள் வரவே செய்யும். அதற்கு அவன் முன்னோர்கள் எந்த வித வழி முறைகளைக் கடைப்பிடித்தார்களோ, அவற்றையே இவனும்  கடைப்பிடித்து   யானையை விரட்டினான். நிலத்தில் உயரமான பரண் அமைத்து  அதில் காவல் காப்பான். யானைகள் வருவது தெரிந்தால்  சாமன்களை ஒன்றோடு ஒன்று அடித்து சத்தத்தை எழுப்புவான்.  இந்த சத்தம் யானைகளை அங்கிருந்து  நகரச் செய்துவிடும்.

இவை தொடர்ச் சங்கிலி போன்று நடக்கும். இங்கிருந்து கிளம்பும் யானைகள் பக்கத்தில் உள்ள கிராமத்திற்குச் செல்லும். அங்கும் பரண் அமைத்து காவல்காத்து இருப்பார்கள். இங்கு அடிக்கும் சத்தம் அங்குக் கேட்டு அவர்களும் சத்தம் எழுப்புவார்கள். இப்படி அருகில் உள்ள அனைத்து கிராமத்திலும் நடைபெறும். இப்படி யானைகளை விரட்டினார்கள்.  பழங்குடிகளில் யாரும் யானையைக் கொல்ல முயலவில்லை. யானை அவர்கள் வாழ்க்கையில் இணைந்தே இருக்கிறது.

 மின்சார வேலி பெரிய உருவ யானைகளை மட்டும் கொல்லவில்லை. எண்ணற்ற சிறு உயிரிகளையும் கொல்கிறது. ஆனால் இவை எதுவும் நம் கவனத்திற்கு வருவதில்லை.

கோடையில் மனிதனுக்கு மிகப் பெரிய சோதனையை உண்டுபண்ணுவது தண்ணீர் பற்றாக்குறை. நகரத்தில் தண்ணீர் லாரிகள் நாள் முழுவதும் ஓடிக் கொண்டு இருக்கும். மிகத் திட்டமிட்டு நகரங்களை உருவாக்கிய மனிதனுக்கே தண்ணீர் பிரச்சனை பெரிய தலைவலி. ஆனால் இதே மனிதன் காட்டுயிர்கள் வாழும் பகுதியில் உள்ள தங்கள் நிலத்தில் போர் போட்டு அருகில் இருக்கும் நீர் நிலைகளின் தண்ணீரை உறிஞ்சுகிறான். இதனால், காட்டில் இருக்கும்   நீர்த் தேக்கங்களான குட்டை, குளம், ஓடை ஆகியவற்றில்  நீர் வற்றிவிடுவதால்,  காட்டுயிர்கள் தண்ணீரின்றித் தவிக்கின்றன.

யானை தன் துதிக்கையை மேலே தூக்கி நுகர்ந்தால் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நீர்ப் பகுதியையும் கண்டுபிடித்துவிடும். ஆனால்,  நீர்ப் பகுதிகள் முழுவதும் நம்மால் வற்றிவிடுவதால் அதன் நுகர்வுத்திறன்  ஏமாற்றத்தை அளிக்கும். இதில் இன்னொரு ஆபத்தும் உண்டு. காட்டில் இயற்கையான நீர் ஆதாரங்களை போர் போட்டு உறிஞ்சுவதால் யானை   நுகர்வுத்திறன் கொண்டு அவை கரும்பு காட்டை நோக்கிச் செல்லும். கரும்பு காட்டில் அதிகம் தண்ணீர் பாய்ச்சி இருப்பார்கள்.  யானை அந்த நீரை நோக்கிச்  செல்லும். கரும்பு காட்டை சுற்றி மின்வேலி இருப்பது அதற்குத் தெரியாது. நீரை நோக்கிச் செல்லும் யானை மின்சார வேலியில் மாட்டி இறக்கிறது.

மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய யானைக்கே இந்த நிலை என்றால், சிறு உயிரியான சருகுமான்,  முயல், குரங்கு, மிளா போன்ற விலங்குகள் நீருக்கு என்ன செய்யும். இரண்டு, மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழும் விலங்குகள் ஆகும்.

 குரங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள்

நாம் தற்போது சாப்பிடுவதே இயற்கைக்கு மாறான நச்சுணவாகும்! அந்த உணவை  விலங்குகளுக்குக் கொடுத்தால் என்ன நிலைமை ஏற்படும். விலங்குகள் உப்பு சுவை கொண்ட  உணவைச் சாப்பிட்டதில்லை. காட்டுக்குச் சுற்றுலா செல்லும் மனிதர்கள் சாலையோரம் உள்ள  குரங்குகளுக்குத் தின்பண்டங்களைக் கொடுப்பது புண்ணியமான செயல் என்று நினைக்கின்றனர். ஆனால் அவைதான் மிகத் தவறான செயல் என்பதே உண்மை.

 உடலில் உப்பு சுவை கலந்துள்ள குரங்கைச் சாப்பிடும் புலி அந்த சுவைக்கு அடிமையாகிறது. மீண்டும் மீண்டும் அதே வகை குரங்குகளைத் தேடி வரும். அப்படி வரும்பொழுது குரங்குகள் கிடைக்கலாம் தவறுதலாக மனிதன் தென் பட்டால்  அவனைக் கொல்கிறது. அவன் உடலிலும் உப்பு சுவை இருப்பதை உணர்ந்து மனிதர்கள் புலியின் இரையாக மாறுகின்ற அபாயம் நடக்கின்றன.. புலி மனிதனைக் கொல்வதற்கான சில காரணத்தில் இதுவும் முக்கிய காரணமாகும். அதனால் சுற்றுலா செல்லும் மனிதர்கள் காட்டுயிர்களை ரசியுங்கள் எந்தக் காரணம் கொண்டும் சமைத்த உணவுகளைக் கொடுக்காதீர்கள்! தேங்காய்,பழங்கள் பிரச்சினையில்லை.

