செந்தில்பாலாஜிக்காக எந்த எல்லைக்கும் போவதா?

-சாவித்திரி கண்ணன்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதன் பின்னணி என்ன? அவர் மீது முதல்வர் குடும்பம் காட்டும் அதீத அக்கறை உருவாக்கும் விளைவுகள் என்ன? செந்தில் பாலாஜி விவகாரத்தில் மற்ற திமுக தலைவர்கள் நிலை என்ன ? குற்ற பின்னணியில் கைது செய்யப்பட்டவர் அமைச்சராக தொடர முடியுமா?

செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் எடுக்கப் பட்டுள்ளார்! ‘குற்றவியல் வழக்கில் கைதான ஒருவர் அமைச்சராக செயலாற்ற முடியாது’ என்ற காரணத்தால் தான் அவரிடம் இருந்த அமைச்சரவை இலாக்கள் வேறு இரண்டு அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ளன! ஆன போதிலும், அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வைத்திருக்க ஸ்டாலின் பிடிவாதம் காட்டுவது ஏன்? என்ற கேள்வி இன்றைக்கு தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது!

இந்தப் பிரச்சினை கவர்னருக்கும், முதலமைச்சருக்குமான அதிகாரச் சண்டையாகவும் மாறியுள்ளது!

பொதுவாக தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திமுக அரசு மீது குற்றம், குறை சொல்பவராகவும், பல மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பவராகவும், சனாதனக் கருத்துக்களை வலியுறுத்துபவராகவும் அறியப்பட்டுள்ள காரணத்தால், இயல்பாகவே தமிழக மக்களுக்கு அவர் மீது ஒரு அதிருப்தி உள்ளது! ஆகவே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதற்கு அவர் ஆட்சேபனை தெரிவித்திருப்பதையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே திமுகவின் ஆதரவாளர்கள் பார்க்கிறார்கள்!

”இப்படி ஒரு நிலைபாடு எடுக்க ஆளுனருக்கு அதிகாரமில்லை! முதலமைச்சரின் விருப்பமும், அதிகாரமும் சம்பந்தப்பட்டதே அமைச்சர் நியமனங்கள்! அதை செய்து கொடுக்க வேண்டியதே கவர்னரின் பணி” என்கிறார்கள்! திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் இதையே வலியுறுத்தி உள்ளனர்.

திமுக ஆதரவாளர்கள் வைக்கின்ற வாதங்கள் உண்மை தான் என்றாலும், அவை ஒரு பகுதி உண்மை தானேயன்றி, முழு உண்மையல்ல! நமது அரசியல் சட்டங்கள் ஆளுனருக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், அதன் வரம்புகள் என்ன சொல்கின்றன? அது மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் ஆளுனர்கள் அதிகாரம் குறித்து என்ன சொல்லி உள்ளன என்றும் நாம் பார்க்கலாம்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் அறிவுரைப்படியே ஆளுனர் செயல்பட முடியும். மாநில அரசின் பலதரப்பட்ட துறைகளுக்கு அமைச்சரை தேர்ந்தெடுப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமையாகும்!

என்றெல்லாம் நமது அரசியல் சட்டங்கள் சொல்லியுள்ளன. நீதிமன்றங்களும் இதை பல்வேறு வழக்குகளில் உறுதி செய்துள்ளன!

அதே சமயம்,

மாநில முதலமைச்சர் அல்லது மற்ற அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் சூழல் ஏற்பட்டால், அதற்காக அரசமைப்பு சட்டத்தில் சிறப்பான விதிமுறை இல்லாத நிலையில், ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்!

என ஒரு சில நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல் சட்டம் ஆளுனருக்கு தந்த அதிகாரங்கள் வழி நின்று தீர்ப்புகள் தந்துள்ளன!

