தேசிய கல்வியை எதிர்க்கும் மக்கள் கல்வி கூட்டியக்கம்!

-சு.உமாமகேஸ்வரி

தமிழ்நாட்டின் முன்னணி கல்வியாளர்கள் ஒன்று கூடி, ‘மக்கள் கல்வி கூட்டியக்கம்’ ஆரம்பித்துள்ளனர். வணிக நோக்கத்திலான தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ் நாட்டிற்கான தனித்துவமான கல்வி கொள்கை உருவாக்கத்தின் முயற்சியில் கிளைத்துள்ள இந்த இயக்கம் சொல்லும் செய்தி என்ன..?

முன்னோட்டம்

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றைப்  பின்னோக்கிப் பார்த்தால் , மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து எதிர்ப்பு தெரிவித்த‌ குரல்களும், அமைப்புகளும் ஏராளம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு தான் கூடுதல் ஒலியுடனும், வலிமையுடனும் எதிர்த்து வந்தது.

இருந்தபோதும்,  அப்போதைய அதிமுக அரசு, புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவில் உள்ள பள்ளிக் கல்வியின் கூறுகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தி வந்தது. அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, மத்திய அரசின் கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வந்த காலம் அது. பிறகு, பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ மத்திய அரசு வெளியிட்டதும் நடந்தது ‌.

இந்த சூழ்நிலையில் 2021ல் தமிழ்நாடு திமுக அரசின் தலைமையில் இயங்க ஆரம்பித்தது. வந்த உடனேயே , ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அனைத்து உட்கூறுகளையும் நடைமுறைப் படுத்த ஆரம்பித்தது தமிழ்நாடு அரசு. பள்ளிக்கல்வி, உயர்கல்வி என்ற பாகுபாடு இல்லாமல் இரண்டு பிரிவுகளிலும் பெரும்பாலானவற்றை தான் நினைத்தவாறு மாநில அரசு நடைமுறைப்படுத்த முனைந்தது.

ஆனால் , தனது தேர்தல் அறிக்கையிலேயே தமிழ்நாட்டுக்கென்று தனிக்கல்விக் கொள்கை கொண்டு வருவோம் என்றும் உறுதி அளித்திருந்தது தற்போதைய மாநில அரசு. கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதையும் உறுதிமொழியாகவே அளித்திருந்தது. ஆனால், ஏறத்தாழ ஒரு வருட ஆட்சி முடிந்தும், இவை பற்றிய முயற்சி எதுவும் எடுக்காமல் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளவற்றைத் திட்டங்களாக நடைமுறைப்படுத்தும் செயலிலேயே முழுக் கவனமும் கொண்டிருந்தது.

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு

இந்த சூழலில் மக்கள் , கல்வி செயற்பாட்டாளர்கள்  மக்கள் மத்தியில் முணுமுணுப்பு உருவானது. ஆகவே, மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கும் பதிமூன்று பேர் அடங்கிய ஒரு குழுவை, முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.

பேராசிரியர் ஜவஹர் நேசன்வெளியேறுதல்

இந்த உயர்மட்டக் குழுவில் பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ அவர்களும் முக்கிய பொறுப்பு வகித்தார்.  இக்குழுவின் தொடர்ச்சியான பணிகள் , கருத்துக் கேட்புக் கூட்டங்கள் என  ஏறக்குறைய ஓராண்டு நிறைவுறும் சமயத்தில் கடந்த மே மாதம் பத்தாம் தேதி அக்குழுவில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன்‌  தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களை மாநிலக் கல்வி கொள்கையாக்கும் நிர்பந்தத்திற்கு உடன்பட மறுத்து  வெளியேறிவிட்டார்.  தற்போது புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தழுவி மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தை தமிழக அரசு மேற்கொள்வதாகவும், ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீடுகளுடன் ஜனநாயகமற்ற முறையில் உயர் மட்டக் குழு இயங்கி வருகிறது என்றும் ஊடகங்களில் அவர் தெரிவித்தார். அவர் வெளியேறிய பிறகு, அரசு அவர் சொன்ன குற்றச்சாட்டு குறித்து எந்த விசாரணையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

அனைவரின் ஆதரவு

தொடர்ச்சியாக பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ பல இடங்களில் உரையாட அழைக்கப்பட்டார். அவரது நேர்காணல்கள் பலவும் ஊடகங்கள் வெளியிட்டன. அவர் , வெளியிலிருந்து இந்த சமூகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தொடர்ந்து இயங்கி வந்தார். சமூகத்தில் பல்வேறு சமூக அமைப்புகளும், கல்விக்கு முக்கியத்துவம் தரும் அமைப்புகளும், தனிநபர்களும் அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

மதுரை கூட்டம்

தன்னெழுச்சியாக இவர்கள் அனைவரும் இணைந்தனர். தமிழ்நாடு உயர் கல்விப் பாதுகாப்பு இயக்கம்  மற்றும் தோழமை அமைப்புகளும் இணைந்து  மதுரையில் மே மாதம் 27 அன்று அரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.பேராசிரியர் முரளி இதை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் நடந்த கூட்டத்தில்!

