சமூகநீதிக்கான கட்சியிலேயே ஏற்றத் தாழ்வுகள் கோலோச்சுவதை பேச முயற்சிக்கிறது மாமன்னன். நோக்கம் மிகவும் உன்னதமானது. ஆனால், படம் பல இடங்களில் தடுமாறுகிறது! இன்னும் கொஞ்சம் களயதார்த்தை பேசி இருந்தால் கூட, ‘இது திமுகவிற்கு எதிரான படமாகக் கூட பார்க்கப்படலாம்..’ என்ற பதட்டத்துடனே படம் எடுக்கப்பட்டுள்ளதோ..?
ரிசர்வ் தொகுதியில் எம்.எல்.ஏவாக வாய்ப்பு பெற்ற மாமன்னன் அதே தொகுதியில் உள்ள மேல்சாதியினர் முன்பு சமமாக உட்கார்ந்து பேச முடியாதவராக இருக்கிறார். இதைக் கண்டு வெகுண்டு எழும் மகன் கதாபாத்திரமாக உதயநிதி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகன் வடிவேலு. ஒரு நிதானமுள்ள அரசியல்வாதியாகவும், பொறுப்புள்ள அப்பாவாகவும் வடிவேலு மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்! அவரும், அவர் மனைவியும் தங்கள் வீட்டிற்கு வருபவர்களிடம் எப்படி அன்புடனும், மரியாதை தந்தும் நடந்து கொள்கின்றனர் என்பதெல்லாம் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் மக்கள் பிரதிநிதியான வடிவேலுவின் அரசியல் பங்களிப்பும், அதன் வழி மக்களிடம் அவர் பெற்ற செல்வாக்கும் சொல்லப்பட்டிருந்தால் அந்த கதாபாத்திரம் இன்னும் சரியான வடிவம் பெற்று இருப்பதோடு, ஒரு முழுமையான அரசியல் படமாகி இருக்கும்.
சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக பகத்பாஸில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால், ஒருவரை சாதிவெறியர் எனக் காண்பிப்பதற்காக அவர் நாயை அடித்துக் கொள்வது போன்ற கொடூரக் காட்சிகளை வைக்க வேண்டுமா..என்ன?
அரசியல் கட்சிகளில் இன்றும் கூட பட்டியலின எம்.எல்.ஏக்களோ, கவுன்சிலர்களோ களத்தில் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு வரும் அவலத்தை சொல்ல வருகிற திரைக்கதையில் அனாவசியமாக இத்தனை வன்முறை காட்சிகள் நுழைக்கப்படுவானேன்?
ஒரு சமூக அவலத்தை பொறுப்புடன் சொல்ல வரும் படத்தில் செயற்கையான சினிமாத் தனங்கள், தேவைக்கும் அதிகமான அடிதடிக் காட்சிகள், ரத்தக்களரிகள்..உள்ளன! படத்தின் நல்ல அம்சமாக சொல்ல வேண்டும் என்றால், அனாவசியமான காதல் பாடல் காட்சிகளோ, விரசமான பாலியல் காட்சிகளோ, வசனங்களோ இல்லை. படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் கூட, காதலில் உருகாமல் ஒரு புரட்சிகரமான பெண்ணாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நிச்சயம் பாராட்டலாம்.
வசனங்கள் பல இடங்களில் ‘நச்’சென உள்ளது!
குறிப்பாக வடிவேலு பேசுகிற வசனங்கள்;
”இங்க பாதிக்கப்பட்டாலும் கூட ஆதங்கப்படுறதுக்குக்கூட ஒரு தகுதி வேணும் போல”
”நான் இத்தனை வருஷமா எனக்கு கிடைச்சது எனக்கான உரிமைன்னு நினைக்காம, எனக்கு அவங்க போட்ட பிச்சைன்னு நினைச்சது தான் ரொம்ப தப்பு…”
இதே போல சாதி ஆணவத்தை காட்டும் அரசியல்வாதியாக பகத்பாஸில் பேசும் வசனம் மறக்க முடியாதது.
“இவர இங்க நிக்க வச்சு இருக்குறது என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்”
உதயநிதி சண்டை பயிற்சி சொல்லித் தரும் இடத்தில் ஒரு மாணவன் தன் மீது மற்றொரு மாணவன் ஸ்பரிசம் பட்ட காரணத்தால், அவன் ‘சாரி’ சொல்லியும் அடித்து நொறுக்கியுள்ளான். அந்த இடத்தில் ஆசிரியரிடம் மாணவன் புகார் சொல்லும் போது, ”ஓ அவ்வளவு பெரிய ஆளாயிட்டானா அவன்?” என உதயநிதி கேட்பது பொருத்தமில்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவனைக் கூப்பிட்டு கடுமையாக கண்டிப்பதைவிடுத்து, அடிபட்டவனை உசுப்பிவிட்டு, மேலும் அடிவாங்க வைத்து, அரசியல் வசனம் பேசுகிறார்;
“ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்.”
