செறிவூட்டல் அரிசிக்கு நிதி ஆதியோக் எதிர்ப்பு!

-எஸ்.இர்ஷாத் அஹமது

ஊட்டச் சத்திற்கானது என்பதாக ரசாயனங்கள் கலந்த செறிவூட்டல் அரிசி திட்டத்தில் மத்திய அரசு மோசமாக ‘சொதப்பியுள்ளது என நிதி ஆதியோக்கின் ரகசிய அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. முறையான ஆய்வுகள், திட்டமிடல்கள் இல்லாதது அதிர்ச்சி ரகமாகும்! ஒரு சில கார்ப்பரேட்டுகள் பலனடைய மக்களின் உடல் நலனை பலி தருகிறதா அரசு..?

ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான தீர்வுகளை, தானியங்களைச் செறிவூட்டுவதன் மூலமாக மட்டும் சரிசெய்துவிட முடியாது. உணவு என்பது இயற்கையின் கொடை! சத்தான உணவுக்கு மண் வளம் தான் முக்கியம்! மண்வளமே சத்தான உணவிற்கான அடிப்படை என்ற கோட்பாட்டை உணர மறுப்பதே இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் என இயற்கை விவசாயிகள் கடும் விமர்சனம் வைத்து வருகின்ற இந்தச் சூழலில் செறிவூட்டப்பட்ட அரிசி  எந்த அளவுக்கு மக்கள் உடல் நலனில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது  குறித்த முக்கியமான ஆய்வுகளை, தரவுகளை சேகரிப்பதிலும், செயல்படுத்துவதிலும் மோடி  அரசு சொதப்பியுள்ளது என நிதி ஆயோக் தனது ரகசிய அறிக்கையில் அதிருப்தி கொண்டுள்ளது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் மோடி அரசின் முக்கிய சுகாதார கொள்கை தலையீடு ஒரு குருட்டு நம்பிக்கையின் பாய்ச்சல் என்பதை நிதி ஆயோக் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை சமாளிப்பதற்காகவே செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் நோக்கம் எனில், அதற்கு முன்னதாக  பொதுமக்களின் சத்துக் குறைபாடு எந்த அளவு உள்ளது என்பதை அரசு அறிந்து கொள்ள வேண்டும்.

அதை அறிந்து கொள்ள, குறைபாட்டைக் குறிக்கும் அளவுருக்களைப் (parameters) பார்த்து பொதுமக்களின் ஊட்டச்சத்து அளவை ஆய்வாளர்கள் முதலில் கண்டறிய வேண்டும். இதற்கு அடிப்படை சர்வே வேண்டும். ஆனால், அது மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக நிதி ஆயோக் அனுப்பிய ஒரு ரகசிய  அறிக்கையை மத்திய அரசு இதுவரை பொதுவெளியில் வெளியிடவில்லை.

அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ என்ற இணைய பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது.  அதன் விளைவாக இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து வலிந்து சேர்க்கப்படுகிறது, இந்த உணவை உண்பதால் பெரியோர் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் கெடுதல்களைப் புரிந்து கொள்ளவேயில்லை. அதனால், இத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பரந்துபட்ட ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என  பொது சுகாதார நிபுணர்கள் கூறியிருந்தாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் 80 கோடி இந்தியர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு  உத்தரவிட்டது வருந்ததக்கது.

மத்திய அரசின் அனைத்து உணவு பாதுகாப்பு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை கட்டாயமாக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் என்னென்ன  சிக்கல்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய நிதி ஆயோக் முடிவு செய்தது.

இந்த ஆய்வில் கண்டறிந்த அனைத்தும் மிகவும்  அதிர்ச்சிகரமானவை.

அதாவது, செறிவூட்டப்பட்ட அரிசியை ஒரு வருடத்திற்கு உட்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கு முன்பாக அம் மாவட்ட மக்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகள் குறித்த தரவுகளை சேகரிக்கும் அடிப்படையான ஆய்வுகளை  கூட மேற்கொள்ளவில்லை என்பது நிதி ஆயோக்கின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறவதெனில், இந்த திட்டம் அடிப்படையிலேயே குறைபாடுடையதாகும்.

மேலும், செறிவூட்டப்பட்ட அரிசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன்கள் மதிப்பீடு செய்யப்படவேயில்லை. இந்த திட்டங்கள் தொடர்பான மாநில அரசுகளின் அரைகுறையான பதில்கள், மோசமான தரக்கட்டுப்பாடு, தளர்வான அறிவியல் அளவீடுகள், மோசமான மேற்பார்வையால் சிதைக்கப்பட்டுள்ளன என்பதையும் கண்டறிந்தது.

