என்னதான் சாதித்தார் தலைமை செயலாளர் இறையன்பு?

-சாவித்திரி கண்ணன்

அதிர்ந்து பேசாத அமைதியான குணம், அதிகார மிடுக்கில்லாத எளிமை, அதட்டி, உருட்டி வேலை வாங்காத பண்பாளர், ஏகப்பட்ட ‘டாக்டரேட்’ பெற்றவர், இலக்கியவாதி, சொற்பொழிவாளர், தீவிர வாசிப்பாளர்.. என அறியப்பட்ட வெ.இறையன்பு அவர்கள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் சாதித்தது என்ன..?

சட்டென்று எந்த வித ஈகோவுமில்லாமல் பழகும் குணம் எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் இருப்பதில்லை. இறையன்புவைப் போல இலக்கிய தளத்திலும், ஊடகத் தளத்திலும், சமூக செயற்பாட்டாளர்கள் தளத்திலும் இத்தனை பரந்துபட்ட நட்புகளைப் பெற்ற இன்னொரு அதிகாரியைக் காண முடியாது. இத்தனை நட்புகளையும் இடைவெளி அதிகரிக்காமல் தொடர்ந்து நட்பு வட்டத்திற்குள் வைத்து பேணும் கலையும் அவருக்கு வாய்த்திருக்கிறது!

அவரது 35 ஆண்டுகால ஐ.ஏ.எஸ் பணியில் கடந்த இரண்டேகால் ஆண்டு கால தலைமைச் செயலாளர் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய காலகட்டங்களில் அவர் ஐ.ஏ.எஸ்சாக இருந்து கொண்டே நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். எட்டு பி.எச்.டி எனப்படும் டாக்டரேட் பட்டங்கள் பெற்றுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். பல தொலைகாட்சிகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் பேசியுள்ளார். அதே நேரம் தன்னுடைய ஐ.ஏ.எஸ் பணியிலும் குறைபாடில்லாமல் இயங்கியுள்ளார். அவருடைய நேர மேலாண்மை தான் இத்தனை சாதனைகளுக்கும் காரணம். ஆனால், தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு – ஒட்டுமொத்த மாநிலத்தையும், அனைத்து துறைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றதனால் அவரது எழுத்துப் பணி மற்றும் சொற்பொழிவுகளுக்கு முற்றாக விடை கொடுத்துவிட்டு கர்மமே கண்ணாக தலைமைச் செயலாளர் வேலைக்கே தன்னை முழுக்க ஒப்பு கொடுத்துவிட்டார்.

சனி, ஞாயிறு விடுமுறையைக் கூட வீட்டாருடன் கழிக்காமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மழை நீர் வடிகால் பணிகள், கழிவு நீர் வெளியேற்றும் பணிகள், சாலை மற்றும், மேம்பால கட்டமைப்புகள் ஆகியவற்றை மேற்பார்வையிட புறப்பட்டுவிடுவார். சென்னையின் புற நகர் பகுதியான செம்மஞ்சேரி கண்னகி நகரில் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள் கல்வி கற்று முன்னேறுவதற்கான மாலை நேர வகுப்புகள், உதவிகள், வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கித் தருவதிலும் அவர் பிரத்தியேக கவனம் செலுத்தி வந்தார். இயன்ற நேரங்களில் அங்கும் செல்வார்.

அதிகாலை எழுந்தவுடன் பத்திரிகைகள் அனைத்தையும் வாசித்துவிடும் பழக்கம் உள்ளவர் என்பதால், பத்திரிகைகள் சுட்டிக் காட்டும் பொது நலன் சார்ந்த விஷயங்களை குறித்து வைத்துக் கொண்டு, உடனடியாக நிவர்த்திப்பதில் அவர் காட்டிய அக்கறை அலாதியானது! நம்முடைய அறம் இணைய இதழில் வெளியான பல கட்டுரைகளுக்கு உடனுக்குடன் அவர் எதிர்வினை ஆற்றியுள்ள வேகத்தை பார்த்து, நான் பல நேரங்களில் மலைத்து போயிருக்கிறேன்.

முதன் முதலாக அக்டோபர் 23ல் தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு பல தடைகளைக் கடந்து நடக்கவுள்ளது. ஆனால், சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுதவுள்ள அந்த தேர்வை  நீட் தேர்வு பாணியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகி கன்னியாகுமரியில் உள்ளவரை சென்னைக்கும், செங்கல்பட்டில் உள்ளவர்களை நாகர்கோவிலுக்கும் அலைக்கழிக்கும் வண்ணம் எக்ஸாம் சென்டர்களை போட்டிருந்ததை குறிப்பிட்டு, ‘இந்த அலைச்சலுக்கு தமிழக அரசு முற்றுபுள்ளி வைக்குமா?” எனக் கேட்டிருந்தோம்.

அந்த கட்டுரை வெளியான பதினைந்து நிமிடத்திற்குள் நம் செல்பேசிக்கு வந்த தலைமைச் செயலாளர், ”முக்கியமான விஷயத்தை கவனப்படுத்தி இருந்தீங்க..! சுமார் ஒன்றரை லட்சம் பேர் தங்கள் பெற்றோருடன் தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அலைக் கழிக்கப்படுவது ஏற்புடையதல்ல. எக்ஸாம் தேதியை மாற்றி, அருகாமை இடங்களில் தேர்வை நடத்தும் அறிவிப்பை இன்னும் சில நிமிடங்களில் அமைச்சரே வெளியிடுவார்” என தெரிவித்தார். அவர் கூறியபடியே நடந்தது!

