திடீரென்று ரஷ்யாவில் வெடித்த ராணுவ கலகம் மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டு அரசும் அடைந்த இன்ப அதிர்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை! ரஷ்ய அதிபர் புடீன் தூக்கி எறியப்படவில்லை, ரஷ்யா சிதறவில்லை…என்ன நடந்தது?
திடீரென்று வெடித்ததைப் போன்றே அதிரடியாக அந்த கலகம் ரத்தம் அதிகம் சிந்தப்படாமல் அடக்கி வைக்கப்பட்டது ஒரு வகையில் ஆச்சரியம் தான்! கொலைகாரக் கும்பல், கூலிப்படை, புடீனின் அடியாட்படை என்றெல்லாம் இது வரை அமெரிக்கா, நேட்டோ மற்றும் உக்ரைன் நாட்டினரால் வருணிக்கப்பட்ட’ வாக்னர் ‘ படை ஒரே நாளில் அவர்களின் பார்வையில் விடுதலைப்படை, கண்ணியமிக்க போராளிகள் என்ற அந்தஸ்தை பெற்றனர். ஏனெனில் “அவர்கள்”- வாக்னர் படை – யவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் மாஸ்கோ நோக்கி ‘விடுதலை பயணம்’ மேற்கொண்டது தான்.
ஆனால், எத்தனையோ இன்னல்களையும், இழப்பையும் தாங்கிக் கொண்டு , அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதார தடைகளினூடே,மேற்கத்திய நாடுகளின் கேன்சல் (ரஷ்யா) கலாச்சார போரின் நடுவே தங்கள் நாட்டின் தன்மானத்தை தூக்கி பிடித்த ரஷ்ய மக்களும், ரஷ்ய சமூகமும் இந்த கலகத்தினால் பெரும் கலவரமடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.
உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளுக்கெதிராக பாகுமத் பகுதியில் மிகுந்த சிரமங்களுக்குடையில் வீரஞ்செறிந்து போராடி வெற்றியை ஈட்டியதில் பெரும்பங்கு வாக்னர் படைகளையே சாரும் , ரஷியாவின் மானத்தை காத்தவர்கள் வாக்னர் படையினர் என்று வாக்னர் மீது ரஷ்ய மக்களுக்கு பெரும் மதிப்பும், அபிமானமும் உண்டு.
ஆனால், அவர்கள் (வாக்னர் படையினர்) இன்று-இந்த போர் முடிவுக்கு வருமுன்னரே கலகக்கொடி ஏற்றியதும், தங்கள் கோரிக்கைகளும், ஆதங்கங்களும் எத்தனை இருந்தாலும் போரினூடே பிளவை ஏற்படுத்தும் யவ்ஜெனி பிரிகோசினின் செயலைக் கண்டு வெட்கினர் என்பது உண்மை.
அந்த கணத்தில் அது வரை யவ்ஜெனி பிரிகோசினும், அவரது வாக்னர் படையினரும் ரஷ்ய மக்கள் மத்தியிலும், ரஷ்ய சமூக மதிப்பீடுகளிலும் பெற்று வந்த நன்மதிப்பை அந்த நொடியில் இழந்தனர் என்றே கூற வேண்டும்.

பிரிகோசின் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்ட தொடர் காணொலிகளில், ரஷிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தையும், பாதுகாப்பு அமைச்சர் ஷோய்குவையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தும், உக்ரைன் நாடும் நேட்டோவும் ரஷ்யா நாட்டிற்கெதிராக ஏதும் செய்யவில்லை, அப்படி நடப்பாதாக பொய்யுரைத்து ‘ரஷ்ய மக்களையும் அரசையும் ஷோய்கு ஏமாற்றினார்’ எனவும், ‘இத்தகைய நாசகார சக்திகளை முறியடிக்க மாஸ்கோ நோக்கி பயணப்படுகிறோம்’ என அறிவித்தார்.
இத்தகைய “உளறல்கள்”, அமெரிக்கா,உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளுக்கு வேண்டுமானால் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்திருக்கலாம், ஆனால் ரஷ்ய மக்களிடையே பெருங் கவலையை ஏற்படுத்தியது, ரஷ்ய அரசும் , அதிபர் புடீனும் சூடு பட்ட பூனையாக இக் கலகத்திற்கு முடிவு கட்ட உறுதி பூண்டனர்.
