மனித நேயத்தின் மாண்பைப் பேசும் படம்!

-தயாளன்

படத்தின் மையச் சரடாக இருப்பது இஸ்லாமிய போபியா! சமூகத்தில் நிலவும் வெறுப்பு அரசியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எதிரொலிப்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது டேர்டெவில் முஸ்தபா! அத்திபூத்தாற் போல இஸ்லாமியர்களின் இன்னொரு பக்கத்தை, அவர்களின் அன்பை, மனித விழுமியங்களை பேசுகிறது படம்.

பூர்ணசந்திர தேஜஸ்வி எழுதிய சிறுகதையை திரைப்படமாக்க விரும்பினார் அறிமுக இயக்குனர் ஷசாங்க் சோகல். கதையின் களத்தை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் யாரும் அந்தப் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. மனம் தளராத ஷசாங்க், மக்கள் பங்களிப்பு (க்ரவுட் பண்டிங்) முறையில் படத்தை தயாரிக்க திட்டமிடுகிறார். இதில் பூர்ண சந்திர தேஜஸ்வியின் வாசகர்கள் நூறு பேர் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். கடந்த மே 19ம் தேதி கன்னடத்தில் வெளியான டேர்டெவில் முஸ்தபா, அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி,  சக்கை போடு போட ஆரம்பித்தது. கன்னடத்தில் கேஜிஎப், காந்தாரா போன்ற பிரம்மாண்ட சினிமாக்கள் வெளியாகும் சூழலில், மிக எளிமையான கதைக்கருவோடு எடுக்கப்பட்ட டேர்டெவில் முஸ்தபாவின் வெற்றி அனைவரையும்  திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்துத்துவ பாசிசம் தீவிரம் அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், இஸ்லாமியாபோபியா எனப்படும் இஸ்லாமிய வெறுப்பை ஒரு செயல் திட்டமாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது.  இந்தப்படத்தின் கதை, இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக மனித மாண்பையும் நல்லிணக்கத்தையும் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறது. இயக்குனரின் துணிச்சலான முயற்சிக்கு சலாம் போடலாம்.

படத்தின் கதை மிக எளிமையானது.  இஸ்லாமிய மாணவர்களே படிக்காத கிராமத்து கல்லூரி ஒன்றுக்கு முஸ்தபா என்ற மாணவன் முதன் முதலாக சேர்கிறான். அவனை சக மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகம் அனைவரும் அச்சம் கலந்த பார்வையோடு பார்க்கின்றனர். தனது மேன்மையான குண நலன்களின் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் பெறுகிறான் முஸ்தபா. அவன் மேல் இனம்புரியாத வெறுப்பு கொண்டிருந்த சக மாணவர்கள் தங்களது தவறை உணர்கிறார்கள். இந்த ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு அட்டகாசமான திரைக்கதையால் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர்.

திரைக்கதையில் இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான காட்சிகள் நேரடியாகவே வருகின்றன. கிரிக்கெட் மற்றும் கால்பந்துக்கு இடையேயான வித்தியாசத்தை பேசுவதன் மூலம் நாட்டில் நிகழும் ‘விளையாட்டு’ அரசியலை இன்னொரு அடுக்கில் சொல்கிறது. இது போலவே உணவு, வழிபாட்டு முறைகள், விளையாட்டு, வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற காட்சிகளில் நுட்பமாக தற்காலிக அரசியல் பேசப்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பரபரப்பான கிரிக்கெட் போட்டி ஒன்றின் மூலம் உணர்வுகளை வெல்கிறது படம்.  இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எவ்வளவு அரசியல் மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் படம் வேறு தளத்தில் பேசுகிறது.

மக்கள் பங்களிப்பில் படம் எடுத்துள்ள இயக்குனர் ஷசாங்க் சோகல்

‘கால்பந்து ஆடினால் மற்றவர்களை தொட வேண்டும், ஆனால் கிரிக்கெட்டில் யாரையும் தொட வேண்டாம் என்பதால் அது ஒரு ராயல் கேம்’ என்கிறது ராமானுஜ அய்யங்கார் கதாபாத்திரம். இந்த காட்சியின் மூலம் நுட்பமான அரசியல் விளையாட்டை சொல்கிறது படம். இது போல பல்வேறு அடுக்குகள். நாயகன் அணிந்து வரும் தொப்பி, அவனது உணவு, உடை, மொழி எல்லாவற்றிலும் தனிமைப்படுத்தப்படும் போது நமக்கு அதன் உள்ளடுக்குகள் புரிகிறது.

