நாமே தயாரிக்கலாம், மின்சாரத் தைலம்!

-விஜய் விக்ரமன், MD(siddha)

சுற்றுச் சூழலும், சமூகச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன! தலை வலி, உடல் வலி, மூட்டு வழி, மூச்சுத் திணறல் போன்ற பல வகை பாதிப்புகளுக்குமான அரியதொரு நிவாரணி தான் மின்சாரத் தைலம்! இதை பெரிய செலவில்லாமல் நாமே மிக சுலபமாக தயாரித்துக் கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தில்  உடல் வலியை நீக்கக்கூடிய, மேலே தடவ கூடிய  வெளி பூச்சு மருந்துகள்  நிறைய உள்ளன.

அதில் முக்கியமான தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ,ஜலதோஷம் , ஆஸ்துமா, மூச்சுத் திணறல், தசைப் பிடிப்பு, பல் வலி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய வகையில்   சிறப்பு  மருந்து”ஒன்று” உண்டு.

வெளிப்பூச்சு வலி நிவாரண மருந்துகளின் உலக சந்தை மதிப்பு 2019  -ல் 8, 800 மில்லியன் , 2027 இல் இது 12,500 மில்லியன் எட்ட வாய்ப்பு  உள்ளதாக மருத்துவ  சந்தை கணிப்பு  நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வெளிப்பூச்சு வலி நிவாரண மருந்துகளின் ஒட்டுமொத்த  சந்தை மதிப்பு  ஆண்டுக்கு 4,200 கோடி. [ The Economic Times Sep 26, 2019 ].

இந்தியாவில் 120 கோடி மக்கள் தொகையில்  பெரும்பான்மையாக உழைக்கும் மக்களைக் கொண்டுள்ள நம் நாட்டில்   பெரும்பாலானவர்கள் முதலில் நம்புவது இந்த வலி நிவாரண  வெளிப்பூச்சு மருந்துகளையே,   COVID-19  பெருந் தொற்றுக்குப்  பின் இந்த மருந்துகளின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

நகரங்களிலும், கிராமங்களிலும் உழைக்கும் எளிய மக்களுக்கு  பல காரணங்களால் உடலில் ஏற்படும் வலிக்கு முதல் மருந்தாகவும்,  பொருளாதாரம் உட்பட பல காரணங்களால் சரியான  தீர்வை அடைய  முடியாமல்  உடல் வலியோடு  போராடும் நோயினருக்கு  உதவும்  இறுதி மருந்தாகவும்   இவ்வகையான தைலங்கள்  உள்ளன.

சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல் நாடுகளில் இருந்து வரும் உறவினர்களிடம் முதியோர்களால் விரும்பி கேட்கப்படும் மருந்து, இவ்வகை  தைலங்களே.

அத்தகைய சிங்கப்பூர் தைலத்துக்கு இணையானதும், அதனை விட மேம்பட்ட வகையில் நம்மளால் சுயமாக செய்து  கொள்ள முடியும்.  அத்தகைய மருந்தின் பெயர் ‘ மின்சார தைலம்’.  இத் தைலம் மின்சாரத்தைப் போல் விரைவாக  உடல் வலியின் மீது செயல்படக் கூடியது  என்பதால் சித்த வைத்தியர்களால் ஒரு காரணப் பெயராக சூட்டப்பட்டு  சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மின்சாரத் தைலம் செய்ய தேவையான பொருட்கள்;

புதினா உப்பு (மென்த்தால் ) =    10 கிராம்,

ஓம உப்பு ( தைமால் ) =  10 கிராம்,

பச்சை கற்பூரம் =  10 கிராம்,

இவ்வகை மருந்துகளை  நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.