ஒரே நாளில் அதாவது சனிக்கிழமை இரவிற்குள் இக்கலகம் முறியடிக்கப்பட்டு , பிர்கோசினும் அவருடன் இருந்த வாக்னர் படையினரும் பெலாரஸுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.
கலகக்காரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர் ,எஞ்சியுள்ளவர்களும்,கலகத்தில் பங்கு பெறாத ‘வாக்னர் ‘ படையை சார்ந்தவரும் ரஷிய பாதுகாப்பு துறையுடன் ‘ராணுவ பணி ஒப்பந்தம் ‘ செய்த பின்னர் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர் , இனி அவர்கள் ரஷிய படையின் “ரெகுலர்” சக்தியாக மாற்றப்பட்டனர். யவ்ஜெனி பிரிகோசின் பிரிதொரு நாட்டில் தஞ்சமடைய அனுமதிக்கப்பட்டார்.
இக்கலகம் புடீனையும் ரஷ்ய அரசையும் பலவீனப்படுத்தியுள்ளதா? என்ற கேள்வி உலகெங்கிலும் எதிரொலித்தது. ஒவ்வொருவரும் தங்களது புரிதலுக்கேற்ப இக்கேள்விக்கு விடை கூற முயல்கின்றனர்.
ரஷ்ய நாட்டிற்கு ஏற்பட்ட இந்த சிக்கலில் , அந்நாட்டின் மேல் அனுதாபம் கொண்ட பலரும் “தாதாக்களை” ராணுவத்தில் நுழைப்பதும், தனியார் வல்லான்கள் துணையை ராணுவம் நாடுவதும், பெறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை முன்னிறுத்துகின்றனர்.
ராணுவக் கலகங்களுக்கும் , ராணுவ புரட்சிக்கும் (for both mutiny and coup d’état)
தனியார் மயம் (privataisation) காரணமல்ல.
ராணுவ புரட்சியாளர்களுக்கு , கலகக்காரர்களுக்கு இரண்டு அடிப்படை தகுதிகள் உள்ளன. ஒன்று அவர்கள் ராணுவத்தில் பணிபுரிகின்ற அல்லது பணிபுரிந்த அதிகாரியாக அல்லது வீரனாக இருக்க வேண்டும், இரண்டு அவர்களுக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு முறைமை ஒரு தகுதி(Legitimacy) இருக்க வேண்டும்.
இந்த இரண்டு கூறுகளும் இல்லாத வாக்னர் குழுவும், அதன் தலைவர் யவ்ஜெனி பிரிகோசினும் ரஷ்ய அரசுக்கெதிராக, ரஷ்ய ராணுவத்தலைமைக் கெதிராக கிளர்ந்து வெல்வது நடவாத காரியம்.
ராணுவத்தில் தனியார்மயம்!
முதலாளித்துவ நாடுகளில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு தனியார் ஒப்பந்தகாரர்களை ஏற்படுத்தி வளர்ப்பது க்ரோனி கேப்பிட்டலிசத்தின் ஒரு அடிப்படைக் கூறாக வளர்ந்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஏஜிஸ் (Aegis) அல்லது அமெரிக்காவை சார்ந்த அகாடமி ACADEMY (முன்னாளில் இந்நிறுவனம் பிளாக் வாட்டர் BLACK WATER என அழைக்கப்பட்டது) அமெரிக்க ராணுவத்துடனும் , சி.ஐ.ஏ.வுடனும் இணைந்து பணிபுரியும் தனியார் நிறுவனங்கள்.
இவைகளெல்லாம் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ராணுவக் கருத்தோட்டங்களில் பாதிப்போ அல்லது ஆதிக்கமோ செலுத்த வாய்ப்பு இருப்பதாக நினைப்பதில் தவறில்லை. ஆனால், ஒருபோதும் அந்நாட்டு ராணுவத் தலைமையை , இவர்களால் மாற்ற இயலாது.
ஆனால் ரஷ்ய விவகாரத்தில் இன்று இருக்கும் ரஷ்யா , சோவியத் யூனியன் அல்ல , அது தேச விடுதலை போராட்டங்களை நிகழ்த்தவும் இல்லை. அதே சமயம் இன்று சுருங்கிப் போன ரஷ்யா தன்னை சுற்றி வளைத்து அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ‘வண்ணப்புரட்சி’ மூலம் (முந்தைய சோவியத்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும்பொழுது
அவர்களை எதிர் கொள்ள வசதியாக ஒரு படையை ஏற்படுத்தியது. அதுதான் வாக்னர் குரூப்.
