கண்முன் சரியும் உலகின் மாபெரும் ஜனநாயகம்!

- சாக் பெக்கம்

பாஜக அரசின் பாசிசப் போக்குகள் அமெரிக்காவில் நன்கு கவனம் பெற்றுள்ள நிலையில் மோடியை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதாம் அமெரிக்க அரசு! மோடி அமெரிக்கா சென்று போது மோடியின் ஆட்சி பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அலசி எழுதியது பிரபல அமெரிக்க ஊடகம். அதன் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கே;

ஜுன் 22, 2023 அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளித்தார். பிரான்ஸ் மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கு அடுத்து, இப்பெருமையைப் பெறும் மூன்றாவது தலைவர் மோடி.

பருவநிலை மாற்றம், இந்திய,பசிபிக் பகுதியின் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். ஆனால் அவர்களின் விவாதத்தில் விட்டுப்போன இன்றியமையாத ஒரு சொல் ‘ஜனநாயகம்’.

கடந்த 2019 – ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட பின், இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையாத நிறுவனங்களை, மோசமாகத் தாக்கத் தொடங்கினார் மோடி.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறித்தது,

நீதிபதிகளை அரசுக்கு ஆதரவாகப் பேச வைத்தது,

சட்ட அமைப்புகளைத் தனது அரசியல் எதிரிகளின் மீது ஏவியது,

இந்திய ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்தது…

போன்ற பல மோசமான நடவடிக்கைகளை மோடி எடுத்தார்.

ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக அரசு வேகப்படுத்தியது. சமீபகாலமாகச் செய்யப்பட்டவை:

#  எதிர்க் கட்சித் தலைவரான ராகுல் காந்தியை, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

# சுதந்திரமாகச் செயல்பட்டுவந்த ஒரேயொரு ஊடகத்தையும், குயுக்தி நிறைந்த தனது கோடீஸ்வர நண்பரின் மூலமாகத் தன்வயப்படுத்தினார்.

# அரசை விமர்சிக்கும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க, ஓர் அதிகாரபூர்வக் குழுவை உருவாக்கினார்.

#  தன்னை விமர்சித்து ஓர் ஆவணப்படத்தை வெளியிட்ட, பி பி சி நிறுவனத்தின் புதுடெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களை, வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளாக்கினார்.

# அதிகாரத்தில் இருப்பது மோடிக்கு மேலும் வலுவூட்டக் கூடியதாயிற்று. தேர்தல் வெற்றிகள் தந்த பெருமிதத்தின் மூலமாக, தனது விமர்சகர்களையும், எதிர்க்கட்சியினரையும் வாயடைக்கச் செய்துவிட்டது பாஜக.

# எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மாபெரும் சவால். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவதாய் இருக்கிறது அந்த வாக்கு.

# இந்து தேசியவாதம் பேசும் அமைப்பான ஆர் எஸ் எஸின் தேர்தல் கிளை அமைப்புதான் பாஜக. மோடி தனது எட்டாவது வயதிலிருந்து ஆர் எஸ் எஸின்  ஆள். அவரை ‘பாசிசத்தின் இந்திய வடிவம்’ என்கிறார் பிரான்சில் படிக்கும் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலாட் என்கிற இந்திய ஆராய்ச்சி மாணவர்.

# இந்திய ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதலைக் கண்டித்து, மேல்நாடுகள் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் புவிசார் அரசியலின் இன்றியமையாமை கருதி, அவை மௌனமாக இருந்தன. சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த நினைக்கும் வாஷிங்டனின் ரகசியத் திட்டத்தில், புதுடெல்லி இருப்பதில் வியப்பேதுமில்லை.

# அமெரிக்கன் என்டர்ப்ரைஸ் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றும் மூத்த அதிகாரி சதானந்த் துபே கூறுகிறார்: “சீனாவுக்கு எதிரான வலுவான அரசாக இந்தியா இருக்கும். அதுவே, எங்களது தேவை. எங்களது நோக்கத்தைச் செயலாக்கும் திறமை இந்தியர்களிடம் இருக்கிறது.”

இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்கிற குற்றச்சாட்டின் காரணமாக, கடந்த 2005 – ஆம் ஆண்டு, நரேந்திர மோடிக்கு, அமெரிக்காவில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இன்று அவர் வெள்ளை மாளிகையின் விருந்தாளி. அவரது வழிகாட்டலில், ஒரு கொடுங்கோல் ஆட்சியை நோக்கி, 21 – ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அதிகாரம் மிக்க நாடுகளுள் ஒன்றான இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய பின்னடைவைப் புரிந்து கொள்ள ஆர் எஸ் எஸின் வேர்களில் இருந்து உருவான பாஜகவைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது.  ஆர் எஸ் எஸ்  எப்போதும் காந்தியின் இந்திய தேசிய காங்கிரசிற்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால், ஆர் எஸ் ஸோ இந்தியா இந்துக்களின் நாடு ( இந்துத்துவா ) என்கிற தத்துவத்தில் ஊன்றி நிற்பது.

