சாதி நல்லிணக்கத்தை சாத்தியப்படுத்தும் படம்!

- தயாளன்

சாதிப் பகைமைகளை கூர்மைபடுத்தி படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், இரு முரண்பட்ட சாதிகளுக்கு இடையே, சாதியைக் கடந்த நட்பும், நேசமும் சாத்தியமானதே என காட்டுகிறது இப்படம். நட்பு, காதல், அரசியல், சாதி ஆணவம், துரோகம்.. என ஒரு கிரைம் திரில்லரான இந்தப் படம் சொல்ல வரும் செய்தி என்ன?

சாதிப் பிரச்சினைகளில் உழலும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஒன்றான தெக்குப்பட்டியில் வசிக்கும் மூர்க்கசாமியும் (அருள்நிதி), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) ஆத்ம நண்பர்கள். ஒடுக்கப்பட்ட  தனது மக்களை தன்மானத்துடன் வாழப் பாடுகிறார் பூமிநாதன். இதற்கு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரான  நண்பன் மூர்க்கசாமி நிபந்தனையின்றி உதவுகிறார்.  சாதி அரசியலின் அடையாளமாகத் திகழும் அதே ஊரின் அரசியல்வாதி முனியராஜ் இவர்கள் நட்பை பிரிக்கும் சூழ்ச்சியில் வெற்றிபெறுகிறரா? அல்லது நட்பு வென்றதா? என்பதே கதையாகும்.

சாதிய பிரச்சினைகளை பேசும் ராவண கோட்டம், மாமன்னன், வரிசையில் கழுவேத்தி மூர்க்கன் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.  ராவண கோட்டத்தில் சமூக நல்லிணக்கம் என்ற பாவனை இருந்தாலும், உள்ளடக்கமாக சாதிப் பெருமிதமே வெளிப்படுகிறது. ராவண கோட்டத்தின் கதையும் கதைக் களமும் கழுவேத்தி மூர்க்கனுக்கும் அப்படியே பொருந்துகிறது.

கருவேல மரங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த நண்பர்கள், அவர்களை பிரிக்கும் அரசியல் இதுவே இரண்டு படங்களின் கரு. கழுவேத்தி மூர்க்கனில் வெளிப்படும் நல்லிணக்கமும் பொறுப்புணர்வும் அந்த படத்தை தனித்து காட்டுகிறது.

கழுவேத்தி மூர்க்கனின் திரைக் கதையில் ஆங்காங்கே காணப்படும் சுணக்கம் காரணமாக, தான் அடைய வந்த இலக்கை தவற விட்டிருக்கிறது. சாதி பிரச்சினையை கமர்ஷியல் ஆக்‌ஷன் சினிமாவுக்குள் பொருத்த முயலுகிறது படம். இதுவே இந்தப் படத்தின் சிக்கலாகவும் மாறியிருக்கிறது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நன்றாக இருந்தது. குறிப்பாக, மூர்க்கன், பூமி, அவர்களது இணை,  இருவரின் அம்மா, தெலுங்கு பேசும் நாயகி, அந்தோணி பீட்டர் என்ற போலீஸ் இவர்களின் கேரக்டர்களும், நடிகர்களின் தேர்வும் கச்சிதமாக இருந்தது. அருள்நிதி மூர்க்கன் பாத்திரத்தை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார். பூமிநாதனின்  இணையாக வரும் நடிகை,  துரோகம் செய்யும் நண்பனாக வருபவர், பூமியின் அம்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். மிக மோசமான தேர்வு முனிஸ்காந்த். சந்தோஷ் நடித்திருக்கும் பாத்திரம் தமிழ் சினிமாவில்அரிதானது. ஆனால் அவர் கொலையாகி கிடக்கும் போது காட்டப்படும் insert காட்சிகள் முதலிலேயே காட்டப்பட்டிருந்தால் அந்த மரணம் எல்லாரையும் உலுக்கியிருக்கும்.   திடுதிப்பென்று அந்த வருவாய் கோட்டாட்சியர் வந்து பிணத்தின் முன்னால் நின்று கதறி பறை அடிக்கும் காட்சி பார்வையாளர்களை உலுக்கி இருக்க வேண்டும். அந்த உணர்வு கடத்தப்படாததன் காரணம், காட்சிகள் கதையின் நூலிழையாக முன்பே சொருகப்பட்டிருக்க வேண்டும்.

