செந்தில் பாலாஜி விவகாரம் நீர்த்துப் போகுமா..?

-சாவித்திரி கண்ணன்

இந்திய சிறைகளில் 4,27,000 பேர் ஆண்டுக்கணக்கில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். ஆனால், ‘ஒருவருக்கு அதிகாரமும், பணபலமும் இருந்தால், இந்த நாட்டில் எப்பேர்ப்பட்ட குற்றமும் செய்துவிட்டு காவல்துறை, விசாரணை அமைப்புகள், நீதிமன்றம்..  அனைத்திற்கும் போக்கு காட்டலாம்..’என்பது நிருபணமாகி வருகிறது..!

இன்றைக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் கபில்சிபில் தன் வாதங்களை வைத்தார். நாளை அமலாக்கத் துறை சார்பில் துஷார்மேத்தா வாதம் வைக்க உள்ளார். இதற்கிடையே அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தரப்பட்டுள்ளது. ஆக, கடந்த ஒரு மாதமாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜி வழக்கிற்கு பெரும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது….! லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் தேங்கியுள்ள நிலையில், ஒரு செல்வாக்கான குற்றவாளிக்காக நீதிமன்றங்களின் பொன்னான நேரங்கள் எப்படியெல்லாம் விரையமாகின்றன…!

‘அப்பட்டமாக குற்றம் செய்துள்ளார்’ என்பது ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட நிலையில்,

சம்பந்தப்பட்ட நபரும், ”ஆமாம், நான் பணத்தை திருப்பி தந்துட்டேன். பாதிக்கப்பட்டவர் சமாதானம் ஆகிவிட்டார்” என கூறிய நிலையில்,

‘ஒரு அமைச்சர் அரசு வேலைக்கு சட்டவிரோதமாகப் பணம் வாங்கியுள்ளார். அப்படி வாங்கியதை அவரே ஒப்புக் கொண்ட நிலையில் திருப்பி கொடுத்துவிட்டால், வாங்கிய லஞ்சம் நியாயமாகிவிடுமா?’ என லஞ்ச ஒழிப்பு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், ”இந்த கிரிமினல் குற்றம் மன்னிக்க தக்கதல்ல, அவர் மீது முறையாக நடவடிக்கை எடுங்கள்” என ஆணையிட்ட நிலையில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார்.

செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு அவர் சம்பந்தப்பட்ட சுமார் 50 க்கு மேற்பட்ட இடங்களில் சுமார் 10 நாட்கள் ரெய்டு நடந்துள்ளன. அந்த ரெய்டுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் அவரை கைது செய்வதற்கு உகந்த சாட்சியமான நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தான் யதார்த்தம். ஆக, உள்ளங்கை நெல்லிக்கனி போல உண்மைகள் அணிவகுத்து நிற்க.., நீதிமன்றங்களையே நிலை தடுமாற வைக்கும்படி ஆட்டுவிக்கிறார்கள்!

வழக்கறிஞர் கபில்சிபில், நீதிபதி கார்த்திகேயன்

”2014-ல் செய்த குற்றத்திற்கு இப்போது ஏன் தண்டனை?” என்கிறார்கள்! இவ்வளவு ஆண்டுகள் அவரை ஏன் தண்டிக்க முடியாமல் போனது என்பதையும், தற்போதுமே கூட அவரை தண்டிக்க..எத்தனை தடைகள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

‘நள்ளிரவில் கைது செய்த அணுகுமுறை தவறானது’. ‘உறவினர்களிடம் முறைப்படி தகவல் தந்திருக்க வேண்டும்’ என்பதும் நியாயமான ஆதங்கம். ‘பி.எம்.எல்.ஏ சட்டத்தை பாய்ச்சி கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமா..’? என்பது சமூக அக்கறை சார்ந்த கேள்வி. அதே சமயம் ஏதோ அவர் கடத்தப்பட்டுவிட்டதைப் போல ஆட்கொணர்வு மனு போடுவதும், அதை இந்தியாவின் ‘டாப்மோஸ்ட்’ வழக்கறிஞர்களான – ஒரு அமர்வுக்கே முறையே 22 லட்சம், 25 லட்சம் கட்டணம் பெறக் கூடிய முகுல் ரோத்தகி, கபில்சிபல் ஆகியோரைக் கொண்டு வாதாடுவதும், ‘செல்வாக்கு இருந்தால் இங்கு எதுவும் செய்யலாம்’ என்பதற்கான உதாரணங்களேயாகும்.

கைது செய்யப்பட்டவரை நெஞ்சுவலி என்றதால், உயிருக்கு முக்கியத்துவம் தந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர கால சிகிச்சை வழங்கிய நிலையில் – மருத்துவமனைக்கே மாஜிஸ்டிரேட் வந்து நீதிமன்ற காவலுக்கும், விசாரணைக்கும் அனுமதி தந்துவிட்ட நிலையில் – ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் ஏற்று விசாரிப்பதை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. இதைத் தான் இன்றைக்கு மூன்றாவது நீதிபதி கார்த்திகேயனும் கபில்சிபிலிடம் வினவினார். இதற்கான பதிலை சொல்ல முடியாமல், ”இதற்கான பதில் பின்பு தரப்படும்” என்கிறார் கபில்சிபல்!

