அதிகார அழுத்தங்கள் தரும் மன உளைச்சல்கள்!

-சாவித்திரி கண்ணன்

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது! அரசாங்க வேலைகள் என்பவை மன உளைச்சல் தரும் வேலையாக மாறி வருகிறது. அதீத பணிச் சுமை, அதிகார அழுத்தங்கள், பணி இடமாறுதல்கள், மேலிட நெருக்குதல்கள்..என அரசுப் பணி என்பது  ஏன் மன நிம்மதியை இழக்க வைக்கிறது..?

விஜயகுமாரின் கடைசி வீடியோ உரை திருவாரூர் மாவட்டத்தை பிரிய மனமில்லாமல் அவர் பிய்த்து கோவை கொண்டு வரப்பட்டுள்ளரோ… என்ற ஐயத்தை ஏற்ப்படுத்துகிறது. ஜனவரி மாதம் தான் கோவை சரகத்தில் அவர் வேலை சேர்ந்துள்ளார். அது முதல் தான் அவருக்கு மன உளைச்சல் எனத் தெரிய வருகிறது. தூக்க மாத்திரை உட்கொண்டு தான் தினமும்  உறங்க வேண்டியவராக இருந்துள்ளார். நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட அவர் சாவுக்கான உண்மையான காரணம் வெளிப்படுமா? அல்லது ஊமையாக்கப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும்.

காவல்துறையை பொறுத்த வரை அது விடுமுறை இல்லாத பணியாகவே உள்ளது. மேலதிகாரி கீழ் நிலையில் உள்ள வரை அடக்கி ஆளும் துறையாகவே உள்ளது. மனித உரிமைகளை பேச முடியாதவர்களாகவே காவல்துறையினர் உழல்கிறார்கள். காவல் துறையில் தற்போதும் கூட, சுமார் 20,000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. காவல்துறை சீர்திருத்தம் குறித்து நீதியரசர் சி.டி.செல்வம் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அதை தூசிதட்டி எடுக்க வேண்டிய தருணத்தை அரசு உணர வேண்டும்.

இன்றைக்கு அரசு பணியில் உள்ள பலர் இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்! மேலதிகாரிகள் தரும் அதிகார அழுத்தங்கள், கூடுதல் பணிச்சுமை, உழைப்பையும், திறமையையும் மதியாத சூழல், தேவையில்லாத பணி இடமாறுதல் போன்றவற்றால் அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் மன உளைச்சலிலேயே உழன்று கொண்டுள்ளனர்.

இத்துடன் தற்போது அரசுத் துறைகளில் சுமார் 30 முதல் 40 சதவிகித பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் கூடுதல் பணிச் சுமையை இருப்பவர்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது! இப்படி தங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களின் வேலை நெருக்கடியை உணராமல் வேலையை உடனே செய்யச் சொல்லி வற்புறுத்தி காலக்கெடு நிர்ணயிப்பதும் நடக்கிறது. இதனால், எட்டு மணி நேரப் பணி 12 மணி நேரமாக அதிகரிக்கிறது! அலுவலகமே கதி என வேலை செய்யும் சூழலில் குடும்பத்தில் பல பிரச்சினைகளுக்கும் இது வழி வகுக்கிறது.

இப்படி கூடுதல் வேலை செய்யும் அப்பாவிகளின் வலியை உணராமல், ‘காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியதில்லை. ..அது தான் வேலை நடக்கிறதே.. பிறகெதற்கு?’ என்ற போக்குள்ளவர்களாக உயர் அதிகாரிகள் மாறிவிடுகிறர்கள்!

அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களின் பணிச் சுமைகள் சொல்லி மாளாது. கட்டுக்கடங்கா எளியோர் கூட்டம் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறது! இந்தக் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் மருத்துவமனைகளையோ, பணி இடங்களையோ அதிகப்படுத்தாத நிலை நிலவுகிறது. பயிற்சி மருத்துவராக பணிக்கு வரும் போதே இளம் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைக்கு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்தச் சூழல் காரணமாக சமீபத்தில் நான்கு இளம் மருத்துவர்கள் அதீதப் பணிச் சுமையால் உயிர் இழந்த விவகாரம் போதுமான கவனம் தராமல் கடக்கப்பட்டுவிட்டது.

தங்கள் சக்திக்கு மீறிய கூடுதல் வேலைகள் செய்யும் போது பல தவறுகள் ஏற்பட வாய்ப்பாகிறது! அதன் வலியை நோயாளிகள் தான் சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. சமீபத்தில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு பச்சிளம் குழந்தையின் கை அகற்றப்பட்டது! இதற்கு ஏதேதோ பல காரணங்களை சொல்லி அரசு சமாளித்தது.

அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை ரொம்ப அதிகமாகவே உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து இறுதியில் போதுமான மாணவர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படுவதும் நடக்கிறது.மேலும் ஆர்சு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத நிர்வாக வேலைகளும் திணிக்கப்படுகிறது. அரசு புதுப் புது திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்கேற்ப மேன்பவர் வேண்டுமே என்ம்பதைப் பற்றி துளியும் யோசிக்க மறுத்து இருப்பவர்களைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்கிறது. இதனால் மாணவர்களுக்கான ஆசிரியர் அங்கு அதிகாரிகளுக்கான ஆசிரியராகிப் போகிறார். இதனால், மாணவர்களின் கல்வி உரிமையே கேள்விக்கு உள்ளாகிறது.

மற்றொரு சமீபத்திய பிரச்சினை ஓய்வு பெறும் வயதைக் கூடுதலாக்கியது. பொதுவாக தற்போது ஐம்பத்தைந்து வயதிலேயே பலருக்கு ஒரு தளர்வு வந்துவிடுகிறது! மாத்திரை, மருந்துகளுடன் தான் அலுவலகம் வருகின்றனர். வயதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு வேலையையும் சரியாக செய்வதில்லை. அதுவும் பள்ளியாக இருந்தால், மாணவர்களுக்கு உற்சாகமாக பாடம் எடுக்க முடியாமல், ”நீங்களாக படிங்க, சந்தேகம் வந்தால் கேளுங்க..” என்று சொல்லி சும்மா அமர்ந்து விடுகின்றனர். பலபேர் அடிக்கடி ‘மெடிகல் லீவ்’ எடுக்கின்றனர். 55 வயதிற்கு மேல் இன்றைய மனிதர்கள் தங்களுக்கு தாங்களே சுமையாகிவிடுகின்றனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 என சரியாகத் தான் இருந்தது. கொரானா காலகட்டத்தில் இந்த ஓய்வு வயதை அதிமுக அரசு ஓய்வூதிய பணம்,செட்டில்மெண்ட் தரமுடியாமல் 59 ஆக மாற்றியது. திமுக அரசோ ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திவிட்டது. இதை மறுபடியும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் ஒன்றேகால் கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

தமிழக அரசை பொறுத்த வரை சமூக நலத்திட்டங்கள் என்ற போர்வையில் ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக எக்கசக்க திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு வருமானத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் இந்த இலவச திட்டங்களுக்கு செலவாகி விடுகிறது. இதனால், தேவையான அடிப்படை வேலைகளுக்கு கூட ஆட்கள் நியமனமின்றி, ஒப்பந்தக் கூலி முறையில் பல வேலைகளை உருவாக்குகிறார்கள். இது மிகவும் தவறாகும். அரசியல்வாதிகளின் அதிகார ஆசைக்கு அரசு நிர்வாக கட்டமைப்பே பலியாகியுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time