உலகை அச்சுறுத்தும் தனியார் கூலிப்படை ராணுவங்கள்!

அ.பாக்கியம்

உலகின் பல நாடுகளில் தற்போது கூலிக்கு வேலையை முடித்துக் கொடுக்கும் தனியார் ராணுவங்கள் செயல்படுகின்றன! மனித உரிமை மீறல்களுக்கு செளகரியமாக உள்ள இந்த ஏற்பாடு அரச வன்முறைகளுக்கு வலு சேர்க்கின்றன! உலகில் பல நாடுகளில் செயல்படும் தனியார் ராணுவங்கள் குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை!

ரஷ்ய யுத்தம் மேலும் ஒரு புதிய ஆபத்தின் வளர்ச்சி போக்கை வெளிப்படுத்தி உள்ளது. அதுதான் தனியார் ராணுவ கூலிப்படையாகும். முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தில் தேசிய அரசுகள் உருவாகாத சூழலில் பலரும் படைகளை பராமரித்தனர். கிழக்கு இந்திய கம்பெனி தனது நியாயமற்ற வணிக நோக்கத்தை நிறைவேற்றிட கம்பெனியின் பெயரில் ராணுவத்தையும், கப்பற்படையும் வைத்திருந்தது. இவையெல்லாம் சிறு சிறு சண்டைகள், யுத்தங்கள் போன்றவற்றில் பயன்பட்டன. பிறகு, ஒவ்வொரு நாடும் மிகப் பெரும் ராணுவத்தை கட்டி அமைத்தனர்.

பனிப்போர் முடிந்த பிறகு, 1990 களுக்கு மேல் அமெரிக்க தலைமையிலான தனியார் ராணுவ கூலிப்படைகள் மிக அதிகமாக பெருக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு மட்டும் தனியார் ராணுவ கூலி படைகளுக்கான(மேற்கு மற்றும்,அமெரிக்கா) முதலீடு 224 பில்லியன் டாலர் ஆகும். 2030 ஆம் ஆண்டு இது 457 பில்லியன் டாலர் அளவிற்கு உயரம் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. அனேகமாக ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக தனியார் ராணுவ கூலிப்படைகளும் இன்றைய தினம் உருவாகிவிட்டன.

அமெரிக்காவில் ‘பிளாக் வாட்டர்’ என்று சொல்லக் கூடிய தனியார் கூலிப்படை ராணுவம் தான் உலகத்தில் பெரியது. முன்னாள் ராணுவ அதிகாரி எரிக் பிரின்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் ஈராக் போரின் போது தான்  அதிகமான அளவு கூலிப்படைகள் பயன்படுத்தப் பட்டன. பிளாக் வாட்டர் படை அதிகப் பங்கை இந்த இருநாடுகளிலும் செய்தது, 2003 ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க ஆதரவு ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் இவர்கள் தான் பயிற்சி கொடுத்தார்கள். அன்றைய தினம் சுமார் 40,000 வீரர்களை கொண்டிருந்தது. ஆயுத மோதல்கள் மூலமாகவே அதிகமான பணத்தை இவர்கள் பெறுகிறார்கள்.

ஈராக்கில் தனியார் நிறுவனமான ‘பாண்ட் ஆப் பிரதர்ஸ்’ என்ற ராணுவம்.

இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அமெரிக்காவின் பட்ஜெட்டில் 2001 ஆம் ஆண்டு கூலிப்படைக்கு 7,35,000 டாலர் ஒதுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டில் 25 மில்லியன் டாலர்களாகவும் 2006 ஆம் ஆண்டு 600 மில்லியன் டாலர்களாகவும் இந்த ‘பிளாக் வாட்ட’ர் தனியார் ராணுவ கூலிப்படைக்கு ஒதுக்கப்பட்டது. சராசரி ஒரு அமெரிக்க ராணுவ வீரனுக்கு தினசரி ஒதுக்க கூடிய தொகை 150 டாலரில் இருந்து 190 டாலர் வரை தான். ஆனால், இந்த கூலிப்படைவீரனுக்கு தினசரி அமெரிக்க பட்ஜெட் ஒதுக்கியது 1,200 டாலர்களாகும்.

ஈராக் நாட்டில் ஒரே நேரத்தில் தூசூர் நகரத்தில் 17 பொதுமக்களை விசாரணையின்றி தூக்கில் போட்டார்கள். இதுபோன்ற எண்ணற்ற கொடூர செயல்களை இந்த கூலிப்படை ஈராக்கில் செய்வது. கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களையும், பொது மக்களையும் கொடும்சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள். ஆயுதக் கடத்தினிலும், கள்ளச்சந்தையில் ஆயுத விற்பனையிலும் மிக முக்கிய பங்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தனது பெயரை அகாடமி என்று மாற்றிக் கொண்டது.

