வளர்ச்சியின் பெயரால் வாழத் தகுதியற்றதாகும் பூமி!

-சாவித்திரி கண்ணன்

அதிகரிக்கும் புவி வெப்பத்தால், கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பருவ மழை தவறிப் பெய்கிறது! சூன் மாதம் மத்தி வரையில் கடும் வெப்பம். தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை! அசாமிலோ பெருமழை வெள்ளப் பெருக்கு! கட்டுபாடில்லாத நுகர்வு கலாச்சாரத்தால்  இயற்கையை சுரண்டுகிறோம். அதன் விளைவுகள் என்ன?

ஜெனீவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (WMO) தரும் தகவல்களின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் உலகம் தாங்கொணாத வெப்பத்தை சந்திக்க நேருமாம்! இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்!

நாம் வாழும் பூமியை நாளுக்கு நாள் வாழத் தகுதியற்றதாக நாம் சிறுகச் சிறுக மாற்றிக் கொண்டுள்ளோம். காற்றில் கூட ஈரப்பதம் குறைந்துள்ளது! எனில், தென்றலே தேய்ந்து கொண்டு வருகிறது என்பது தான் அர்த்தமாகும். இந்த அதீத வெப்பச் சூழல் மனித உடலையும் பல விதங்களில் பாதிக்கிறது! உடலில் தோல் அரிப்பு, எரிச்சல், மலச் சிக்கல், ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, சிறு நீரகச் செயலிழப்பு, நரம்பு மண்டல நோய்கள்..போன்றவை மனிதர்களுக்கு அதிகம் ஏற்படும். இயற்கையின் பாதிப்பு மன நிலைகளையும் நிச்சயம் பாதிக்கும்!

வரலாறு காணாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பிரிட்டனின் வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் பரப்பில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பை தான் எல். நினோ என்கிறார்கள்! குறிப்பிட்ட சில காலங்களில் பசிபிக் கடலின் வெப்பம் சாராசரியை விட அதிகரித்து காணப்படும் போது அதை ‘எல் நினோ’ ஏற்பட்ட ஆண்டாக குறிப்பார்கள்! 1997-98, 2003, 2005, 2009-10, 2015-16 ஆகிய காலகட்டங்கள் எல்.நினோ ஏற்பட்ட ஆண்டாகும். கடலின் நீரோட்டம் மாற்றம் காண்பது ஆபத்தின் அறிகுறியாகும். இப்படியான ஆண்டுகளில் வழக்கத்தை விட அதிக வெப்பத்தை கடல் உள்வாங்கி தகிதகித்துள்ளது. அதுவே இந்தாண்டும் நடக்கிறது.

சூன் மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சராசரி வெப்பம் உச்சத்தில் இருப்பதாக உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு பிரிவு கூறியுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இப்போது வெப்பம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் இனி அடிக்கடி நிகழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை ஒரே ஒரு டிகிரி அதிகரித்தாலும் கூட அது பருவநிலை மாற்றத்தில் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஆனால் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுவாக வெப்பத்தை தாங்கும் திறன் அல்லது சமாளிக்கும் திறன் காடுகள், நிலம் மற்றும் கடல் ஆகியவற்றின் பங்களிப்பால் தான் சாத்தியமாகிக் கொண்டுள்ளது. ஆனால், சமீப காலமாக காடுகள் அழிப்பு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு, அதிகரிக்கும் சுற்றுச் சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகள் ஆகிய சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இயற்கைக்கு எதிரான செயல்பாட்டின் காரணமாக வளிமண்டல கரியமிலவாயுவின் செறிவு இன்னும் மிகப் பெரிய அளவில் உயரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாறுமாறாக அதிகரித்து வரும் வெப்பம் உலகில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சில பகுதிகளில் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையால்  காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு இயற்கைக்கு மதிப்பிட முடியாத சேதத்தை உருவாக்குகின்றன!

1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை தொட்டு கடந்து போகும் நாட்கள் அதிகரித்து வருகிறது. சமீப நாற்பதாண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன! 1980 மற்றும் 2009க்கு இடையில், வெப்பநிலை சராசரியாக வருடத்தில் 14 நாட்கள் 50 டிகிரியை கடந்தது. அதுவே, 2010 மற்றும் 2019க்கு இடையில் வருடத்திற்கு 26 நாட்களாக உயர்ந்துள்ளது. தற்போதோ இது 30 நாட்களைத் தாண்டியுள்ளது. இது போன்ற மாறிடும் சூழல்கள் விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும்.

அதுவும், நம் தமிழ் நாட்டில் இயற்கை அழிப்பு வேக,வேகமாக நடந்து வருகிறது! ஆற்று மணல் படுகைகள் பள்ளத்தாக்குகளாகி வருகின்றன! குவாரிகள் அமைத்து மலைகள் தரைமட்டமாக்கப்பட்டு எம்சாண்ட் எடுக்கிறார்கள்! கிரானைட் எடுக்கிறார்கள்! பயிர் செழிக்கும் தஞ்சை பகுதியை பெட்ரோல், நிலக்கரி எடுக்க குறிவைத்துள்ளார்கள்!  நாம் அனுபவித்த பூமியை இந்த இயற்கை பூமியை  நம் சந்ததிகளுக்கு இல்லாமல் ஆக்குவதற்கு தான் வளர்ச்சி என்று பெயர் சூட்டி, வெளி நாட்டு நிறுவனங்களை விரும்பி அழைக்கிறோம்.

நுகர்வு கலாச்சாரத்தை வெகுவாக குறைக்கும் எளிய வாழ்க்கையும், தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுப்பும், இயற்கையை கண் போல பாதுகாக்கும் பழக்க வழக்கங்களும் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time