ஒன்றுபட்ட எதிர்கட்சிகள்! அதிர்ச்சியில் பாஜக!

-ச.அருணாசலம்

ஒன்றுபடவே மாட்டார்கள் எனப்பட்ட எதிர்கட்சிகள் இன்று பாட்னாவில் கைகுலுக்கி உள்ளனர். சிதறிக் கிடக்கும் எதிர்கட்சிகளால் தன்னை எதிர்க்கவே முடியாது என பெருமைபட்ட பாஜகவிற்கு  அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டுள்ளது. இன்னும் என்னென்னவோ  இயலாது என்றார்களோ, அவை யாவும் நிகழ்வதற்கான வியூகம் வகுக்கப்பட்டுவிட்டது!

எதிர்கட்சிகளின் மேல் பாஜகவும், மோடியும் தொடுத்த தாக்குதல்களை முறியடித்து இடையூறுகளை கடந்து  இன்று பீகார் தலைநகரான பாட்னாவில்  பெருவாரியான எதிர்கட்சி தலைவர்கள் கூடினர். மோடியை வீழ்த்தி, இந்தியாவை மீட்டெடுக்க எதிர்கட்சிகள் தங்களது ‘ வியூகத்தை’ இக்கூட்டத்தின் வாயிலாக தொடங்கி உள்ளனர்.

எது நடக்க கூடாது என்று பாஜக நினைத்ததோ, அது நடைபெறுவதால் விரக்தியடைந்த பாஜக இன்று பாட்னா முழுவதும் இக்கூட்டத்தை எதிர்த்து இது ‘குண்டர்கள் கூட்டம்’ என போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், தன்னாட்சி அமைப்புகள் ,ஊடகங்கள் , நீதி துறை ஆகிய ஜனநாயக தூண்களை உலுத்துப் போக வைக்கும் மோடி அரசின் செயல்பாடுகளை கடந்த ஒன்பது ஆண்டுகளாக அனுபவித்த இந்திய மக்கள் இந்த சீரழிவை எதிர்க்க இன்று எதிர்கட்சிகள் முனைவதைக்கண்டு சிறிது ஆறுதல் அடையலாம்.

குடிமக்களை இந்து என்றும் முஸ்லீம் என்றும் பிரித்து பார்ப்பதும் , வெறுப்பை அவர்கள் மத்தியில் விதைத்து கலவரங்களையும் வன்முறைகளையும் தூண்டி ‘ நாங்கள் இந்துக்களின் பாதுகாவலர்கள்’ என்ற போர்வையில் மதச்சார்பை நிலைநிறுத்தும் பா ஜ க வின் போர்தந்திரத்தை முறியடிக்க, இந்திய அரசு அனைத்து மக்களுக்கும் பொதுவான, அனைவருக்கும் உரித்தான அரசு என்ற நிலையை மீண்டும் ஏற்படுத்த எண்ணியே எதிர்கட்சிகள் ஓரணியில் திரள முயல்கின்றன.

ஆனாலும் நேற்றுவரை காங்கிரசை எதிர்த்து வந்த கட்சிகளும் , நேற்றுவரை காங்கிரசில் இருந்து சமீபத்தில் தனிக்கட்சி கண்டு அரசியல் ஆதிக்கம் பெற்ற தலைவர்களும், மாநிலங்களில் காங்கிரசின் அரசியல் நலனும் தங்களது கட்சியின் அரசியல் நலனும் எதிரும் புதிருமாக இருக்கையில் எதிரியை வீழ்த்த எப்படி தங்களது நலனில் சமரசம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை நாம் போகப் போகத் தான் உணர முடியும்.

இத்தகைய வேறுபாடுகள் இருப்பதானால் பாஜக வினர் இந்த ” ஒற்றுமையை ” கிண்டலடிப்பதும் , நடைமுறைக்கு ஒவ்வாத்து என்று ஏளனம் செய்வதும், இதை உடைக்க பல்வேறு வழிகளில் முயல்வதையும் நாம் பார்க்க முடிகிறது.

இதன் வெளிப்பாடுதான் ஜித்தா ராம் மன்ஜி பீகாரில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைவது, மாயாவதி – தன்னை யாரும் அழைக்காவிட்டாலும் – இக்கூட்டம் யாருக்கும் உதவாக கூட்டணி என்ற ரீதியில் வசை பாடுவதும் ஆகும் . இவற்றில் எல்லாம் மோடி அரசின் பங்கு உள்ளதை பாமரனும் அறிவான்.