படத்தின் இன்னொரு கதாபாத்திரமாக வரும் ராமானுஜ அய்யங்காரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதித்ய அஷ்ரீ அசத்தியிருக்கிறார்.  முஸ்லீம் என்றாலே ஏதோ வேற்று கிரகத்தில் இருக்கும் உயிரி என்பதாக நினைத்துக் கொண்டு வெறுப்பைக் கக்கும் ராமானுஜ அய்யங்காரியாக படம் முழுக்க வெளிப்படுத்தி இருக்கும் உடல் மொழியும் வன்மமும் படத்திற்கு பெரிய பலம்.

கதையின் நாயகனாக ஷிஷிர் பைக்கடி தனது ஆர்ப்பாட்டமில்லாத அட்டகாசமான நடிப்பினால் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.  முஸ்லீம் என்பதாலேயே புறக்கணிப்புக்கும் தனிமைக்கும் உள்ளாகும் தருணங்களில் மிரண்டு போன மானின் கண்களை ஒத்திருக்கிறது ஷிஷிரின் உடல்மொழி. படம் முழுக்க வரும் எல்லா கதாபாத்திரங்களுமே கச்சிதமாக எழுதப்பட்டு இருக்கின்றன.

படத்தின் மையச் சரடாகவும் உள்ளீடாகவும் இருக்கிற இஸ்லாமிய போபியா என்னும் உள்ளடக்கமே இந்தப் படத்தின் தரத்திற்கு சான்று.  தமிழ்ப் படங்களில் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் என்றே உச்ச நட்சத்திரங்களின் படங்கள் உட்பட பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.  அத்திபூத்தாற் போல இஸ்லாமியர்களின் இன்னொரு பக்கத்தை, அவர்களின் அன்பை, மனித விழுமியங்களை படம் பேசியிருக்கிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்து மே 20ம் நாள் சித்தராமையா முதல்வராக பதவியேற்ற பிறகு கர்நாடக அரசியலில் பல மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக, அதற்கு முந்தைய ஆட்சியின் போது எடுக்கப்பட்ட இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். கடந்த ஜூன் 12ம் தேதி சித்தராமையா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், டேர்டெவில் முஸ்தபா என்ற சினிமாவுக்கு முழு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தார். ஒரு அரசு தானாக முன்வந்து குறிப்பிட்ட படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஏன் முடிவெடுத்தது என்று செய்திகளை புரட்டிப் பார்த்தால், இதுவும் ஒரு இந்துத்துவ எதிர்ப்பு நடவடிக்கை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

கல்லூரி ஒன்றை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் இந்திய அரசியலை, கூர் தீட்டப்படும் வெறுப்பு அரசியலை நையாண்டி செய்கிறது டேர்டெவில் முஸ்தபா. ஒரு சினிமாவாக நம்மை உணர்வுரீதியாக கட்டிப் போடுவதையும் தாண்டி, கூர்மையான அரசியல் விமர்சனத்தையும் படம் செய்கிறது. சித்தராமையா ஏன் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்தார் என்ற கேள்வி வியப்பானதல்ல.

மத நல்லிணக்கத்தை கொண்டாடும் டேர்டெவில் முஸ்தபாவை நாமும் கொண்டாட வேண்டும்.  அமேசான் பிரைம் தளத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது. இஸ்லாமிய வெறுப்பை முறியடிக்கும் கன்னட சினிமா! சமூக அரசியல் படம் என்ற வகையில் இஸ்லாமிய வெறுப்பில் இருந்து விடுபட பக்குவமாக இந்துத்துவர்களை சிந்திக்கத் தூண்டும் அபூர்வமான படம்!

சினிமா விமர்சனம்; தயாளன்
தொடர்புக்கு : [email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time