நூறு நாள் வேலைத் திட்டம் அவசியமா ? அனாவசியமா?

-பீட்டர் துரைராஜ்

”இந்த திட்டத்தை ஒழிச்சா தான் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கும்” என்கிறார்கள்!

ஆனா, வருஷத்திற்கு 50 நாட்கள் மட்டுமே இது அமலாகுது!

”இந்த திட்டத்தினால் எந்தப் பயனும் இல்லை. ஊழலும், சோம்பேறித்தனமும் வளர்ந்தது தான் மிச்சம்” என்கிறார்கள்.

”இதை நிறுத்தினால் பல பட்டினிச் சாவுகள் விழும்” என்கிறார்கள்! எது உண்மை..?

‘நூறு நாள் வேலைத்திட்டம் அவசியமா ?’  என்கிற தலைப்பில் சிந்தனையாளர் பேரவை கடந்த வெள்ளியன்று (30.6.23)  நடத்திய இணையவழி கருத்தரங்கில்,  சமூகத் தணிக்கைகளில் ஈடுபட்டவரும் செயல்பாட்டாளருமான கருணா. எம். இந்த திட்டத்தின் சவால்களையும், சாதனைகளையும் விளக்கிப் பேசினார்.

” தமிழ்நாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பலனடைவோரில் 85  சதம் பேர் பெண்களே. அதில் பெரும்பாலோனோர் விதவைகளும், தனித்து வாழும் பெண்களும் ஆவார்கள். அந்தத் தொகையைக் கொண்டுதான் அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு, சுகாதாரத்திற்கு செலவழிக்கிறார்கள். குறைவான எடையுள்ள குழந்தைகளும், இரத்த சோகை மிகுந்துள்ள பெண்களும் நிறைந்துள்ள  கிராமப்புறங்களில் இது போன்ற சட்டங்கள் அவசியமாகும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையானது, பொருளாதார நிலமைக்கு ஏற்ப,  வேலையின்மை, ஓய்வூதியம், உடல்நலம் போன்றவைகளுக்காக உரிய நடவடிக்கைகளை  அரசானது தனது குடிமக்களுக்கு செய்யலாம் என்று கூறுகிறது.

வருடத்திற்கு நூறு நாட்களாவது வேலை தர வேண்டும், பயன்தரத்தக்க சொத்துகளை உருவாக்க வேண்டும், கிராம ஊராட்சிகளை வலுப்படுத்த வேண்டும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த சட்டமானது ஐக்கிய முன்னணி அரசால் இந்த சட்டம் 2005 ல்  கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் வந்த போதே  இதற்கான எதிர்ப்புகள் இருந்தன. தொழில் அதிபர்களும், ஒரு சில அரசியல் கட்சிகளும் இந்தச் சட்டத்தை எதிர்த்தன.

இதில் ஊழல் நடைபெறுகிறது, எனவே இந்தத் திட்டத்தை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இது, ஊழல் மலிந்து விட்டது எனவே எல்லா காவல் நிலையங்களையும் மூடி விடவேண்டும் என்று  சொல்வதற்கு ஒப்பாகும். சரியான கூலி தரவில்லை என்ற புகார்களை சரிசெய்ய வேண்டும் என்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். தமிழ்நாட்டில், 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது என்று  சமூகத் தணிக்கையில் கண்டு பிடித்து,  அதில் 40 கோடி திரும்ப அரசுக்கு  செலுத்தும் நிலையை ஏற்படுத்திய திட்டம் இது. ஆனால், வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. அரசு வேலைகளில் தவறு நடந்தது என்று சொல்லி, பணத்தை திரும்ப வசூலித்தது  என்று வேறு எதுவும் சம்பவத்தை  உங்களால் காட்ட முடியுமா?

விவசாயத்தில் வருடம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை. எனவே, நகரங்களை நோக்கி இடப்பெயர்வு தொடர்ந்து நடைபெற்றது. அதனால்தான்  கிராமப்புறங்களில் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்தச் சட்டம் வந்தது.

இந்தச் சட்டத்தினால் விவசாயத்திற்கு பாதிப்பு என்று கூறுகிறார்கள். மண் அரிப்பை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டும்,ஏரிகளை தூர் வார வேண்டும், மரக்கன்றுகள் நட வேண்டும் என விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் இந்தச் சட்டம் உள்ளது. விவசாய மேம்பாட்டிற்காக பல சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துகளின் விவரங்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1000 கிணறுகள் தோண்டப்பட்டன என்ற  தகவல்களை இணையத்தில் பெற்று அந்தியூர் பாஸ்கர் என்பவர் ஆய்வு செய்ததில் 80 சத கிணறுகள் களத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்.  பல்கலைக்கழகங்களும், சுயேச்சையான பல ஆய்வு நிறுவனங்களும் இந்த திட்டம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக உள்ளது. பொதுச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருநாளைக்கு முப்பது கன அடி, ஒரு நபர் எடுக்க வேண்டும் என்பது அளவுகோல். இந்த திட்டம் அமலான காலத்தில் நிறைய வேலைகள் செய்யப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில், சராசரியாக ஒரு வருடத்திற்கு ஐம்பது நாட்கள்தான் வேலை தரப்படுகிறது.

இந்த திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள், பெண்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 85 சதவீதமானோர் பெண் பயனாளிகளாக உள்ளனர் என்பது நல்ல செய்தியாகும். இதில் விதவைகள், தனியாக வாழும் பெண்கள், பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இதைத்தவிர இந்த திட்டத்தில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலிவுற்றவர்கள், இளம் தாய்மார்கள் போன்றோர் பயன் பெறுகிறார்கள். இவர்கள் வேறு எந்த வேலைக்கும் போக முடியாதவர்கள் ஆவார்கள்.  இந்த வேலை கூட கிடைக்காவிட்டால் பசி, பட்டினிக்கு பெருந்திரள் மக்கள் தள்ளப்படுவார்கள். யாராலும் சீண்டப்படாத நாதியற்ற பலருக்கு ஒரே பிடிமானமாக இருப்பது இந்த வேலைதிட்டம் தான்!

