கட்சி மாறி, ஓடுகாலி, சந்தர்ப்பவாதி, அதிகார விரும்பி.. இந்த வார்த்தைகள் யாவும் அஜித்பவாருக்கு எப்படி பொருந்துமோ, சரத் பவாருக்கும் முழுமையாகப் பொருந்தும். பாஜகவுடன் கள்ள உறவைப் பேணி வந்த அஜித்பவாருக்கு தொடர்ந்து அதிகாரம் தந்த சரத்பாவாரின் உண்மையான உள் நோக்கம் என்ன..?
பவர் பாலிடிக்ஸுக்காக சரத் பவார் செய்த சாகஸங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் இரண்டு முறை காங்கிரஸுல் இருந்து வெளியேறி புதிய கட்சி கண்டவர். தன்னை வளர்த்துவிட்ட ஆசான் சவானின் முதுகில் குத்தியவர். மகாராஷ்டிராவில் காங்கிரசை பலவீனப்படுத்தி, இந்துத்துவ சக்திகள் காலூன்றக் காரணமானவர். இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கும், படு கேவலமான கிரிக்கெட் சீரழிவிற்கும் பின்புலமானவர் தான் சரத்பவார். அம்பானி, அதானிகளின் மிக நெருங்கிய கூட்டாளியுமாவார்.
தன்னுடைய சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக நான்கு முறை மகாராஷ்டிராவின் முதல்வரான சரத் பவார், எதற்கும் லாயக்கில்லாத, வாய்ச்சவடால் பேர் வழியான அண்ணன் மகன் அஜித்பவாரை மூன்று முறை துணை முதல்வராக்கி அழகு பார்த்தவர் என்பது மட்டுமல்ல, அஜித் பவாருக்கு பாஜகவுடன் கள்ள உறவு இருக்கிறது என்பது பரவலாக பல முறை பத்திரிகைகளால் ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டப்பட்ட போதும், கண்டும் காணாமல் இருந்தவர் தான், சரத்பவார்! காரணம் என்னவாக இருக்க முடியும்?
2019ல் பாஜக-சிவசேனா கூட்டணி முறிகிறது. காங்கிரஸ், என்.சி.பி,சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடப்படுகிறது. அந்தச் சூழலில் இரவோடு இரவாக கட்சி தாவி, அதிகாலை பாஜக அமைச்சரவையில் துணை முதல்வரானதோடு, என்.சி.பியின் எம்.எல்.ஏக்கள் எல்லாம் தன்னையே ஆதரிப்பதாக சொன்னவர் தான் அஜித்பவார். அப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என கட்டளையிட்டது. போதுமான எம்.எல்.ஏக்களை உஷார்படுத்த முடியாததால், அஜித்பவார் மீண்டும் சரத்பவாரிடம் சரண் அடைந்தார்! உடனே, மகனை கட்டித் தழுவி அரவணைத்து, சிவசேனா அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி வாங்கித் தந்து அழகு பார்த்தவர் தான் சரத்பவார்.
ஓடிப்போன துரோகத்திற்கு கிடைத்த பரிசா துணை முதல்வர் பதவி? இது போன்ற துரோகத்தை வேறு யாரேனும் கட்சியின் முன்னோடி செய்திருந்தால், அவருக்கு உடனடியாக இது போல பாவமன்னிப்பு கிடைத்திருக்குமா? ‘தன் குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்ற ஒற்றைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே செயல்பட்ட சரத்பவாருக்கு நியாய, அநியாயங்கள் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது.

உண்மையில் சிவசேனையில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை தூக்குவதற்கு முன்பு அஜித்பவாரிடம் தான் பாஜக பேரம் நடத்திக் கொண்டிருந்தது. அஜித்பவாரால் அப்போது முடியாத காரணத்தால் ஷிண்டே முதல்வர் வாய்ப்பை பெற்றார். இதைக் கண்டு பொறாமைபட்ட அஜித்பவார் அப்போதில் இருந்து அமித்ஷாவிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மகாராஷ்டிர பத்திரிகைகள் எழுதியும், பேசியும் வந்தன. இதனால் தான் சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் அஜித்பவார் மாநில அரசின் மக்கள் விரோத சட்டதிட்டங்களை, ஊழல்களைப் பற்றி வாய் திறக்காமல் ‘ஜால்ஜாப்பு’ செய்தார். அப்போதும் விழித்துக் கொள்ளவில்லை, சரத்பவார்.
மக்கள் நலனுக்கு குரல் கொடுக்க முடியாவிட்டால் அஜித்பவாருக்கு எதற்கு எதிர்கட்சித் தலைவர் பதவி? ஆனால், தன் மகனைத் தவிர்த்து இன்னொரு எதிர்கட்சித் தலைவரை அவரால் தன் கட்சிக்குள் நினைத்து பார்க்கக் கூட முடியவில்லை. ஆக, இந்த குடும்பப் பிணைப்பைக் கடந்து மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க தயாரில்லாதவராகவே தொடர்ந்து இருந்தார், சரத்பவார் என்பதை நாம் கவனத்தில் கொண்டால், அஜித்பவார் அரசியல் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எப்படி எடுத்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நாகலாந்தில் பாஜகவின் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து ஆதரித்த சரத்பவாருக்கு பாஜகவை சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் அருகதை இருக்கிறதா..? நாகலாந்தில் நாகா பழங்குடியினரை நசுக்கி ரத்தத்தை உறிஞ்சிய பாஜகவிற்கு – கொடூர அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட பாஜகவிற்கு – காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்த என்.சி.பி எப்படி ஆதரவை நல்கியது? ஆக, பாஜக எதிர்ப்பு அரசியலில் சந்தர்ப்பவாத நிலைபாடு கொண்டவராக சரத்பவார் இருந்த காரணத்தால் தான், அவரது மகன் அஜித்பவார் கள்ள உறவு கொண்டிருப்பது தெரிய வந்த போதும் கண்டு கொள்ளாதவராகவே இருந்துள்ளார்.

