சாத்தியமாகுமா? சித்தமருத்துவப் பல்கலைக்கழகம்!

-சாவித்திரி கண்ணன்

தமிழ் மக்களின் நெடுநாளைய விருப்பம், பல்லாண்டு கோரிக்கை, சித்த மருத்துவ பல்கலைக் கழகம்! ஆளுநர் மட்டுமா, இதற்கு முட்டுக்கட்டை? எத்தனை எதிர்ப்புகள்..! ஆயுர்வேத கல்விக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு, சித்த மருத்துவத்திற்கு ஏன் தடைகளுக்கு மேல் தடை போடுகிறது..?

சமீபத்தில் சென்னையில் (ஜுலை 12) தமிழகத்தின் புகழ்பெற்ற சித்த மருத்துவர்கள் ‘சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகைக் குழு’ என்ற பேனரில் ஒன்று கூடி, சித்த மருத்துவ பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதில் உள்ள தாமதத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பிரபல சித்த மருத்துவர்கள் பி.மைக்கேல் செயராசு, அன்பு கணபதி, கு.சிவராமன், விஜய் விக்கிரமன், இர.கண்ணன், ப.செல்வ சண்முகம், அல்மா.வேலயுதம், முத்துநாகு, இளங்கோ, அருள் அமுதன், மு.அருண், ஸ்டீபன் சந்திரசேகர், பா.சித்ரா, ச.சண்முகம், சோ.இளங்கோ, ச. நடராசன் போன்றோர்களோடு, தமிழர் படை மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி சி.மகேந்திரன்  ஆகியோரும் ‘தமிழக ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக் கழக சட்டமுன் வரைவில் கையொப்பமிட’ வலியுறுத்தினர். ‘தமிழ்நாட்டு அரசு தடைகளைக் கடந்து சித்த மருத்துவ பல்கலைக் கழகம் உடனே அமைக்க’ வேண்டுகோள் வைத்தனர். உண்மையில் இது சித்த மருத்துவர்களின் விருப்பம் மாத்திரமன்று, ‘தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நெடு நாளைய ஏக்கம்’ என்றும் சொல்லலாம்.

”தமிழர்களின் இயற்கை சார்ந்த அறிவியலான சித்த மருத்துவம் குறித்த பல தவறான புரிதல்கள் இன்றைய அலோபதி மருத்துவர்கள் சிலரிடம் உள்ளது. ஆய்வுகளின் வழியே நிரூபிக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படாத வரை அதன் உன்னதத்தை உலகம் உணராது. ஆகவே, நவீன வழி முறைகளில் ஆய்வுகளை செய்து, அதை மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு சித்த மருத்துவத்தின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும்” என்ற கோரிக்கை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவர்களாலும், பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவம் போன்றவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவ பல்கலைக் கழகம் வேண்டி பத்திரிகையாளர் சந்திப்பு!

நம் தொல் அறிவியலை புதுப்பித்து, நவீன அறிவியல்பூர்வ நிருபணங்களோடு தருவதற்கு சித்த மருத்துவத்தில் பல தீவிர ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த நெடுநாள் இலட்சியம் தாமதமாகிக் கொண்டே போகிறது..!

2021 செப்டம்பரில், ”தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கான மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வேந்தராக ஆளுநரே இருந்து வருவதைப் போல தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழங்களில் ஆளுநர் வேந்தராக இல்லை. அந்த வகையில், ‘புதிதாக தொடங்கப்படும் தமிழ் மண்ணுக்கே உரித்தான சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருப்பார்’ என அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்’ எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஆளுநர் உடன்படவில்லை எனத் தெரிய வருகிறது.

தனியாக பல்கலைக்கழகம் தொடங்க அரசின் நிதி ஒதுக்கீடு தேவை என்ற நிலையில், அதற்கான வரைவு மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாதக்கணக்கில் அந்த மசோதாவை நிலுவையில் வைத்து,  ”இந்த மசோதா, பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. அந்த வகையில் உருவாக்கி மசோதாவை நிறைவேற்றவும்” என   அரசுக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு சார்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், அதையும் சில மாதங்கள் கிடப்பில் வைத்து, மீண்டும் விளக்கம் கேட்க,  மீண்டும் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டும் கவர்னர் ஒப்புதல் தராமல் அமைதி காத்து வருகிறார்.

குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலை வந்தபோது, ‘மாநில முதல்-அமைச்சரே துணை வேந்தர்களை நியமித்து கொள்ளலாம்’ என்று சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டது. அது போன்ற முயற்சி தமிழகத்தில் ஏன் சாத்தியமாகவில்லை?

மத்திய அரசு இந்திய மருத்து முறைகளுக்கு என்று ‘ஆயுஸ்’ என்றொரு அமைச்சகம் அமைத்துள்ளது. அவர்கள் ஆயூர்வேதத்திற்கு தான் அதிமுக்கியத்துவம் தருகிறார்கள்! ஆயுர்வேதத்திற்கென்று உயர்தரத்தில் பல்கலைக்கழகம் 1967  ஆம் ஆண்டிலேயே  குஜராத்தில்  உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த  57 ஆண்டுகளில் பல ஆயுர்வேத உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் மத்திய   அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுஸுக்கு அள்ளித் தரும் மத்திய அரசு சித்த மருத்துவத்திற்கு கிள்ளித் தரவும் கூட மறுக்கிறது!

ஆயுர்வேதத்திற்கு அரியணை! சித்த மருத்துவத்திற்கு சிறை!

