ஆபத்தான தேசிய கல்வி கொள்கை தடுக்கப்படுமா?

-தி.மருதநாயகம்

இன்றைய சூழலில் கல்வி ஆபத்தான திசைவழிக்கு திருப்பப்பட்டு வருகிறது என்பதே உண்மை!  எளியோருக்கான வாய்ப்பு மறுப்பு, அறிவியலை புறந்தள்ளி, மூட நம்பிக்கைகளை புகுத்தும் போக்கு.. ஆகியவை தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படுகிறது! என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில் சந்திராயன்-3 போன்ற விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வெற்றி பெறுவதற்கு அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கியது நமது கல்விக் கூடங்கள் தான். ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வித் துறையில் தமிழகம் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தற்போதுள்ள மத்திய அரசு தீவிரமாக நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் உயர்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய உயர் கல்வி தகுதி வரைவு அறிக்கையில்  (National Higher Education Qualifications Framework ) தனியார்மயம் இ வணிக மயம்இ மத்திய அரசின்  கீழ் உள்ள அனைத்து கல்வி அமைப்புகளையும் மத்தியப்படுத்துதல்இ மதமயம்இ  என்ற கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வித்துறையில் Multiple Exit  மற்றும்  Multiple Entry   என்ற அடிப்படையில், அதாவது ஒரு மாணவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம், நுழையலாம் என்ற கோட்பாட்டை தேசிய உயர் கல்வி வரைவு அறிக்கை வலியுறுத்துவது என்பது ஆபத்தான போக்காகும்.

முதலாம் ஆண்டில் ஒரு மாணவர் தேர்வில் தோல்வி அடைவானாயின் இரண்டாம் ஆண்டிற்கு அவன் செல்ல தகுதி இல்லாதவனாக கருதப்பட்டு அம் மாணவர்க்கு ஒரு Certificate  மட்டும் வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவான். இரண்டாம் ஆண்டில் ஒரு மாணவர் தேர்வில் தோல்வியடைவாராயின், மூன்றாம் ஆண்டிற்கு செல்ல தகுதி இல்லாதவராக கருதப்பட்டு அம் மாணவர்க்கு ஒரு Diploma  மட்டும் வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். இதே போல் மூன்றாம் ஆண்டு மாணவர்க்கு Degree யும், நான்கு ஆண்டுகள் முழுவதையும் முடித்த மாணவர்களுக்கு Degree with Honours என்ற பட்டமும் வழங்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வி வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உயர் கல்வியில் ஒரு மாணவர் தேர்ச்சி அடையாமல் இருப்பினும் அடுத்த ஆண்டிற்கு செல்லலாம் என்பது தற்போதைய நிலை.

தேசிய கல்விக் கொள்கையின்படி அம்மாணவர் இடைநிற்றல் ஆகிவிடுவானாயின், சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்  எப்படி கல்லூரிகளுக்கு மீண்டும் வருவார் என்பது உளவியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளை  தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தீர ஆராயவில்லை என்பது திண்ணமாகிறது.

கருத்துப்படம் ; நன்றி, தினகரன்

திறன் மேம்பாடு என்ற பெயரில் புதிதாக Bachelor of Vocational Degree (B.VOC) மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை அமல்படுத்தப் போவது என்பது மிகவும் ஆபத்தான போக்காகும். குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது இது பல தனியார் கல்லூரிகளில் கடை விரித்து பாடத்திட்டத்தை தொடங்குவதற்கும் கல்வி கட்டணத்தை வெகுவாக ஈட்டவும் மட்டுமே வழிவகுக்கும்.

மேலும் இந்த குறிப்பிட்ட திறனை மட்டும் வளர்ப்பது Labour Market  என்று சொல்லக்கூடிய “தொழிலாளர் சந்தையை” மட்டுமே உருவாக்குமே தவிர சிந்திக்கும் ஆற்றலையும், கேள்வி கேட்கும் உரிமையையும் இல்லாமலாக்கிவிடும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான உழைக்கும் கருவியாக  மாணவர்களை வடிவமைக்கும் திட்டமாகவே இதனை கருத முடியும்.

இதன் பின்னணியில் கார்ப்பரேட் நலன்கள் உள்ளதாகவும் கருதலாம். ஏற்கனவே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்ட கல்வியாளர்களை தவிர்த்து,  பிர்லா, அம்பானியை தலைவராக கொண்டு அமைக்கப்பட்ட குழு Birla Ambani Report அப்போதே கல்வியை வணிக மயமாக்க பரிந்துரை செய்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

21ஆம் நூற்றாண்டு என்பது மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து, தன்னையும் இச்சமுகத்தையும் உயர்த்தப் பாடுபடுவதே கல்வியின் அடிப்படையான கருத்தியல். அதிலிருந்து விலகி, உயர்கல்வி பயிலும் மாணவர்களிடம் விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், உயர்கல்வியின் கல்வி வரைவு அறிக்கையில்  Indian traditional Knowledge என்ற “இந்திய பாரம்பரிய அறிவு” என்ற கோட்பாட்டை முன்னிறுத்துகிறது. இதில் இந்தியப் பழம் பெருமைகளை, மதரீதியாக மதிப்புகளோடு அறிவியல் கலந்து பேச முற்படுகிறது. இப்படியான தேன் தடவப்பட்டுள்ளதால் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது சுவையானது போலத் தோற்றம் தருகிறது.

ஆனால், அறிவியலை புறந்தள்ளிவிட்டு, மத ரீதியான கோட்பாடு ஆபத்தான போக்காகும். இந்தியா போன்ற பன்மைத் தன்மை கொண்ட – பல மொழிகள், மதங்கள்,  கலாச்சாரங்கள், உணவு, உடை, சூழல், பொருளாதார, சமூக ரீதியான சூழல் போன்றவற்றை கருத்தில் கொள்ளவில்லை தேசிய உயர்கல்வி தகுதி வரைவு அறிக்கை.

மதங்கள் நம்பிக்கை அடிப்படையிலானது. அறிவியல் எப்போதும் கோட்பாடுகள் மூலம் நிரூபணம் ஆனது. இவற்றையெல்லாம் ஆராய வேண்டிய பொறுப்பும், கடமையும் மாணவர் சமூகத்தின் எதிர்காலமும் தமிழ்நாட்டு மாநில கல்விக் கொள்கையின் அறிக்கையில் தான் உள்ளது. அது ஏற்படுத்தப் போகும் தாக்கம் எவ்வாறு இருக்கும்? என்பதே தற்போதைய கல்வியாளர்கள் அனைவராலும் கவலையோடு பார்க்கப்படுகிறது.

கடைக்கோடி மனிதனுக்கும், சாமானிய மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று மைல்களுக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, மதிய உணவு என்பதைத் திட்டமிட்டு, இதனால் அரசுக்கு நிதி சுமை ஏற்படுமாயின் நானே  மக்களிடம் பிச்சை எடுத்தாவது மாணவர்களின் கல்விக்காக எதையும் செய்யவேன் என்றுரைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில், தமிழக மக்களுக்கான  இந்த மண்ணின் மகத்துவத்தை உணர்ந்து தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் தமிழ்நாடு அரசு.

அதோடு, ஆபத்தான், படு பிற்போக்கான தேசிய கல்வி கொள்கைக்கு கடிவாளம் இட வேண்டும்  என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கட்டுரையாளர்; தி.மருதநாயகம்

ஆங்கில துறை உதவிப் பேராசிரியர்

ராஜபாளையம்

[email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time