ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகும் அகத்தியர் குழம்பு!

-விஜய் விக்ரமன், MD(siddha)

அகத்தியரின் பெயரில்  ஒரு  மிகச்சிறந்த சித்த  மருந்து ஒன்றுள்ளது.  இது அடிப்படையான சித்த மருந்துகளின் வரிசையில்  முதலானதாகும்!  ஒரு சித்த  மருத்துவர் எல்லா வகை  நோய்களிலும் முதலில் பயன்படுத்தக் கூடியதான இதன் பெயர் “அகஸ்தியர் குழம்பு”. நோயற்ற வாழ்வை விரும்புவோருக்கு இது முக்கியமானது!

குழம்பு என்ற சொல், பொதுவாக அரை திரவ நிலையில் (கூழ்ம நிலை) உள்ள பொருளைக் குறிக்கிறது,   [ குழைந்த சோறு போன்ற, ].  சித்த மருத்துவத்தில் பல  மூலிகை சாறுகளை, மருந்து பொருட்களை கூட்டி நெருப்பில் சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்வது.

தஞ்சை சரஸ்வதி மஹால்  சுவடி காப்பகம்,   தஞ்சைதமிழ் பல்கலைக் கழக  சுவடிகள் காப்பகம், திருவனந்தபுர சுவடிகள் காப்பகம்,  சென்னை கீழ் திசை சுவடிகள் காப்பகம் போன்ற இடங்களில் பாதுகாக்கப்பட்டு உள்ள பல்வேறு மூலச் சுவடிகளில் இம்மருந்தின் செய்முறை கூறப்பட்டுள்ளது.  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  மருந்தின் சிறப்பினை போற்றி ‘அகஸ்தியர் குழம்பு’ என்ற தனிப் புத்தகத்தை  பதிப்பித்துள்ளது.

இம்மருந்துடன் சேர்த்து கொடுக்கப்படும்  துணை மருந்துகள் பலவற்றை  சித்த மருத்துவ நூல்களில் பதிவு செய்து உள்ளனர். அவற்றினை  நோய்க்குத் தக்கவாறு தேர்ந்தெடுத்து  கொடுக்கும் போது மிகச் சிறப்பான முறையில் நோய்களின் வீரியத்தை குறைக்கின்றது. அந்த வகையில் நூற்றுக்கு மேற்பட்ட நோய்களை இதில் குணப்படுத்த முடியும்.சில   சமயங்களில் உயிர் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.   ( – 941)

– திருக்குறள்

சித்த மருத்துவத்தின் மூல தத்துவமான வளி, அழல், ஐயம் என்ற முக்குற்றத்தின் மாறுபாடே  நோய்க்கு முதல் காரணம். அத்தகைய முக்குற்ற   மாறுபாடுகளை ஒரே நேரத்தில் சரி செய்யும் சிறந்த மருந்து இது.

எந்தெந்த நோய்கள், எந்தெந்த குற்றத்தினால்  ஏற்படுகிறது என்ற இலக்கணம் சித்த மருத்துவத்தில் உண்டு. அந்தந்த நோய்களுக்கு உரிய துணை மருந்துகளுடன் இந்த மருந்தினை பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு பயன்படுத்துதல் நலம்.

வாதம், காற்று, வாய்வு  போன்ற வளிக்குற்ற பாதிப்பால் ஏற்படும் நோய்களான உடல் வலி, கை கால் வலி, மூட்டு வீக்கங்கள், மலக்கட்டு, பல தோல் நோய்கள் போன்ற உடல்  உபாதைகளை  ”பேதி” செய்வதன் மூலம்  குறைக்கிறது.

பித்தம், அதிசூடு,  அதி கசப்பு போன்ற அழல் குற்ற பாதிப்பால் ஏற்படும் நோய்களான  வயிற்று உப்புசம், செரியாமை, பித்தப்பை கல், கல்லடைப்பு, மூலம்,. உடல் உபாதைகளை  வாந்தி செய்வதன் மூலம்  குறைக்கிறது.

கபம்,  குளிர்ச்சி போன்ற  ஐயகுற்ற பாதிப்பால் ஏற்படும் நோய்கள்  நெஞ்சில் கோழை கட்டுதல், அதிமயக்கம்,மூர்ச்சை, விஷக்கடி, விஷ  காய்ச்சல்,உடல் வியர்வையை  உண்டு பண்ணுவதன் மூலம்  குறைக்கிறது.

பொதுவான  பயன்பாடு; 

தற்போது பலருக்கும் ஏற்படும் இயல்பான மலக்கட்டுக்கு  இம்மருந்தினை  பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்படும்  அதிக சளி தொல்லைக்கு, குடல் கீரிப்பூச்சி தொல்லைகளுக்கு  பயன்படுத்தலாம். உடல் கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக்கும். உடலில் தேங்கும் கழிவுகளே பல நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பதால் கழிவை நீக்கி உடலை சுத்திகரிக்க வேண்டும் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியமாகும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை  எல்லா வயதினரும்  இதனை பயன்படுத்தலாம். இதனால்  உடலில் உள்ள கழிவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறும்.

