மீனவர்களும், அரசியல் பிரதிநிதித்துவமும் – லிங்கன்

- பீட்டர் துரைராஜ்

லிங்கன் பாசாங்குத்தனமற்றவர். சதாகாலமும் பொதுத் தளத்தில் இயங்கியவர். மீனவ சமுதாய முன்னேற்றம், சிங்கார வேலர் சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். மீனவ சமுதாயத்தின் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்றை ஆவணப்படுத்தியவர். அவர் எழுதிய மீனவர்களும், அரசியல் பிரதி நிதித்துவமும் நூல் முக்கியத்துவம் வாய்ந்தது..

வழக்கறிஞரான லிங்கன் பாஸ்டின், கடந்த மாதம் ( ஜீன் -9)  அன்று மாரடைப்பால் இறந்தார். குமரி மாவட்டத்தைச் சார்ந்த இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் இருந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாவட்ட கட்சி அலுவலகமான பகத் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், வழக்கறிஞர்களும், மீனவர் இயக்கங்களும், அரசு சாரா அமைப்பைச் சார்ந்தவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது ஊருக்கு உடல் குமரி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறப்பிற்குப் பிறகுதான்,  இத்தனை பேரின் அன்பிற்கு லிங்கன் பாஸ்டின் ஆளாகி இருந்தார் என்பது பலருக்குத்  தெரியவந்தது.

பல ஊர்களில் பல்வேறு அமைப்பினர், இன்னமும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 50 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. அவர் திருவல்லிக்கேணியில் , தனது அறையில் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தையும், அவரது தந்தை அம்பத்தூரில் இருக்கும் நியூ செஞ்சுரி நிறுவனத்தின் சிங்கார வேலர் நினைவு நூலகத்திற்கு  வழங்குவதாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,  அவருக்காக நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பழகுவதற்கு இனிமையானவர். உலகமயமாக்கலுக்கு எதிராக, 2003 ல் இலயோலா கல்லூரியில் நடந்த, உலக சமூக மாமன்ற மாநாட்டிற்காக கடுமையாக உழைத்தார். ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்று அழைக்கப்படுகிற சிங்காரவேலரின்  சிந்தனைகளை பரப்புவதை ஒரு இயக்கமாக செய்துவந்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மீன்வளக் கொள்கையை எதிர்த்து வந்தார்.  ‘கடற்கரையை தனியாருக்கு கொடுத்துவிட்டு,  மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளை அரசுகள் மேற்கொள்ளுகின்றன’ என்றார். ‘விவசாயிகளுக்கு எல்லா அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆதரவு கொடுப்பது போல, மீனவர் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில்லையே’ என்று பார்க்கும்போதெல்லாம் கூறுவார். அறம் இதழில் மீனவர் பிரச்சினை குறித்த  கட்டுரை  எழுதியிருக்கிறார். ‘மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்’ என்ற சிறு நூலை 2021 ஆம் ஆண்டு வெளிக் கொண்டு வந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நான்கு கட்டுரைகள் கொண்ட அந்த நூலில் இருந்து எடுக்கப்பட்ட சில வரிகளை வாசகர்களுக்குத் தருகிறோம்:

#  ராயபுரத்தில் இருந்து பாண்டிச்சேரி இடையே உள்ள மீனவக் குப்பங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களே கிடையாது.

#  ஒக்கிப் பேரிடரின் போது 227 உயிர்களை பறிகொடுத்தார்கள். அந்த இழப்பின் வலிபற்றி தமிழக சட்டமன்றத்தில் சின்ன விவாதம் கூட நடைபெறவில்லை.

#  கடலில் சென்று காணாமல் போகும் மீனவர்களை 7  ஆண்டுகளுக்கு பின்தான் இறந்தவர்களாக அரசு அறிவிக்கிறது. கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்கள்,  திரும்பி வராததால்,  அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்து போயிருக்கிறார்களா என்று தெரியாததால், கடலோரங்களில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

#  மண்டல் ஆணையத்தின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது. நடைமுறையில் பழங்குடியினருக்கான அனைத்து உட்கூறுகளும் மீனவர்களிடம் இருக்கிறது.

