அரசை விட அதிகாரம் மிக்கவர்களா தீட்சிதர்கள்?

-சாவித்திரி கண்ணன்

பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் கனகசபையில் தேவாரம் பாட முடியவில்லை. எட்டுகோடி தமிழர்களையும், தமிழக அரசையும், அறநிலையத்துறையையும்  வெறும் 350 தீட்சிதர்கள்  துச்சமாக கருதுகிறார்கள்! இன்னும் எத்தனை காலம் தான் தீண்டாமை தொடருமோ?

குழந்தை திருமணங்களை நடத்துவார்கள்! சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! எத்தனையோ எப்.ஐ.ஆர் இருந்தும் அவர்களை கைது செய்ய முடிந்ததில்லை.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சென்ற போதும் தர்மசங்கடத்திற்கு ஆளானார். யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த ஆண்டு கனகசையில் தேவாரம் பாடவந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினார்கள்! வன்கொடுமை வழக்கு இவர்கள் மீது பாயவில்லை.

சிதம்பரம் மக்களை கேட்டால் இவர்கள் யாரையாவது தாக்கினாலோ, தகராறு செய்தாலோ காவல்துறை தங்களை கைது செய்ய முடியாத வகையில் யாராவது பெரிய ஜட்ஜ் வீட்டுல போய் தங்கிகிடறாங்க என்கிறார்கள்! மேலும் தீட்சிதர்கள் சிலர் ”முதலமைச்சர் சம்சாரம் துர்கா எங்களுக்கு சப்போர்ட் பண்றா.. நீங்க ஒன்னும் பண்ண முடியாது’’ எனப் பேசியுள்ளனர்.

தேவாரம் பாட வந்த தலித் பெண் வெளியேற்றப்பட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி 24 ,25 ,26 ,27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபை எனும் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி வழிபட கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து போர்டு வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோயில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் கெஞ்சிக் கேட்டும் மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர் கடந்த 24-ம் தேதி போர்டை அகற்ற சென்றபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீட்சிதர்கள் தகராறு செய்ததையடுத்து பின்வாங்கிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மாலை  காவல்துறையினர் வந்ததில் தீட்சிதர்கள் வைத்த போர்டு அகற்றப்பட்டது. போர்டைத் தான் அகற்ற முடிந்தது. காவல்துறை வந்து பேசிய போதும் கூட தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட மறுத்து வந்ததோடு மீறி ஏறியவர்களை விரட்டி அடித்தனர். இவர்களுக்கு லோக்கல் பாஜகவினர் ஆதரவு தருகிறார்கள்!

தீட்சிதர்களின் கெடு முடிந்த நிலையில் ஜூன் 28 காலை 7 மணி முதல் கனக சபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழி பட அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து தெய்வத் தமிழ் பேரவையினர் சிவ வாத்தியங்களுடன் சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்குள் சென்று கனக சபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடிய போது, சத்தமாகப் பாடாதீர்கள். மனதிற்குள் பாடிக் கொள்ளுங்கள் என அதட்டினர். ஆனால், இவர்களின் எதிர்ப்பையும்,அவமானங்களையும் பொருட்படுத்தாமல் சிவனடியார்கள் பாடி முடித்தே இறங்கினார்கள்!

அதன் பிறகு பேசிய சிவனடியார்கள், ”இந்த கனகசபையில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் மாணிக்கவாசகர் என காலங்காலமாக பாடி வந்துள்ளனர். இந்த நிலையில் தீட்சிதர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல” என்றனர்.

தமிழக அரசு கனக சபையில் சிவ பக்தர்கள் பாகுபாடின்றி வழிபட தடை செய்யக் கூடாது என அரசாணை வெளியிட்டு உள்ளது. அதை கடுகளவும் மதிக்கத் தயாராக இல்லை தீட்சிதர்கள்! கடந்த ஆண்டு அறநிலையத் துறை அதிகாரிகள் கணக்கு, வழக்குகளை சரி பார்க்கவும், கோவில் நகைகளை சரி பார்க்கவும் வந்த போது ஒத்துழைக்க மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

தேவாரம் பாடச் சென்று உயிர்விட்ட ஆறுமுக நாவலர்!

பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுக நாவலர் என்ற மூத்த சிவனடியார் ஒருவர் கனகபையில் தேவாரம், திருவாசம் பாட முன்ற போது விரட்டி அடிக்கப்பட்டார். எனினும் அவர் கோர்ட் சென்று போராடி அனுமதி பெற்று வந்து பாடினார். அப்போது அவர் தேவாரம் பாடி முடித்து இறங்கி வரும் வழியில் தரையில் விளக்கெண்ணை ஊற்றிவிட்டனர் தீட்சிதர்கள். அதில் கால் வைத்து வழுக்கி விழுந்த ஆறுமுக நாவலர் எலும்பு முறிவால் படுத்த படுக்கையாகி இறந்து போனார்.

சிதம்பரம் நடராஜரை வழிபட வந்த நந்தனை வழிமறித்து, தீக்கு இரையாக்கிவிட்டு, ” நந்தன் ஜோதியில் கலந்தான்” என கதைவிட்ட தீட்சிதர்கள் இன்னும் மாறவில்லை. இனியும் மாறுவார்கள் எனவும் தெரியவில்லை.

நந்தனை தீக்கு இரையாக்கி ஜோதியில் ஐக்கியமாக்கிய தீட்சிதர்கள்!

எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் உருவாக்கத்தில் அக்கால நம் தமிழ் மன்னர்களுக்கும், தமிழ் குடியின் எளிய மக்களுக்கும் பெரும்பங்கு உள்ளது! இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த தீட்சிதர்கள் கேரளாவில் இருந்து வந்து சேர்ந்தார்கள். பிறகு அவர்கள் மெல்ல,மெல்ல கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர் .வேதவழிச் சடங்குகளையே வழிபாட்டுமுறைகளாக்கி கொண்டு, பணம் பறித்து வயிறு வளர்ப்பதையே வழக்கமாக்கிக் கொண்டனர்.

இன்னும் எத்தனை காலம் தான் சிதம்பரம் கோவில் சிறுமைகள் தொடருமோ தெரியவில்லை. சிவன் கோயிலில் சிற்றம்பல மேடை ஏற முடியாது, தேவாரம் பாட முடியாது, மீறிச் சென்றால் அவமானங்கள் நடக்கும். அதற்கு தீட்சிதர்கள் மீது வழக்குகள் போடலாமே ஒழிய  கைதுகள் நடக்காது! இது அதிமுக, திமுக எந்த ஆட்சியானாலும் இது தான் நிலைமை!

சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடி வழிபட சுமார் 12 நூற்றாண்டுகளாக தமிழர்கள் போராடி வருகின்றனர். தமிழ் மன்னர்கள் ஆட்சி, வெளி மாநில மன்னர்கள் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, பிறகு மக்களாட்சி ஏற்பட்டு இந்த 76 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிவபெருமானை தமிழில் பாடி வழிபடும் விருப்பம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது!

தமிழக அரசு சிதம்பரம் கோவிலை அறநிலையத் துறை எடுத்துக் கொள்வதற்கு தோதாக சட்டமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் தனி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அது தான் தீர்வாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time