மகாராஷ்டிரா அரசியலில் மாநில கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இரண்டையும் பிளந்து, ஆள்தூக்கி ஆட்டத்தில் அடுத்தடுத்து வெற்றி பெற்றவண்ணம் உள்ளது பாஜக! இந்த இரண்டு கட்சிகளிலும் உள்ள குடும்ப அரசியலையே எப்படி தனக்கான ஆயுதமாக்கிக் கொண்டது பாஜக என்பதே கவனத்திற்குரியது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தற்போது 29 எம்.எல்.ஏகள் ஆதரவு இருப்பதாகக் கூறி, மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்றுள்ள அஜித்பவார் வாரிசு அரசியலால் அரசியலில் முன்னிலை பெற்றவர் தான்! சரத்பவாரின் அண்ணன் ஆனந்த்ராவின் மகனான அஜித்பவார் மிக இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு சரத்பவாரால் கொண்டுவரப்பட்டவர். இவர் நல்ல நிர்வாகியுமல்ல, உண்மையாக மக்கள் தொண்டு செய்ய வந்த அரசியல்வாதியுமல்ல! ஆனால், சரத்பவார் உறவினர் என்ற தகுதியில் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவித்தார்!
ஒரு முறை தண்ணீர் பற்றாகுறையால் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அஜித்பவார், ”அணையில் தண்ணீர் இல்லை. என்ன செய்வது? சிறுநீர் கழிச்சா அணையை நிரப்ப முடியும்?” என பயிர்வாடிய நிலையில் போராடிய விவசாயிகளிடம் கேள்வி எழுப்பினார்?
அணைக்கு தண்ணீர் வரத்து ஏன் குறைந்தது? தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பா? விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். ஏரி,குளங்களை தூர்வாறி கூடுதல் தண்ணீர் சேகரிக்க திட்டமிடலாம். இப்படியெல்லாம் யோசிக்க கூட இயலாமல் அதிகப்பிரசங்கியாய் பேசியவர் தான் அஜித்பவார். அதுமட்டுமின்றி, இவர் பெரிய ஊழல் பெருச்சாளி. மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிலே மக்கள் பணம் 25,000 கோடியை முறைகேடு செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக பதவிக்காக எதையும் செய்வார்.
2019ல் அதிரடியாக இரவோடு இரவாக பாஜகவுக்கு ஆதரவு தருவதாகச் சொல்லி, பாஜக மந்திரி சபையில் துணை முதல்வரானார். ஆனால், இவரால் போதுமான எம்.எல்.ஏக்களை அப்போது கூட்டிச் செல்ல முடியவில்லை. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உடனடியாக பெரும்பான்மையை சட்ட சபையில் நிருபிக்கச் சொல்லியது. அது முடியாது என்பதால், மூன்றே நாளில் ஆட்சி கவிழ்ந்தது. அப்படிப்பட்ட அஜித்பவாரை மீண்டும் அரவணைத்து சிவசேனா தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வர் பதவி வாங்கித் தந்தார் சரத்பவார். அதாவது, சொந்தக்காரன் என்றால், எவ்வளவு பெரிய துரோகத்தையும் மன்னிப்பது… என செயல்பட்ட சரத்பவாருக்கு தற்போது காத்திருந்து மீண்டும் கழுத்தை அறுத்துள்ளார் அஜித்பவார்.

முந்தாள் நாள் வரை சரத்பவாரால் மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராக வலம் வந்த அஜித்பவார், தற்போது துணைமுதல்வர். இவர் எதிர்கட்சித் தலைவராக இருந்த போதே ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் பாஜகவுக்கு அனுசரணையாக செயல்பட்டார் என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இது குறித்து நிருபர்கள் கேட்ட போது, ”எதிர்கட்சி என்பதால் அவங்க கழுத்தையா நெறிக்க முடியும்..?” என குதர்க்கமாக எதிர்கேள்வி வைத்தார்.
‘அஜித்பவார் என்றாவது ஒரு நாள் பாஜகவிற்கு தாவுவார்’ என மகாராஷ்டிரா மக்களே எதிர்பார்த்தனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாத மனிதனாகத் தான் அவர் தொடர்ந்து வெளிப்பட்டு வந்தார். ஆனால், அண்ணன் மகன் என்பதால் கட்சியில் மிகுந்த முக்கியத்துவம் தந்து வளர்க்கப்பட்டுவிட்டதால், சரத்பவாரால் அஜித்பவாரை தூக்கி எறியவோ, அல்லது அதிகாரத்தை பிடுங்கி ஓரம்கட்டவோ திரானியில்லை. அண்ணன் மகன் என்பதால் அளவற்ற பாசத்தை காட்டியதால் தற்போது கட்சியையே அஜித்பவார் கபளிகரம் செய்து பாஜக பக்கம் தாவும் துர்பாக்கிய நிலை உருவாகிவிட்டது.
