நோயற்ற வாழ்வுக்கான தற்சார்பு மருத்துவம்!

-விஜய் விக்ரமன், MD(siddha)

ஒவ்வொரு தனி நபருக்கும் நோயற்ற வாழ்வுக்கான சில அடிப்படையான தற்சார்பு மருத்துவ அறிவு தேவை! மருத்துவம் என்பது பெருவணிகமான நிலையில் – மருத்துவத் துறையில் மனிதாபிமானம் குறைந்து வரும் நிலையில் – தனி ஒரு மனிதனுக்கு குறைந்தபட்ச தற்சார்பு மருத்துவ அறிவேனும் தெரிந்திருக்க வேண்டும் எனக் கருதியே இந்த தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன்.

நம் முன்னோர்களிடம் இந்த தற்சார்பு மருத்துவ அறிவு இயற்கையாகவே பாரம்பரிய வழியில் இருந்துள்ளது. எந்த நோய்க்கு எந்த உணவை சாப்பிட வேண்டும். எதையெதை தவிர்க்க வேண்டும் என்பது பன் நெடுங்காலமாகவே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால், தமிழ் சமூகம் கடந்த 60  ஆண்டுகளில் தன் தற்சார்பு மருத்துவ அறிவில் இருந்து சற்று விலகி,  ஐரோப்பிய அறிவியல் மூலம் பூசப்பட்ட   உலகமயமாக்கல் கார்ப்பரேட் மருத்துவம்,  இந்துத்துவா வேதப் பாரம்பரியம் பேசும் ஆயுர்வேத மருத்துவ வணிகத்துக்குள்ளும் சிக்குண்டு உள்ளது.

ஒரு சமூகத்தின் தற்சார்பு மருத்துவ அறிவு என்பது அதன் விடுதலைக்கானது, சுய நிர்ணயத்திற்கானது. தன்னம்பிக்கை தரவல்லது!

2000 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ச் சமூகம்   இயற்கையின் பல ஊழி நோய்களையும்,  வரலாற்றில் பல இன குடி சண்டை மற்றும் போர் காயங்களில் இருந்து  காத்தும்,கடல் கடந்து   சென்ற வணிகத்தின் போது ஏற்பட்ட கடல் பயண நோய்களிலும் மற்றும்   அந்நிய நிலப்பிடிப்பு  போர்களில்  அந்த மண்ணில்  காலநிலை மாறுபாடு  நோய்களையும், வெற்றி கொண்டு  நிலைத்து  நின்று,வளர்ந்து பெருகியதற்கும்  தமிழ் சமூகத்தின் தற்சார்பு மருத்துவ  அறிவே  முழு முதல் காரணமாகும்.

பாரம்பரிய மருத்துவ அறிவு என்பது இயற்கையோடு மனித உடலுக்குள்ள நுட்பமான தொடர்புகளோடு ஒத்திசைந்தது! அதன் மூலம் நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவும், வந்துவிட்டால் அதற்கான தீர்வுகளையும் கொண்டதாகும். இதைத் தான் இனி நான் எழுத உள்ள தொடர்களில் உங்களுக்கு சொல்ல உள்ளேன்.

பல நூறு ஆண்டுகளாக தமிழ் மண்ணில் மையம் கொண்டு  செழித்து வளர்ந்த  ஆசிவக, தமிழ் பௌத்த, தமிழ் சமணம் போல் பல தத்துவ விசாரணை  துணைக் கொண்டு தனித்துவமான தமிழர் மெய்யியல் கோட்பாடு ஊடாக   நம் மரபு மருத்துவ அறிவு அடித்தட்டு தமிழ் மக்கள் வரை சென்று பரவி எல்லோரையும் காத்து வந்துள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு பின் வகுக்கப்பட்ட அனைத்து மருத்துவ கொள்கைகளும்   ஐரோப்பிய மருத்துவ  வணிகத்திற்கு   ஆதரவாக  நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது!

நவீன மருத்துவமானது தமிழக மக்களின்  பாரம்பரிய மருத்துவ அறிவை பகையாகக் கருதியது. இதனால், இயற்கையாக  நவீன மருத்துவத்தை கட்டமைத்து  வளர்த்து எடுப்பதற்கு மாறாக, மக்களின்  தனிநபர் தற்சார்பு மருத்துவ அறிவை  முற்றிலும்  அழித்தது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் உடல் குறித்த சுயமான புரிதலை உணர்ந்து செயல்படுவதற்கான அறிவை அவனிடம் இருந்து பறித்தெடுத்து அவனை மூடனாக்கிவிட்டது. இது தான் இன்றைய நவீன மருத்துவம் மக்களை சுரண்டி கொழுக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