மேலும், ‘மாநில அமைச்சரவை அளிக்கும் அறிவுரையில் சுயநலம் சார்ந்த சார்பு தன்மை வெளிப்படும் பட்சத்தில், அந்த அறிவுரையை புறந்தள்ளி, ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்’ என்றும் நீதிமன்றங்கள் கூறியுள்ளன!

‘சட்டமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் ஒருவர் பிரிவு 191 கூறு 1 ல் கூறப்பட்டுள்ள தகுதி குறைபாட்டுக்கு ஆளாகி இருக்கிறாரா?’ என்பது போன்ற பிரச்சினைகள் எழுந்தால், அதில் ஆளுனரின் முடிவே உறுதியானதாகும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட ஒரு அமைச்சர் மீது பெரும் ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் தமிழக ஆளுனர் தானே முன்வந்து லஞ்ச ஒழிப்பு துறையை விசாரணை செய்ய ஆணையிடலாம்… என்பதாலேயே திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஆளுனரிடம் புகார் மனு அளித்துள்ளது!

அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புதுறை விசரணைக்கு ஆணையிடக் கோரி கவர்னரிடம் ஸ்டாலின் மனு.

டிசம்பர் 22, 2020 ஆம் ஆண்டு திமுக தலைவர்கள் அன்றைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்திடம் புகார் அளித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசியவற்றை அப்படியே கீழே தந்துள்ளோம்;

எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை. ஆகவே ஆதாரங்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

முதல்வர் வருமானத்திற்கு மீறி சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். 2018ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வர் மீது சொல்லப்படும் புகார்கள் குறித்த விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட முடியும். ஆகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை நடப்பதை ஆளுநர் உறுதிசெய்ய வேண்டும்.

இவையெல்லாம் அன்று ஸ்டாலின் பேசியவையாகும்! அதாவது, ”முதலமைச்சர் மீதே விசாரணைக்கு ஆளுனர் உத்திரவிட முடியும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்த வகையில் தான் தற்போது, அதிமுக கட்சித் தலைவர்களும் ’செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய ஆளுனர் ஆர்.என்.ரவி உத்திரவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

ஆக, தங்கள் எதிரியை தண்டிக்க வேண்டும் என்றால், ஆளுனருக்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறுவதும், தங்கள் சகா சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால், உங்களுக்கு என்ன அதிகாரம் என ஆளுனரைக் கேட்பதும் தான் திமுகவின் அரசியல் அணுகுமுறையாக உள்ளது.

இறுதியாக அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 163(2) வழங்கியுள்ள ஆளுனருக்கான விருப்புரிமை அதிகாரங்கள், அரசமைப்பு சட்டம் கூறும் சூழ் நிலைகளைக் கடந்தும், ஆளுனருக்கு பரந்துபட்ட, வரையறுக்கப்படாத அதிகாரங்களை வழங்கியுள்ளது.

உண்மையில் இது போன்ற அதிகாரங்களை குடியரசுத் தலைவருக்கு கூட நமது அரசியல் சட்டங்கள் வழங்கவில்லை என்பதைப் பார்க்கும் போது, மத்திய ஆட்சியாளர்கள் மாநில அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கத்திலேயே அரசமைப்பு சட்டத்தில் ஆளுனருக்கு அளவில்லா அதிகாரங்களை வாரியிறைத்துள்ளார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் சூழலில் நிலைமையை சுமூகமாக்க திமுக அரசு செந்தில் பாலாஜியை தற்காலிகமாக வேணும் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கலாம். ஒரு வேளை ‘இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காயப்படுத்தக் கூடாது’ எனக் கருதினால், ஆம் ஆத்மி டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவைப் போல, அவரையே ராஜீனாமா செய்யச் சொல்லலாம்! அமைச்சராக இருக்கும் ஒருவரை விசாரிப்பது விசாரணை அமைப்புக்கும் சற்று சிரமாகவே இருக்கும். குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஒருவர் அமைச்சராக தொடர்வது சம்பந்தப்பட்ட அரசின் மரியாதைக்கு இழுக்காகும்!