அதில், பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ சிறப்புரையும், பேராசிரியர் பிரபா கல்வி மணி (மக்கள் கல்வி இயக்கம்) மற்றும் கி.வெங்கட்ராமன் (தமிழ் தேசியப் பேரியக்கம்) தோழர் அபிதா AISA ஆகியோர் கருத்தாளர்களாகவும் செயல்பட்டனர்.

சென்னை நிகழ்வை முடிவு செய்தல்

மதுரையில் வெளியிடப்பட்ட பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ எழுதிய டிராப்ட்டின் மீதான விவாதமும்,  தொடர்ந்து கல்விக்காக இயங்கும் முயற்சிகளை விரிவுபடுத்தவும் பரந்துபட்ட கல்வியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அழைத்து

சென்னையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமை   கல்விக்காக இயங்கும் அனைவரும் கலந்து கொண்ட சந்திப்பு ஏற்பாடானது.

ஜூலை 8

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் சங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடந்தது. இதில் ஏறத்தாழ முப்பது அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முக்கிய கல்வியாளர்கள் மட்டுமின்றி தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், நீதியரசர் பரந்தாமன், விவசாய சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வை பேராசிரியர் முரளி ஒருங்கிணைத்தார்.

நீதியரசர் ஹரி பரந்தாமன் 

நீதியரசர் ஹரி பரந்தாமன் பேசும் போது, ”கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது. பொதுப்பட்டியல்  concurrent list என்ற கோட்பாட்டையே நாம் எடுத்துவிட போராட வேண்டும் என்றார். அதோடு கல்வி குறித்த   முடிவுகளை எடுக்க கல்வியாளர்கள் தான் சிந்திக்க முடியும். அவர்கள் தான் பேசவும் வேண்டும், அதை விடுத்து நீதித்துறையில் இருக்கும் என்னைப் போன்றவர்களால் சரியான வழியில் கல்வியை வழிநடத்த இயலாது” என்றார். இந்த இடத்தில் மாநிலக்கல்விக் கொள்கை குழுவிற்கு தலைவராக ஒரு முன்னாள் நீதியரசரை நமது மாநில அரசு நியமித்துள்ளதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

பேராசிரியர் ஜவஹர் நேசன்

மாநிலக் கல்விக் கொள்கையின் திசைவழி செயல்திட்ட கலந்தாய்வரங்கம் என்ற தலைப்பில் காலை அமர்வில் பேராசிரியர் ஜவஹர் நேசன்‌  அவரது பார்வையில் மாநிலக் கல்விக் கொள்கை குறித்து உரையாற்றினார். ஜனநாயக மாண்பற்ற கல்விக் கொள்கையை இந்த சமூகம் ஏற்காது. வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கக்கூடிய இன்றைய கல்வி  முறைகள் மாற்றம் பெற வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தை நோக்கிய – சாதிப் பாகுபாடுகளைக் களைந்து – மனிதர்களை நேசிக்கும் மாண்புடைய –  கல்வி முறைகளைத் திட்டமிடல் வேண்டும். நம் மக்களுக்கான கல்வியை வழங்கும் ஒரு கொள்கை உருவாக்க வேண்டும். சிந்திக்கும் மனிதர்களை வார்த்தெடுக்கும்  அறிவியல் பூர்வமான கல்வி வேண்டும்.  அடிமைகளை உருவாக்கும் இந்த தேசியக் கல்விக் கொள்கை தேவையில்லை. தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என்ற அனைத்து பிரிவினருள்ளும் போட்டி மனப்பான்மையையும், பிரிவினை வாதத்தையும் உருவாக்கும் போக்குகளை தற்போதைய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கான கல்வியை உருவாக்காமல் ஆட்சியாளர்கள் நினைக்கும் சித்தாந்தங்களை மையப்படுத்தி கல்விக் கொள்கைகள் உருவாக்கி வருகின்றனர். மக்களை ஏமாற்றி இதுதான் கல்வி என்பதாக நம்ப வைக்கின்றனர்.

