பாஜக, அதிமுக – ஆண்டான் அடிமை உறவா?

-சாவித்திரி கண்ணன்

ஏனிந்த உறவு? எதற்கிந்த பிணைப்பு? ஒத்த கொள்கையா? ஒருமித்த லட்சியமா? மக்கள் நலனா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் என்ன பதில் இருக்கிறது..? அவமானங்கள், இழப்புகள், அலைகழிப்புகளைக் கடந்து ஏன் தொடர்கிறது அதிமுக-பாஜக உறவு..? இந்த அவலங்களின் மூலம் என்ன..?

”ஜெயலலிதா குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்” எனப் பேசி அதிமுகவினரை சீண்டியுள்ளார் அண்ணாமலை!

இதற்கு அதிமுக தலைவர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜி., சிவி.சண்முகம் உள்ளிட்டவர்கள் கோபாவேஷமாக அண்ணாமைலையை எதிர்த்து அறிக்கை தந்துள்ளனர்!

அதிமுவால் இப்படி அறிக்கை மட்டும் தான் கொடுக்க முடியும்! இதை நன்கு தெரிந்து தான் அண்ணாமலை சீண்டி கோபப்படுத்துகிறார்! ‘எவ்வளவு கோபப்பட்டாலும் எங்கள் தயவில் தான் நீங்கள் சுதந்திரமாக நடமாடுகிறீர்கள்! நாங்கள் நினைத்தால் உங்களில் பலரை சிறைக்கு அனுப்ப முடியும். எங்களுக்கு கட்டுப்பட்டு கிடப்பதை தவிர உங்களுக்கு வேறு கதி கிடையாது. உங்கள் சிண்டு எங்கள் கைகளில் மாட்டிக் கொண்டுள்ளது’ என்பதைத் தான் இந்த சீண்டல்களில் மீண்டும், மீண்டும் நிருபித்து வருகிறார் அண்ணாமலை!

ஜெயலலிதா இருந்த போது பாஜக தலைமையை ஆட்டி வைத்தார்! அதிமுக தயவில் பிரதமராக இருக்க நேர்ந்த காலகட்டம் வாழ்க்கையின் மிகத் துயரமானது என பாஜகவின் பெரும் தலைவரான வாஜ்பாய் புலம்பினார்! 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியா? இந்த லேடியா? பார்த்துவிடலாம் என சூளுரைத்தார்! இத்தனைக்கும் ஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இருந்தன! அதைக் கொண்டு அவரை மிரட்டி பணிய வைக்க முடியவில்லையே! காரணம், அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்ட மக்கள் பலம் ஜெயலலிதாவிற்கு இருந்தது தான்! மக்கள் பலம், தன்நம்பிக்கை ஆகிய இரண்டும் அவருக்கு இருந்தன! ஆனால், அவை இரண்டும் இன்றைய அதிமுக தலைவர்களுக்கு இல்லை.

அண்ணாமலை இப்படி அவமானப்படுத்துகிறார்! அவர் குட்டக்குட்ட நீங்கள் குனிகிறீர்கள் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார்.

அண்ணாமலை பேச்சுக்கு பதிலடியாக, ‘இனி பாஜகவோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என அதிமுக முடிவெடுக்க கூடிய கட்சியாக இருந்தால், இப்படி பேசவே அண்ணாமலைக்கு தைரியம் வராதே! அதிமுக உறவு இல்லை என்றால், நாம் தமிழ் நாட்டில் அனாதையாகிவிடுவோம். ஒரு எம்.எல்.ஏ, எம்.பி சீட் கூட வெற்றி பெற முடியாது என்று அச்சப்பட்டு இருப்பாரே!

ஆனால், கடுமையான எதிர்வினை வந்த பிறகும் கூலாக, “கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். எனக்கு எப்படி பேசுவது என யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. நான் பேசியதில் உண்மை இருக்கிறதா? என்பது தான் முக்கியம். உண்மைக்கு புறம்பாக பேசினால் மாற்றிக் கொள்ளத் தயார் என்கிறார்! இது ஒரு செருப்படி பதில்! இதை வாங்கிக் கொண்ட அதிமுக அமைதியாகிவிட்டது.