இக்குழு ஆப்ரிக்க சஹால் பகுதியில் உள்ள அரசுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டது. சிறியா போன்ற நாடுகளிலும் ரஷ்ய அரசின் தேவைகளை நிறைவேற்றியது. இத்தகைய பணிக்கு யவ்ஜெனி பிரிகோசின் என்ற வல்லமை பொருந்திய தாதாவை (அவரின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள் – 1 பில்லியன் டாலர் = சுமார் 8,200 கோடி ரூபாய்கள்) அமர்த்திக் கொண்டது.

இம்மனிதன் ஒரு திடீர் பணக்காரன் தான். பக்கோடா(ஹாட் டாக்) விற்பதில் வாழ்க்கையை தொடங்கி சமையல்காரனாக மிளிர்ந்து புடீனின் ஆஸ்தான சமையல்காரனாக மாறி கன்கார்டு என்ற கேட்டரிங் நிறுவன அதிபராக மாறி ரஷ்ய ராணுவத்திற்கே ஒப்பந்த சமையல்காரனாக கோலோச்சியவர்.
ரஷ்ய அரசின் உதவியால், மான்யத்தால் ,ஒப்பந்தத்தால் உண்டு செழித்து கொழுத்து வளர்ந்தபிரிகோசின் தாண்டக் கூடாத சிவப்புக்கோட்டை தாண்டியதால் விரும்பத்தகாத விளைவுகள் அவருக்கு மட்டுமல்ல, ரஷ்ய அரசுக்கும் ஏற்பட்டுள்ளன.
Also read
தேசத்தின் பாதுகாப்பும் , பாதுகாப்பு ஒப்பந்தங்களும் ஒருதலைபட்சத்திலும் ஊழலிலும் மூழ்கி திளைக்கையில் அந்நாட்டின் சீரழிவு அங்கு தொடங்குகிறது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்கா இப்பொழுதெல்லாம் எந்த போரிலும் -அது ஆப்கனாக இருந்தாலும் சரி, ஈராக் அல்லது சிறியாவாக இருந்தாலும் சரி, அல்லது கரீபியன் தீவுகளாக இருப்பினும சரி – வெற்றி பெற இயலவில்லை. இதற்கு ஆதிமுதல் காரணம் பல்லாயிரந் தலைகள்கொண்ட ஊழல்தான், இதனுடைய கரங்கள் ஆளும் கட்சியினரில் தொடங்கி பெண்டகன், அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) மற்றும் வெள்ளை மாளிகை வரை நீண்டு வளைந்துள்ளது.
இதே பாதையில்தான் இன்று வாக்னரை வளர்த்துவிட்ட புதீனும், ரஷ்ய நாடும் நேற்று வரை பயணித்துள்ளது. அமெரிக்கா பயணித்த சறுக்கலில் இருந்து மீள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை ரஷ்யா பயன்படுத்திக்கொள்ளுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் கூற வேண்டும்!
கட்டுரையாளர்;ச.அருணாசலம்
You shouldn’t write a such a biased article and just ignoring the fact that Russia blatantly invaded its neighbour Ukraine. This is the problem in Tamil journalism in which a journalist write anything he/she likes and presuming readers like me just an idiot or ignorant of the international affairs. We don’t have to agree with the west and USA but you need to write both sides and research better. Arunasalam need to grow up, don’t treat us as stupid readers who readily consume what one writes.
The above commentator forgot the fact that this is just a news analysis and not a moral discourse… the question is just about the status of the events and not about the political correctness of Russian invasion…. it’s funny to say the analysis is biased whereas the turn of events was biased towards the current Russian govt.. albeit with the machinations of putin and his crooked akills..
Invasion of Ukraine was a serious flaw on the part of Russia. It legitimise belligerent nations to wage a conventional war to destroy smaller neighbours to achieve their objective. Countries like India, even though more powerful, faces similar threats from its ambitious China. If Russia succeed in disintegrating Ukraine through its might, it will set a wrong precedent in the emerging multi-polar world where alliances and counter-alliances were used to keep the balance among the comity of nations. Of course, the pressure from NATO also precipitated the matter. In the global scenario today, dependence on multilateral trade and sanctions considerably minimised the risk of open war. Russo-Ukranien war was an aberration in this context.
கட்டுரை மிகவும் அருமை.