‘மாபாதக’ நிறுவனத்திற்கு ‘மகாத்மா’ விருதா?

-சாவித்திரி கண்ணன்

காந்தி அமைதி விருதுக்கு பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழும்  கீதா பிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு நூற்றாண்டாக மதத்தின் பெயரால் நிகழ்ந்த – காந்தி கொலை உள்ளிட்ட – அனைத்து பயங்கரவாதங்களுக்கும், கலவரங்களுக்கும் மூலாதாரமான கீதா பிரஸுன் உண்மையான கோர முகம் என்ன..?

யார் ஒருவர் ஏற்றத் தாழ்வுகளற்ற சமூகத்திற்காக பாடுபட்டாரோ, அனைவரையும் பாகுபாடின்றி ஒன்றாக பாவித்தாரோ – அந்த காந்திக்கு – முற்றிலும் எதிரான கருத்துருவாக்கத்தின் பிதாமகனாக விளங்கும் நிறுவனம் தான் கீதா பிரஸ்! ”கீதா பிரஸுக்கு தரப்படும் காந்திக்கான அமைதி பரிசு கோட்சேவுக்கும், சாவர்க்கருக்கும் தரப்படுவதைப் போன்றது” என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.!

உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், உபநிடதங்கள், இந்து சாமியார்களின் உரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வரும் நிறுவனம் என பொதுவாக அறியப்படுகிறது. ஆனால், படுபிற்போக்கான இந்துத்துவ கருத்துருவாக்கத்தின் மூலவேராகவும், தீண்டாமையையும், பெண் அடிமைத் தனத்தையும் தற்போதும் கூட வலியுறுத்தும் சனாதன தர்மத்தின் போர்வாளாகவும் இந்த பிரசுரம் திகழ்கிறது என்பதற்கு இது வெளியிட்ட பிரசுரங்களே சாட்சியாகும்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் எனும் ஊரில் 1923-ம் ஆண்டு கீதா பிரஸ் துவங்கப்பட்டது. இதன் ஸ்தாபர்கள் ஜெயதயால் கோயந்த்கா, ஹனுமன் பிரசாத் போதார் எனும்- இரு மார்வாடி குல வணிகர்களாவர். அந்நிய நாகரித்தின் தாக்கத்தால் மார்வாடி-அகர்வால் சமுதாயம் ‘சுயம் இழந்து’ கொண்டிருப்பதை மாற்றி, சனாதன தர்மத்தை வலுப்படுத்தி, இந்து மதத்தில் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை புனிதப்படுத்தி  நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

கீதா பிரஸின் ‘கல்யாண்’ என்ற பெயரிலான ஒரு இந்தி மாத இதழையும், கல்பதரு என்ற பெயரிலான ஆங்கில இதழையும் தொடர்ச்சியாக படிக்கும் யாரும் இந்துத்துவ தீவிரவாத சிந்தனை போக்கிற்கு தப்ப முடியாது! இந்த இதழகள் இஸ்லாமியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், தலித்துகளையும் ஒடுக்குவதற்கான நியாயங்களை பரந்துபட்ட ‘இந்துக்களிடம்’ எடுத்துச் செல்லும் வாகனமாக இது இயங்குகிறது! படு பிற்போக்குத்தனமான பெண் அடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன!

கீதா பிரஸ்ஸின் பின்னணி, தொடர்புகள், கூட்டாளிகள், ஆசிரியக் குழு நிலைப்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டாலே போதும், ‘ஆர்.எஸ்.எஸுக்கே இது தான் ஆசிரியராக இருந்து பாடம் நடத்தி பயிற்றுவித்து வருகிறது’ என உணர முடியும்!

பனியா மூலதனத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் பணியில் எத்தகைய பெரிய,பெரிய தொழில் அதிபர்கள் கைகோர்த்துள்ளனர் என அறிய வந்தால் மலைத்து தான் போவீர்கள்! பிர்லாக்கள், ஜெயின்கள், டால்மியாக்கள், திவேதிகள், கோயங்காக்கள், சதுர்வேதிகள், முகர்ஜிக்கள், குப்தாக்கள்.. எனப் பெரும் தொழில் உலக திமிங்கிலங்கள் புரவலர்களாக இதற்கு இருக்கின்ற காரணத்தால் தான் இந்த நிறுவனம் ”காந்தி அமைதி விருது போதுமானது. அத்துடன் தரப்படும் ஒரு கோடி ரூபாய் தேவையில்லை” எனக் கூறிவிட்டது.

