பாஜக செய்துள்ள பாவங்களுக்கு பரிகாரம் செய்வீர்களா..?

-ச.அருணாசலம்

ஒன்றுபட்டது முதல்கட்ட வெற்றி! வேற்றுமைகளைக் களைந்து கைகுலுக்குவது அடுத்தகட்ட வெற்றி! இது மட்டும் போதுமா? இந்த கூட்டணி தொடர்வதும், பலம் பெறுவதும் முக்கியம். சிந்தாமல், சிதையாமல் மேற்கொண்டு முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும்..? அதற்கான செயல்திட்டங்களைப் பார்ப்போமா..?

இரண்டாவது முறையாக 26 எதிர்கட்சிகள் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் கூடி,
”நாங்கள் ஓரணியில் நிற்போம், முன்னேறுவோம்” என்று பறைசாற்றி உள்ளனர்.

இம்முறை கூடிய எதிர்கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவையும் ஜனநாயகத்தையும், மக்களையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளனர்.

இந்த திருநாட்டை பீடித்துள்ள வெறுப்பு அரசியலை ஒதுக்கி, ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நேர்ந்துள்ள பேராபத்திலிருந்து இந்த நாட்டை காப்பாற்ற ” இந்தியா” என்ற (I – Indian N – National D – Developmental I – Inclusive A – Alliance.) பரந்துபட்ட கூட்டணியை முன்னிறுத்தியுள்ளனர்.


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் – ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் இந்தியாவில் இருந்தால்தான் நாடு வளர முடியும், நாமும் வளர முடியும் என்பதை “அனுபவித்து உணர்ந்த எதிர்கட்சிகள் ” அதற்கு செயல் வடிவம் கொடுக்க பெங்களூருவில் முடிவெடுத்துள்ளனர்.
‘அனைவரையும் உள்ளடக்கிய இந்திய நாட்டு வளர்ச்சி கூட்டணியை இந்தியா’ என பெயர் சூட்டி உள்ளனர். இக்கூட்டணிக்கு இன்னும் தலைவரோ, ஒருங்கிணைப்பாளரோ அறிவிக்கப்படவில்லை. ‘’அத்தகைய முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் எடுக்கப்படும். அதன் பின்னர் இன்று நாட்டை எதிர் நோக்கியிருக்கும்  பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து கொள்கை முடிவுகள் எட்டப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 தேர்தலில் தொகுதி பங்கீடுகள் மாநில அளவில் எட்டப்படும் என்றும் தெரிகிறது. இக்கூட்டணி ஒரு கட்சியை வீழ்த்தி மற்றொரு கட்சி ஆட்சியை பிடிப்பது என்ற வகையில் வரும் 2024 தேர்தலை கருதவில்லை. மாறாக, இந்தியாவின் ஆன்மாவாக கருதப்படும் பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றிற்கு பா ஜ க மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி முறையினால் ஏற்பட்டுள்ள பேராபத்தை முதலில் தடுத்து, பின் முறியடிக்க, ஒரு தேர்தல் வெற்றி மட்டும் போதாது , அதற்காக தொடர்ந்து இயக்கம் காண வேண்டிய அவசியத்தை அனைத்து கட்சிகளும் உணர்ந்திருப்பார்கள் என நம்பலாம்.

கடந்த பத்தாண்டு கால மோடியின் ஆட்சியில் இந்தியா அரசியல்,சமூக மற்றும் பொருளாதார தளங்களில் சீரழிவை சந்தித்து இன்று ஏற்றத்தாழ்வுகளும், வெறுப்பணர்வும், சமூக பதட்டமும், வேலையின்மையும் மிகுதியாகி உள்ளது. தொட்டது அனைத்தையும், சீரழித்த பெருமை மோடி ஆட்சிக்கு நிரம்ப உண்டு.

மீண்டும் நாடும், மக்களும் தலை நிமிர வேண்டுமென்றால், இக்கூட்டணி இந்திய மக்கள் முன்பாக  ‘நாம் என்ன செய்ய வேண்டும்’ என்ற செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும்.


அத்தகைய செயல்திட்டத்தின் முக்கிய கூறுகளாக சிலவற்றை நாம் பார்ப்போம்;

இந்த பிரச்சினைகளில் ஏற்படும் கருத்தொற்றுமை கொள்கை முழக்கங்களாக வெடித்து ஆட்சியில் அமரும் பொழுது செயல் வடிவம் பெற வேண்டும், இக்கொள்கை முழக்கங்கள் மக்களை திரட்டுவதோடன்றி அவர்களை இத்தகைய உணர்வில் தோய்ந்தவர்களாக்க  தொடர்ந்து அரசியல் கட்சிகள் பணியாற்ற வேண்டும். வெறும் தேர்தல் வெற்றி மட்டும் இதை சாதிக்காது.

