‘நேர்மைக்கு அழிவில்லை’ என நம்பிக்கையூட்டுகிறது பம்பர். இது வரை சொல்லப்படாத கதை ஒன்றை தேர்வு செய்து, பெரிய நடிகர், நடிகை பட்டாளமின்றி, பெண்ணின் உடலை காசாக்கும் விரசக் காட்சிகள் இன்றி, ‘மானுட வாழ்வில் நேர்மறையான சிந்தனை அற்புதமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்’ என சொல்கிறது படம்.
தூத்துக்குடியை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் திருநெல்வேலி வட்டார வழக்கில் படம் முழுக்க சுகமான தமிழை சுவைக்க முடிகிறது!
வறுமையில் வாடும் போது சென்று பார்த்தாலும் சீண்ட மறுக்கும் உறவுகள் செல்வம் வந்ததும் எப்படி தேடி வந்து உறவு கொண்டாடும் என்பது மிக இயல்பாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு லாட்டிரி சீட்டுக்கு பெரிய பரிசு கிடைக்கும் போது, சுற்றி இருக்கும் உறவுகளும் நட்புகளும் அதில் எப்படி பங்கை எதிர்பார்ப்பார்கள்… என்னவெல்லாம் பேசுவார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என மிக யதார்த்தமாக, மிக உயிர்ப்புடன் சொல்லப்பட்டுள்ளது. பணம் வரும் போது எத்தகைய ஆபத்துகள் ஏற்படும் என்பது விறுவிறுப்புடன் சொல்லப்பட்டுள்ளது.
காவல்துறையில் சில அதிகாரிகள் குற்றவாளிகளை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள்..? குற்றவாளிகளை மேலும் குற்றம் செய்யத் தூண்டுகிறார்கள்..என்பதை ஏட்டையாவாக வரும் கதாபாத்திரம் மூலம் அசல்டாக சொல்கிறார்கள். சமூக தளத்தில் இது போன்று உலவும் ஏட்டையாக்களை கவிதா பாரதி தத்ரூபமாக நம் கண் முன் நிறுத்துகிறார்! வில்லத்தனம், நகைச்சுவை, பேராசைகுணம்,வன்மம் என பலவித நவரச பாவங்களை வெளிப்படுத்துகிறார் கவிதா பாரதி!
ரவுடித்தனமான பாத்திரத்தில் பெரிய மெனக்கிடல் இன்றி இயல்பாக துடிப்புடன் நடித்துள்ளார் வெற்றி. திருநெல்வேலி கதைக்களமாக இருந்தாலும், கதாநாயகியை வெள்ளையாகத் தான் காட்டியாக வேண்டுமா..? கருப்பிலோ, மாநிறத்திலோ அழகான பெண்களே இல்லையோ..?
நேர்மையான ஏழை லாட்டிரி வியாபாரியாய், இஸ்லாமிய பெரியவராய் ஹரிஸ்பெரடி சிறப்பாக தன் பங்களிப்பை தந்துள்ளார். ஹீரோவின் நண்பர்களாய் வருபவர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
நேர்மையாக வாழ விரும்பிய முதியவர் இல்லாத கஷ்டங்களை அனுபவிப்பதாக கொஞ்சம் கூடுதலாகவே சொல்லப்படுகிறது. தூத்துகுடி முழுக்க அவரை நடையாக நடக்க வைத்து, அலையவிட்டு அனுதாபத்தை உருவாக்கும் முயற்சி சற்றே நாடகத்தனமாக உள்ளது.
கடவுள் நம்பிக்கையும் நல்ல சகவாசமும் குற்றவாளிகளுக்கு இன்னொரு உலகத்தை திறந்து காட்டுகிறது. ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் முயற்சி வீட்டிலும், சமூகத்திலும் ஒரு மரியாதையை பெற்றுத் தருகிறது.
இளம் வயதில் விதவையான பெண் காய்கறி வியாபாரம் செய்து மகனை வளர்க்கும் நிலையில் தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலையாகி வெட்டு, குத்து, ரவுடித்தனம் என வாழ்கிறான். மகனை நல்வழிப்படுத்த, அவனுக்கு அண்ணன் மகளை கட்டிக் கொடுத்து கால்கட்டு போட்டால் சரியாகும் என நினைக்கும் தாய்க்கு, ‘ரவுடிப் பயலுக்கு பொண்ணு கிடையாது’ என்ற அவமானம் தான் மிஞ்சுகிறது. தாய்மைக்கே உரிய அம்சங்களும், தவிப்பு, அப்பாவித்தனம், உறவுவிட்டுப் போகக் கூடாது என ஏங்கும் ஏக்கம்.. என கலவையாக நடித்துள்ளவர் யார் எனத் தெரியவில்லை சிறப்பாக நடித்துள்ளார்.
Also read
1969 ஆம் ஆண்டு லாட்டிரியில் லட்ச ரூபாய் பரிசு கிடைத்த ஒரு சிறு குழந்தையை மையப்படுத்தி, இந்த சமூகத்தின் பேராசை பற்றி அழகான படம் ஒன்றைத் தந்திருந்தார், இயக்குனர் மாதவன்.
உழைப்பில்லாமல் வரும் செல்வத்திற்கு ஆசைப்படக் கூடாது! குறிப்பாக அடுத்தவர் பணத்தில் துளியும் ஆசை கூடாது. சுயநலத்தை துறந்தால் ஆபத்துகள் கூட விலகி, ஒளிமயமான உலகம் தென்படும் என்பதை நேர்மறையான காட்சிப்படுத்தலுடன், நம்பகத் தன்மையுடன் கதையை கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். புதிய இயக்குனர் செல்வகுமார் தமிழ் திரை உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார்.
விமர்சனம்; அஜிதகேச கம்பளன்
பம்ப்பர் விமர்சனம் அருமை.
//திருநெல்வேலி கதைக்களமாக இருந்தாலும், கதாநாயகியை வெள்ளையாகத் தான் காட்டியாக வேண்டுமா..? கருப்பிலோ, மாநிறத்திலோ அழகான பெண்களே இல்லையோ..?//