 வங்கு நரி அழிவால் மயில்கள் பெருகி

சாதாரணமாக நம் வயல்வெளிகளில் பார்க்கப்பட்ட வங்கு நரிகள் இன்று பெருமளவில் அழிந்துவிட்டன. பட்டியில் இருக்கும் ஆடு, கோழி போன்றவற்றைக்  கொல்கிறது என்பதற்காக விஷம் வைத்து இந்த நரியைக் கொல்ல தொடங்கினான்  மனிதன். இப்படி இறக்கத் தொடங்கிய நரி இனம் தற்போது பெரும் எண்ணிக்கையில் அழிந்துவிட்டது. மேலோட்டமாக பார்த்தால் நரி அழிந்தது பிரச்சனை இல்லை என்பது போல் இருக்கும். ஆனால் இயற்கையின் சுழற்சி அப்படி இல்லையே.

வங்கு நரி அழிவு, மயில்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.. மயில் தரையில் முட்டை வைக்கும் பறவையாகும். அதன் முட்டைகளைச் சாப்பிட்டு மயில்கள் எண்ணிக்கையை நரி குறைத்தது. இது இயற்கை சுழற்சி. ஆனால் நம் ஆட்டை வங்கு நரி கொல்கின்றன என்பதால் அவற்றை அழித்தோம். இன்று மயில்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறோம்.

கத்திரி செடி தவிர மற்ற அனைத்து வித பயிர்களையும் கொத்துகிறது மயில். இதனால் நரி ஒழிந்தது என்று நினைத்த மனிதன் இன்று தன் நிலத்தில் மயில் செய்யும்  பார்த்து  தவிக்கிறான். இன்று கிழக்கு தொடர்ச்சி மலை போன்ற இடத்தில் மயில்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

காகம் எதிர்காலத்தில் வாழாது

 இது போன்றே வீட்டில் உலவும் எலியை விஷம் வைத்துக் கொள்கிறோம். அப்படி இறக்கும் எலியைச் சாலையில் வீசி எறிகிறோம். இந்த எலியை உண்ணும் காகம் உடலில் விஷம் கலந்து, நாளடைவில் காகம் இறந்துவிடுகின்றன.. எல்லா நகர்ப் பகுதிகளிலும் எலியை விஷம் வைத்துக் கொன்று சாலையில் வீசுவது ஆயிரக்கணக்கில் தினமும் நடைபெறுகிறது.  கொங்குப் பகுதியில் இன்று காகங்கள் பெருமளவில் இல்லை. காகங்கள் தொடர்ந்து இறக்கத் தொடங்கினால் மிக அதிக பாதிப்பு நம் சூழலியலில் ஏற்படும்.

 அனைத்து வித உணவையும் சாப்பிடும் பறவையே காகம்!  நாம் வீணாகுவதால் கொட்டும் உணவிலிருந்து இயற்கையாக இறக்கும் உயிரினம் வரை  காகங்கள் சாப்பிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறது. இப்படி இயற்கையாகத்  துப்புரவு பணியைச் செய்து கொண்டு இருக்கும் காகத்தை விஷ எலியைக் கொண்டு சாகடிப்பது மனிதனுக்கே பெரிய கேடாக அமையும். வீணான உணவை அகற்றாமல்விட்டால், கொசு பெருகும். அதன் வழியாக நிறைய  வியாதிகளை உண்டு பண்ணும். காகம் அந்த உணவை உண்டு சுத்தப்படுத்துவதால் கொசுக்கள் பெருக்கம் கட்டுப்படுகிறது.

இப்படி மனிதன் தன் சுய நலத்திற்காகச் செய்து வரும் அனைத்தும் பல வித  உயிர்கள் இறப்பிற்குக் காரணமாகிறது. மேலும் காட்டுயிர் இறப்பானது இயற்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவதால், அவை மீண்டும் மனிதனுக்கே பெரும் பாதிப்பாகிறது.

 காட்டுயிர்கள் போன்று மனிதன் இயற்கை  வாழ்கையை விரும்பி, பலவித யோகா,  தியானம், உடற்பயிற்சி செய்து, அந்தப் பழைய வாழ்க்கை நோக்கிச் செல்ல முற்படுகிறான். இதைவிடவும் இயற்கையை, காட்டுயிர்களை  அழிக்காமலிருந்தாலே போதும் அவன் பழைய இனிய வாழ்க்கையை  வாழலாம்.  ஓவ்வொரு உயிரும் நன்றாக இருந்தால் தான் மனிதர்களாகிய நாமும் நன்றாக வாழ முடியும்!.

வீரப்பன்-காடு அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சிவ சுப்பிரமணியன்

30 ஆண்டுக்கால பத்திரிகையாளர், எழுத்தாளர் ,மனித உரிமைச் செயற்பாட்டாளர். வீரப்பனை முதன்முதலில் காட்டுக்குச் சென்று சந்தித்து எழுதியவர்.பழங்குடி சமூக மக்களின் பல பிரச்சினைகளை அடிக்கடி எழுதிக் கவனப்படுத்தி, சில தீர்வுகளுக்குக் காரணமானவர்.

 # பொய் வழக்கும்,போராட்டமும்

 # அழகிய தமிழ் பெயர்கள்   ஆகிய நூல்களின் ஆசிரியர்.

’வீரப்பன் வாழ்ந்ததும்,வீழ்ந்ததும்’ என்ற நூலை விரைவில் வெளியிட உள்ளார்.

தொடரும்…

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time