இந்த மூன்றையும்  சம அளவு  கண்ணாடி பாட்டிலில் போட்டு  முடி நன்றாக  குலுக்கி விட்டு 1 நாள்  இரவு  அப்படியே  வைக்க  மூன்று பொருளும்  ஒன்று சேர்ந்து கரைந்து  மறுநாள் தைலமாக  மாறி இருக்கும்.  இதுவே மின்சாரத் தைலம்.

பயன்படுத்தும் முறை;  வெளி  பிரயோகம்

இந்த தைலம் அதிக காரத் தன்மை கொண்டது.  சிறிதளவே எடுத்து பயன்படுத்த வேண்டும். மூட்டு வலி,  கை, கால், இடுப்பு வலிகள், கழுத்து, தசை பிடிப்பு.. போன்ற பகுதிகளில் ஒன்று, இரண்டு சொட்டுகள் விட்டு  லேசாகத் தேய்க்க  வலி  நீங்கும்.  தலைவலி,  மூக்கடைப்பிற்கு பஞ்சில் விட்டு  நுகரலாம், நீராவி பிடிக்க பயன்படுத்தலாம்.

பல் வலிக்கு  வலி உள்ள இடத்தில் ஒரு சொட்டு மருந்து விட வலி குறையும், ஈரு  வீக்கத்திற்கு   பஞ்சில் விட்டு  அதனை வாயில் பாதிப்புக்கு உள்ளான  ஈரின் மேல்  வைத்து  அடக்கிக் கொள்ள வலி  மறையும். பிறகு வெண்ணீரில் வாய் கொப்பளித்துவிடுங்கள்!

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது தேங்காய் எண்ணெயுடன்  மிகக் குறைந்த சொட்டு  மருந்து கலந்து பயன்படுத்தவும். இது அதிக எரிச்சல் தன்மை உடையது என்பதால் கவனம் தேவை. நெஞ்சு சளி, இருமல்  போன்றவற்றிற்கு மார்பின் மீதும், முதுகிலும்  சூடு பறக்க தேய்த்து விடலாம்.

உள்பிரயோகம்;  அவசர காலத் தேவைக்காக [  emergency medicine]   வீசிங், ஆஸ்துமா, நெஞ்சில் கோழை கட்டுதல்,  போன்றவற்றிற்கு  ஒன்று அல்லது இரண்டு சொட்டு  கால் டம்ளர் வெந்நீரில்  விட்டு பருகலாம்.

தலைவலி பசை[ PAIN BALM ] – 50  கிராம்  உருக்கிய தேன் மெழுகுடன்  குறிப்பிட்ட அளவு தைலத்தை சேர்த்து  கலந்து வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில், சிறிது தேங்காய் எண்ணெயுடன் தலைவலி உள்ள இடத்தில் தடவி லேசாக தேய்த்து விடலாம். புருவத்திற்கு மேற்புறப் பகுதியில் தடவி தேய்த்து விடும் போது கண்களில் படாமல் கவனமாக செய்ய வேண்டும். கண்களை மூடிக் கொள்வது நலம்.

 

தன் பசி போக்க தனக்கான  உணவை தானே சமைத்து கொள்வதற்கு எந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டோ, அதனைக் கேள்வி கேட்பதற்கும், தடுப்பதற்கும்  எவ்வாறு யாருக்கும் அதிகாரம் இல்லையோ,  அதே போல்  அறமற்ற மருத்துவ வணிகம்,  கைவிட்ட உறவினர்கள் போன்ற பல காரணங்களால்  பாதிப்புக்கு உள்ளாகும் நோயினர் தங்களுக்கான மருந்துகளை தாங்களே சுயமாக தேடி செய்து கொள்வதற்கு உரிமை உண்டு.  மற்றும் அதுதான் எதார்த்தமும் கூட. இதை தயாரித்து வீட்டில் வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்சார்பு மருத்துவ அறிவு மீட்போம்!   மருத்துவ வணிக வலை பின்னலிலிருந்து மீள்வோம்.

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன், MD(siddha)

சித்த மருத்துவ செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time