ரஷ்ய-உக்ரைன் போரில் அம்பானி அபார ஆதாயம்!

-சாவித்திரி கண்ணன்

ரஷ்ய – உக்ரைன் போர் உக்கிரமாக நடந்து கொண்டுள்ளது! இரண்டு பக்கமும் பேரிழப்புகள்! போரின் விளைவால் உலக பொருளாதாரமே பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ஆனால், இந்தப் போரிலும் அதிகப் பலன்களை அறுவடை செய்த ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் தான்! சில லட்சம் கோடிகள் ரிலையன்ஸ் பலனடைந்தது எப்படி?

பிப்ரவரி 2022 தொடங்கி  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார  பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளன! ஆனால், இந்தியாவில் மட்டும் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாறாமல் அப்படியே உள்ளன!

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் தன்னிடம் மிகப் பெரிய அளவில் தேங்கிவிட்ட கச்சா எண்ணெயை ரஷ்யா மலிவு விலையில் இந்தியாவிற்கு விற்பனை செய்கிறது. அதுவும் டாலராக இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதாவது, வர்த்தகத்தில் இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படுகிறது. இது மலிவான விலையில் இந்தியாவுக் கச்சா எண்ணெய் கிடைக்க வழியை ஏற்படுத்தியது.

உண்மையில் இது இந்திய மக்களுக்கு கிடைத்த எதிர்பாராத ஜாக்பாட் பரிசாகி இருக்க வேண்டிய நிலையில், அந்தப் பலனை அம்பானிக்கு அள்ளி கொடுத்துவிட்டது மோடி அரசு!

இந்த காலகட்டங்களில் நாளொன்றுக்கு எட்டு லட்சத்தில் இருந்து ஒன்பது லட்சம்  பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு தற்போது சுமார் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது!

ரிலையன்ஸ் ஆயில் நிறுவனம்

 

மலிவு விலையில் ரஷ்யா தந்த குரூட் ஆயிலை தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், Nayara Energy தினமும் சுமார் நான்கு லட்சம் பேரல் கச்சா எண்ணெய்-ம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், MRPL ஆகியவை இணைந்து 4,60,000 பேரல் கச்சா எண்ணெயும் நாளொன்றுக்கு இறக்குமதி செய்கின்றன.

நமது அரசு நிறுவனங்களான  ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஆகியவை ரஷ்யாவில் அப்ஸ்ட்ரீம் எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களில் முதலீடு செய்துள்ள வகையில் அவற்றுக்கே இந்தப் பலன் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்திய ஆயில் சந்தையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அம்பானி இதை அனுமதிக்கவில்லை.

அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை சுமார் 25 சதவிகிதமேனும் குறைந்திருக்க வேண்டும். அப்படி குறைந்திருக்கும் பட்சத்தில் பல பொருட்களின் விலையும் குறைந்திருக்கும். போக்குவரத்து செலவுகள் குறையும் போது அதன் பலன்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எதிரொலித்திருக்கும்.

ரஷ்யாவானது இந்திய அரசின் வழியாக இந்திய மக்களுக்கு கொடுத்த ஒரு சலுகையை அம்பானிக்கு கொடுத்து, அதில் மக்கள் பலடையாமல் செய்துவிட்டார்கள் இந்த காவி தேசபக்தர்கள். மன்னிக்கவும், கார்ப்பரேட் தேசபக்தர்கள்! இது குறித்த கேள்விகள் எழுப்பபட்ட போது, நமது தேசபக்தர்கள் தரப்பில், ‘’ரஷ்யாவுடன் செய்து கொண்ட  இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தங்கள் அரசியலாக்கப்படக் கூடாது’’ என  கொந்தளித்துவிட்டனர்!

 

தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இயங்குகிறது. அம்பானியின் சிக்கா துறைமுகம் ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கையாளுகிறது.  பல மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. இதனை ரிலைன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறைமுகத்தில் இருந்து பல மில்லியன் பீப்பாய்கள் டீசலை  ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பியவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது!

இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு ஆலை நயாரா எனர்ஜி நிறுவனமாகும். இது இந்தியாவில் உள்ள ஒரு ரஷ்யா நிறுவனம் என்ற வகையில் அந்த நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் தருவதை நாம் கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், இத்தனை இந்திய அரசு நிறுவனங்கள் இருக்க, அம்பானிக்கு தந்தது ஏன்?

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு வரி விதித்த வரியையும் ரத்து செய்ய வேண்டும் என ரிலையன்ஸ் நிர்பந்தத்தம் தந்தது. இதனால், ஏற்றுமதியாகும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரியும் டீசல் லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்த மத்திய அரசின் உத்தரவு திரும்ப பெறப்பட்டது. ஆக, அம்பானி தான் அடைந்த பலனில் சிறு துளியைக் கூட வரியாக அரசுக்கு தர முன்வரவில்லை!

இந்த அரசு யாருக்கான அரசு என்பது மீண்டும், மீண்டும் முகத்தில் அறைந்தாற் போல பல சம்பவங்களில் வெளிப்பட்ட வண்ணம் தான் உள்ளது. தீர்வு மக்கள் கையில் தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time