பாகுபாடுகளைக் களைந்து எல்லோரும்  சிந்தனையுள்ள மனிதர்களாக வாழும் சமுதாயத்தை அமைக்கும் கல்விக்கான கொள்கையை நாம் எழுத வேண்டும். அருகமைப் பள்ளிகள், பொதுப்பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி என்று பள்ளிக்கல்வியின் தேவைகளை கவனத்தில் கோள்ள வேண்டும்.  கல்வி என்பது நம் மண் சார்ந்தும், மரபுகள் சார்ந்தும், பண்பாடுகள் சார்ந்தும் உருவாக்கப்பட வேண்டும்.  வெளியில் இருந்து யாரோ நம் மீது திணிக்க முடியாது. கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கும் கல்வி நமக்கு தேவையில்லை. சனாதனத்தை நிலை நிறுத்தும் கல்வி தேவையில்லை. கல்வி என்பதை மக்களிடம் கண்டறிந்து மெருகேற்றி மீண்டும் மக்களுக்கே தருவதே நம் பணியாக இருக்க வேண்டும். என்றார்.

ஏற்கனவே அவர் ஆங்கிலத்தில் எழுதிய டிராப்ட்டை, தமிழ்நாட்டு மக்களுக்கான தனித்துவமான கல்விக் கொள்கை -இது ஒரு தொடக்கப்புள்ளி என்ற சிறிய புத்தகமாக இக்குழு வெளியிட்டது. அந்த கருத்துகளை ஒட்டிய அவரது  உரையின் மீது சில கேள்விகளை முன்வைத்தனர் பார்வையாளர்கள். அவற்றுக்கு ஏற்புடைய பதில்களை ஜவஹர்நேசன் வழங்கினார். இத்துடன் காலை அமர்வு முடிவுக்கு வந்தது.

மக்கள் கல்வி கூட்டியக்கம்

உணவு இடைவேளைக்குப் பிறகு அனைவரும் இணைந்த உரையாடல் நிகழ்த்தப் பட்டது. அதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர்கள், சமூகத்தின் பிற அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் சமகால கல்விப் பிரச்சனைகளை களத்திலிருந்து முன்வைத்தனர். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் பிரச்சனைகள், தனியார் பள்ளிகள் கல்லூரிகள் கட்டணங்கள் குறித்தான பிரச்சனை, மாணவர் பாதுகாப்பு இல்லாமை, ஆசிரியர் பணிப்பாதுகாப்பற்ற தன்மை , ஒப்பந்த ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள், தேசியக் கல்விக் கொள்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றைப் பற்றி அரசுக்கு எடுத்துக் கூறி சரியான முறையில் கல்வியை வழங்கிட அரசை நிர்பந்தம் செய்யவும், மக்களின் புரிதலுக்கு கல்வி குறித்த பிரச்சனைகளை எடுத்துச் செல்லவும் தரமான ஜனநாயகப்பூர்வ அறிவியல் பார்வை கொண்ட கல்வியை அனைவருக்கும் அரசு வழங்கும் முறையை பின்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளவும் பணியாற்ற ஒரு கூட்டமைப்பு தேவை என்ற அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி அனைவரும் முன்மொழிந்த பெயர் தான் மக்கள் கல்வி கூட்டியக்கம்.

இவ்வமைப்பு  மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் சார்ந்து தொடர்ந்து இயங்கும் என்று முடிவு செய்ததோடு மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கையை முற்றிலும் எதிர்க்கிறது.அதோடு மாநில அரசு நடைமுறைப்படுத்தி வரும் இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், ஃபெல்லோஷிப் நியமனங்கள், EMIS  செயல்முறை போன்றவற்றை நிறுத்தக் கோரியும் அரசுக்கு எடுத்துச் செல்லும்.

கருத்தியல் நோக்கில் பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ அவர்களது கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்தும் நடைமுறையில் செயல்பாட்டு வடிவில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் கொண்ட கல்விச் சூழலை உருவாக்கவும் பணியாற்றும் என்றும் உறுதி எடுத்தது மக்கள் கல்வி கூட்டியக்கம்.

கலந்தாய்வரங்கத்தில் பங்கேற்ற பெண் கல்வி செயற்பாட்டாளர்கள்.

பொறுப்பாளர்கள் மற்றும் செயல்பாடு.