’’ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்பதே எனது ஒற்றை ஆசை மற்றும் லட்சியம் ஆகும்’’ எனச் சொல்லும் அண்ணாமலை இந்த லட்சியத்தை ஊழல்வாதிகள் என அவர் மதிப்பிடுகிற அதிமுகவுடன் கைகோர்த்து எப்படி செயல்படுத்த முடியும்? இது மிகப் பெரிய முரண் அல்லவா?

அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா ஒரு பொருளாதாரக் குற்றவாளி தான்! அண்ணாமலை பேசியது உண்மை தான்! எனில், அதிமுகவுடன் என்ன கூட்டு வேண்டிக் கிடக்கிறது? அந்த பொருளாதாரக் குற்றவாளி ஜெயலலிதாவின் வாக்கு வங்கியில் ஏன் பயனடைய துடிக்க வேண்டும்? தங்கள் சொந்த பலத்தில் நின்று மக்களின் ஆதரவை வென்றெடுக்கட்டும். அதிமுக பக்கம் போக வேண்டியதில்லையே! பாஜகவிற்கு சுயமரியாதை இருக்குமானால், அதிமுகவுடன் கைகோர்க்காமல் தனித்து நின்று போட்டியிட வேண்டும்.

அதிமுகவின் தயவும் வேண்டும். அதே சமயம் அவர்களை குத்திக் காண்பித்து, அவமானப்படுத்தி, சீண்டிப் பார்த்து துடிதுடிக்க வைப்பேன் என்பது சேடிஸ்ட் மனோபாவமல்லவா? எந்த ஒரு அரசியல்வாதியும் இதை செய்யமாட்டானே!

குறைந்தபட்ச நேர்மை உள்ளவன் கூட தன்னை தோளில் சுமந்து நடக்கும் கூட்டாளியின் தலையில் குட்டிக் காயப்படுத்தமாட்டான்! அரைகுறை நாணயம் உள்ளவன் கூட உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கமாட்டான்!

இப்படிப்பட்ட கிராதகர்களிடம் கட்டுண்டு கிடக்கும் அவலம் அதிமுகவிற்கு ஏன் நேர்ந்தது? கட்டுப்பாடின்றி ஊழல் செய்ததன் விளைவைத் தான் இன்று அதிமுக கைகட்டி சேவகம் செய்து, அவமானப்பட்டு அனுபவிக்கிறது என்று புரிந்து கொள்வதா?

எவ்வளவு ஆதரவு தந்தாலும், அரவணைத்த யாரையும் நாங்கள் அழிக்காமல் விடமாட்டோம்! ஆட்டை பட்டியில் இட்டு வளர்ப்பதெல்லாம் ஒரு நாள் கழுத்தறுத்து பிரியாணி செய்து சாப்பிடத்தான் என்றால், கசாப்பு கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்பது முட்டாள்தனம் தானே!

ஆடாக இருக்கும் வரை வெட்டித் தின்னத்தான் ஆசைப்படும் பாஜக! சிங்கமாக இருந்தால் மட்டுமே, சிரம் தாழ்த்தி வணங்கும். திருந்த வேண்டியது அதிமுக தானேயன்றி பாஜகவல்ல! தன்மானம் கொண்டு சிலிர்த்து எழும் துணிச்சல் இல்லை என்றால், அதிமுகவை சிறுகச் சிறுக விழுங்கி செரித்து ஏப்பம் விடத் துடிக்கும் பாஜகவின் நோக்கம் பழுதின்றி நிறைவேறவே வாய்ப்புள்ளது!

அண்ணாமலை மக்கள் நலன் சார்ந்த அரசியல் எதையும் செய்யவில்லை! இல்லாத பிம்பத்தை தனக்கு கட்டி எழுப்ப முயன்று தோற்ற வண்ணம் இருக்கிறார்! அதிமுகவும் பொது நலன் சார்ந்த அரசியலை புறக்கணித்து தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது! மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை திசை திருப்பவே இவர்கள் லாவணி கச்சேரி நடத்துகின்றனர்! அடிப்பவனும் திருந்த மாட்டான். அடி வாங்குபவனும் மாறமாட்டான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time