அஜித்பவார் கட்சியைப் பிளந்து பாஜக அணிக்கு தாவும் முயற்சியை தடுக்கவே தன் கட்சித் தலைவர் பதவியை ராஜீனாமா செய்வதாக சரத்பவார் நாடகமாடினார். சர்த்பவாரின் நாடகத்தை புரிந்து கொண்ட அஜித்பவார் சாதுரியமாக காய் நகர்த்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரிபாதி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக அணிக்கு தாவியுள்ளார். தற்போது கட்சிக்கே உரிமை கொண்டாடுகிறார். சரத்பவாருக்கு வயதாகிவிட்டபடியால், இனி அவரால் ‘ஆக்டிவ் பாலிடிக்ஸ்’ பண்ண முடியாது. அவர் மகள் சுப்ரியா சுலேவுக்கு திறமை போதாது. கட்சியின் அடுத்தகட்ட தலைவர்களை ஒழுங்காக வளர்த்தெடுக்கவில்லை. எனவே, மீண்டும் தன் கட்சியை மீட்டெடுப்பது சரத்பவாருக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
பாஜகவும் சிவசேனாவும் 25 ஆண்டுகால அரசியல் கூட்டாளிகள்! இரு கட்சிகளுமே இந்துத்துவ சித்தாந்தத்தில் ஒத்திசைவுள்ள கட்சிகள். அந்த வகையில் கொள்கை ரீதியான தோழமையாகவே இது கருதப்பட்டது. ஆனால், எவ்வளவு தான் ஒத்த கருத்தும், தோழமையும் இருந்தாலும் கூட, தன்னைத் தவிர யாரும் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என நினைக்கும் பாஜக சிறுகச் சிறுக சிவசேனாவை சிதைத்து வந்தது! துவக்க காலத்தில் மகாராஷ்டிரத்தில் பாஜக காலூன்ற மண்ணின் மைந்தர் கட்சியான சிவசேனா தான் உதவியது! சிவசேனாவின் பக்கபலத்துடன் தான் பாஜக தன்னை மெல்ல, மெல்ல விரிவுபடுத்திக் கொண்டது! இப்படி நெருக்கமான உறவை பேணிய காலத்தில் தான் சிவசேனையின் பலம், பலவீனத்தை நன்கு புரிந்து கொண்டது பாஜக.
சிவசேனா என்பது பால்தாக்கரேவின் குடும்ப கட்சி! பால்தாக்கரேயின் செல்வாக்கு அவரது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. அப்பாவின் செல்வாக்கால் ஏதோ ஒரளவு தாக்குபிடித்த உத்தவ் தாக்கரேவின் குறைந்தபட்ச செல்வாக்கு கூட, அவரது மகன் ஆதித்திய தாக்கரேவுக்கு இல்லை. இதனால், கட்சியில் பல்லாண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், அதிகாரத்தோடு வளைய வர முடியாது. தாக்கரே குடும்பத்திற்கு ராஜவிசுவாசம் காட்டியே பிழைப்பு நடத்த வேண்டும் என்பது கட்சியின் சீனியர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியது!

இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு அவர் உடல் நலிவுற்றார். இந்தச் சூழலில் தனக்கு அடுத்து கட்சியில் துடிப்புடன் செயல்பட்ட ஏக்நாத் ஷிண்டேவுக்கு முக்கியத்துவம் தராமல், தன் மகன் ஆதித்திய தாக்கரேவை அதிகார மையமாக அடையாளம் காட்டினார். எந்த அனுபவமும் இல்லாத மகனுக்கு சுற்றுச் சூழல் அமைச்சர் பொறுப்பு தந்தார்! இதனால் கட்சி சீனியர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை அவர் ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை! இந்தச் சூழல் தான் பாஜக ஆள்தூக்கி அரசியலை சிவசேனாவிற்குள் நடத்துவதற்கு தோதானது!

ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக 40 சட்டமன்ற உறுப்பினர்களை ‘கரெக்ட்’ பண்ணியதைக் கூட அறிய முடியாத ஒரு அசட்டை தலைமையாக உத்தவ் தாக்கரே இருந்துள்ளார். ஏனென்றால், அவர் இயற்கையாக உருவான தலைவரல்ல. வாரிசு அரசியல் மூலம் தலைமைக்கு வந்தவர். ஏக்நாத் ஷிண்டேவை ”துரோகி” என்றும், ”முதுகில் குத்திவன்” என்றும் ஆதித்திய தாக்கரே வசைமாறிப் பொழிந்த போது, ஏக்நாத் ஷிண்டே சொன்னது இது தான்;
”கட்சியின் புதிய அதிபதி பிறக்காததற்கு முன்பே மகாராஷ்டிராவின் பட்டிதொட்டி எங்கும் கட்சிக் கொடியை சுமந்து சென்று இயக்கத்தை கட்டியவர்கள் நாங்கள்! தொட்டிலில் குழந்தையாக கைசூப்பிய காலத்தில் இருந்து நாங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை தன் தகுதிக்கு மீறிப் பேசுகிறது’’ என்றார்! இன்றைக்கு அதிகாரத்தில் கோலோச்சும் ஏக்நாத் ஷிண்டே, ”சிவசேனா ஒன்றும் பால்தாக்கரே குடும்பத்தின் சொத்தல்ல. நாங்களே உண்மையான பால்தாக்கரேவின் வாரிசுகள்” என்கிறார்!
ஆம் ஆத்மி கட்சியில் மணிஸ் சிசோடியாவை ஆசை காட்டி பார்த்தது பாஜக. அவர் இணங்கவில்லை. சிறைக்கு அனுப்பியும் பார்த்தனர். அவர் சித்தம் குலையவில்லை. காரணம், கொள்கை பூர்வமாக ஆம் ஆத்மியை கட்டமைத்ததில் மணீஸ் சிசோடியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கொள்கை சார்ந்து நடத்தப்படும் கட்சியில் முன்னிலைக்கு வரும் தலைவர்கள் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்வதில்லை.
Also read
2024 தேர்தல் வரை தான் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருக்கு அரியணை தந்து அழகு பார்க்கும் பாஜக! 2024 சட்டமன்ற தேர்தலில் இவர்களுடன் கூட்டணி கண்டு தனி பெரும்பான்மை பெறவே திட்டமிடும். பெரும்பான்மை பெற்றுவிட்டால் கறிவேப்பிலை போல. இவர்கள் இருவரையும் தூக்கி எறிந்துவிடும். இனி, ஏக்நாத் ஷிண்டேவிற்கும், அஜித்பவாருக்கும் பிரகாசமான எதிர்காலம் இல்லை என்பது மட்டும் உறுதி. அதே சமயம் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் பலவீனத்தைக் கடந்து பலம் பெறுமா என்பதற்கும் உத்திரவாதமில்லை. சுதாரித்துக் கொண்டால், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மீண்டும் புத்துணர்ச்சி பெற வாய்ப்புண்டு.
நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் உள்ள கடைந்தெடுத்த குற்றவாளிகளையும், ஊழல்வாதிகளையும் பட்டியல் போட்டு வைத்து, சமயம் பார்த்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை காட்டி மிரட்டி பணியவைத்து, தன் கட்சிக்குள்ளோ அல்லது அணியிலோ இணைத்து ஆதாய அரசியல் செய்கிறது பாஜக. இந்த கேவலமான அரசியல் நாட்டில் ஜனநாயகத்தையே அழித்துவிடும்.
பாஜக என்ற ஆக்டோபஸ் மிருகத்தை எதிர்க்க, ஊழலில் திளைக்கும், ஆன்ம பலமற்ற அற்பமான குடும்ப கட்சிகளால் முடியாது! அது தான் தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் விவகாரத்திலும் வெளிப்பட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள இந்த சம்பவம் உதவட்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
வாரிசு அரசியல் பிரச்சனை, தேர்தல் செலவு பிரச்சனை, கட்சி தாவல் பிரச்சனை, போன்ற அனைத்துக்கும் ஒரே தீர்வு பெண்கள் கட்சி – ஆண்கள் கட்சி மட்டும் கொண்ட இரட்டைக் கட்சி அரசியல் அமைப்பு முறை.
இதுவே காலத்தின் கட்டாயம். இந்த இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறையை பற்றி விவாதமும் கருத்துக்கணிப்போம் செய்யுங்கள். ப்ளீஸ்.