காப்பாற்றப்படுவாரா? கைவிடப்படுவாரா?

-சாவித்திரி கண்ணன்

போக்குவரத்துறையில் வேலை தருவதாக பண மோசடி செய்தது, டாஸ்மாக்கை சூறையாடி வருவது.. என ஏகத்துக்கும் ஆட்டம் போட்டவர் செந்தில் பாலாஜி!  இந்த கைது விவகாரத்தில்  யார், யாரை கைவிடுவார்கள்?  பாஜகவின் பேரத்திற்கு அடிபணியப் போவது செந்தில் பாலாஜியா? ஸ்டாலினா?

விதிவசத்தால் நமக்கு மிக நெருங்கிய நண்பர்கள் கூட செய்ய முடியாத நன்மையை  நாம் எதிரியாக கருதும் ஒருவர் செய்துவிடுவதுண்டு! டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக போலி மதுவை விற்று, ஆறு உயிர்கள் பலியாக காரணமான ஒரு கிரிமினலின் கைது, கொண்டாட வேண்டியதா? கூப்பாடு போட வேண்டியதா?

கூட்டணிக் கட்சிகள் கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார்கள்!

இந்தியாவின் முக்கிய தலைவர்கள் எல்லாம் அறிக்கைவிடுகிறார்கள்!

பழிவாங்கும் செயல். மிரட்டிப் பார்க்கிறார்கள், அராஜகம் !

கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிறார்கள்!

அமைச்சரை சித்திரவதை செய்துவிட்டார்கள்! துன்புறுத்திவிட்டார்கள்!

இவை எல்லாம் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்காக வெளியான அறிக்கைகளாகும்.

மத்திய பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பிஐ இவற்றைக் கொண்டு எதிர்கட்சிகளை மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளான அதிமுக, சிவசேனை போன்றவற்றையும் கூட மிரட்டி பணிய வைக்கும் அரசியலை செய்து வருகிறது என்பது புதியதல்ல!

ஆனால், அதற்காக செந்தில் பாலாஜி போன்ற உச்ச பட்ச கிரிமினல்களைக் கூட தண்டிக்கக் கூடாது என்றால், இந்த நாட்டிற்கு என்ன பாதுகாப்பு? மக்களுக்கு விடிவு தான் எங்கே..?

முதலில் செந்தில் பாலாஜி ஒரு அரசியல்வாதியா? என்றால், உறுதியாகச் சொல்ல முடியும் அவர் ஒரு அதிகார அடியாள்!

முதலில் அவர் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் அதிகார அடியாளாகப் பணியாற்றினார். பிறகு டி.டி.வி.தினகரனுக்கு அடியாளாக இருந்தார்! அவருடைய இந்த அடியாள் சேவகத்தை பார்த்து புளகாங்கிதப்பட்டு தான் ஸ்டாலின் தனக்கான ஆளாக செந்தில் பாலாஜியை வரித்துக் கொண்டார்.

இன்றைக்கு செந்தில் பாலாஜி எந்த வழக்கில் கைதாகி உள்ளாரோ, அந்தப் புகாரை முதன் முதலில் அதிமுக ஆட்சியில் ஆளுனருக்கு தந்து கைது செய்ய வலியுறுத்தியதே ஸ்டாலின் தானே!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது, ஏகப்பட்ட பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை போட்டுத் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பணம் பறித்தார் செந்தில் பாலாஜி! இப்படி வசூல் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தனர் செந்தில் பாலாஜியின் சகோதரரும் அவர் நண்பர்களும்! ஆனால், அதில் 81 பேருக்கு வேலை போட்டுத் தர முடியவில்லை. ஆகவே, பணத்தை திருப்பி கேட்டனர். பணத்தை தரமறுத்ததோடு மிரட்டப்பட்டனர் பணம் கொடுத்தவர்கள்! ஆகவே, ஏமாந்தவர்கள் காவல்துறையில் புகார் தந்தனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் சென்றனர்.

நீதிமன்ற விசாரணை, அரசியல் அழுத்தங்களால் இழுத்தடிக்கப்பட்டது. அதிமுக ஆட்சி மாறி, திமுக ஆட்சி வந்த போதும் இந்த நிலை தொடர்ந்தது. வேலைக்கு லஞ்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தப்பிக்க, பணத்தை திருப்பி தந்துவிட்டோம். ஆகவே வழக்கை வாபஸ் பெற வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டதும், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஒப்புக் கொண்டது!