இந்திய அரசியல் சாசனத்தையும், இந்திய ஜனநாயகத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க முனைந்துள்ள எதிர்கட்சிகள் நாம் இங்கே குறிப்பிடும் செயல் வரைவுகளை நோக்குவார்கள் என்று நம்புவோம்.

முதலாவதாக, நம்முடைய ஆட்சிமுறையில் தேர்தலில் வென்றவர்கள்- அவர்கள் 50 சதவிகித வாக்குகளை வாங்காவிடினும் – ஆட்சி செய்பவர்களாக, அனைத்து அதிகாரங்களையும் கேள்வி கேட்பாரின்றி பிரயோகிப்பதை நாம் காணுகிறோம். 39 % வாக்குகளை பெற்ற பா ஜ க அரசு எவ்வாறு ஆட்சி அதிகாரங்களை தான்தோன்றிதனமாக செலுத்துகிறது என்பதை நாமறிவோம்.

இத்தகைய அத்துமீறல்களை கடிவாளமிட்டு நிறுத்த ஜனநாயகத்தில் எதிர்கட்சிகளின் பங்கை உறுதி செய்ய வேண்டும். அரசியல் சாசன அமைப்புகள் , தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்களை ,தலைவர்களை நியமிப்பதிலும் பாராளுமன்றத்தில் விவாதங்கள், கேள்விகள் , நிலைக் குழுக்களின் செயல்பாடு போன்றவற்றில் எதிர்கட்சிகளின்
ஒப்புதலை -Recognising the legitimacy of Opposition- சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து இந்திய நாட்டின் கூட்டாட்சி முறையை பேணிப் பாதுகாக்க வேண்டும் , ஒன்றிய அரசின் அதிகாரக் குவியல்களை உடனடியாக தவிர்த்து, அதிகாரப் பரவல்களை சட்டபூர்வமாக்க வேண்டும். மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டத்தில் வழிவகை செய்ய இந்த தருணம் இன்றியமையாதது. குறிப்பாக மாநில கட்சிகள் இதில் உறுதியாக இருந்து வெற்றி காண வேண்டும். இதன் மூலம் சனாதனத்தையும், ஏதேச்சதிகாரத்தையும் மாநிலங்கள் முறியடிக்க முடியும்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை முற்றிலும் சீரமைத்து , மாநில உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்த உரிய சட்ட வழி காண வேண்டும்.


ஜனநாயக விரோதமான கொடுங்கோன்மை சட்டங்களான உபா (UAPA), தேச பாது காப்பு சட்டம் (NSA), தேச துரோக சட்டம் (Sedition law), ராணுவ பாதுகாப்பு சட்டம் (AFSPA) போன்றவற்றிற்கு முடிவு கட்ட வேண்டும். முற்றிலும் ஏவல் நாயாக மாற்றப்பட்ட PMLA குற்றப் பண பரிமாற்ற தடைசட்டம் அதனுடை முந்தைய நிலைக்கு மீண்டும் கொணரப்பட்டு, உண்மையான சமூக விரோதிகளை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். சமீபத்தில் ஏற்படுத்திய சட்டத் திருத்தங்களை திரும்பபெற வேண்டும். நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து பதில் கூற வேண்டிய துறையாக அமலாக்கதுறை மாற்றப்பட வேண்டும் .

ஊடக சுதந்திரம், தனி மனித சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை போன்ற வைகளில் அரசின் அதிகார பிரயோக முறைகேட்டை முற்றிலும் களைந்து வெளிப்படையான சட்ட பூர்வ நடைமுறையை  சட்ட நடைமுறையாக்க வேண்டும்.


சி .பி. ஐ.,வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை அரசின் கண்காணிப்பு மேலதிகாரத்திலிருந்து விடுவித்து சுதந்திர அமைப்பாக நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கும் அமைப்புகளாக மாற்ற வேண்டும். அதிகார முறைகேட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
அதிகாரத்திற்கு வந்த பின் எதிர்கட்சிகளும் “இதே” வேலையை தொடரக் கூடாது என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணி மாற்றம் தொடர்பான அரசின் செயல்பாடு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நேர்மையானயதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கான்ஸ்டிடியூஷனலிசம் என்றழைக்க கூடிய “சட்ட முறைமையை” வளர்த்தெடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் .

ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடுகளை பாராளுமன்றம் கண்காணிப்பதை உறுதி செய்யும் அதேநேரத்தில் அரசின் ஒருதலைபட்ச தலையீட்டை அனுமதிக்க சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முன்வர வேண்டும்.

தேர்தல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்; அனாமதேய தேர்தல் பத்திரங்கள் விற்பனையை விட்டொழிக்க வேண்டும் . தேர்தலில் பணப்புழக்க சீர்கேட்டை ஒழிக்க இக்கட்சிகள் முன்வர வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் தலைமை அதன் செயல்பாடு ஆகியவை நடுநிலையாக சுதந்திரமானதாக இருக்க வழிவகை காண வேண்டும்

இ.வி.எம். எனப்படும் எலக்ட்ரானிக் இயந்திரங்களை விட்டொழித்து வாக்குசீட்டு முறைகளை நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் .

இப்பொழுது இருக்கும் முதலில் வந்தவர் -First past post system- என்ற நடைமுறையை மாற்ற வேண்டும் . இச்சீர்திருத்தம் ஒன்றே- அது விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையாகவோ அல்லது மாற்று ஓட்டு முறையோ வாக்காளர்களின் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றவரே வென்றவராக கருதுவது- தேர்தல் நடைமுறைகளிலும் அரசியல் கட்சிகளின் அணுகு முறையிலும் விரும்பத்தக்க மாறுதல்களை கொண்டுவரும் போது, மக்களும் பணத்திற்காக ஓட்டு என்ற பாவ காரியத்திலிருந்து விடுபடலாம். பணம் கொடுத்து ஓட்டுபெறும் கலாச்சாரத்தை உறுதி கொள்வது அவசியம். இதனால், ஒட்டுமொத்த சமுதாய மாறுதலும் நடக்கலாம் இதை எதிர்கட்சிகள் இப்பொழுதாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.


கட்சி தாவல் தடுப்பு சட்டம் தன் சாரத்தையும், நோக்கத்தையும் இழந்து இன்று ஆட்சியாளர்களின் பண முதலைகளின் கைப்பாவையாக மாறி ஜனநாயகமும் மாநில உரிமையும் சாகடிக்கப்படுகிறது, இதை முறியடிக்க இக்கட்சிகள் முன்வர வேண்டும்.

சனாதனமல்ல,  சமத்துவமே எமது மூச்சு என்று எதிர்கட்சிகள் முழங்குவதோடன்றி, சாதி மத பேதமின்றி அனைத்து பிரிவினருக்கும், அனைத்து சமயத்தினருக்கும், ஆதி குடிகளுக்கும் சம்மான வாய்ப்புக்களையும் சட்ட பிரயோகத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட எதிர்கட்சிகள் முன்வர வேண்டும். சமூக நீதியை நாடெங்கும் நிலை நாட்ட வேண்டும் அதற்காக சாதிய கணக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்.

பாகுபாடற்ற மதச்சார்பற்ற நடைமுறைகளை காவல் நிலையத்திலிருந்து உச்ச நீதி மன்றம் வரை நடைமுறைபடுத்துதலை சட்டபூர்வமாக்க வழி செய்ய வேண்டும் .

பாகுபாடான குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி அட்டவணை போன்றவற்றை நிராகரிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வை அரசியல் சாசனப்படியும் சட்ட முறையிலும் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரும்பான்மைவாதமும் வீணான பழம்பெருமையும் பிரச்சினைகளை தீர்க்க உதவாது அதற்கு சட்ட வழியும் கிடையாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பன்முகத்தன்மையையும், விஞ்ஞான அணுகுமுறையையும் (Pluralism and scientific temper) வளர்தெடுக்கும் வகையில் நமது கல்விக்கொள்கை அமைவதை எதிர்கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்

இன்றுள்ள ஏகபோக முதலாளிகள்( அதானி மற்றும் அம்பானி போன்றோர்) கொழுத்து செழிக்க உதவும் ஒன்றிய அரசின் பொருளாதாரக்கொள்கை, இந்திய மக்களை புறந்தள்ளி இந்திய சிறுகுறு முதலாளிகளை முடக்கிவைக்கிறது. இதன் விளைவாக ஏழை பணக்கார்ர் இடையே வரலாறு காணாத ஏற்றதாழ்வும் இந்திய மக்களின் பொது சொத்தெல்லாம் அதானி அம்பானி கையிலும் சேர்வதை மோடி உறுதி செய்கிறார் . அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவதுபோல் மோடியின்(பாஜகவின்) பினாமியே அதானி என்று மக்கள் எண்ணுகின்றனர் . இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். ஏகபோக முதலாளிகளிடமிருந்து அரசு சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும் . அனைவரது வளர்ச்சியையும் உறுதி செய்யும் புதிய பொருளாதாரக் கொள்கையை வகுக்க இக்கூட்டணி முன்வர வேண்டும்.