வேறுசில பணிகளையும் செய்வதற்கான ஒப்பந்தங்களை எடுத்து தங்களுடைய கூலிப்படை குற்ற செயல்களை மறைத்துக் கொண்டார்கள். மற்ற நாடுகளில் அமெரிக்க ஆதரவு ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பது, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்று பணிகள் ஒதுக்கப்பட்டன.

ஆப்கானில் செயல்பட்ட dyn corp எனப்படும் தனியார் ராணுவப் படை

100க்கும் மேற்பட்ட தனியார் ராணுவ கூலிப்படைகள் அமெரிக்காவில் செயல்படுவது தெரிய வருகிறது. ‘ஜி4s’ என்ற தனியார் ராணுவ கூலிப்படை அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 125 நாடுகளில் கிளை வைத்துள்ளது. 2006 முதல் 2008ஆம்ஆண்டு வரை அமெரிக்க தொழிலாளர்கள் மீது தாக்கு தலுக்கும், அமெரிக்கா தலையீடுகள் செய்யக்கூடிய நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் இந்த கூலிப்படை பயன்படுத்தப் பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கிற பொழுது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பு அளிப்பதற்கான பொறுப்பு இந்த கூலிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இந்த கூலிப்படை செய்த கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் பெரிய அளவிற்கு அம்பலப்படுத்த பட்டன.

மற்றொரு தனியார் ராணுவ கூலிப்படை ‘டைன் கார்ப்’ (DynCorp) ஆகும். இதில் 24 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானத் திற்கும், ஈராக்கிற்கும் இந்த கூலிப்படையில் இருந்துதான் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அமெரிக்காவின் பிரபல சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ போன்ற நிறுவனங்கள் தனது பாதுகாப்பிற்கு 50 சதவீதம் இந்த தனியார் ராணுவ கூலிப்படையை நம்பித்தான் இருக்கின்றன. இந்தப் கூலிப்படை கிழக்கு ஐரோப்பாவில் போஸ்னியா நாட்டில் 2000ம் ஆண்டில் நடைபெற்ற யுத்தத்தை ஒட்டி அனுப்பப்பட்ட பொழுது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண்களையும், குழந்தைகளையும் விற்பனை செய்தது! ஆதாரப்பூர்வமாக பல புகார்கள் வந்த பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை.

2001 ஆம் ஆண்டு ஈக்வடார் நாட்டில் விவசாயிகளின் பயிர்கள் மீது களைக்கொல்லி மருந்துகளை திருட்டுத்தனமாக வீசி விவசாயத்தை நாசம் செய்யும் பணிகளை இந்த கூலிப்படை நிறைவேற்றியது. இவர்கள் ஆப்கன் நாட்டில் இருந்த பொழுது குழந்தை விபச்சாரத்தை நடத்தினார்கள் என்றும் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

யூரோப்பியன் செக்கியூரிட்டி அகடமி என்ற தனியார் ராணுவம்.

‘எம்.பி.ஆர்.ஐ’ என்ற அமெரிக்க தனியார் ராணுவ கூலிப்படை 1995இல் குரோஷியா நாட்டில் இன  அழிப்பு கொடுமைகளில் ஈடுபட்டது. அல்பேனியா நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்தி ஆட்சி கவிழ்புக்கு இந்த படை உறுதுணையாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் போஸ்னியா நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு என இருந்த படைப்பிரிவுக்குள் நுழைந்து சிஐஏ வழிகாட்டில் அடிப்படையில் செயல்பட்டார்கள்.

‘ஏஜிஎஸ் டிபன்ஸ் சர்வீஸ்’ என்ற தனியார் ராணுவ கூலிப்படை இங்கிலாந்தில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. யுத்தம் நடைபெற கூடிய இடங்களில் தூதரகங்களை பாதுகாக்கும் பொறுப்பை இந்த கூலிப்படை ஏற்றுக் கொண்டது.

இங்கிலாந்தில் ‘எர்னிஷ் இன்டர்நேஷனல்’ என்ற தனியார் ராணுவ கூலிப்படை ஈராக் நாட்டிற்கு  அனுப்பப்பட்டு ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் கைதிகளை சித்தரவதை செய்யும் செயல்களில் ஈடுபட்டது. அதிகமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தனியார் ராணுவப் படை என்று குற்றச்சாட்டுக்கு ஆளானது.