வட இந்தியாவை பக்தி மயக்கத்திலும், மூடத்தனத்தின் உச்சத்திலும் வைத்திருப்பதற்கு கீதா பிரஸ் வெளியீட்டில் வந்துள்ள பல கோடி பிரதிகள் விற்பனையான ‘துளசிதாசர் ராமாயணம்’ ஒன்று போதுமானதாகும். பகவத் கீதையை மட்டுமே 16.21 கோடி பிரதிகள் இது விற்பனை செய்துள்ளது. இந்த பகவத் கீதையை வாசித்து தான் ‘காந்தியை கொலை செய்து இந்து தர்மத்தை காப்பாற்றும் உன்னத நோக்கத்திற்கு தன்னைத் தான் அர்ப்பணிக்கும் மனோ திடத்தை தான் பெற்றதாக’ கோட்சே வாக்குமூலம் தந்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சியில்  மார்வாடி பனியா சமுதாயம் வணிகத்திலும், சமூக அந்தஸ்த்திலும் சற்று  பின்தங்கி இருந்த சூழலில், மன்னராட்சி காலத்தில் இந்தியாவில் ‘பார்ப்பனர்-ஷத்திரியர்’ என்றிருந்த உயர் அடுக்கினை சுதந்திரத்திற்கு பின் ‘பார்ப்பனர்-வைசியர்’ என மாற்றியமைத்தன் பின்னணியில் இருக்கும் நிறுவனம் தான் கீதா பிரஸ்! இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால். அன்று போர் களத்திலும், யுத்த முனைகளிலும் இருந்து செயல்பட்ட ஷத்திரியர்களின் தேவை தற்போதைய மாறிய சமூகச் சூழலில் தேவைப்படாத நிலையில், ஜனநாயகப் போர்க் களத்தில் அதிகாரத்தை வென்றெடுக்க, தொழில் அதிபர்களை சார்ந்து ஆட்சியாளர்கள் இருக்கும் சூழலை கட்டமைத்தது தான் கீதா பிரஸ்!

இதன் மூலம் ‘மக்கள் அதிகாரம்’ சார்ந்த ஜனநாயகத்தை மண்ணுக்குள் குழிதோண்டி புதைத்து, ‘எங்கும் பணநாயகமே பிரதானம்’ என ஆட்சியாளர்களை சிந்திக்க வைத்த ஸ்தாபனம் தான் கீதா பிரஸ்! இன்று நாட்டை சூறையாடி வரும் ‘பார்ப்பன-கார்பரேட்’  கூட்டணியின் மூலவேரான கீதா பிரஸூக்கு ஒரு புனித பிம்பதை கட்டமைக்கும் முயற்சி தான் இந்த காந்தி அமைதி விருதாகும்.

இன்றைய இந்தியாவின் அச்சுறுத்தலான இந்தி-இந்து-இந்துஸ்தான், ராம ஜென்ம பூமி, சனாதனத்தை மீட்டெடுப்பது, பெண் அடிமைத்தனம், பசுப் பாதுகாப்பு, கிருஷ்ண ஜென்ம பூமி, இந்தியாவில் முஸ்லிம்களின் அந்தஸ்து, கர் வாப்ஸி (தாய் மதம் திரும்பல்) வெறுப்பு, வன்மம், கார்ப்பரேட் அரசியல்.. என அனைத்திற்கும் அடிநாதமான ஒரு அறிவியக்கமே கீதா பிரஸ் என்பதற்கு ஏராளமான நிகழ்வுகளை ஆதாரங்களுடன் பட்டியலிட முடியும்!

ஆக, இப்படிப்பட்ட கீதா பிரஸூக்கு காந்தி அமைதிக்கான விருதை பாஜக அரசு தருவதன் மூலம், ‘கீதாபிரஸ்’ என்ற புலியின் மீது ‘காந்தி’ என்ற பசுத் தோலை போர்த்தியுள்ளது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியதாகும்! யார் கண்டது? வருங்காலத்தில் தலை சிறந்த கசாப்பு கடைக்காரரை கண்டெடுத்து ‘வள்ளலார் கருணை விருது’ வழங்கி கெளரவிக்கும் திட்டமும் இவர்களிடம் இருக்கலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time