அதோடு, செறிவூட்டப்பட்ட அரிசி என்ற நுண்ணூட்டச் சத்துகள் கலந்த அரிசியை ‘அதிக ஆபத்து’ பிரிவின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள்  பட்டியிலிட்டுள்ளனர். இருந்த போதிலும், தரக்கட்டுப்பாடு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மனித உயிர்கள் மீது இந்த அரசுக்குள்ள அக்கறையின்மையை பறைசாற்றுவதாக உள்ளது.

அதிக ஆபத்து என வகைப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் கவனமாக பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும், முறையாக உற்பத்தி செய்யப்படாத போது அவை பொதுமக்களின் உடல் நலத்திற்கு ஆபத்தானவை.

மிகவும் ரகசியம் எனக் குறிப்பிடப்பட்ட அந்த அறிக்கை அவ்வளவு பெரிய விஷயமாக கருதப்படாதது தான் அதிர்ச்சியளிக்கிறது!

ஆகஸ்ட் 2021ல் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமைப்படுத்தி   பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.  ஆனால், தோல்வியுற்ற இந்த திட்டங்கள் குறித்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

அனைத்து மாநிலங்களிலும் இதுவரை 137.74 லட்சம் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் அறிவித்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இத்திட்டத்தை அரசு அதிகாரிகள்  மோசமாக செயல்படுத்துகின்றனர்.

முக்கியமான குறைபாடுகள்;

சாதாரண அரிசியை ஒரு மாவாக (dough) அடித்து அதை தூளாக்கப்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களுடன் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. அதன் பின்னர் இந்த மாவு இயந்திரத்தின் உதவியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியைப் போல தானியங்களாக செதுக்கப்படுகிறது. இது சாதாரண அரிசியுடன் நூற்றில் ஒரு பங்காகக் கலக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்டும் மொத்தம் பதினோரு  மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் நிதி ஆயோக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத் தயாரிப்பு முறையில் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள பெரிய அளவிலான குறைபாடுகளை சுட்டிக்காட்டியது.

கீழ்மட்ட அளவில், நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ  இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் பிரிமிக்ஸ் எனப்படும் கலவையின் தரத்தை ஒழுங்குபடுத்தும் செயல்முறை எதுவும் எந்த மாவட்டங்களிலும் கைவசம் இல்லை.

அதோடு, பள்ளிகள், அங்கன்வாடிகள், மற்றும் பொது விநியோக அங்காடிகளைச் சென்றடையும் செறிவூட்டப்பட்ட அரிசியின் ‘மாதிரியை’,  மத்திய அரசின்  வழிகாட்டு நெறிமுறைப்படி  எவரும் சரிபார்க்கவில்லை.

இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மதிப்பீடு செய்ய திட்ட கண்காணிப்பு பிரிவுகளை எவரும் அமைத்திருக்கவில்லை என்பதையும் நிதி ஆயோக் அதிகாரிகள்  கண்டறிந்தனர்.

இரும்புச் சத்து மாத்திரையைக் காட்டிலும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என ஒன்றிய அரசு கற்பனை செய்தது.  ஆனால்,மக்களோ ‘செறிவூட்டப்பட்ட அரிசி ஒரு மாதிரியாக, வித்தியாசமாக உள்ளது. வேகவைக்க  அதிக நேரம் ஆகிறது. எந்தவொரு சுவையும் இல்லை’ என்பன போன்ற புகார்கள் குஜராத் மாநில சமையலறைகளில் எழுந்ததை நிதி ஆயோக் அதிகாரிகள் தங்களது காதுபடக் கேட்டனர்.

பின்னர், ஒன்பது நுண்ணூட்ட சத்துக்கள் கலந்த செறிவூட்டப்பட்ட அரிசியை 12-18 மாதங்களுக்கு பயனாளிகளுக்கு வழங்கி அது ஏதவாது ‘மேஜிக்’ ஏற்படுத்தியுள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

நிதி ஆயோக் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்த  எந்தவொரு மாவட்டத்திலும் அறிவியல் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு தேவையான அடிப்படை சர்வே எடுத்திருக்கவில்லை என்பதை அந்த ரகசிய அறிக்கை காட்டுகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணுமாறு கட்டாயப்படுத்துவதற்கு முன், பொதுமக்களுக்கு இரத்த சோகை எந்த அளவு இருக்கிறது என்பதை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அறிந்திருக்கவில்லை. அதனால், இந்த செயற்கை அரிசியை உட்கொண்டதால், இந்த திட்டத்தின் முடிவில், அது எதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை கண்டறிய முடியவில்லை.

அடிப்படை சர்வே இல்லாத நிலையில், ‘ஏக கால  மதிப்பீடுகள்’ – தொடர்ச்சியான நிகழ் நேர ஆய்வுகளை நடத்த அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. ஆயினும், உலகளாவிய அளவீட்டிற்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த புதிய மதிப்பீட்டு முறை இன்னும் தொடங்கப்படவில்லை.

