முட்டல், மோதல்களைக் கடந்து ஒற்றுமை சாத்தியமா?

-சாவித்திரி கண்ணன்

16 கட்சிகள் சேர்ந்து பாஜகவை எதிர்ப்போம் என ஒன்றுபட்டிருப்பது முதல் கட்ட வெற்றி! அத்துடன் நமக்குள் உள்ள வேற்றுமைகளை களைந்து ஒன்றுபடுவோம் என்றது அடுத்தகட்ட நகர்வு! இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் அம்சங்கள் களையப்படுமா..? பல அம்சங்களில் பாஜகவைப் போல தோற்றம் காட்டுகிறதா காங்கிரஸ்?

# பாஜகவுக்கு  எதிராக அனைத்து  எதிர்கட்சிகளும் தொடர்ந்து ஒன்றிணைவது,

# தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் பொதுசெயல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது,

# மாநிலக் கட்சிகளை அரவணைத்து ஒருங்கிணைப்பது!

என 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக பாட்னா கூட்ட முடிவில் மதசார்பற்ற கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்! அடுத்த கூட்டத்தை ஜூலை 13, 14 ல் சிம்லாவில் நடத்துவது என்றும் முடிவெடுத்துள்ளனர். ஆனால், அடுத்த கூட்டத்தின் போது கட்சிகளின் எண்ணிக்கை குறையாமல் நீடிக்குமா? என்ற கேள்வி இதற்குள்ளாகவே எழுந்துள்ளது.

தேசிய அளவில் நாம் பாஜகவிற்கு மாற்றாக கருதும் காங்கிரஸ் பல வகைகளில் இன்னொரு பாஜகவாகவே இருக்கிறது! மத்தியில் அதிகாரக் குவியல், மாநில உரிமைகளை குறைப்பது, விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது..ஆகியவற்றில் தன் நிலைபாடு என்ன என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி தெளிவுபடுத்தும் போது அணி சேர்ந்துள்ள மாநில கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். மேலும் சில மாநில கட்சிகள் இந்த அணியில் இணையலாம்.

இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட கட்சி காங்கிரஸ்! அதன் தவறுகளால் தான் பாஜக என்ற கட்சி விஸ்வரூபம் எடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இன்றைக்கு பாஜக செய்த தவறுகள் பலவற்றை காங்கிரஸ் கட்சியும் முந்தைய காலகட்டத்தில் செய்துள்ளது.

தற்போது பாஜகவின் மதவாத போக்கு காரணமாக காங்கிரசை மீண்டும் அரியணையில் ஏற்றலாம் என நினைத்தாலும், அதற்கு வலுவில்லை. பல மாநில கட்சிகள் காங்கிரசை ஆதரித்தால் தான் அதனால் மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பது தான் கள யதார்த்தம். அப்படி இருக்க, காங்கிரஸ் கட்சியானது மாநில கட்சிகளுக்கு தன் மீதுள்ள மனஸ்தாபங்களை கணக்கில் எடுத்து, தன் கடந்த கால தவறுகளை சரி செய்து கொண்டு, பெரியண்ணன் மனோபாவத்தை களைந்து அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது!

உண்மையில் இந்த எதிர்பார்ப்பு குறித்த புரிதலாவது காங்கிரஸூக்கு இருக்கிறதா? எனத் தெரியவில்லை.

பாட்னாவில் கூடிய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம், மேலும் எங்கள் சித்தாந்தத்தை பாதுகாக்க பாடுபடுவோம். என்று பேசிய போதிலும், அதை நடைமுறைபடுத்துவதற்கான மனநிலை காங்கிரசுக்கு இருக்கிறதா..? என்ற பலத்த கேள்வி எல்லோர் மனதிலுமே உள்ளது.

காரணம், இன்றைக்கு டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை அடக்கி ஒடுக்கவும், அதிகாரமற்றதாக்கவும் பாஜக கொண்டுவரும் சட்டங்களை காங்கிரஸ் கண்டிக்கவில்லை. அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெளிவாக தெரிந்த போதிலும், மெளனம் சாதிக்கிறது என்றால், காங்கிரஸ் பற்றி மக்களுக்கு எப்படி நல்ல எண்ணம் பிறக்கும்?

பாட்னா கூடலில் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசும்போது, டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தில் காங்கிரஸ் நிலைபாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும். மாநில உரிமைக்கு  போராடும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட போது அதற்கு பாசிடிவ்வான பதிலை ராகுல் காந்தி தரவில்லை எனத் தெரிய வருகிறது..

குறிப்பாக, டெல்லி சர்வீசஸ் ஆர்டினன்ஸ் குறித்த தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கும்,  நாடாளுமன்றத்தில் NCCSA (National Capital Civil Services Authority) மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸை அவர் வலியுறுத்தியதற்கும்.  நல்ல பதில் இன்று வரை கிடைக்கவில்லை. ஆன போதிலும் கூட, கெஜ்ரிவால், ‘’ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தீர்க்க, தனிப்பட்ட முறையிலான ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இனி வரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து இணைந்து நாம் முன்னேற முயல வேண்டும்” என பேசியுள்ளது கவனிக்கத் தக்கது.