# மீனவர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஒக்கிப் புயல் பேரிடரைக் கூறமுடியும். ஒக்கிப் பேரிடர் நிகழ்ந்த பிறகு தமிழகம் முழுவதும் மீனவர்களிடையே  பெரும் எழுச்சியும் மாற்றமும் அதிகார அரசியலில் பங்கெடுக்கும் ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது.

# சுதந்திரத்திற்குப் பிந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருமுறை கூட மீனவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை.

# முத்துக் குளித்தலை  மீனவ நகரமான தூத்துக்குடியில் 1952 – ஆம் ஆண்டுக்கு பிறகு இன்றுவரை மீனவ சமூகத்தைச் சார்ந்த ஒருவரைக் கூட  சட்டமன்றத்  தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படவில்லை

# இந்தியாவில் மீன்பிடித்தொழில் மூலமாக அந்நிய செலவாணி மத்திய அரசுக்கு 60,000 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 4000 கோடி ரூபாயும் வருமானமும் கிடைக்கிறது. மீனவர்கள் ஈட்டித்தரும் அந்நிய செலவாணி மூலம் கிடைக்கிற வருவாயில் முக்கால் பங்கை அரசு எடுத்துக்கொள்கிறது. கால் பங்குதான் அரசின் வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

#  மீனவர்கள் மத்தியில் கூலி கிடையாது. இங்கு கூலி முறைக்கு பதிலாக பாரம்பரிய பங்குமுறை அமலில் உள்ளது. கடலில் மீன் பிடிக்க சென்று வந்த பிறகு செலவு போக மீதியை தங்களுக்கான பங்காக பிரித்துக் கொள்கிறார்கள். இந்த பங்கு முறை என்பது, நீயும் நானும் சமம் என்ற மனநிலையை உருவாக்குகிறது. இதனால், மீனவ சமூகம் சுய மரியாதையை  இயல்பாகவே தன்னகத்தே கொண்டுள்ளது. சுயமரியாதைக்கு தீங்கு ஏற்படுமானால் மிக மோசமாக எதிர்வினை ஆற்றுவார்கள்.

# வங்கிகளில் கடனுக்கு அடமானமாக கொடுப்பதற்கு நில பத்திரங்கள் கிடையாது. எந்த வங்கியும் படகுகளையும், வலைகளையும் அடமானமாக ஏற்றுக்கொள்வதில்லை. மீனவர்கள் வாழ்க்கை கடலிலும், கரையிலும் நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியது.

# கடல்காற்றின் வகைகள், கடல் வகைகள், கடலின் திசைகள், கடல் தண்ணீர் வகைகள், கடல் அலைகளின் தன்மைகள், கடல் வெள்ளிகள், கடலில் மீன் பிடிக்கும் இடங்கள், கடலில் வாழும் மீன் வகைகள் ஆகியவற்றைப் பற்றித் தம் வாழ்வியலில் பெற்ற அனுபவங்களைச் செழுமைப்படுத்தி ஏராளமான பாரம்பரியமான அறிவைப் பெற்றனர்.

# எல்லை மீறி மீன் பிடித்த வகையில், பகை நாடாக கருதப்படும் பாகிஸ்தான் ஒரு இந்திய மீனவர்களைக் கூட சுட்டுக் கொல்லவில்லை.

# சுதந்திரத்திற்கு பிறகு இது வரை நடைபெற்றுள்ள நடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஒரே மீனவர் தான் ( ஜெயவர்தன்) எம்.பியாக வந்துள்ளார்.

# தமிழகத்தில் குறைந்தது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலாவது மீனவர்களை வேட்பாளராக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.  நாடாளுமன்றத் தொகுதிகளில் மீனவர்களுக்கு குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும்.

கட்டுரையாக்கம்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time