இக்குழுவின் தற்காலிக பொறுப்பாளர்களாக ஐவர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்  இரா.முரளி, பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் சிவக்குமார், கல்வியாளர் கண குறிஞ்சி மற்றும் கல்வி செயற்பாட்டாளர் சு.உமாமகேஸ்வரி ஆகியோர் இக்குழுவின் பொறுப்பாளர்களாக, ஒருங்கிணைப்பாளர்களாக ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயற்குழு

பல அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள் கொண்ட பதினைந்து நபர்கள் அடங்கிய குழு, செயற்குழுவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.வருங்காலத்தில் இது எண்ணிக்கையில் கூடலாம்.

பொதுக்குழு

இதில் மற்ற அனைத்து உறுப்பினர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலத்தில் தொடர்ச்சியாக கல்விக்காக இயங்கும் ஆர்வமுடன் செயல்படும் அனைவரும் இணைக்கப்பட்டு செயல்படுவர்.

மாற்றங்களை நோக்கி

இப்படியாக தமிழகத்தில் மக்கள் கல்வி கூட்டியக்கம் உருவாகி, கல்வித்துறையில் மாற்றங்களை முன்னெடுக்க இயங்க ஆரம்பித்துள்ளதை சமூக மாற்றத்தை நோக்கிய பயணமாகப் பார்க்கலாம்.

கட்டுரையாக்கம்; சு.உமாமகேஸ்வரி

கல்விச் செயற்பாட்டாளர்.

 

மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் தோழமை அமைப்புகள்;

# அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு கிளை

# பல்கலைக் கழக ஆசிரியர்கள் (AUT) அமைப்பு

# ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அமைப்பு (RTWA)

# மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்கள் (MKUPA)

# அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் (AIDSO)

# தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் மதுரை ( TANRECTA),

# மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்பு கூட்டியக்கம் (Save MKU),

# மக்கள் சிவில் உரிமைகள் கழகம் மதுரை(PUCL)

# மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC), மே பதினேழு இயக்கம், # சுயாட்சி இயக்கம் தமிழ்நாடு,

# சோக்கோ அறக்கட்டளை, மதுரை,

# பச்சைத் தமிழகம் கட்சி ,

# இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் (ISSS) மதுரை,

# அகில இந்திய மாணவர் கழகம் மதுரை (AISA),

# புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF),

# அம்பேத்கர் படிப்பு வட்டம் மதுரை,

# கூடு பெண்கள் வாசிப்பு அரங்கம்  மதுரை,

# பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு (CCCE),

# தோழர் கி.வெங்கட்ராமன் தமிழ்தேசிய பேரியக்கம்,

# பேரா பிரபா கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்)

# பேரா ப.சிவகுமார் கல்வியாளர்,

# ஓவியர் டிராட்ஸ்கி மருது,

# பேராசிரியர் மு.ராமசுவாமி நிஜநாடக இயக்கம்,

# பேரா கோச்சடை சிவகங்கை (PUCL),‌

# பேரா ஆர்.கிருஷ்ணமூர்த்தி மூட்டா,

# தோழர் மீ.த.பாண்டியன் தமிழ் தேச மக்கள் முன்னணி,

# பேரா புண்ணியமூர்த்தி (TANUVAS)ஓய்வு,

#  தோழர் பாமயன் தாழாண்மை உழவர் இயக்கம்,

# தோழர் நடராசன் தாழாண்மை உழவர் இயக்கம்,

# தோழர் செந்தில் இளந்தமிழகம் இயக்கம்,

# தோழர் க.அன்பரசு புரட்சிகர மாணவர்  முன்னணி (RSYF),

# தோழர் பெ.முத்துக்குமார் தொழுவம்,

# தோழர் சி.இளஞ்சென்னியன் தமிழ்நாடு  மேய்ச்சல் கூட்டமைப்பு, # தோழர் அரங்க குணசேகரன் தமிழக மக்கள் புரட்சிக் கழகம்,

# சித்த மருத்துவர் விஜய் விக்கிரமன் சித்த மருத்துவப் பேரியக்கம்,

# தோழர் சு.மூர்த்தி, செ.து.சௌந்தர்ராசன் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு,

# பேரா அ.சாம்சன் குணாவிய அறக்கட்டளை,

# தோழர் தமிழ்முதல்வன், ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ கள்ளர் பள்ளிகள் கூட்டமைப்பு,

#  சு.உமாமகேஸ்வரி அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு(A3)

# தோழர் பேட்ரிக் ரெய்மண்ட் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, # தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் (தமிழ்நாடு பாண்டிச்சேரி)

மேற்கூறிய அனைத்து அமைப்புகளும்  இந்த அரங்கக் கூட்டத்திற்கு ஆதரவு தந்த தோழமை அமைப்புகளாகத் திகழ்கின்றன!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time