ஆனால், சித்த மருத்துவர் விஜய் விக்கிரமன் தொடர்ந்த வழக்கில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டே உத்தரவிட்டும்  அதிமுக  ஆட்சியில் எவ்வளவோ வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் விருப்பமின்மையை புரிந்து கொண்டு, அவர்கள் முயற்சிக்கவேயில்லை. ஆனால், பாஜக அரசின் பாராட்டைப் பெற செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 ஏக்கரில் 50 கோடி ரூபாய் செலவில் International yoga Centre அதிமுக ஆட்சியில் நிறுவியது குறிப்பிடத்தக்கது!

தற்போது தமிழக அரசின் சார்பில் சென்னை அரும்பாக்கம் மற்றும் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் ஒரு சித்த மருத்துவ கல்லூரி பழனி முருகன் கோவில் சார்பில் பழனியில் தொடங்கப்பட இருக்கிறது.தஞ்சை தமிழ் பல்கலையில் சித்த மருத்துவ பிரிவு இயங்குகிறது. அவ்வளவு தான்! ஆனால், நியாயப்படி மாவட்டத்திற்கு ஒரு சித்த மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

சென்னை ரிப்போர்ட்டஸ் கில்டில் நடந்த சித்த மருத்துவ பல்கலைக் கழக வேண்டுகைக் குழுவின் கலந்துரையாடல்!

 

கொரோனோ காலத்தில் சித்த மருத்துவப் பயன்பாட்டின் வழி தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் உடல் நலன் பெற்று நோயை வென்றனர்! சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும், நலன்களையும் உணர்ந்த ஆங்கில வழி மருத்துவர்கள் தாங்களே அதை ரகசியமாக எடுத்துக் கொண்டு பயன்பெற்ற போதிலும், பொதுத் தளத்தில் அதற்கு எதிராகவே பேசுகின்றனர். மருத்துவத்தை வணிக சூதட்டமாக மாற்றிவிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் சில, சித்த மருத்துவ மூலிகளை ஆராய்ச்சி செய்து, அதில் சற்றே ரசாயனக் கூறுகளை உள்ளடக்கி, மாத்திரைகள் தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.

ஆகவே, சித்த மருத்துவ வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பல தரப்பிலும் கண்ணுக்கு தெரியாத தடைகள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் சூதானமாகக் களைந்து, மத்திய அரசை சரிகட்டி, ஆயுஸ் அதிகார மையத்தை ஆசுவாசப்படுத்தி, விரைந்து சித்த மருத்துவ பல்கலைக் கழகம் உருவாக்க, கருமமே கண்ணாக முயன்றால் நிச்சயம் வெற்றி உண்டு. அதை செய்வார்களா? என்பதற்கு காலமே விடை சொல்லும்.

அரிய பல மூலிகைகளின் பொக்கிஷமாகத் திகழும் கொல்லி மலை!

தமிழ்நாட்டில் கொல்லிமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சில இடங்களில் சித்த மருத்துவத்துக்கான அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்து வாழ் மலை, குற்றாலம்.. போன்றவையும் மூலிகைகளுக்கு பேர் போனவைகளாகும். ஆகவே, இவற்றில் ஏதாவது ஓரிடத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப் படுவதோடு அவற்றின் கிளைகள் இந்த மற்ற இடங்களில் இருக்கும்படி அமைத்தல் வேண்டும். அப்படி அமைந்தால் மூலிகைகளை தேடி எடுத்து, ஆய்வுக்கு உட்படுத்த தோதாக இருக்கும் எனவும் சித்த மருத்துவர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்திற்கென சென்னை மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அமைச்சர்.மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ”சித்த மருத்துவ பல்கலைக்கு 25 ஏக்கர் கொஞ்சம் கூட போதுமானதில்லை. பல நூறு ஏக்கர் தேவை…” என சித்த மருத்துவர்கள் சொல்கின்றனர். அமைக்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கு தமிழ்ச் சமூகத்தின் பெண்பால் பேரறிஞரான ஒளவையார், திருமூலர், தேரையர், வள்ளலார்.. ஆகிய பெயர்களில் ஒன்றை வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதும் சித்த மருத்துவர்களின் விருப்பமாக உள்ளது.

மத்திய அரசு சித்த மருத்துவத்தை, ஆயுர்வேதத்திற்குள் நுழைத்து, கரைத்துவிடத் துடிக்கிறது! இன்னும் சொல்வதென்றால், சித்த மருத்துவக் கூறுகளில் பலவற்றை ஆயுர்வேத மருத்துவத்தில் மடைமாற்றம் செய்யும் வேலையும் நடக்கின்றன. சித்த மருத்துவத்தின் தனித் தன்மையையும், உன்னதத்தையும் மத்திய அரசின் அதிகார மையத்திற்கு யாரைக் கொண்டு புரிய வைப்பது என்பதே இன்றைய சிக்கலாக உள்ளது! அந்தந்த மண் சார்ந்த மருத்துவத்தை அதனதன் தன்மையிலேயே அங்கீகரிப்பது தான் ஜனநாயகமும், நாகரீகமுமாகும்.

ஐயா, மத்திய ஆட்சியாளர்களே, எங்களை வாழவிடுங்கள்! அதில் நிச்சயமாக நீங்களும் பயனடைவீர்கள்! நாங்கள் எங்களுக்கானவர்கள் மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்குமானவர்கள்! ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்’ என்ற கோட்பாட்டிற்கு சொந்தக்காரர்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time