இதனால் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது! பணத்தை திருப்பி கொடுத்தால் லஞ்சம் வாங்கியது உறுதிப்படுகிறதே! ஒரு அமைச்சர் வேலைக்கு லஞ்சம் வாங்கியது குற்றம் தானே! இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற்று குற்றவாளியை தப்பிக்கவிட்டீர்கள்? என உச்ச நீதிமன்றம் கேட்டதோடு உயர்நீதிமன்றத்தையே கண்டித்தது! உச்ச நீதிமன்றம் தந்த நெருக்கடியால் தான் தற்போது அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

நியாயப்படி பார்த்தால், இந்தக் கைது எப்பவோ நடந்திருக்க வேண்டியது! மிகக் காலம் தாழ்ந்தாவது நடந்ததே என சந்தோஷப்பட வேண்டுவதே நம்மை போன்ற சாதாரண குடிமகனின் பார்வையாகும்!

செந்தில்பாலாஜி இது நாள் வரை கைது செய்யப்படாமல் காப்பாற்றப் பட்டதே திமுக ஆட்சித் தலைமையால் தான்! ஏற்கனவே கிரிமினல் காரியங்களை செய்வதில் கில்லாடியான செந்தில் பாலாஜியை ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது! ஆகவே தான், அதிகம் பணம் புழங்கும் துறைகளான டாஸ்மாக்கையும், மின்சாரத் துறையையும் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின்!

அதாவது, ஏற்கனவே ஸ்டாலின் யார் மீது புகார் கொடுத்தாரோ, யாரை கொள்ளையடிப்பதிலும், தலைமைக்கு கொடுப்பதிலும் வல்லவர் என்றாரோ, யாரை ஆள் கடத்தல் பேர் வழி, கொலை குற்றத்தில் தொடர்புள்ளவர் எனக் கூறினாரோ அவரையே தன் நெருக்கமான அமைச்சரவை சகாவாக்கிக் கொண்டார்! இது குறித்து ஓட்டு போட்ட மக்களோ, சமூகமோ, தன் கட்சிக்காரர்களோ என்ன நினைப்பார்கள் என்ற எந்த குற்றவுணர்வும் இல்லை ஸ்டாலினுக்கு!

இதனால் டாஸ்மாக்கை கொள்ளையடிக்கும் கூடாரமாக மாற்றிவிட்டார் செந்தில் பாலாஜி!

# ஆயிரக்கணக்கான பார்களை அனுமதியின்றி நடத்தியது!

# அதில், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுவை விற்றது!

#  டாஸ்மாக்கிலேயே போலிமதுவை விற்றது, அதன் மூலம் பலர் சாவுக்கு காரணமானது!

#  உற்பத்தியாகும் மதுவில் சரிபாதிக்கும் மேல் பிளாக்கில் விற்றதன் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் மட்டுமே இரண்டு லட்சம் கோடிகள் கள்ளத்தனமாக சம்பாதித்தது!

#  இது போதாது என்று டாஸ்மாக் ஊழியர்களிடமே பத்து ரூபாய் அதிகம் விற்க வைத்து, அந்த பணத்திலும் பாதியை பறித்துக் கொண்டது!

#  பார்களில் சைடு டிஸ், தண்ணீர் வியாபாரம் முதலியவற்றில் கூட மற்றவர்களை சம்பாதிக்க அனுமதிக்காமல், அனைத்தையும் மொத்த குத்தகைக்கு எடுத்தது! அதில் வைத்ததே விலை என பணம் பார்த்தது!

இவை தொடர்பான புகார்கள் எதையுமே முதல்வர் காதில் போடக் கூட மறுத்தது!

இவை ஒரு புறம் இருக்க, உள்ளாட்சி தேர்தல்களில் கூட கூட்டணிக் கட்சிகள் நிற்கும் இடங்களில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கருவறுத்தது! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அவமானப்படுத்தியது!

கொங்கு மண்டலத்தில் திமுகவை முழுக்கவே கார்ப்பரேட் மயப்படுத்தி இருப்பது!

இருக்கும் கட்சியான திமுகவிலேயே ஸ்டாலின் குடும்பத்தை தவிர, மற்றவர்களிடம் அன்னியப்பட்டு இருப்பது!

செந்தில்பாலாஜி கைதை அறிந்தவுடன் ஸ்டாலினும், அவரது மகனும் ,மருமகனும் நள்ளிரவில் மருத்துவமனை சென்று பார்த்தது!