மருந்தின் அளவு:-

சித்த  மருந்து கடைகளில் இந்த மருந்தினை வாங்கி,  அதனுடன்  இரண்டு மடங்கு அரிசி மாவு சேர்த்து  மிளகு அளவு, குளிகைகளாக   உருட்டி வைத்து  அவரவர் உடலுக்கு தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். நபர்களுக்கு தக்கபடி அளவு மாறுபடும் என்பதால், சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் உடல் தன்னைத் தானே சீர் செய்து கொள்ளும். உடல் தன்னை சீர் செய்து கொள்ள தேவையான உதவிகளை நாம் செய்தால் மட்டும் போதும்.

இந்தப் பதிவு சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டோருக்கு மட்டும். தங்கள் நோய் தீர வழி தேடுவோர் சித்த மருத்துவர்களின்  உதவியுடன் பயன்படுத்தவும்.

சித்த மருத்துவ மூல தத்துவங்களில், அதன் வரலாற்றில்  ஆசிவகம் பௌத்தம் சமணம் ஆகியவற்றின் மெய்யியல் கோட்பாடுகளும்,  நம்பிக்கைகளும்,  வரலாற்றுத்  ஆதாரங்களும்  நிறைய  பொதிந்து உள்ளன.  அந்த வகையில்  சித்த மருத்துவம் தோன்றிய இடமான பொதிகை மலை  ‘போதால’  ‘பொடாலகா’   மலை   எனக் கூறப்பட்டுள்ளது.  அது பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்று!

ஓவியமாகவும், சிற்பமாகவும் அவலோகிதர்.

அங்கு அவலோகிதர்  என்ற பௌத்த ஆசிரியர் வாழ்ந்ததாக பௌத்த சூத்திரங்களில்   குறிப்பு உள்ளது. அவலோகிதரே தமிழ் மொழியை உண்டாக்கினார் என்பது  தமிழ் பௌத்த  நூல்களின்   குறிப்பு . அவலோகிதர்  வடக்கில் இருந்து வந்த அகத்திய  முனிவருக்கு [குள்ள உருவம் கொண்ட பௌத்தபிக்கு] தமிழ்  கற்பித்த   ஆசான். அகத்தியர் தமிழையும், தமிழ் மருத்துவத்தையும், பௌத்த நீதி நெறிகளையும் அங்கு கற்று பண்டைய தமிழகம் எங்கும்  கொண்டு சேர்த்தார் என்பது தமிழ் பௌத்தர்களின் நம்பிக்கை.

சீனாவின் சவொலின் மடாலாயம்.

பொதிக மலையில் பௌத்த பள்ளி ஒன்று இருந்திருக்கிறது.  அது தமிழ் மொழியில் தர்க்க சூத்திரங்களையும், இலக்கியங்களையும், மருத்துவ இலக்கணங்களையும், தற்காப்பு போர்க் கலைகளையும்,  ஓக நெறி தத்துவங்களையும் கற்றுத் தரும்  மையமாக திகழ்ந்திருக்கிறது.  இன்று சைனாவில் உள்ள  சவொலின் மடாலயம்  போல். அங்கு  மாணவர்களுக்கு நான்கு முக்கிய கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.  பௌத்த  தத்துவ நெறி,  தற்காப்பு  பயிற்சி, பௌத்த கலைகள், மருத்துவம்.

பொதிக மலையில் இருந்து  சீனம்  சென்ற  போதிதர்மர்  சவொலின்  மடாலயத்தில்  தங்கி இங்குள்ளதைப் போன்றே  தற்காப்பு பயிற்சிகளை, மருத்துவ முறைகளை  அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

அத்தகைய சிறப்புமிக்க தமிழ் பௌத்தம் வரலாற்றில் பல காரணங்களால்  தமிழ் மண்ணை விட்டு வெளியேறினாலும், அதன் தத்துவார்த்தங்களும், சடங்குகளும், வாழ்வியல் முறைகளும் இன்று வரை தமிழக மக்களோடேயே பயணப்பட்டு வருகிறது.  இது குறித்து பேராசிரியர் தொ.பரமசிவன் நிறையவே எழுதியுள்ளார்.

பௌத்த அகத்தியரை  பின்வந்த சைவம் தத்தெடுத்தாலும்,  இன்று வரை  சைவ  கோயில்களில்  அவருக்கு இடமில்லை.  63 நாயன்மார்களில் அவர் இல்லை. ஆனால், அவர்  பெயர் இல்லாமல் சித்த மருத்துவ  நூல்கள்  இல்லை.  அகத்தியர் பெயரில் பல மருத்துவ சுவடிகள்,  வர்ம சுவடிகள்,   தற்காப்பு சிலம்ப முறை சுவடிகள், ஓகம், தியானச் சுவடிகள்   உள்ளன.

வரலாற்றுடன் சித்த மருத்துவம் அறிவோம்.!   தொல் மருத்துவ அறிவு காப்போம்!

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன், MD(siddha)

சித்த மருத்துவ செயற்பாட்டாளர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time