கிளைமாக்ஸிலும் போலிஸ் ஓட்டுநர் திடீரென்று மூர்க்கனை சுடுகிறார். அந்த  ஓட்டுநருக்கும் மூர்க்கனுக்குமான முரணை திடிரென்று ஒரு வசனத்தில் கடத்துகிறார் இயக்குனர். இதற்கு பதில் போலீஸ் ஓட்டுநருக்கும், மூர்க்கனுக்குமான பகைமைக்கான காரணத்தை காட்சியால் விளக்கி இருக்க வேண்டும். இதுபோல மிக நல்ல காட்சிகள் கதையோட்டத்தின் முன்னும் பின்னும் மாறி மாறி வருகின்றன.  நன்றாக நடித்திருக்கும் துஷாரா பாத்திரத்திற்கு கடைசி வரை எந்த நோக்கமும் இல்லை.

இயக்குனர் சை. கெளதமராஜுக்கு பொறுப்புணர்வு இருக்கிறது. அதை பாராட்டியே ஆக வேண்டும். சாதிப் பெருமிதத்தை விட மனித உறவுகளை அதன் விழுமியங்களை முன் நிறுத்துகிறார். படத்தில் சில அபூர்வமான தருணங்கள் இருக்கின்றன.  சாதி வெறியிலும் பதவி வெறியிலும் உழலுகிற தன் தந்தையை கொலை செய்கிறான் மூர்க்கன்.  சாதிப் பெருமிதம் பேசும் அப்பாவை கொலை செய்யும் காட்சியின் மூலம் தன் சாதி குறித்த சுய விமர்சனத்தை இயக்குனர் முன்வைக்கிறார்.

பூமிநாதனின் அம்மா பாத்திரத்திற்கும் மூர்க்கனுக்குமான உறவு சிலிர்ப்பான உணர்வை தருகிறது. மூர்க்கன் தன் மகன் மீது ஆத்திரத்தில் இருப்பது கூட தெரியாமல், “கருவாட்டு குழம்பு வச்சிருக்கேன் சாப்பிட்டு போடா” என்று சொல்கிற தருணம் நுட்பமானது. “என் மகனே சொன்னாலும் நம்ப மாட்டேண்டா”  என்று சொல்லும் காட்சியில் உருக வைக்கிறார் பூமிநாதனின் தாய். சாதிப் பிரச்சினை குறித்து படமெடுப்பதாக சொல்லி இரு தரப்பையும் மேலும் மேலும் வெறுப்புக்கும் பகைமைக்கும் உள்ளாக்காமல் இணக்கத்தையும் மனித மாண்புகளையும் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறார் இயக்குனர்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமாவைப் போல ரத்தம் தெறிக்கின்றன. ஒரே ஆள் பத்து பேரை அடித்து துவைக்கிறார். வணிக சமரசம் என்ற பெயரில் ஹீரோ இமேஜுக்காகவும் செய்யப்பட்டிருக்கும் இந்த காட்சிகள் படத்தின் தரத்தை குறைக்கின்றன.  எடிட்டிங்கில் நிகழ வேண்டிய அற்புதம் தவறவிடப்பட்டிருக்கிறது.  நிறைய காட்சிகள் தாண்டி குதிக்கின்றன.

பாத்திரங்களின் உணர்வு நிலைக்கு பதிலாக கருத்தியலாக துருத்திக் கொண்டிருக்கின்றன உரையாடல்கள்.  ஒடுக்கபட்ட, ஆதிக்க சாதிகளை சார்ந்த இரு நண்பர்களின் கதை என்ற அளவில் ஆர்வமூட்டக் கூடிய கதைக் களம்.  ஆனால், திரைக்கதையாக உருமாறும் போது தடுமாறி நிற்கிறான் கழுவேத்தி மூர்க்கன்.  மூர்க்கனை ஒப்பிடும்போது, ராவண கோட்டம் மிக தட்டையான போலியான படம். மூர்க்கனின் இயக்குனர் சை. கெளதமராஜுக்கு இன்னும் காலம் இருக்கிறது. மெருகேருவார் என்று நம்பலாம். அமேசானில் படம் வெளியாகி இருக்கிறது.

விமர்சனம்; தயாளன்
தொடர்புக்கு  :  [email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time