இதன் மூலம்  மேலிருந்து திணிக்கப்பட்ட  ஐரோப்பிய  மருத்துவத்தின் மீது நமக்கு எவ்வித உரிமை இன்றி,  வாயில் திணிக்கப்படும்  மருந்தினை  முழுங்கக் கூடிய  அடிமை மனோபாவ நோயாளிகளாக ஆக்கப்பட்டோம். என்ன சிகிச்சை நமக்கு தரப்படுகிறது என்பதை அறியக் கூட உரிமையற்றவர்களாக நாம் உள்ளோம். அவர்கள் கேட்கும் பணத்தை தந்துவிட்டு, கைகட்டி நிற்கிறோம். மருத்துவ சிகிச்சைகாக வாழ்நாள் சேமிப்பையும், அனைத்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் பலரை நாம் பார்த்து வருகிறோம்.

காசு பிடுங்கும் கார்பரேட் மருத்துவமனைகள்

1994 காட் ஒப்பந்தம் கையெழுத்துக்கு பின் படிப்படியாக அமலுக்கு வந்த தனியார் மயம், தாராளமயம் உலகமயம்  கொள்கையானது.  இன்று  பூதம் போல் வளர்ந்து 100%  இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய  நவீன மருத்துவ  அறிவையும், மருத்துவத்தையும், மருத்துவ கல்வியையும்  கார்ப்பரேட்  தனியார் மையம்  இன்று தன் கைக்குள் வைத்துள்ளது.

சமஸ்கிருத பெருமை பேசி  பல இந்திய தேசிய இனங்களின் பாரம்பரிய மருத்துவ அறிவின் மீது அமர்ந்து அவற்றினை   அழித்து, இந்தியா முழுவதும் ஒரே பாரம்பரிய மருத்துவ  அறிவாக வேத சமஸ்கிருத ஆயுர்வேதத்தையே முன் மொழிகின்றது  இந்திய வலதுசாரி கார்ப்பரேட் கும்பல்.

உண்மையில் ஆயுர்வேதத்தின்  மூல நூல்கள் அனைத்தும்  பௌத்த சமஸ்கிருத நூல்களே. பண்டைய இந்தியாவில் வடக்கே அடித்தட்டு மக்களின் மருத்துவ அறிவை வளர்த்தது பௌத்த  மடங்களே.  அதனை மறைத்து வேதகாலம்  முதல்  நோயாளிகளைத் தொட்டு, புண்களை துடைத்து சிகிச்சை அளித்ததாக கதை எழுதுகின்றனர், இந்த சனாதான கும்பல்.

ஒன்றிய அரசு பல நூறு கோடிகளை ஒதுக்கி, வட இந்தியாவில் பௌத்தம் வளர்த்த பாலி சமஸ்கிருத  தற்சார்பு மருத்துவ அறிவுகளை  இன்று  அந்த மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி,  கார்ப்பரேட் ஆயுர்வேதாவை வளர்த்தெடுக்க  செலவிடுகிறது.

கொரோனா பெருந் தொற்று காலத்தில் உலக அளவில் கைவிட்ட நவீன மருத்துவ கட்டமைப்பு விதிகளுக்கு எதிராகவும், பன்னாட்டு கார்ப்பரேட் வணிக மருத்துவ நிறுவனங்கள், வேத சமஸ்கிருத பெருமை பேசும் ஆயுர்வேத மருத்துவ வணிக நிறுவனங்கள்,  ஆகிய இந்த இரண்டு அன்னிய  மருத்துவ படை எடுப்புகளில் இருந்து  தமிழ் மக்களின்  தொல் பாரம்பரிய மருத்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை  எழுந்துள்ளது.

நோயற்ற சமுதாயமே நமது இலக்கு! நோயாளிகளை பணம் கறக்கும் மெஷினாக பாவிக்கும் மருத்துவத்திடம் இருந்து காப்பாற்றுவதே நம் இலட்சியம்.

எனவே, ஒவ்வொருவரும்   தன் சுய ” தனிநபர் தற்சார்பு  மருத்துவ அறிவை”  தனக்குத் தெரிந்த பாரம்பரிய மருத்துவ அறிவின்  துணைக்  கொண்டும், உலகில் உள்ள பல்வேறு  மருத்துவ முறைகள் அனைத்திலிருந்தும்  தேர்ந்தெடுத்து “கற்று “தன்னைக் காத்துக் கொள்ள முழு உரிமையும்,  சுதந்திரமும்  அனைவருக்கும் உண்டு.

பாரம்பரிய  சித்த மருத்துவ அறிவு காப்போம்! ஒவ்வொருவரின் தற்சார்பு மருத்துவ அறிவை வளர்த்தெடுப்போம்.

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன், MD(siddha)

சித்த மருத்துவ செயற்பாட்டாளர்

9தமிழ் நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளவர்)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time