மம்தா – காங்கிரஸ் மோதல் முடிவுக்கு வருமா? ஆம் ஆத்மி காங்கிரஸ் உறவு ஏற்படுமா? எல்லாம் சுமுகமாக அது செல்லுமா? இக்கூட்டணிக்கு தலைமை தாங்கப்போகும் கட்சி எது? யார் மோடிக்கெதிரான பிரதமர் வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் இக்கூட்டணியால் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த இயலும் எனபன போன்ற பல கேள்விகளுக்கு இன்றே விடை கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒரு சேர ஓரிடத்தில் கூடிப் பேச முனைந்தது தான் முதல் கட்ட வெற்றி!

இக்கூட்டத்திற்கு முழு முயற்சி எடுத்த பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் , துணை முதல்வர் தேஜஸ்வியும் பின்புலமாக நின்று பெரும்பங்காற்றிய ல்ல்லு பிரசாத் யாதவையும் நேற்று பாட்னா வந்தடைந்த ம்மதா, முப்தி , மு. க ஸ்டாலின் , அரவிந்த கெஜ்ரிவால், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே, சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா, தீபாங்கர் பட்டாச்சார்யா ( சி.பி.ஐ-எம்-எல்), சந்தித்தனர். மனம் விட்டுப் பேசியுள்ளனர்.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சரத் பவார் வருகை தந்தனர். அப்போது உற்சாகம் கரைபுரண்டது!

”இக்கூட்டத்தில், முதலில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் நாங்கள் கலந்து கொள்வோம்” என ஆம் ஆத்மி கட்சி முதலில் சொன்னாலும், ‘அதையும் பேசித் தானே முடிவுக்கு வர வேண்டும்’ என்ற கருத்தில் இன்று புது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அதே கட்சியை சார்ந்த பஞ்சாப் முதல்வர் மானும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  நமது முதல்வர் ஸ்டாலினின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாகும்!


மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரசும் அகில இந்திய காங்கிரசும் எதிரும் புதிருமாக இருப்பதால் அக்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பே. ஆனால் பொது எதிரி மோடியை வீழ்த்த இருவரும் ஒரணியில் திரள வேண்டும் என்று “அரசியல் அறிவு” உரைத்தாலும் நடைமுறையில் தத்தமது ஆளுமையை விட்டுக்கொடுக்க திரிணாமுல் கட்சியும் காங்கிரசும் முன் வர பல இடையூறுகள் உள்ளன. பரஸ்பர நம்பிக்கையின்மை, அடிமட்ட தொண்டர்களின் உணர்வு, அவர்களை சமாதான படுத்த வேண்டிய அவசியம் என பல தடைகள் உள்ளன.

தெலுங்கானாவின் முதல்வர் சந்திர சேகர ராவ் வரவில்லை. அதே போல சந்திரபாபு நாயுடுவும் , பாஜகவும் கைகோர்த்த பிறகும், ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு எதிர்கட்சிகளோடு கைகுலுக்க துணிவில்லை. அதே போல உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் தயக்கம் இருக்கிறது. இவை எல்லாம் காலப் போக்கில் என்னாகும் எனப் பார்க்க வேண்டும்.

அது போன்று டில்லியிலும், தற்போது பஞ்சாபிலும் ஏன் குஜராத்திலும் கூட காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகளும் நம்ம ஊர் தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளை போல் இரு துருவங்களாக உள்ளனர். இந்த காரணத்தினாலேயே காங்கிரஸ் தலைமை இன்று வரை கெஜ்ரிவாலை சந்திக்கவில்லை, மோடி அரசின் அவசரசட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கருத்து கூறவில்லை. ஆனால், பாஜகவில் இருந்து வேறுபட்டது காங்கிரஸ் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு தற்போது நிர்பந்திக்கப்பட்டுள்ளது.


இன்று இத்தலைவர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி 2024ல் மோடி அரசை வீழ்த்துவதை இலக்காக வைத்து பயணிக்க தயாராக உள்ளோம் என்ற செய்தியை தந்துள்ளனர். ஆகவே, இது ,இம்முயற்சி நல்ல தொடக்கமாக அமையும் என்றும் கட்சிகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேசி தீர்க்க உத்தி ஏதும் (ஃபார்முலா) கண்டு பிடிப்பார்களா என பார்க்க வேண்டும் .

எங்கு இலட்சியத்தில் ஒற்றுமை இருக்கிறதோ, அதை அடைய எண்ணம் இருக்கிறதோ அதற்கான வழிமுறை காணவும் முயற்சி எடுக்கப்படும் என தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கூறுகின்றனர்.

ஆனால், சமீபத்தில் ( மே மாதம்)  நடந்த பஞ்சாப் பாராளுமன்ற இடை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது, ஆனால், அக்கட்சியின் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இழுக்கப்பட்டவர் என்பது இரு கட்சிகளுக்கும் உள்ள இழுபறி போரை சுட்டி காட்டுகிறது.