இதனால், கிராமப்புற மக்களின் நகரத்திற்கு இடப்பெயர்வது குறைந்துள்ளது. இந்த ஏழை பராரிகள் யாரிடமும் கையேந்தாமல் கண்ணியமாக ஊதியம் பெறுகின்றனர். பணம், அவர்களின் வங்கிக் கணக்கிற்கே வருகிறது. இவையெல்லாம் மக்களை அதிகாரப்படுத்தும் அம்சங்களாகும்.

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது ‘அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் தோல்விதான் இந்த திட்டம்’ என்று கூறினார். ஆனால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே இந்த சட்டம் நீர்த்துப் போகக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கொரோனா காலத்தில் 5 கோடி மக்கள் நகரங்களில் இருந்து மீண்டும் கிராமங்களுக்குச் சென்றனர். அப்போது இந்த சட்டம்தான் அவர்களுக்கு உதவியது. கொரோனா காலத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த அரசு, இப்போது அதற்கான நிதிஒதுக்கீட்டை 60,000 கோடி ரூபாயாக குறைத்து விட்டது.

பிரபாத் பட்நாயக், ஜெய்தி கோஷ் என்கிற இரு பொருளாதார அறிஞர்கள் கிராமப்புறத்தில் மட்டும் அமலாகி வரும் இந்த திட்டத்தினை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஐந்து அடிப்படை உரிமைகளான உணவு,கல்வி,மருத்துவ சேவை ,வேலை,ஓய்வூதியம் ஆகியவற்றை உத்திரவாதம் செய்ய , மொத்தம் 12 இலட்சம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை திரட்டுவது எளிதே. இந்தியாவில் உள்ள ஒரு சதவிகிதமாக உள்ள மிகப் பெரும் பணக்காரர்களிடம் இருந்து வருடத்திற்கு இரண்டு சதவிகிதம் சொத்து வரி வசூலிக்க வேண்டும். பெரும் பணக்காரர்கள் இறந்தபிறகு அவர்களுடைய வாரிசுகளுக்கு சொத்துகளை மாற்றம் செய்யும்போது 33 சதவிகிதம் வரி விதிக்கலாம். இவ்வாறு செய்தால் எளிதாக 12 லட்சம் கோடியை சேர்த்துவிடலாம்” என கருணா உரையாற்றினார்.

கருத்துப் படம்; நன்றி; தினத்தந்தி

இதற்கு தலைமை வகித்த பி.பாலகிருஷ்ணன் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் தனது தலைமை உரையில் “ஒரு நல்ல சட்டம் வந்த பிறகு, அதனை நாம் பலப்படுத்த வேண்டும். இதனால் ஆறுகோடி பேர் பயன் பெற்று வருகின்றனர்” என்றார்.

எம்.கருணா

தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ” விவசாய வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை” என்று விழுப்புரத்தைச் சார்ந்த சோலைவனம் என்பவர் குறிப்பிட்டார். அதற்கு பதில் அளிக்கையில் “விவசாயி என்பவர் பத்து ஏக்கர், ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல. இதனால் அரை ஏக்கர், கால் ஏக்கர் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளும் பலன் அடைகின்றனர். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவு, அதில் விவசாய நிலங்கள் எவ்வளவு, பக்கத்து கிராமங்களில் வேலை செய்ய முடியுமா..? என்ற விவரங்களைப் பொறுத்து தான் இதற்கு பதில் சொல்லமுடியும். எப்போது வேலை செய்வது, என்ன வேலை செய்வது என்பதை அந்தந்த கிராமசபைதான், பஞ்சாயத்துதான் முடிவு செய்ய வேண்டும். விவசாய வேலை உள்ள காலங்களில் வேலை வழங்காமல் இருக்கமுடியும். ஆனால், திட்டங்கள் அதிகாரிகளால்  திணிக்கப்படுவதால் பல தவறுகள் நடக்கின்றன ” என்றார் கருணா.

பாஜக அரசாங்கம், படிப்படியாக இந்த சட்டத்தை கைவிட எண்ணுகிறது.சில தவறுகளைக் களைந்து, இன்னும் கூடுதலாக எளியோர் பயன்பெறத்தக்க வகையில், சமூக வளர்ச்சி போக்கோடு இணைத்து இந்த திட்டத்தை அமலாக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், சிவில் சமூகங்களும் இணைந்து குரல் எழுப்பி இந்தச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். பல இடங்களில், ஊராட்சிகளில் இந்த திட்டத்தில், ஏற்கனவே துார்வாரப்பட்ட குளம், குட்டைகள் மீண்டும் துார்வாரப்பட்டது போல கணக்கு காட்டுவது, ஏனோ,தனோவென்று பயனற்ற வேலைகளை செய்வது போன்ற புகார்கள் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.வேலைக்கு வராத நபர்களின் பெயரில் கணக்கு எழுதி காசுபார்க்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் விரிவுபடுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தப்படும்” என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக விரிவாக்கப்படும். பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” என்று உறுதி கூறப்பட்டது. எனவே, இந்ததிட்டதை 50 நாட்களாக குறைத்ததை எதிர்த்து இந்தக் கட்சிகள் வலுவாக குரல் கொடுக்க வேண்டும்.

கட்டுரை ஆக்கம்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time