மக்கள் மத்தியிலான பொதுக் கருத்தின் அடிப்படையில் பார்த்தாலுமே கூட, செந்தில் பாலாஜி விஷயத்தில் முதல்வர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு, அவர் மீதான பற்றோடு தான் இதை அணுகி வருகிறார். செந்தில் பாலாஜி கவனித்த துறைகளை மற்ற இரு அமைச்சர்களுக்கு வழங்கும் தன் முடிவை முதல் அமைச்சர் கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் அமலாக்கத் துறை கஸ்டடியில் இருப்பது போன்றவற்றை முற்றாக மறைத்து, ‘செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் காரணமாக’ என இலாக்கா மாற்றத்திற்கான காரணமாக சொல்லி இருப்பதை எப்படி புரிந்து கொள்வது….?

அனைவருக்கும் தெரிய வந்துள்ள உண்மையை கவர்னரிடம் முதல்வர் ஏன் மறைக்க வேண்டும்? செந்தில் பாலாஜி மீது முதல்வருக்குள்ள கண்மூடித்தனமான பிரியம் அவரிடமுள்ள குறைந்தபட்ச நேர்மையைக் கூட காணாமலடித்துவிட்டதோ..?

செந்தில் பாலாஜியை காப்பாற்ற திரைமறைவில் ஸ்டாலின் மத்திய பாஜக அரசுடன் நடத்தும் பேரங்கள் தொடர்பான செய்திகளைக் கேள்விப்படும் போது, ‘செந்தில் பாலாஜியை காப்பாற்றிவிட்டு, அதிமுகவினரைப் போல, ஸ்டாலின் வருங்காலத்தில் பாஜகவின் காலடியில் கிடக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளப் போகிறாரோ..’ என்ற கவலையே கட்சிக்குள்ளும் காணப்படுகிறது.

குற்றவாளியாக அறியப்பட்ட நிலையிலும், செந்தில் பாலாஜிக்கு அதிமுக்கியத்துவம் தருவது பொதுச் சமூகத்தின் மனசாட்சியை துச்சமாக மதிப்பதாகத் தான் புரிந்து கொள்ளப்படும். திமுகவின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளே கூட, ”தனி ஒரு மனிதருக்காக ஆட்சி மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் நாம் வளர்பானேன்?” என்று தான் பேசிக் கொள்கிறார்கள்! ‘செந்தில் பாலாஜிக்கு திமுகவிற்குள் அனுதாபமோ, ஆதரவோ இல்லை’ என்பது தான் யதார்த்தமாகும். இப்படி இருக்க, கூட்டணி கட்சித் தலைவர்களை நிர்பந்தித்து கண்டன அறிக்கைகள் பெறுவதும், கண்டணக் கூட்டங்கள் நடத்துவதும் கூட்டணிக்குள் காலப் போக்கில் கசப்புணர்ச்சி ஏற்படவே வழிவகுக்கும்.

பி.டி.ஆர் விவகாரத்தில் திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கூறியது போல, ”இது அவரது தனிப்பட்ட விவகாரம், அவரே எதிர்கொண்டு சமாளிப்பார்” என்று சொல்லியது போல, ‘இது செந்தில் பாலாஜி சென்ற ஆட்சியின் போது செய்த விவகாரம். ஆகவே, அவரே எதிர்கொண்டு வெளிவருவார்’ என பொறுமை காப்பது தான் திமுக அரசுக்கு உத்தமமாகும்.

(இந்தக் கட்டுரை எழுதுவதற்கு, ஆளுநர் அதிகாரங்கள் தொடர்பாக  புரிந்து கொள்ள உதவியது, வழக்கறிஞர் சுந்தரராஜன் எழுதிய, ஆளுநர் நேற்று இன்று நாளை என்ற ‘அ’ பதிப்பகம் வெளியிட்ட நூலாகும்)

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time