ஆர் எஸ் எஸ் தலைவரான எம் எஸ் கோல்வால்கர் எழுதி, 1939 – இல் வெளியிடப்பட்ட, “We, or our nationhood defined” என்கிற நூலில் இக்கருத்து அப்பட்டமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

“இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டவர் அனைவரும் இந்துக்களுடன் இணையும் பொருட்டு, தங்களது தனிப்பட்ட வாழ்வியலை இழக்க வேண்டும். இங்கே வாழ வேண்டும் என்றால், முழுவதுமாக இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். வேறு எதையும் கோரக்கூடாது. தனிப்பட்ட எந்தச் சலுகைகளும் கொடுக்கப்படமாட்டாது. எளிய குடிமக்களுக்கான உரிமைகள் கூடத் தரப்படமாட்டாது” என அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்நூலை ‘ஆர் எஸ் எஸின் பைபிள்’ என, சமகால அரசியல் பார்வையாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். யூதர்களை, நாசிகள் எப்படி நடத்தினரோ, அதையே தனது மாதிரியாக, கோல்வால்கர் வெளிப்படையாகப் புகழ்கிறார்.

காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட சவர்க்கர்,கோட்ஸே, நாராயண் ஆப்தே. கொடியுடன் இருப்பவர் கோல்வால்கர்

ஆர் எஸ் எஸின் சீடனான நாதுராம் கோட்ஸே, 1948 –  ஆண்டு மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றான். அப்படுகொலை, இந்து தேசம் என்கிற கருத்தியலுக்காகச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அரசு,ஆர் எஸ் எஸை ஓராண்டு தடை செய்தது.

ஆர் எஸ் எஸின் தேர்தல் அமைப்பாக, பாஜக 1980 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அயோத்தியாவிலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பிறகு, அது வளரத் தொடங்கியது.

அப்போதைய இந்திய அரசு, பெரும்பான்மை இந்துக்களின் நலன்களைவிட, சிறுபான்மை இஸ்லாமியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்ததாக பாஜக தலைவர்கள் பேசினார்கள். அதன்மூலம், இந்து தேசம் என்பதன் உணர்வுகளை அவர்கள் தீயிட்டு வளர்த்தனர். 1984 – ஆம் ஆண்டு வெறும் இரண்டு மக்களவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, 1989 – ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 85 இடங்களைப் பெற்றது.

கடந்த 1998 – ஆம் ஆண்டு பிற கட்சிகளின் ஆதரவுடன் அரசமைத்த பாஜக நடுநிலையுடன் ஆட்சி செய்தது. அப்போது இந்தியாவில் 22 அலுவல் மொழிகள், 705 அதிகாரபூர்வ இனக்குழுக்கள், ஆறு பெரிய மதச் சிறுபான்மையினர், இவை போக, இந்திய சாதிய அடுக்குமுறை, மக்களை ஆயிரமாயிரம் வேறுபட்ட குழுக்களாகப் பிரித்திருந்தது. இவ்வாறு ஆழமாகப் பிரிக்கப்பட்ட சமூக அமைப்பில், ஒரு கூட்டாட்சியை நடத்துவது என்பது பல சமரசங்களை உள்ளடக்கியதாகவே இருந்தது.

பாபர் மசூதி இடிப்பு ; அத்வானி, ஜோஷி, உமா பாரதி

அத்தகைய சூழலில், இந்திய அரசு பெரிய மாற்றங்களைச் செய்ய இயலவில்லை. நீதிமன்றங்கள், தனிப்பட்ட முகமை நிறுவனங்கள், சுதந்திரம் பெற்ற ஊடகங்கள் ஆகியவை, சட்டம் மற்றும் தார்மீக எல்லைகளுக்குள் செயல்படுமாறு, அரசை நிர்பந்தித்தன. எனவே, பிடிவாதமான கொள்கைகளை உடைய பாஜக அரசால், இயல்பான இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

ஆனாலும் கோல்வால்கர் கூறிய “இந்து ராஷ்ட்ரம்” என்கிற கருத்தியல், பாஜக – ஆர் எஸ் எஸின் கருத்தியலாகவே இருந்து வந்தது.

பிறரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதன் மூலமாக, இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என பாஜக தலைவர்கள் நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையுடையவர்களின் தலைவரே மோடி.

கடந்த 2002 – ஆம் ஆண்டு, குஜராத்தின் முதல்வராக அவர் இருந்தபோது, இந்து யாத்திரிகர்கள் பயணித்த புகைவண்டி, கோத்ரா என்னும் இடத்தில் தீக்கு இரையாக்கப்பட்டது. அதைச் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என செய்தி பரப்பப்பட்டது. அந்தச் சூழலில் 59 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், உண்மையில் அப்படுகொலையை நடத்தியவர்கள் சிறுபான்மை இஸ்லாமியர்கள் அல்லர். அதை நடத்தியவர்கள் மதக் கலவரத்தில் ஈடுபட்ட இந்துக்களே. ஆனால், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஓர் இந்தியப் புலனாய்வு, இதைத் ‘’தீ விபத்து’’ என்றது. இதைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரத்தில், 2000 – கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. இக் கலவரத்தில் 250 – லிருந்து 350 பேர் வரை, இஸ்லாமியப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர் என்கிறது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று மோடியின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளைச் சூறையாட, கலவரக்காரர்கள் முனைந்தபோது, அவர்களைத் தடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு மோடி உத்தரவிட்டார் என்றும் அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறது.

மத சுதந்திர எல்லையை மீறி, அவர் மிக மோசமாக நடந்துகொண்டார் என்று கருதி, 2005 – ஆம் ஆண்டு, அவருக்கு அமெரிக்க நுழைவுச்சான்று (விசா) மறுக்கப்பட்டது.

இந்தியாவின் மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் வலுவிழக்கச்செய்ய, மோடி இரண்டு உத்திகளைப் பயன்படுத்தினார். ஒன்று, பிரதமர் என்கிற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்துத்துவக் கருத்தியலைப் பரப்பி, அதன்மூலம் மக்களை இந்து – இஸ்லாமியர் என்று பிரித்தது.

இரண்டாவது, அதிகாரத்தைத் தனது கைகளில் வலுப்படுத்திக் கொள்வதன் மூலம், நீதித்துறை, அரசு அமைப்புகள், சுதந்திர ஊடகங்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒன்றுமில்லாதவையாக ஆக்கியது.

எந்த அளவு இந்துமக்கள் அவரது கருத்தியலுக்கு மாறினார்களோ, அந்த அளவு அவர் செல்வாக்குப் பெற்றார். நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினர், இதழாளர்கள் போன்றவர்களைத் தாக்குவதற்கு, உரிய பலத்தைப் பெறுவதற்கு, இத்தகைய செல்வாக்கு அவருக்கு உதவிற்று.

இந்திய அரசையும், ஊடகத்தையும் அவர் எந்த அளவு கட்டுப்படுத்தினாரோ, அந்த அளவுக்கு, இந்துத்துவப் பரப்புரையை செய்வதற்கு எளிதாயிற்று. பல்கலைக் கழகச் சேர்க்கை, அரசுப்பணி போன்றவற்றில் உயர்சாதி இந்துக்கள் தகுதிபெற, பாஜக உதவும் என உயர்சாதி இந்துக்கள் நம்பத் தொடங்கினர்.

ஏழை இந்துக்களிடமும், தாழ்த்தப்பட்டவர்களிடமும் பாஜக சென்றடைய மோடி உதவினார். 2019 – ஆண்டு தேர்தலில் ஏழைகளும், பணக்காரர்களும் அக்கட்சிக்கு வாக்களித்தனர்.

பாஜக மாநிலத் தலைவர்கள் தொடர்ந்து செய்த பரப்புரையால், இந்துத்துவா வளரத் தொடங்கியது. அதனால், சிறுபான்மை இஸ்லாமியரின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கம், பாடநூல்களைத் திருத்தியது போன்றவற்றை ஆட்சியாளர்கள் திறம்படச் செய்தனர்.

‘இந்திய வரலாற்றில் இஸ்லாமியரின் பங்களிப்பு’ என்று இந்திய தேசத்தை உருவாக்கிய தந்தையர்கள் நம்பியதை, பாஜக பாடநூல்களில் மாற்றி எழுதியது.

இந்தியாவுக்கு அருகிலுள்ள நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியரல்லாதார், இந்தியக் குடியுரிமை பெற, ஒரு புதிய வழியை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உருவாக்குகிறது. இந்தியாவில் இஸ்லாமியர் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு – காஷ்மீருக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகையை, 2019 – ஆம் ஆண்டு பாஜக அரசு நீக்கியது.