‘நார்த் பிரிட்டிஷ் சர்வீஸ் லிமிடெட்’ என்ற தனியார் ராணுவப்படை பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டு  அமெரிக்க தனியார் ராணுவ படையுடன் இணைந்து டொமினிகள் குடியரசில் பதிவு செய்தார்கள். இந்த தனியார் ராணுவ கூலிப்படை தற்போது உக்ரைனுக்கு அதிகமான கூலிப்படைகளை அனுப்பி உள்ளது. இந்தக் கூலிப்படையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும், பிரான்ஸ், அமெரிக்காவை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள லைப்ரிய நாட்டில் அரசுக்கு எதிரான கலவரங்களுக்கு இந்த படை அனுப்பப்பட்டு உதவி செய்து அந்த அரசை தூக்கி எறிய கூடிய வேலையை முடித்தது, அந்நிய நாட்டுக்குள் புகுந்து அப்பட்டமான முறையில் அரசுக்கு எதிரான செயல்களில் இறங்கினார்கள். அந்த நாட்டின் ஜனாதிபதியை சிஐஏ கடத்திச் செல்வதற்கு சிறப்பு திட்டத்தை தயாரித்துக் கொடுத்தவர்கள் இந்த கூலிப்படையை சேர்ந்தவர்கள்தான், ஐநா சபையின் தலையிட்டால் அது நடைபெறவில்லை.

அமெரிக்காவின் தனியார் ராணுவமான பிளாக் வாட்டர் சீனாவில் செக்யூரிட்டி பெர்சனல் பயிற்சியை வழங்க பல மையங்களை திறந்துள்ளது.

தனியார் ராணுவ கூலிப்படையில் சேர்வதற்கு உலகம் முழுவதும் இருந்து பலர் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. குறிப்பாக எக்கனாமிக் டைம்ஸில் வெளிவந்த செய்தி இந்தியாவுடன் தொடர்புடையது. நேபாள நாட்டிலிருந்து ஏராளமான இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், வாக்னர் குழுவில் சேர்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டது. அவ்வாறு சேரக்கூடிய வீரர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும் என்ற சலுகை இருப்பதாகவும் அதனால்  சேருகிறார்கள் என்றும் தெரிகிறது. நேபாள அரசு இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற வகையில் முடித்துக் கொண்டார்கள்.

இந்திய அரசு நேபாள வீரர்களை ராணுவத்தில் எடுப்பதை நிறுத்திவிட்டது மட்டுமல்ல, அக்னி பாத் என்ற பெயரால் நிரந்தர ராணுவ பணியை ஒழித்துக் கட்டியதும் இதற்கு முக்கிய காரணம் என்றும், வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் இதுபோன்ற அண்டை நாடுகளில் இணைவது இந்தியாவுக்கு ஆபத்து என்று காங்கிரஸ் கட்சி ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் களம் இறக்கப்பட்ட அமெரிக்காவின் தனியார் ராணுவம் பிளாக் வாட்டர்

 

பனிப்போர்தான் உலகை பதட்டமாக வைத்திருக்கிறது என்று கருதப்பட்ட காலம் முடிந்து அமெரிக்கா தலைமையில் ஒற்றை உலகம் என்ற நிலை ஏற்பட்ட பொழுதும் யுத்தங்கள் குறையவில்லை. அதன் பிறகு தான் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற பெயரால் எண்ணெய் மற்றும் இயற்கை வளமுள்ள நாடுகளையும் சுரண்டுவதற்காக மத்திய ஆசிய நாடுகளிலும் லத்தின் அமெரிக்க நாடுகளிலும் பல படையெடுப்புகளின் நடத்தியது. யுத்தம் இல்லாமல் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் உயிரோடு இருக்க முடியாது. உலகம் முழுவதும் 850 க்கு மேற்பட்ட ராணுவ தளவாடங்களை 155 நாடுகளுக்கு மேல் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கில் தனியார் ராணுவ கூலிப்படைகள் புதிய நிலைமைகளாகும்.

ஏற்கனவே அரசின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவ அமைப்பு, பல மனித உரிமை மீறல்களையும், அடக்குமுறைகளையும் செய்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அதற்கான விதிகளும், யுத்தம், யுத்தகைதிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் போன்றவற்றுக்கெல்லாம் விதிகளை மீறினால் அதற்கான நடவடிக்கை என்ற குறைந்தபட்ச ஏற்பாடுகள் இருந்தது.

தனியார் ராணுவ கூலிப்படைகளுக்கு இவைகள் ஒருபொருட்டே இல்லை, கொடூரங்களை தவிர வேறு எதுவும் உலகில் மீதம் இருக்காது. அதிக கூலி அதிக கொடுமைகள்  என்ற கோட்பாட்டில் தான் இந்த தனியார் ராணுவப்படை செயல்படுகிறது. புதிய நிலைமைகள் உழைப்பாளி மக்களுக்கு பெரும் சவால்தான், காரணம் இழப்புகள் அனைத்தும் அவர்களுக்குத்தான். உழைப்பாளி மக்களின் விழிப்பும் ஒன்று சேரலும் இல்லாமல் இதை தடுத்து நிறுத்த முடியாது.

கட்டுரையாளர்; .பாக்கியம்.

இடதுசாரி சிந்தனையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time