அதே போல, ‘அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பற்றாகுறையால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் படும் அவஸ்த்தைகளை’ நாம் கவனப்படுத்திய போதும்,  ஜி.ஹெச் மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, மருத்துவ அதிகாரிகளை வரவழைத்து, விரிவாக விவாதித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவரே தொலைபேசி வழியாக என்னிடம் தெரிவித்த போது, இப்படியும் ஒரு தலைமைச் செயலாளரா..? என வியந்தேன். இது போல குறைந்தபட்சம் பத்து சம்பவங்களை சொல்ல முடியும். அவருக்கும் எத்தனையோ பணிகள் இருக்க, எத்தனையோ ஊடகங்கள் இருக்க எப்படி அறத்தில் வருவதை மட்டும் உடனுக்குடன் வாசித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்..என நான் ஆச்சரியப்பட்டுக் கொள்வேன்.

ஆனால், அறம் இதழ் விஷயத்தில் மட்டுமல்ல, பல பத்திரிகைகள், ஊடகவியலாளர்களிடமும் கூட அவர் இதே போன்ற அணுகுமுறைகளை வைத்திருந்தார் என்பதையும் நான் அறிவேன். ஏன்? அறிமுகம் இல்லாத நபர்கள் வாட்ஸ் அப் வழியாக பொதுப் பிரச்சினை ஒன்றை கவனப்படுத்திய நிலையிலும் கூட, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்ட நிகழ்வுகளையும் அறிய வந்த போது நான் வியப்பின் எல்லைக்கே சென்றேன்.

அவர் தினசரி அதிகாலை நான்கரை அல்லது ஐந்து மணிவாக்கில் அன்றைய சிந்தனை என்பதாக கவித்துவமாக நான்கு வரிகளில் எழுதி, நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வாட்ஸ் அப்பில் பதிவிடுவார். அவை சில நேரங்களில் என்னை துணுக்குற வைக்கும். அவரது ரச்னையையும், மன ஓட்டத்தையும்  உணர்வதற்கான சான்றாக அவை திகழ்ந்தன! இத்தனைக்கும் நண்பர் இறையன்பு அவர்களிடம் எனக்கு நேரில் பழக்கமில்லை. எல்லாமே தொலைபேசி உரையாடல்கள் வழி தான்!

”எப்போது தான் நேரில் சந்திப்பது வாங்க தலைமை செயலகத்திற்கு அல்லது வீட்டிற்கு” என்பார்.

”ஓ சந்திக்கலாமே’’ என்பேன்.

‘மிகப் பெரிய அதிகார பொறுப்பில் உள்ளவரை, சதா சர்வ காலமும் துடிப்போடு இயங்கி கொண்டிருப்பவரை சந்தித்து அவரது நேரத்தை அனாவசியமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தயக்கமே! மற்றொன்று எல்லா அதிகார மையங்களையும் குறிப்பாக மத்திய, மாநில அரசுகளை சமரசமின்றி விமர்சனம் செய்பவன் என்ற வகையில், என்னுடைய தொடர்பால் அவருக்கு எந்த தர்மசங்கடத்தையும் நான் ஏற்படுத்திவிடக் கூடாது’ எனவும் நான் நினைத்தேன்.

கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்னை கள்ளக் குறிச்சி சைபர் காவல்துறையினர் அதிரடியாக வந்து கடத்தி சென்ற நிலையில், அன்றைய தினம் பத்திரிகையாளர்களும், சமூக ஊடகங்களும் கடும் எதிர்வினை ஆற்றிய நிலையில், உடனே தலையிட்டு, என்னை விடுவிக்க  ஏற்பாடு செய்தவர் தலைமைச் செயலாளர் இறையன்பு.

ஒருமுறை என்னோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். ”தலைமை செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட போதே என் சுய மரியாதைக்கு என்றாவது சிக்கல் ஏற்பட்டால் உடனே துறந்து வெளியேறத்தக்க மன நிலைக்கும் என்னை தயார்படுத்திக் கொண்டேன். இதை எப்போதுமே ஒரு ராஜுனாமா கடிதத்தை சட்டைப் பையில் வைத்திருப்பதை போலவும் கொள்ளலாம்” என்றார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இறையன்பு அவர்களை நன்கு அறிந்து வைத்திருந்த நிலையில், அப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்கு அவரை தள்ளவில்லை என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். ‘ஒரு நேர்மையான அதிகாரி என அறிய வந்தால், அவருக்கான மரியாதையை தருவதில் முதல்வர் ஸ்டாலின் குறைவைக்க மாட்டார்’ என வேறு பல சம்பவங்கள் வழியாகவும் நான் அறிய வந்தேன்.

‘என்ன சாதித்தார் இறையன்பு?’ என்றால், தன்னைச் சுற்றிலும் உள்ள அதிகார மையங்கள் ஊழலில் புழுத்து திளைத்த நிலையிலும், நேர்மை தவறாமல், தன்மானம் சிதையாமல், கர்ம சிரத்தையுடன் மக்கள் பணி ஆற்றி மன நிறைவுடன் விடைபெற முடிந்ததே சாதனை தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time