‘ஒரு செல்வாக்கான நபரை ஒரு விசாரணை அமைப்பு நெருங்கவே முடியாது’ என்பது சட்ட ஆட்சிக்கே விட்ட சவாலாகிவிடாதா..? அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என்றால், கபில்சிபில் சார்ந்துள்ள கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எப்படி கைதானார்? டெல்லி ஆம் ஆத்மியின் துணை முதல்வர் மணீஸ் சிசோடியா எப்படி கைதானார்? மேலும், போதுமான ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக வாதம் வைத்திருப்பது அபத்தமாகும். அவர் மீதான குற்றத்திற்கு அவர் முன்பே தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டியவர்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது மதுபான துறைக்கு அவர் அமைச்சரானது முதல், மதுபான ஆலைகளில் இருந்து சட்டவிரோதமாக மதுவைக் கடத்தி நேரடியாக டாஸ்மாக் பார்களுக்கும், கடைகளுக்கும் தந்துள்ளதையும், அவை 24 மணி நேரம் விற்கப்பட்டதையும் இத்தனை ரெய்டுகளில் அமலாக்கத் துறை மோப்பம் பிடிக்காமல் இருந்திருக்கும் என நம்ப இடமில்லை. என்ன காரணத்தாலோ, தற்போதைய முறைகேடுகள் குறித்து மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது! ஓருவேளை அதற்கான பேரங்கள் இருதரப்பிலும் நடந்திருக்கலாமோ… என்றும் தோன்றுகிறது.

தம்பி அசோக்குமார், அண்ணன் செந்தில் பாலாஜி

செந்தில்பாலாஜியை கைது செய்ய முடிந்த அமலாக்கத் துறையால் அவர் தம்பி அசோக்குமாரை  இன்னும் ஏன் நெருங்க முடியவில்லை..? மூன்று முறை சம்மன் அனுப்பியும் வராத அவரை பிடிக்க போதுமான முனைப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரியவில்லை. இதையெல்லாம் விடக் கொடுமை டாஸ்மாக்கிலேயே மது குடித்த வகையில் இறந்து போன ஆறு எளிய மனித உயிர்கள் தொடர்பாக யாருமே கேள்வி எழுப்பவில்லை. நல்ல சாராயத்திற்கும், கள்ள சாராயத்திற்கும் பெரிதாக வித்தியாசமில்லாத அவல நிலை இந்த ஆட்சிக்கு முன்பு வேறெப்போதும் இருந்ததில்லை.

செந்தில் பாலாஜி கைதும், ஸ்டாலினும்!

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆத்திரம் தரக் கூடிய பல பேச்சுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வந்தார். நீட் உள்ளிட்ட 20 மசோதாக்களை கிடப்பில் போட்டார். பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் அதீத காலதாமதம் செய்தார்! திராவிடச் சித்தாந்தத்திற்கு மாற்றான சனாதானக் கருத்துக்களை தொடர்ந்து பேசினார். இவை அனைத்திற்கும் ஊடகங்களும், கூட்டணிக் கட்சிகளும் தான் கடும் எதிர்வினை ஆற்றி வந்தன. முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்து வந்தார். ஆனால், செந்தில்பாலாஜி விவகாரத்தில் மட்டும் பொங்கி தீர்த்துவிட்டார்..! செந்தில் பாலாஜிக்காக தற்போது தான் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவராக பேசியும், எழுதியும் வருகிறார். ஏதோ இந்த வகையிலாவது நம் முதலமைச்சரிடம் இருந்து ஒரு தன்மான உணர்வு வெளிப்பட்டதே என நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஆளுநர் ரவியை பொறுத்த அளவில், அவர் தற்போதைய திமுக ஆட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்வேன். ஏனென்றால், ஆளுநர் தன் முட்டாள்த்தனமான, எரிச்சலூட்டும் பேச்சுகள் வாயிலாக, திமுக ஆட்சியின் மீதான அதிருப்திகளை தன் பக்கம் திருப்பிக் கொள்கிறார்! ஒட்டுமொத்த தமிழக மக்களையும், ஊடகங்களையும், நடு நிலையாளர்களையும் கூட தவிர்க்க இயலாமல் திமுகவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளுகிறார். ஆளுநருக்கு எதிரான தமிழக மகக்ளின் கோபத்தில் நன்றாகவே ஒரு ஆதாய அரசியலை திமுக அரசு செய்து கொண்டு சுலபமாக தன்னை தற்காத்துக் கொள்கிறது.

மற்றொரு பக்கம் மத்திய பாஜக அரசுக்கு உண்மையிலேயே அதிகாரத்தில் உள்ள குற்றவாளிகளை தண்டிக்கும் விருப்பம் இல்லை. எதிர்கருத்து அரசியல்வாதிகளை அடிபணிய வைக்கவும், அவர்களில் சிலரை உள்வாங்கி விழுங்கவுமே தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது! இதனால், மக்களுக்கு குற்றவாளிகள் மீது ஆத்திரம் வருவதற்கு மாறாக அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. இதனால், பாஜக அரசு குற்றங்களை தட்டிக் கேட்கும் தார்மீகத் தகுதியை முற்றிலும் இழந்து நிற்கிறது.

ஆக, சுற்றிலும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில், ‘யாரை நோக்கி குற்றவாளி’ என கை சுட்டுவது என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.  ”யாரிங்கே யோக்கியன்..?” என கேட்கும் நிலையில் நாடு உள்ளதை தான் இன்றைய அரசியல் போக்குகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time