புகழ்பெற்ற இலயோலா கல்லூரியை நடத்தி வருவது இயேசு சபை. இந்த சபையைச் சார்ந்தபாதிரியாரும், புகழ்பெற்ற சமூக சேவகருமான 83 வயதான, ஸ்டான் சாமி என்று அழைக்கப்படுகிற தனிஸ்லாஸ் லூர்துசாமி, தேசிய புலனாய்வு நிறுவனத்தால் அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.ஏன் கைது செய்யப்பட்டார்? கார்ப்பரேட்டுகள் ஏழை,எளிய பழங்குடி மக்கள் வாழும் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்து,தொழிற்சாலைகள் அமைப்பதை தடுத்து விளிம்பு நிலை மக்களின் அரணாக நின்றார் என்பதால் மத்திய அரசின் கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். இவரது கைதுக்கு மேத்தா பட்கர், அருந்ததிராய்,ஸ்பனாம் ஆஸ்மி,ஹர்ஸ்மந்தர், அபூர்வானனந்த்…உள்ளிட்ட ஆளுமைகளும், பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புகழ்பெற்ற எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான ராமச்சந்திர குஹா, ஸ்டான் ஸ்வாமி பற்றி, ’’ஆதிவாசி உரிமைகளுக்காக ஆயுள் முழுதும் போராடியவர்’’ என்று கூறியுள்ளார். அவர் தன் ட்வீட்டில், “இதன் காரணமாகவே மத்திய அரசு அவரை மவுனமாக்க முடிவெடுத்துள்ளது. சுரங்க நிறுவனங்களின் கொள்ளை லாபம்தான் ஆட்சியாளர்களுக்கு முக்கியம் ஆதிவாசிகளின் வாழ்வோ வாழ்வாதாரமோ அல்ல” என பதிவிட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன் ட்விட்டரில், “இப்போது அவர் என்.ஐ.ஏ.இனால் யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாஜக அரசு மற்றும் என்.ஐ.ஏ.வும் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது” என்று எச்சரிக்கை செய்யும் பதிவு போட்டுள்ளார்.
கும்பகோணம் மறை மாவட்டம், விரகளூர் கிராமத்தைச் சார்ந்த, இவர் பிலிப்பைன்ஸின் மணிலா பல்கலை கழகத்தில் படித்தவர். எளிய வாழ்க்கை வாழ்பவர்.இயேசு சபை துறவி.பத்து ஆண்டுகாலம் பெங்களூரில் இந்திய சமூக நிறுவனத்தில் பணியாற்றினார்.இந்தியா முழுமையும் சமூக தொண்டாற்றுவதற்கான இளம் தலைமுறையினரை உருவாக்கியவர்.
முப்பதாண்டுகளுக்கு மேலாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிந்து வருகிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கில் ஒரு பங்கு பேர் ஆதிவாசிகள். வனவளம் மிகுந்த பகுதி.இங்கு யுரேனியம், மைகா,பாக்சைட், தங்கம், வெள்ளி, கிராபைட், நிலக்கரி போன்ற கனிம வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன.ஆதிவாசிகளை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் சுரங்கங்களை, அணைகளை, நகரியங்களை அரசு நிறுவுகிறது. அதனால் அந்த பகுதியைச் சார்ந்த பூர்வ குடி மக்கள் தங்கள் நிலத்தை இழக்கிறார்கள். நிலத்திற்குரிய உரிய இழப்பீடும் கிடைப்பதில்லை.இதை எதிர்க்கும் ஆதிவாசிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
இங்கு துறவியாக பணிபுரிந்த ஸ்டான் சாமி இதுகுறித்து ஊடகங்களில் எழுதினார். சிறையில் அடைக்கப்பட்ட ஆதிவாசிகள் விடுதலை செய்வதற்கு உதவி செய்தார். 3000 ஆதிவாசிகள் விசாரணை கைதிகளாக பல்வேறு சிறைச்சாலைகளில் இருப்பதை எதிர்த்து ராஞ்சி உயர்நீதி மன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனை ஒட்டி நீதிமன்ற குழு அமைக்கப்படும் நிலை உருவானது. இது அரசுக்கு சங்கடத்தை உண்டாக்கியது. அரசின்கோபப்பார்வை இவர்மீது பட்டது.
நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு கிராம சபையில் ஒப்புதல் வேண்டும்; நிலத்தைச் சேர்ந்த வர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் இயற்றப்பட்ட பஞ்சாயத்து சட்டம் Panchayats (Extension to Scheduled Areas) Act, 1996 மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்தச் சட்டம், கார்ப்பரேட்டுகள் தங்கள் திட்டங்களை செயல்படுவதற்கு தடையாக இருக்கிறது. இந்த சட்ட சரத்துக்களை ஆதிவாசிகளுக்கு விளக்கி, அவர்களது உரிமைகளை உணரச் செய்து ஒரு உண்மையான சமூகத் தொண்டராக பணிபுரிந்து வந்தார் ஸ்டான் சாமி.
கல்விச் சேவை, மருத்துவச் சேவை , கோவில் என்ற அளவோடு இருந்திருந்தால் அரசு அமைதியாக இல்லாமல் பழங்குடிகளின் உரிமை போராட்டத்தில் இரக்கம் கொண்டு உதவி செய்தது தான் அவரது கைதுக்கு காரணமாயிற்று.
2017 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பம்பாய்க்கும், பூனாவிற்கும் இடையில் உள்ள பீமா கோரேகான் நகரத்தில் தலித்துகளின் பேரணி நடைபெற்றது. 200 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் படையில் இருந்த தலித்துகள்( மஹர் சாதி) பெற்ற வெற்றியின் நினைவாக தலித்துகள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் இறந்தார்.மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இதைக் காரணமாக வைத்து அப்போதிருந்த மகாராஷ்டிரா அரசு ‘அர்பன் நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர்,வழக்கறிஞர்,மனித உரிமை செயற்பாட்டாளர்… என பலர் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆந்திர கவிஞரான வரவர ராவ், தில்லி பல்கலைக்கழக பேராசிரியரான சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, அருண் பெரைரா,பெர்னார்ட் கொன்சால்வேஸ்,கௌதம் நவ்வால்கா,வழக்கறிஞர் சுரேந்திரா,பேராசிரியர் ஹனிபாபு,கபீர் கல மன்ஞ்சின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 பேரை சிறையில் அடைத்திருக்கிறது. இந்த தடைச் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தை போல் அல்லாமல், மிகக் கடுமையான பிரிவுகளைக் கொண்டது.
இந்த பீமா கோரேகான் வழக்கில் ஸ்டேன் சாமியையும், சந்தேகிப்பவர் பட்டியலில் வைத்து இருந்தது. ஒருமுறை கூட அவர் அந்த ஊருக்குச் சென்றதில்லை. இந்த ஜனவரியில் மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து புதிதாகப் பொறுப்பேற்ற சிவசேனா- காங்கிரஸ் அரசு பீமா கோரேகான் வழக்கை மறு விசாரணை செய்யப்போவதாக அறிவித்தது. உடனடியாக மத்திய அரசின் கீழ் இருக்கும் தேசிய புலனாய்வு நிறுவனம் மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல், நேரடியாக இந்த வழக்கை தன்வசம் எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கின் கீழ் ஸ்டேன் சாமியை, ஜூலை மாதத்தில், 15 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தார்கள். இரண்டு முறை அவர் தங்கியிருந்த அறை சோதனை செய்யப்பட்டது. அவரது அறையில் நாற்காலிகள், புத்தகங்கள் நிறைந்த அலமாரியைத் தவிர வேறு பொருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அக்டோபர் மாதம் எட்டாம் தேதி விசாரணைக்கு மும்பை வருமாறு தேசிய புலனாய்வு முகமை அழைத்தது. ஆனால் தனக்கு நோய் இருப்பதாலும் (அவருக்கு பார்கின்சன் நோய், தேநீரையே அவர் ஸ்ட்ரா மூலம்தான் குடிக்க முடியும்), கொரானா காலத்தில் வயதான தன்னால் மும்பைக்கு வர இயலாது; தேவைப்பட்டால் காணொளி மூலம் விசாரணைக்கு உட்படுவதாக அவர் தெரிவித்தார்.எனினும், வயதான முதியவர் காலமெல்லாம் மக்களுக்காக பாடுபட்டவர் என்றெல்லாம் பாராது,அவரை அக்டோபர் மாதம் எட்டாம் தேதி ராஞ்சியில் கைது செய்து, விமானத்தில் அழைத்துச் சென்று மும்பையில் நீதிமன்ற காவலில் வைத்திருக்கிறார்கள்.