பாஜகவின் ஆட்சிக்காலத்தில் தான் ‘லவ் ஜிகாத்’ எனப்படும் சொல்லாடல் இந்தியச் சமூகத்தில் பரப்பப் பட்டது. இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களைக் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றி, இந்துப் பெரும்பான்மை மக்கள் தொகையைக் குறைக்கத் திட்டமிடுகிறார்கள் என்கிற, தீங்கு விளைவிக்கும் மாயையே ‘லவ் ஜிகாத்’ என்பது. மோடி அரசு இதைக் காரணம் காட்டி, நிறைய இஸ்லாமிய ஆண்களைச் சிறையில் அடைத்தது. இக்கருத்தைப் பரப்ப, பாஜகவினர்  ஒரு திரைப்படத்தைக்கூட வெளியிட்டனர்.

இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் மனநிலையையும் நடத்தையையும் வெகுவாகப் பாதித்தன. கடந்த 2022 – ஆம் ஆண்டு, வர்ஷினி என்பவர் வெளியிட்ட ஓர் ஆய்வுக்கட்டுரையில், பாஜகவின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்படுவது  அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

சமூகத்தின் பல்வேறு தளங்களில், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பிம்பம், மிக மோசமாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. பாஜகவால் சீரழிக்கப் பட்ட மதச்சார்பின்மையை, மீளுருவாக்கம் செய்வது அவ்வளவு எளிதன்று என்கிறார் ஜாஃப்ரிலாட்.

பாஜகவின் திட்டம் எப்போதும் தாராளவாதத்தை சார்ந்ததன்று. சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரான பெரும்பான்மை இந்துக்களின் மேலாதிக்கத்திற்கு ஆதரவானது அது. பெரும்பான்மையினரின் குரலாகவே தன்னை அது பார்க்கிறது.

ஜனநாயகத்திற்கு எதிரான பாஜகவின் நீண்டகாலக் கொள்கைகளில் சில:

# தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் எண்ணிலடங்காத நன்கொடைகள்

# அதிகாரத்தில் அமர்த்தப்படுவோரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது

# தகவல் பெறும் சுதந்திரத்தைக் கையாளும் மையத் தகவல் கமிஷனுக்கு,  கமிஷனர்களை நியமிக்க மறுப்பது

# அரசின் அதிகார அமைப்பான மத்தியப் புலனாய்வுத் துறையை (CBI) 95 விழுக்காடு தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது

# கெளதம் அதானி, முகேஷ் அம்பானி போன்றவர்களின் மூலமாக, சுதந்திர ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது

# இதழாளர்களையும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களையும்  சிறையிலடைத்து ஒடுக்குவது

இந்திய ஜனநாயகம் சிக்கலில் இருப்பது, இது ஒன்றும் முதல் முறையன்று. இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் 1975 – இல் நடைமுறைப் படுத்தப்பட்ட அவசரநிலையால், இந்தியாவின் அடிப்படைச் சுதந்திரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டன. இன்று நாட்டில் அறிவிக்கப் படாத அவசரநிலை அமலிலுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்திரிகைகள் தீவிரமான தணிக்கையில்  உள்ளன.

மனித உரிமைகளைக் காப்பதன்மூலம், ஜனநாயகம் மக்களுக்காகச் செயல்படுவதையே தனது அரசின் வெளிநாட்டுக்கொள்கை எனக் கடந்த அக்டோபர் 2021- இல் ஜோ பைடன் அறிவித்தார்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், இது சாத்தியமற்றதாக இருக்கிறது. சீனாவுக்கு எதிராக, இந்தியாவை நட்புநாடு என்கிற வகையில், பயன்படுத்திக்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது.

பாஜக அரசு நடத்தும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை, அமெரிக்கா எதிர்ப்பதாகத்தெரியவில்லை என்கிறார் கார்னிகி எண்டோவ்மென்ட் பாஃர்இன்டர்நேஷனல் பீஸ் என்னும் அமைப்பின் தெற்கு ஆசியத் திட்ட இயக்குனரான மிலான் வைஷ்ணவ்.

Vox.com என்கிற இணையத்தளத்தில் Zack Beaucham என்ற பிரபல பத்திரிகையாளர் எழுதி, 21, June, 2023 – இல் வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.

https://www.vox.com/politics/2023/6/21/23683842/india-democracy-narendra-modi-us-biden-china

 நன்றி: Vox.com)

தமிழ் மொழிபெயர்ப்பு: முனைவர் தயாநிதி

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time