தற்போது செந்தில் பாலாஜி கைதை அரசியலாக்கி, அனைத்து குற்றங்களையும் புனிதப்படுத்துவது…என்பதெல்லாம் என்ன?

மதச்சார்பற்ற கட்சி என்பதால் வாக்களித்தோம். ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் மனிதநேயமின்றி கொள்ளையடிப்பதில் குறியானீர்கள்! கெஞ்சினோம், கதறினோம். உங்கள் சூறையாடலை நிறுத்த எத்தனை முறை கதறியும் நீங்கள் திருந்தவில்லையே! செந்தில் பாலாஜியை விலக்கவில்லையே! இதன் மூலம் செந்தில்பாலாஜி ஒரு கருவி தான்! அவரை இயக்குவது ஸ்டாலின் தான் என்ற முடிவுக்கு தானே வரமுடிகிறது!

ஒரு பக்கம் இப்படி எல்லா துறைகளிலும் மிதமிஞ்சிய ஊழலை நிகழ்த்திக் கொண்டு, மத்திய பாஜக அரசுக்கு மறைமுகமாக மண்டியிட்டு, அவர்களின் அனைத்து மக்கள் விரோத சட்டங்களை எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அடிபணிவதன் மூலமும், கொள்ளையிட்ட பணத்தில் கொஞ்சம் அங்கே தருவதன் மூலமும் பேர அரசியல் நிகழ்த்தி தப்பித்துவிடலாம் என தப்புக் கணக்கு போட்டார் ஸ்டாலின்.

இதன் மூலம், ‘மக்களுக்கும் விசுவாசமில்லை. கொண்ட கொள்கைக்கும் விசுவாசமில்லை. சொந்தக் கட்சிக்காரன் மீதும் பரிவோ, பாசமோ இல்லை. பணமே குறிக்கோள். குடும்ப அதிகாரத்தை நிலை நிறுத்துவதே இலக்கு’ என இயங்கினார் ஸ்டாலின்! இதன் மூலம் தன்னை நம்பிய அனைவருக்குமே பச்சை துரோகம் இழைத்தார் ஸ்டாலின். அவர் நம்பிய சனாதன கூட்டாளி முதுகில் குத்தியவுடன் இன்று மீண்டும் மக்களிடம் வருகிறார்.

தன்னுடைய சுயநல அரசியல் மூலம் செந்தில் பாலாஜியைக் கொண்டு தமிழகத்தை சூறையாடி வந்த ஸ்டாலினை எப்படி தடுத்து நிறுத்துவது என தாங்கொணா துன்பத்தில் தவித்த தமிழக மக்களுக்கு முதன் முறையாக செந்தில் பாலாஜி கைதின் மூலம் நன்மை செய்துள்ளது மத்திய பாஜக அரசு! அழிக்கவே முடியாதோ என்ற ஒரு கொடிய அரக்கனை, அவனைவிட பெரிய அரக்கன் வந்து அழிப்பது என்பது தானே வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வரும் அனுபவமாக உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமையால் செந்தில் பாலாஜி காப்பாற்றப்படுவாரா? அல்லது கைவிடப்படுவாரா? என்ற கேள்வி பலர் மனதிலும் உள்ளது! பொதுவாக ஸ்டாலின் சுயநலவாதி! அண்ணா நகர் ரமேஷ் விவகாரத்தில் நாம் இதை பார்த்துள்ளோம். இன்று அவரும் உயிரோடு இல்லை! இறந்த ரமேஷின் விசுவாசத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

விஷயம் தன்னை மீறிப்போனால் ஸ்டாலின் தன்னை மட்டுமே தற்காத்துக் கொள்ளப் பார்ப்பார்! இதில் நாம் கவனிக்க வேண்டியது, செந்தில் பாலாஜியை ஸ்டாலினால் முந்தைய ரமேஷைப் போல விட்டுவிட முடியாது! அப்படி கைவிட்டால், செந்தில் பாலாஜி ஸ்டாலினை கைகாட்டி விடுவார்! ஸ்டாலினால் கைவிடப்படும் செந்தில்பாலாஜி பாஜகவிற்கு மிக்க பயனுடையவராகிவிடலாம்! அதன் பிறகு, ஸ்டாலினையும் தூக்கி உள்ளே வைக்க பாஜக தயங்காது. அதனால், செந்தில் பாலாஜியை காப்பாற்றாவிட்டால், ஸ்டாலினால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமலும் போகக் கூடும். என்ன நடக்கப் போகிறது என்பதற்கு காலமே பதில் சொல்லும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time