பாஜக தரப்புக்கு செல்வதற்கு முன்பு அஜித்பவார், மிக நீண்ட நேரம் பேசியது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுடன் தான்! இது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ”இது அண்ணன் – தங்கைக்கு இடையிலான உரையாடல்! ஆகவே, எதையும் சொல்ல முடியாது. என் அண்ணன் எங்கிருந்தாலும் என்னால் ஒரு போதும் அவரை எதிர்க்க முடியாது” என்றார் சுப்பிரியா சுலே! இப்படிப்பட்ட சுயநலத்தில் தோய்ந்து எழுந்த ஒரு குடும்பம் தான் மகாராஷ்டிர அரசியலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டுவித்துக் கொண்டுள்ளது.
தற்போது என்.சி.பிக்கு மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மொத்தம் 53 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் அஜித்பவாருக்கு ஆதரவாக 29 பேர் உள்ளதை அவர் நிருபித்துவிட்டார். சரத்பவார் வசம் வெறும் 17 பேர் தான் உள்ளனர்.முடிவு எடுக்க முடியாமல் ஊசலாட்டத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏக்நாத் ஷுண்டேவின் அதிகாரம் தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 11 ந்தேதி முடிந்தவுடன் ஏக்நாத் ஷுண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வே ஒரு முடிவுக்கு வருவார்! அந்த முடிவானது ஏக்நாத் ஷுண்டேயின் பதவி இழப்பாக முடிய வாய்ப்பிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
ஏனென்றால், வெறும் துணை முதல்வர் பதவிக்காக இத்தனை ரிஸ்க் எடுப்பவரல்ல, அஜித்பவார். அவர் ஏற்கனவே நான்கு முறை அதை அனுபவித்து ஐந்தாவது முறையாக தற்போது வாங்கி உள்ளார். ”என் வாழ்வில் நான் ஒரு நாளேனும் மகாராஷ்டிர முதல்வராக அமர்வேன்” என அடிக்கடி சொல்லி வந்த அஜித்பவாரின் ஆசைக்கு முதல்வர் என்ற தீனியை பாஜக தூக்கி தரும் போது, இன்னும் கூடுதல் எம்.எல்.ஏக்கள் அவர் வசம் வருவார்கள். ஏக்நாத் ஷுண்டேவை போல சில மாதங்கள் முதல்வராக பதவியில் இருந்துவிட்டு, அரசியல் அனாதையாகப் போகிறவர் தான் அஜித்பவார்! யார் கண்டது? அப்போது அவரை மீண்டும் சரத்பவார் ஆரத் தழுவி வரவேற்கவும் கூடும்.
Also read
ஆக, பவார் குடும்பத்தின் ‘பவர்’ அரசியலை மகாராஷ்டிரத்தில் முடிவுக்கு கொண்டு வந்து, காங்கிரஸ் எழுச்சி பெற வேண்டிய தருணம் இது. இனி சரத்பவாருக்கோ, அஜித்பவாருக்கோ, சிவசேனாவிற்கோ பாஜக எதிர்ப்பு பேசும் அருகதை இல்லாத நிலையில், காங்கிரஸ் முழு மூச்சுடன் மக்கள் பணி செய்தால், மகாராஷ்டிரத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு எடுக்கலாம். செய்வார்களா…? என்பதற்கு காலம் தான் விடை சொல்லும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
குடும்ப அரசியல்
1980 வரையிலான காங்கிரஸ் தலைகள் பெரும்பாலானவர்கள் பன்னை அடிமை முறையிலான அமைப்பில் இன்பம் கானுபவர்கள்.
அந்த இன்பம் அவர்கள் தொழில் ஆகட்டும் அரசியல் முறையாகட்டும் இரண்டிலும் பண்ணையடிமை யின் மிச்சம் சொச்சமாக தான் 1980/காங்கிரஸ் தலைகள் உண்டு. இதில் விதிவிலக்கானவர்கள் அந்த அந்த மாநிலத்தில் மிகபெரிய செல்வாக்கை அடைந்த வரலாரும் நடைமுறையில் இருக்கிறது.
பண்ணை அமைப்பு முறையில் கட்சியை நடத்தி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய காங்கிரஸ் தலைகளும் தமிழகத்திலும் உண்டு.
எனவே உண்மையான மக்கள் சேவையை மனதில் கொண்டு அரசியலுக்கு வருபவர்கள் அல்ல பண்ணை முறை தலைவர்கள், தன் செல்வாக்கு குறைய கூடாது, தன் சொத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என்பதுதான் இவர்கள் கொள்கை.
இதுதான் பவார் கொள்கையும். ஆக மக்கள் தான் விழிப்பு பெற வேண்டும்.
ராகுல் அவர்களும் இந்த் பண்ணை அமைப்பு முறை தலைவர்களை அடையாள்ம் கண்டு கூட்டணி உட்பட தன் சொந்த கட்சியிலும் களை எடுக்க வேண்டும்.