இதை போன்றே மே. வங்க இடைத்தேர்தலில்  சமீபத்தில் வென்ற காங்கிரஸ் வேட்பாளரை திரிணாமுல் தங்கள் கட்சிக்கு சில தினங்களுக்கு முன்னால் இழுத்ததும் இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் அவநம்பிக்கையை தோற்றுவிக்கிறது எனலாம்.


இத்தகைய இடையூறுகளை கடந்துதான் இன்று எதிர்கட்சிகள் பொதுவான வேட்பாளரை நிறுத்தவும் அவரை வெற்றி பெற வைக்கவும் வேண்டும்.

இன்று காலை பீகார வந்த ராகுல் காந்தி , ஓரணியில் திரண்டுள்ள எதிர்கட்சிகள் வருகிற 2024 தேர்தலில் பா ஜ க வை வீழ்த்தும் இது உறுதி என்று முழங்கியுள்ளார். இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே- ஒற்றுமையை முன்னிறுத்தும் சித்தாந்ததிற்கும் , வேற்றுமையை வெறுப்பை முன்னிறுத்தும் சித்தாந்தத்திற்கும் இடையே-யான போராட்டம் இது என்று கூறியுள்ளார்

இதே உறுதி இறுதி வரை எல்லா எதிர்கட்சிகளிடமும் இருக்குமா என்பதே இன்றிருக்கும் கேள்வி.
இதற்கு பதில் கூறுவதைப்போல் மே.வங்க முதல்வர்,” நாங்கள் இங்கு ஒரு குடும்பமாக கூடியுள்ளோம் மோடி ஆட்சிக்கெதிராக ஒற்றுமையாக போரிடுவோம் என்பதை மட்டும் இப்போது கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடக்கம் நல்லவிதமாக அமைந்துள்ளது என்றே கருத வேண்டும். இதை நடத்திக் காட்டிய பெருமை பீகார் முதல்வர் நித்தீஷ் குமாரை சாரும். அவரது சலிக்காத முயற்சியினலும், பல்வேறு தலைவர்களிடம் – மாநில கட்சிகள் மற்றும தேசிய கட்சிகளது தலைவர்களுடன் கலந்து பேசி அனைவரது ஒத்துழைப்பையும் கோரி பெற்ற நித்தீஷ் குமார் எதிர்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவார் எனவும் 450 க்கும் அதிகமான இடங்களில் ஒருமுனை போட்டியை ஏற்படுத்த அனைத்து தலைவர்களும் ஒத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரியும் வேளையில், ஒலிம்பிக் வீராங்கனைகளின் நியாயமான போராட்டங்களை அடித்து நொறுக்கிய பிரிஜ் பூஷன் பக்கம நிற்கும் வேளையில்,

மெகா ஊழல் குற்றசாட்டுகள் பாஜ கவினர் மீது என்றாலும், கண்டுகொள்ளாத மோடி அரசு எதிர்கட்சிகள் மீது ஒருதலைபட்சமாக பாயந்து சட்டத்தை வளைக்கும் வேளையில்,

வரலாற்றை திரித்து மாணவர் பாட புத்தகங்களில் வகுப்புவாதங்களை முன்னிறுத்தியவர்களை சேர்பதும் விடுதலை போர் வீர்ர்களின் வரலாறை நீக்குவதும் , மகாத்மா காந்தி , ஜவகர் லால் நேரு போன்ற மாபெரும் ஆளுமைகளை இருட்டடிப்பு செய்யும் வேளையில் ,

கூட்டாட்சி முறையை முற்றிலும் புறக்கணித்து ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை அடாவடியாக மாநில அரசுகள் மீது திணிப்பதும் , வெறுப்பு அரசியலை வளர்க்கும் வேளையில்,

விலைவாசி ஏற்றமும், வேலையின்மையும் தலைவிரித்தாடும் இந்த வேளையில்,

பண மதிப்பிழப்பு, ஜி எஸ டி , கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகள் வரிச்சலுகை போன்ற முட்டாள்தனமான மோடி அரசின் செயல்களால் இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் திணறும் வேளையில்,

இந்திய மக்கள் மத்தியில் , இயற்கையாக உள்ள வேறுபாடுகளை பெரிது படுத்தி வெறுப்பு அரசயலை விதைத்து பிளவு மனப்பான்மையை வளர்த்து , வன்முறை வெறியாட்டங்கள் மூலம் அரசியல் லாபம் பெறுவதை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஆர் .எஸ் .எஸ் . மற்றும பா ஜ க பிடியில் இருந்து இந்திய மக்களை மீட்டெடுக்க இக்கூட்டம் முயல்கின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time