இதற்கிடையில் டெல்லி மாநில மசோதா தொடர்பாக காங்கிரஸ் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கோரி அறிக்கை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சரத் யாதவால் ஒன்றிணைக்கப்பட்ட எதிர்கட்சிகள்!

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் தமது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதில் கொடுத்துள்ளது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது. அதில், ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், சிறைக்கு போக தயாராக இருக்கிறார். அதனைத் தவிர்க்கவே பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறார். இதனால், காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கிறார். ஊழல் பணத்தில்தான் காங்கிரஸுக்கு எதிராக பல மாநிலங்களில் ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிட்டது. காங்கிரஸின் வெற்றியைப் பறித்து பாஜகவுக்கு உதவியது, ஆம் ஆத்மிதான் என சாடியிருக்கிறார் அஜய் மக்கான்.

இந்தச் சாடல் மூலமாக பாஜக அரசு எதிர்கட்சித் தலைவர்களை கைது செய்வதற்கோ, எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கோ செய்யும் நகர்வுகளை காங்கிரஸ் கண்டிக்கத் தயாராக இல்லை என்பது தான் வெளிப்படுகிறது. அதாவது, பாஜகவின் மிருகபலத்தை எதிர்கொள்வதில் காங்கிரஸ் மாநில கட்சிகளுக்கு கைகொடுக்காது என்பதாகத் தான் இதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

டிஎம்சி தலைவர்  மம்தா பானர்ஜி, “பாட்னாவில் இருந்து தொடங்குவது எதுவாக இருந்தாலும், அது பொது இயக்கத்தின் வடிவத்தை எடுக்கும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்’’ என்று கூறிவரும் நிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ‘’மம்தா ஒரு தீய சக்தி அவரை அழிக்காமல் விட மாட்டோம்’’ என கர்ஜித்துள்ளார்.

காங்கிரஸ் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட நெடுங்காலமாக டெல்லி மக்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தான் வாக்களித்து வந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளத் தவறிய நிலையில், பாஜகவிடம் போயிருக்க வேண்டிய டெல்லியை மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. அந்த வகையில் ஆம் ஆத்மியின் நிர்வாகத் திறமை மற்றும் வெளிப்படையான நிர்வாக அணுகுமுறைகள் போன்றவற்றை காங்கிரஸ் தனக்கு பாடமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே வருங்காலத்திலாவது மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கலாம்.

அதே போலத் தான் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி சண்டையில் பாஜகவில் இருந்து கட்சி தாவி வந்த கிரிக்கெட் வீரர் சித்துவை ஆதரித்து பாரம்பரிய காங்கிரஸ் தலைவரான கேப்டன் அமீந்தர் சிங்கை காங்கிரஸ் தலைமை அவமதித்தது. இதன் காரணமாக பஞ்சாபில் காங்கிரஸ் வலுவிழந்தது! பஞ்சாபை பாஜக கைப்பற்றுவதற்கு மாறாக, அது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது ஒரு வகையில் நல்லதே!

ஆம் ஆத்மியிடம் சிறுபான்மை வெறுப்பு கிடையாது. இந்துமத வெறி கிடையாது. அதனால், அது பரவலாக அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. காங்கிரஸ் தன் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் ஆம் ஆத்மி மீது கோபப்படுவது சரியல்ல.

காங்கிரஸ் சரியாக இருந்திருந்தால் அதில் இருந்து மம்தா ஏன் விலகி தனிகட்சி தொடங்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி ஏன் தனிகட்சி காண வேண்டும்? இப்படி தளபதிகளை எல்லாம் ஏன் இழந்தோம்..? என சுயபரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே தற்போதுள்ளவர்களை யாவது இழக்காமல் தக்க வைக்க முடியும்! சகிப்புத் தன்மையுடன் அரவணைத்தால் தாய் கட்சியுடன் கூட்டணி காண்பதில் மம்தாவிற்கும், ஜெகனுக்கும் பிரச்சினை இருக்காது.

இதே போல உத்திரபிரதேசத்தின் பெரிய கட்சியான சமாஜ்வாதி கட்சியுடனும் முட்டல், மோதல் போக்கைத் தான் காங்கிரஸ் தலைவர்கள் செய்கிறார்கள். பாஜகவால் அழித்தொழிக்கபடும் மாநில கட்சிகளுக்கு ஆதரவாக கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் அரவணைக்க முற்படாத வரை எதிர்கட்சிகள் இணைப்பு என்பது கானல் நீராகிவிடும் வாய்ப்புள்ளது. வெறும் பாஜக பூச்சாண்டி மட்டுமே, வெற்றிக் கனியை மடியில் கிடத்தி விடாது. மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப காங்கிரஸ் தன்னை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time