‘ஓவ்வொரு கட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரத்தை மத்திய அரசு நிறுவனமான FSSAI எனப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சரிபார்க்க வேண்டும்’ என வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருந்தும், அந்நிறுவனம் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அந் நிறுவனம் எந்தவொரு மாவட்டத்திலும்  செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக எந்தவொரு தரச் சோதனையும் நடத்தியிருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி,   premix எனப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துகள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவையை பரிசோதிக்கதக்க NABL எனப்படும் சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

இந்தியாவில் இந்த ஆய்வகங்கள் தற்போது 10 மாநிலங்களில் மட்டுமே வெறும் பெயரளவுக்கு உள்ளன  என்பது அந்த ரகசிய அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

சில இடங்களில், செறிவூட்டப்பட்ட அரிசி, தட்டில் ஒதுக்கி வைக்கப்படும் உணவாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தமிழ் நாட்டில் உள்ள திருச்சியில்,  செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து அம் மாவட்ட அதிகாரிகள் முழுமையாக நம்பவில்லை. அதனால் அவர்கள் கூடுதல் மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட உணவு முறைகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இந்த திட்டம் குறித்து மக்களிடம் கீழ் நிலை அமைப்புகளிடம் அரசு பேசவேயில்லை.

பிளாஸ்டிக் அரசியோ என்ற அச்சம்!

அதிலும் குறிப்பாக, ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள பஹார் தோலி என்ற ஒரு குக்கிராமத்தில் வந்திறங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியைக் கண்டு அக் கிராம மக்கள் முகம் சுளித்து ஒதுங்கினர். பிளாஸ்டிக் அரிசியோ என நினைத்து அவர்கள் பயந்தனர்.

“இந்த பிளாஸ்டிக் அரிசியில் சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு எங்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது. எனக்கும் என் கணவருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டோம். இந்த பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதை நிறுத்திய பிறகுதான் எனது குடல் ஆரோக்கியம் மேம்பட்டது,” என்கிறார் 65 வயதான பாஷி முண்டா என்கிற விவசாய கூலித் தொழிலாளி.

இந்த பிளாஸ்டிக் அரிசியை நாங்கள்  எரிக்க முயற்சி செய்தோம். பிளாஸ்டிக்கைப் போல இது நெருப்பில் உருகுமா என சோதித்துப் பார்க்க முயற்சித்தோம்,” என்கிறார் மற்றொருவர்.

இது சாதாரண அரிசியைப் போல அவ்வளவு எளிதாக வெந்துவிடுவதில்லை. சமைத்த சோறை வடிக்கும் போது, இந்த பிளாஸ்டிக் அரிசியும் அந்த தண்ணீரோடு கலந்து வெளியேறி விடுகிறது என்கிறார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சோமாரி முண்டா என்பவர்.

இவை அனைத்தையும் அந்த ரகசிய அறிக்கை கூறுகிறது.

பொதுவாக கிடைக்கக் கூடிய செறிவூட்டப்பட்ட அரிசி தண்ணீரில் மிதக்கிறது. ஆனால் சாதாரண அரிசி  தண்ணீரில் மூழ்கும் என அந்த அறிக்கை கூறுகிறது.

அதனால், சந்தௌலி, சிங்கரௌலி, திருச்சி,சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள பெண்கள் அரிசியை புடைக்கும்போதும் தண்ணீரில் கழுவும் போதும் அவற்றை  வெளியே தூக்கி எறிந்துவிடுவது கண்டறியப்பட்டுள்ளது.

”ரசாயனங்கள் செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம்” என திருப்பி தந்து சீர்காழியில் மக்கள் போராட்டம்.

ஆக, விஞ்ஞான பூர்வமாக உறுதிபடுத்தப்படாத ஒரு திட்டத்தை சர்வாதிகாரமாக நாட்டு மக்கள் மீது திணிப்பதானது  தனியார், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதாயத்திற்கானதன்றி வேறல்ல. செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி இயந்திரங்களையும், அதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துகளையும் பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்தி செய்து வருகின்றன என்பது கவனிக்கதக்கதாகும்.

அதனால், ”செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து எந்த அறிவியல்பூர்வ பரந்துபட்ட ஆய்வுகளும் இல்லாமல், பொது விநியோக முறையில், செறிவூட்டப்பட்ட அரிசியை வலிந்து வழங்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மூன்று வருட கால மாதிரி ஆய்வுகளில் கிடைத்த தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்” என்பதே சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது!

கட்டுரையாளர்; எஸ்.இர்ஷாத் அஹமது

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time