அயல்நாட்டு விவகாரங்களிலும் நம்மை சுற்றியுள்ள அண்டைநாடுகள் விவகாரத்திலும் மோடி அரசு மேற்கொள்ளும் சீர்கேடான நடவடிக்கைகளை, இந்திய நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்  அமெரிக்க அரசிற்கு தளங்களையும், துறைமுகங்களையும் தாரைவார்ப்பதை தடுக்க முன்வரவேண்டும் .

சுய விளம்பரத்திற்காக நாட்டு நலனை அடமானம் வைப்பதும், தோல்வியை மூடிமறைக்க நாட்டு மக்களிடையே உண்மையை மறைப்பதும், கள்ளத்தனமான நட்பிற்காக அண்டை நாடுகளை ஒப்பந்தத்தில் ஈடுபடுத்துவதும் தான் மோடியின் வெளியுறவு கொள்கையாக இருக்கிறது, இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

இதுவரை நடந்த அவலங்களுக்கெல்லாம் – பணமதிப்பிழப்பு, ஜி. எஸ்.டி, ரஃபேல் ஊழல், புல்வாமா குண்டுவெடிப்பு, அதிகார முறைகேடு, அதானிக்கு தாரைவார்க்க சட்டங்களை வளைத்தது போன்ற இஸ்ரேல் உளவு பொருள்மூலம் வேவு பாரத்தது போன்ற சட்ட புறம்பான பாரதூர விளைவுகளை ஏற்படுத்திய மோடியின் நடவடிக்கைகளுக்கு மோடி பதில்கூற (Accountability) செய்யவேண்டும் குற்றவாளி கூண்டில் மோடியும், அவரது கூட்டாளிகளும் நிறுத்தப்பட வேண்டும்

ஊடகங்களை கார்ப்பரேட் முதலாளிகள் மிரட்டுவதும் பின் அவற்றை விலைக்கு வாங்கி கபளீகரம் செய்வதெற்கெல்லாம் மேலாக அத்தகைய ஊடகங்களை அரசின் ஊதுகுழலாக மத வெறியையும் சிறுபான்மையினர் மீ து காழ்ப்புணர்வை பரப்புவதையும் சாதகமாக்கும் ஊடக உரிமை விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

இத்தகைய கொள்கை  நிலைகளை கையிலெடுப்பதன் மூலம்தான் இன்று நாட்டில் விதைக்கப்பட்டுள்ள வெறுப்பு அரசியலையும், ஆதிக்க வெறியையும் சனாதன மனப்போக்கையும் வேர் அறுக்க வியலும். இல்லையெனில் எதிர்கட்சிகளின் தேர்தலுக்கான ஒற்றுமை, குறை ஆயுளுடன் முடிந்துவிடும் அபாயம் உள்ளது . ஐம்பதாண்டுகளுக்கு முன்பு விதை ஊன்றி,
பல பத்தாண்டுகளாக வெறுப்பு அரசியலையும், வீண்பெருமைகளையும், புரட்டு வரலாறையும் பரப்பிய சங்கிகள், இன்று ஆட்சியில் இருந்து கொண்டு அடிமடியில் கைவைக்க முனையும் பொழுது, எதை வேரறுக்க வேண்டும் என்ற தெளிவும் அந்தப்பாதையின் கடினத்தையும் எதிர்கட்சிகள் புரிந்து கொள்ளாவிட்டால் வெற்றி நிலைக்காமல் போகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கூட்டணியை சிதைக்க பாஜக அரசு வகுக்கும் சதிவலைப் பின்னல்களை உணர்ந்து அதை தவிர்க்கவும், முறியடிக்கவும் செயல்திட்டம் வகுக்க வேண்டும்.
39 விழுக்காட்டை பெற்று ஆட்டம்போடும் இவர்களது வலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க பல ஆண்டுகள் தேவைப்படும் . ஆனால், அந்த ஜனநாயகப் போரை இன்று தொடங்காவிட்டால், இந்தியா நிம்மதியாக இருக்காது.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time