” பிரசங்கம் செய்வது மட்டுமல்லாமல், அநீதியை எதிர்த்து போராடுவதும், எளிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதும்தான் உண்மையான கிறிஸ்தவமாகும். அந்த வகையில் விடுதலை இறையியல் (Liberation theology) என்ற கருத்து இப்போது கத்தோலிக்க மதத்தில் மேலோங்கி வருகிறது. இதை நம்புகிறவர் ஸ்டான் சாமி. 1978 ம் ஆண்டு கத்தோலிக்க மாணவர்களுக்காக நடத்திய முகாமில் நான் அவரிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். இவர் சமூகப் பணியாற்று பவர்களுக்கு பயிற்சி அளிப்பவர். இவரிடம் பயிற்சி பெற்ற பலர், நன்கு பணியாற்றி வருகிறார்கள். இவரை கைது செய்வதன் மூலம் அரசு என்ன சொல்லுகிறது என்றால், வயது முதிர்ந்த, நன்கு அறிமுகமான, கிறிஸ்தவசபை துறவியையே (Jesuit) கைது செய்து விட்டோம். நீங்களும் ஒழுங்காக இருங்கள், என்ற எச்சரிக்கையை மற்றவர்களுக்கு சொல்லுகிறது ” என்கிறார் பத்திரிகையாளரான யோசேப்.
Also read
” சுதா பரத்வாஜ், வரவர ராவ் போன்றவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மேலாக விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வைத்திருப்பது ஒரு அநீதி. அவர்களுக்கு பிணையை நீதிமன்றங்கள் வழங்கவில்லை. இது மோசமான சூழல்” என்கிறார் அலைகுடிகள் மத்தியில் பணிபுரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் எம்.இராதாகிருஷ்ணன்.
“எனது கணணியில் ஒரு கடிதத்தை அவர்களே வைத்துவிட்டு அதை ஆதாரமாக சொல்லுகிறார்கள். அந்தக் கடிதம் யார் எழுதியது, யாருக்கு எழுதியது, எந்த தேதியில் எழுதியது போன்ற எந்த விவரமும் இல்லை.இந்த அரசு இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என தனக்கு எதிர் கருத்து சொல்பவர்களை கைது செய்து வருகிறது. இப்போது நானும் கைது செய்யப்படுகிறேன்.இப்படி இந்த அமைப்பில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான் ” என்று தான் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட காணொளியில் ஸ்டேன் சாமி குறிப்பிட்டிருந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் இந்த கைதை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறார். ‘தேசியப் புலனாய்வு முகமை ஏன் இவ்வளவு ஒரு நல்ல மனிதரை பழி வாங்குவதில்வ்பிடிவாதமாக இருக்கிறது? ” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே போல கேரள முதல்வர் பினராயி விஜயனும்’’ யாரெல்லாம் ஏழை,எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உறுதுணையாய் உள்ளார்களோ அவர்களையெல்லாம் பழிவாங்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது’’ எனக் கூறியுள்ளார்.
ஸ்டான் சாமி கைதை எதிர்த்து இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சமூக நல அமைப்புகளும்,தொண்டு நிறுவனங்களும்,சிறுபான்மையின மக்களும் போராடி வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் பொதுக் கூட்டங்கள்,ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன.தமிழகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கோவில்களில் கிறிஸ்தவர்கள், ஞாயிறு வழிபாட்டிற்குப் பிறகு, ஸ்டான் சாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
Leave a Reply