பேசும் வசனம் சிறப்பாக இருக்கலாம். ஆனால், அந்த இடத்திற்கு தேவையில்லாதது.
வடிவேலு வீட்டில் இருக்கும் புத்தர் சிலை. அம்பேத்கர் படம், கட்சித் தலைவர் அலுவலத்தில் இருக்கும் பெரியார் சிலை போன்ற குறியீடுகள் படம் சமகால அரசியலை பேச வந்ததன் சாட்சி என்றால், அரசியல் என்றாலே ரவுடித்தனம், வெட்டு, குத்து அடியாட்கள் புடை சூழ வரும் வில்லத்தனம் போன்ற படிமங்கள் இயக்குனரின் அரசியல் குறித்தான சிறுபிள்ளைத்தனமான புரிதலையே காட்டுகின்றன. இந்தப் படத்தில் இன்னும் காத்திரமாக காட்டவும், சொல்லவும் எவ்வளவோ நிறைய விசயங்கள் இருக்கும் போது, படத்தின் அதிக நேரத்தை இந்த வன்முறை காட்சிகளே எடுத்துக் கொள்கின்றன.
தன் சொந்த ஜாதியில் உள்ள முக்கியமான சாதி சங்கத் தலைவரையே பகிரங்கமாக ரத்தம் வர அடித்து கொல்கிறான் வில்லன். அந்தக் கொலையை மறைக்க அவன் எதையும் செய்ததாகவும் தெரியவில்லை. அது சொந்த சாதியில் கொந்தளிப்பை உருவாக்கவில்லை. சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாகவில்லை. இதை எப்படி புரிந்து கொள்வது?
அடுத்ததாக தேர்தல் களத்தை காட்டும் விதமும் படு அபத்தம். ஒரே ஒரு வீடியோ. அதுவும் சுமாரான உரை. அதுவே வடிவேலுவுக்கு வெற்றியை பெற்றுத் தந்துவிடுகிறதாம். சமூக வலைத் தளங்களாண பேஸ்புக், வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் போன்றவற்றை இன்றைய இளைஞர்கள் எப்படி அரசியலில் வைரலாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதைக் கூட அறியாதவரா மாரி செல்வராஜ்?
ஒரு நிகழ்கால அரசியலை பேச முயற்சிக்கிறார் மாரி செல்வராஜ். ஆனால், அதை சுதந்திரமாகவோ, காத்திரமாகவோ சொல்ல முடியாமல், பல இடங்களில் திசைமாறுகிறார், தடுமாறுகிறார். இதற்கு முக்கிய காரணம், ‘உதயநிதியை கதாநாயகனாக நடிக்க வைத்ததும், அவர் தயாரிப்பில் இந்தப் படத்தை எடுக்க நேர்ந்ததும் தான்’ எனத் தோன்றுகிறது. ‘நிகழ்கால அரசியலில் ஆளும் கட்சியின் அமைச்சராக உள்ள ஒருவரின் படமாக இது பார்க்கப்படும்’ என்பதாலேயே பல இடங்களில் மாரி செல்வராஜ் அடக்கி வாசித்துள்ளார். வடிவேலுவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதற்கும், ‘உதயநிதியை விட வடிவேலு அதிகமாக பேசப்பட்டுவிடக் கூடாது’ என்ற எச்சரிக்கை உணர்வாலும் கூட இருக்கலாம்.
Also read
நிகழ்கால அரசியலை பேசும் போது, அது இன்றைய ஆளும் கட்சியின் இயலாமைகளான வேங்கை வயல் சம்பவம், கள்ளக் குறிச்சி சம்பவம் ஆகியவற்றை மக்களுக்கு நினைவுபடுத்திவிடக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டிய கட்டாயமெல்லாம் வந்து விடுகிறதல்லவா? கைகளைக் கட்டிக் கொண்டு, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டவனைப் போல செயல்பட்டிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். எனினும், ‘சமூக ஏற்றத் தாழ்வுகளை கேள்விக்கு உள்ளாக்கும் படம்’ என்ற விதத்தில் இது போன்ற படங்களை வரவேற்பது நமது கடமையாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மிக சரியான விமர்சனம்
//கைகளைக் கட்டிக் கொண்டு, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டவனைப் போல செயல்பட்டிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். எனினும், ‘சமூக ஏற்றத் தாழ்வுகளை கேள்விக்கு உள்ளாக்கும் படம்’ என்ற விதத்தில் இது போன்ற படங்களை வரவேற்பது நமது கடமையாகும்.//