பெரியார் என்றவுடன் கடவுள் மறுப்பாளர், பிராமணர்களுக்கு எதிரி என்று தான் பலரது நினைவுக்கு வரும். பெரியாரின் மனித நேயத்தை, பிராமணர்களிடம் அவர் கொண்டிருந்த நட்புணர்வை, இந்த சமூகத்தில் அவர் காண ஏங்கிய மாற்றத்தை இதைவிட எளிதாக, சுவாரசியமாக வேறொருவர் சொல்ல முடியுமா.. தெரியவில்லை!
எதிலும் உண்மை என்ன என்று தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல் பெரியார் பெயர் கேட்டவுடன் சிலர் தவறாகவே எண்ணுகிறார்கள்..
உண்மையில் பெரியார் என்பவர் யார்? பிராமணர்கள் சொல்வது போல் அவர்களுக்கு எதிரியா? அல்லது கடவுள் மறுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினாரா? இதைக் குறித்து விரிவாகப் பல ஆதாரங்களுடன் “பெரியார் பிராமணர்களின் எதிரியா?” என்ற நூலைச் சோழ.நாகராஜன் எழுதி உள்ளார்.
பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? என்ற நூலை மூன்று இயல்களாகப் பிரித்து எழுதியுள்ளார். பெரியாருக்கு முன், பெரியாரின் காலம், பெரியாரை துணைக் கோடல் என்ற மூன்றும் முத்தான தகவல்களை கொண்டுள்ளது! இந்து மதத்தை பெரியார் ஏன் எதிர்த்தார்? என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். கனமான விஷயங்களைக் கூட எளிய மொழியில் சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார் சோழ. நாகராஜன்.
பெரியார் எதிர்த்த பலவற்றை அவருக்கு முன்பு இந்த மண்ணில் தோன்றிய சிலர் எதிர்த்து வந்து இருந்தாலும் பெரியார் மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்கு ஆளாகிறார்? பாமர மக்களை தட்டி எழுப்பியதில் பெரியார் முதலில் உள்ளார்.
புத்தக ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்கிறார். எங்கள் ஊரில் பெரியார் பேச வருகிறார். சிறுவனாக இருந்த நான் மேடைக்கு அருகில் சென்று நின்று கொண்டேன். ஆனால் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்களே இல்லை. இருந்தும் பெரியார் பேசிவிட்டு இறங்குகிறார். இது ஆச்சரியம் இல்லை. அதே இடத்திற்கு பல முறை வந்து பேசுகிறார் பெரியார் என்று குறிப்பிடுகிறார்.
பெரியார் பிராமணர்களுக்கு எதிரி இல்லை பிராமணர்கள் கையில் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கும் வர்ண பேதங்களுக்கு, சனாதானத்திற்கு, மனு நீதிக்கு தான் எதிரி என ஆசிரியர் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
ஒரு முறை மேடையில் பெரியார் பேசி கொண்டு இருந்தபோது கீழ் இருந்த ஒரு பிராமணர் துண்டு சீட்டில் குதர்க்கமாக கேள்விகளை எழுதி கேட்டு கொண்டே இருந்தார், பெரியாரும் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பென்சில் கூர் முனை உடைந்து விட்டது. உடனே பெரியார் தன் பாக்கட்டில் உள்ள பேனாவை எடுத்து கீழ் உள்ள பிராமணரிடம் கொடுக்க சொன்னார். அந்த பிராமணர் ஆச்சரியத்தில் தலை குனிந்தார்.
அதே போல் ஒரு முறை ரயிலில் நண்பருடன் பெரியார் பயணம் செய்தார். நண்பர் தன் எதிரே உள்ள ஒரு பிராமணருடன் கடு சொற்களை பயன்படுத்தி பேசி வந்தார். இதை கவனித்த பெரியார் நண்பரிடம் மென்மையாக சொன்னார் அப்படி பேசாதீர், இப்படி பேசினால் எப்படி அவர் நம் கருத்துக்கு உடன்படுவார். என்று அறிவுரை சொன்னார்.
இதை கவனித்த அந்த பிராமணர் இதுவரை அவர் பெரியாரை பார்த்தது இல்லை என்பதால் நண்பருக்கு அறிவுரை சொன்ன பெரியாரிடம் இவர்களுக்கு உங்களை போல் மென்மையாக சொன்னாள் ஏறாது. எல்லாம் அந்த ஈரோடு ஈவே ரா செய்த செயல் இத்தகைய ஆட்கள் பேசுவதற்கு காரணம் என்று பெரியாரிடம் சொன்னார்.
