உண்மையான மக்கள் தலைவர் உம்மண் சாண்டி!

இப்படியொரு மக்கள் தலைவர் நம் காலத்தில் வாழ்ந்துள்ளாரா..? என வியக்க வைக்கின்றன கேரள  தலைவர் உம்மண்சாண்டி குறித்த செய்திகள்! எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்த இவரைப் பற்றி கேரளாவின் முக்கியஸ்தர்கள், பினராய் விஜயன், ஏ.கே.அந்தோணி, நடிகர்கள் மும்முட்டி, மோகன்லால்..உள்ளிட்டோரின் நினைவுப் பகிர்வு

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் எனச் சொல்லியதோடு அல்லாமல் எப்போதும் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் உம்மண்சாண்டி! இடதுசாரிகள் கோலோச்சிய புதுப்பள்ளித் தொகுதியில் பிரபல இடதுசாரி தலைவரான ஈ.எம்.ஜார்ஜை எதிர்த்து 27 வயது இளைஞரான உம்மண் சாண்டி வெற்றிபெற்றது ஒரு அதிசயமென்றால், அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகளாக அவர் மட்டுமே அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்! அந்த அளவுக்கு தொகுதி மக்களோடு மக்களாக கலந்துவிட்டார். அவரது எம்.எல்.ஏ அறை எப்போதுமே தொகுதி மக்களின் வேடந்தாங்களாக இருந்துள்ளது. தன் தொகுதியில் அனேகமாக ஒவ்வொரு குடும்பத்தையும் அவர் நேரடியாக அறிந்து வைத்திருந்தார்.

மக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வர் உம்மண் சாண்டி!

அவர் மாநில தொழிலாளர் அமைச்சராக இருந்த போது தான் இந்தியாவிலேயே முதன்முறையாக வேலையில்லாத இளைஞர்களுக்கான நிவாரணத் தொகை வழங்கியவர். உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், இரு முறை முதலமைச்சர்,அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ..என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்!  வருடத்தின் 365 நாட்களும் ஓய்வின்றி ராட்சத இயந்திரம் போல மக்களுக்காக வேலை செய்தவர் என்பது மட்டுமல்ல, அவர் அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவாராம்!

பிரபல இலக்கியவாதியும், முன்னாள் அதிகாரியுமான என்.எஸ்.மாதவன்;

பிரபல இலக்கியவாதி என்.எஸ்.மாதவன்

உம்மண்சாண்டி மக்கள் குறை தீர்க்கும் முகாம்களை அடிக்கடி நடத்துவார். மக்களிடம் இருந்து தானே மனுக்களை பெறுவார். அவர்கள் பேசுவதை பொறுமையாகக் கேட்பார்! உடனடியாக தீர்வு காணும் விஷயமெனில் உடனே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பார். எவ்வளவு நேரமானாலும் கடைசி மனிதன் சந்தித்துப் போகும் வரை மனுக்களை பெறுவார். ஒருமுறை தொடர்ந்து 18 மணி நேரம் அவர் நின்றபடி ஓய்வின்றி மனுக்களை வாங்கியதைப் பார்த்து, இவர் மனிதனா? அல்லது இயந்திரமா? என நான் வியந்திருக்கிறேன். அதிகாரிகளை நண்பர்களைப் போல பாவித்து, அவர்களை மக்கள் பணியில் ஈடுபடுத்த தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் நிகரற்றவர். அவரோடு பணியாற்றும் அதிகாரிகளுக்கு கூர்மையாகவும், சிறப்பாகவும் செயல்படும் தன்மையை உருவாக்கிவிடுவார்.

அவரது கடைசி பிறந்த நாளான சென்ற வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி அவர் வீடு தேடிச் சென்று வாழ்த்தி வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

அவர் தன் அஞ்சலியில், ”உம்மண்சாண்டி மிகச் சிறந்த நிர்வாகி, மற்றவர்கள் பின்பற்றத்தக்க, முன்மாதிரியான அரசியல்வாதியாக திகழ்ந்தார். அவர் மறைவால் கேரளாவின் ஒரு முக்கிய வரலாற்று அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்பேன்”

கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி; என்னுடைய ஆத்மார்த்த நண்பன். கல்லூரி நாட்களில் இருந்து நாங்கள் நண்பர்கள்! ஒரு வகையில் என் இளைய சகோதரன். எதையும் இதயத்தில் இருந்து பேசுவான். 45 வயது வரை திருமணம் குறித்த நினைப்பே இல்லாது இருந்த என்னை சாண்டியும், அவன் மனைவியும் தான் பெண்பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். அது ஒரு பதிவு திருமணமாக எளிமையாக சாண்டியின் வீட்டிலேயே நடந்தது. என் வாழ்க்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் நம்பகமான நண்பனாக இருந்துள்ளான்.

ஆத்ம நண்பர்கள் உம்மண் சாண்டி, ஏ.கேஅந்தோணி

கேரளா முதல்வர் பினராய் விஜயனின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான  கே.எம்.ஆபிரகாம்; மிகவும் சிக்கலான பிரச்சினைகளில் கூட விரைந்து தீர்வு காண்பவர். நேரம் ,காலம் பாராமல் மக்கள் பணி ஆற்றுவதில் தன்நிகரற்றவர். ஒரு பைலைப் பார்த்துவிட்டால், இன்ஞ் பை இன்ஞ் ஞாபகம் வைத்திருப்பார். மக்களிடம் இருந்து வரும் மனுக்களை மனுதாரரின் கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பார்.

முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் கே.எம்.ஆபிரகாம்.

நடிகர் மம்முட்டி; அவரது கடைசி பிறந்த நாளுக்கு கூட நான் அவர் வீடு தேடிச் சென்று வாழ்த்தினேன். மிக அன்பானவர். எப்போதும், யாரும் அவரை அணுகும் வகையில் வாழ்ந்தார். நேரடியாகச் செல்ல வேண்டும் என்பதில்லை. ஒரு போனில் அவரைத் தொடர்பு கொண்டாலும் கூட, மிக அக்கறையோடு பேசுவார். என் நெஞ்சுக்கு நெருக்கமானவர். மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர். எளிய மக்கள் அவரை தமக்கானவராக நேசித்தார்கள்! அவரை நாம் தனித்துப் பார்ப்பது மிகவும் அரிது. எப்போதும் மக்களோடு மக்களாகவே வாழ்ந்தார்.

உம்மண்சாண்டி காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த போது, அவர் ஆந்திராவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது ஆந்திர காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மட்டுமின்றி தொண்டர்களிடமும் மிக நெருக்கமாக பரிச்சயமானார். அவர் மறைவு குறித்து பேசியுள்ள ஆந்திர காங்கிரஸ் தொண்டர்கள்; உம்மண்சாண்டி ஆந்திரப் பொறுப்பாளராக இருந்த காலங்களில் எந்த ஒரு பிரச்சினைக்கும் தயங்காமல் அவரிடம் கொண்டு செல்வோம். மொழி ஒரு பிரச்சினையாக இல்லை. சிரித்த முகத்தோடு கேட்டு விரைந்து தீர்வு தருவார். அவர் இங்கு வந்தால் பெரிய ஹோட்டல்களில் தங்கமாட்டார். அரசு கெஸ்ட் ஹவுசிலோ அல்லது சிறிய அறையோ அவருக்கு போதுமானது. அதே போல மிக எளிய உணவு தான். காரைக் கூட எதிர்பார்க்கமாட்டார். ஒரு சாதாரணத் தொண்டரின் பைக்கில் பின்னே உட்கார்ந்து பயணப்படுவார். டெல்லியில் அவரது டெல்லி அலுவலகத்தில் எப்போதுமே ஆந்திரா காங்கிரசார் கூட்டம் நிரம்பி வழியும். அவரைப் போல ஒரு தலைவரை நாங்கள் கண்டதில்லை

ஆந்திரா காங்கிரஸ் தொண்டர் பைக்கில் உம்மண் சாண்டி!

நடிகர் மோகன்லால்; அவரை பல முறை சந்தித்து பேசி அளவளாவியுள்ளேன். ஒரு முறை அவர் எதிர்கட்சித் தலைவாராக இருந்த போது 100 குழந்தைகளின் ஆபரேசனுக்காக அவரிடம் உதவி கேட்ட போது, அதற்கான ஸ்பான்சரை பொறுப்பேற்று உதவி செய்தார். ஒரு நிகழ்ச்சிக்காக நானும் அவரும் சென்ற போது, மக்கள் நிரம்பி வழிந்தார்கள். அவர் கூட ஒரு போலீஸ்காரர் கூட இல்லை. அவர் சற்றும் யோசிக்காமல் மக்களிடம் கைகுலுக்கியபடி வழி ஏற்படுத்திக் கொண்டு நகர்ந்தார். சிலர் அவரைக் கட்டித் தழுவினார்கள்! மக்கள் நெருக்கியடித்ததில் அவர் சட்டை கசங்கியது. எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து மேடைக்கு வந்தார். அவரோடு சென்ற எனக்கு ஒரு போர்க்களத்தில் இருந்து மீண்ட உணர்வும், சோர்வும் உண்டானது.

ஆனால், அவரிடம் சோர்வே இல்லை. மேடைக்கு வந்த பிறகும் தெரிந்தவர்கள் கையாட்டினால் பதிலுக்கு புன்சிரிப்போடு கைஅசைத்தபடி இருந்தார். ஒவ்வொரு மணித்துளியும் அவர் மக்களுக்கே வாழ்ந்தவர் போல எனக்குத் தென்பட்டார். அவரது பொது வாழ்வில் எத்தனையோ பேர் அவரை வசைபாடியுள்ளனர். இழிவாகப் பேசியுள்ளனர். இவர் பதிலுக்கு அவர்களை தாக்கி ஒரு போதும் பேசியதில்லை. யார் மனமும் புண்படும்படி அவர் எப்போதும் பேசியதில்லை. இவரைப் போல இனி ஒரு தலைவர் கிடைக்கமாட்டர்கள்!

இப்படிப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டிலும் நம்மிடையே உருவாக வேண்டும். அதற்கு உம்மண் சாண்டி குறித்த இந்த செய்திகள் உந்துதலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி தகவல்களை சேகரித்து எழுதியுள்ளேன்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time