சில நிமிடத்தில் பெரியார் எழுந்து சிறுநீர் கழிக்க சென்றார். அந்த நேரம் பிராமணர் அருகில் இருந்த மற்றொரு பிராமணர் நீங்கள் சொன்ன ஈரோடு ஈவே ரா இவர்தான் என்று சொன்னார். கேட்ட பிராமணருக்கு ஸ்தம்பித்து. பெரியார் வந்த பின்பு ’’ஐயா தாங்கள் யார் என்று தெரியாமல் அப்படி சொல்லிவிட்டேன். மன்னித்து கொள்ளுங்கள். தங்களை பற்றி அவதூறு பேசியவர்கள் பொய்யர்கள். உங்களின் நற்குணமும், பொறுமையும் யாருக்கும் வராது அவசியம் என் வீட்டிற்கு வர வேண்டும்’’ என்று முகவரி கொடுத்தார் அந்த பிராமணர்.
இப்படி அவர் எங்குமே பிராமணர்கள் எதிர்ப்பு என்று செயல்பட்டதே இல்லை. அதை அவரே பல கூட்டங்களில் சொல்லியும் உள்ளார். பிராமணர்கள் உருவாக்கிய சனாதனம், மனு, மனித பேதங்கள் போன்றவற்றை தான் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதை கடைசி வரை செய்தார். அதனால்தான் பல பிராமணர்கள் அவருடன் நண்பர்களாக இருந்தார்கள். காரணம், மூர்க்கத்தனமாக அவர் எதையும் எதிர்க்கவில்லை என்று அத்தகையை பிராமணர்களுக்கு தெரிந்து உள்ளது.
நாடறிந்த தலைவர் ராஜாஜி பிறப்பால் பிராமணர். ஆனால் இவருடன் கடைசி வரை நெருங்கிய நட்புடன் பழகினார் பெரியார். பெரியாரை தமிழ் நாடு காங்கிரச் கமிட்டியின் தலைவராக்கியதே ராஜாஜி என்ற தகவல் வியப்பளிக்கிறது. ராஜாஜி சமபந்தி போஜனம், கலப்பு திருமணம் என தானே முன்னுதாரணமாக பல நேரங்களில் முற்போக்காளராக நடந்து கொண்டதை பெரியார் நினைவு கூறும் போது சிலிர்க்கிறது.
ஆனந்த விகடன் நிறுவனர் எஸ் எஸ் வாசன் பெரியார் மீது மிகுந்த பற்றுடன் இருந்தவர். இவரும் பிராமணர் ஆவார். தனது பத்திரிகையில் பெரியார் கருத்துக்கள் அதிகம் பிரசுரிக்கவும் செய்தார்.
புத்தக ஆசிரியர் இப்படி ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து குறிப்பிடுகிறார். குருட்டாம் போக்கில் பெரியாரை எதிர்ப்பவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் தங்கள் அறியாமையை எண்ணி வெட்கப்படுவர்.
இறுதியாக புத்தக ஆசிரியர் பெரியாருடன் அவர் கொண்டிருந்த மதிப்பு, பெரியார் கூட்டங்களில் எப்படி கவனித்தேன், அவர்கள் என்னை எப்படி நடத்தினார்கள், ஏன் பெரியாரை கொண்டாட வேண்டும் என்று சுவாரசியமாக எழுதி முடிக்கிறார். நூலின் ஆசிரியர் பிறப்பால் ஒரு பிராமணர் என்பது கவனத்திற்கு உரியது.
Also read
இந்த நூலுக்கு சிறப்பானதொரு ஆய்வுரையை வழக்கறிஞர் அருள்மொழி வழங்கியுள்ளார்.
இந்த புத்தகத்தை நிச்சயம் பிராமணர்கள் படிக்க வேண்டும்! படித்தால் நிச்சயம் தாங்கள் முன்பு கொண்டிருந்த கருத்துக்களை மறுபரிசீலனை செய்வார்கள் என்பது திண்ணம். காலத்தின் தேவையாக வந்துள்ள – அதிக மக்களை சென்று சேர வேண்டிய – புத்தகம்!
நூல் விமர்சனம்; ஜா.செழியன்
நூல்; பெரியார் பிராமணர்களின் எதிரியா?
ஆசிரியர்; சோழ. நாகராஜன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே. நகர், மேற்கு, சென்னை– 600078
மொபைல் ; 99404 46650
அருமை