மாதவிடாய் பிரச்சனைக்கு எளிய வைத்தியம்!

மரபான தொல்குடிகள் அனைத்திலும் வயது முதிர்ந்த பெண்களாலேயே பாரம்பரிய மருத்துவ அறிவு உட்பட தொல்கலாச்சாரங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. அந்த வகையில்  தமிழ்  பெண்களின் மருத்துவ அறிவை ”பாட்டி” வைத்தியம் என்று அழைப்பதுண்டு. சூதக வலி எனும் மாதவிடாய் பிரச்சனையை  தீர்க்கும் குன்ம குடோரி மெழுகு அபாரம்!

அடிப்படையில் தமிழர் மருத்துவ அறிவை  மூன்று தொகுதிகளாக பிரிக்கலாம்.

பாட்டி வைத்தியம்,  வைத்தியர் மருத்துவம்,  சித்தர் மருத்துவம்  என்று.

1.பாட்டி வைத்தியம் -என்பது  அனுபவம் வாய்ந்த மூத்த பெண்களால் பெண்களுக்கு உள்ளாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்  மருத்துவ அறிவாகும்.  இது பெரும்பாலும் பெண்கள் சார்ந்த  நோய்களான, மாதாந்திர பூப்பு சுழற்சி, கருதரித்தல், பேறுகாலம் மற்றும் குழந்தைகள் நல பிரச்சனைகளுக்கான  எளிய மருத்துவ தீர்வாக இருக்கும்.

2.வைத்தியர் மருத்துவமானது – ஊருக்கு ஓர்  வைத்தியர் பொது மருத்துவத்தில் அல்லது குறிப்பிட்ட மருத்துவத்தில் சிறப்புற்று விளங்குவார்.[ அறுவை மருத்துவம், எலும்பு ஒடிவு முறிவு மருத்துவம், தோல் மருத்துவம், விஷக்கடி மருத்துவம்,  வர்ம மருத்துவம், மாட்டு வைத்தியம்].

3.சித்தர்  மருத்துவமானது –  இது தத்துவார்த்த புரிதலுடன் கூடிய மருத்துவ முறையாகும். நோய்  கணித்தல், மருந்துகள் செய்தல், மருந்துகள் தேர்ந்தெடுத்தல்  போன்றவை அடிப்படை மருத்துவ  இலக்கண விதிகளுக்கு  உட்பட்டு இருக்கும்.[ முக்குற்றம்,  பஞ்சபூதம், சுவை,…]  மெஞ்ஞானத்தைத் தேடும் சித்தர்களால் செய்யப்படுவது.

அத்தகைய தமிழர் மருத்துவத்தில் பெண் சித்தர்களும், பெண் வைத்தியர்களும் உண்டு.  ”அவ்வை”யின் பெயரில்  சித்தமருத்துவ நூல்களும் உண்டு.

பெண்கள் சார்ந்த நோய்களும், அவர்களுக்கான மருத்துவ முறைகளும் தெளிவாக வகைப்படுத்தி அதற்குரிய  சிறந்த  சித்த மருந்துகள் பல கூறப்பட்டுள்ளன.

அதில் ஒன்று ”சூதக வலி” [Dysmenorrhea ]  வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி.

வாயுத் தொல்லை நீங்க, வெள்ளைப் பூண்டை உணவில் சேர்க்க வேண்டும்.

பருவமடைந்த  பெண்கள்  பெரும்பான்மையோனருக்கு மாதவிலக்கு காலங்களில் அடிவயிற்றில் இறுக்கி சுருக்குவது போல்  ‘வலி’ [menstrual cramps]தோன்றும்.  சிலருக்கு அடி வயிறு ,முதுகு,  இரண்டு கால் தொடைகளில் இந்த வலி பரவலாம்,  வயிறு   பொருமல்,வாந்தி, குமட்டல் தலைவலி  போன்ற   குறி குணங்களுடன் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

மாதவிடாய் காலங்களில் முதல் இரண்டு நாட்கள், சிலர்க்கு இன்னும் முன்பே இவ்வலி ஏற்படும்.  60 %,பெரும்பான்மையோருக்கு தாங்கக் கூடிய வழியாகவும் , 5-15% சிலருக்கு தாங்க முடியாத வழியாகவும் இது மாறுவது உண்டு.

மாதவிடாய் காலத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரிய காரணமான  ப்ரோஸ்டோ க்ளாண்டின் [prostaglandin ]  என்ற வேதிப்பொருளின்  மாறுபாடல் இந்த வலி ஏற்படுவதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

இதற்கு மிகச்சிறந்த சித்த மருந்தானது  ”குன்ம குடோரி மெழுகு”

இந்த மருந்தில் ஒன்பது வகையான உப்பு வகை மருந்துகளும், அதனுடன் வெள்ளைப் பூண்டு ,பெருங்காயம், ஓமம், கிராம்பு ,தேன் உட்பட 19 வகையான மருந்துகள்   சேர்த்து மெழுகு பதத்தில் அரைத்து எடுக்கப்படுகின்றது.

வலியுடன் கூடிய மாதவிடாய் காலங்களில் இந்த மருந்தினை சுண்டைக்காய் அளவு [ 1-2 grm ]  இரண்டு முதல் மூன்று வேளை  வழங்கலாம்.

உடல் வலி அதிகம் உள்ள காலங்களில்  ஒரு மணிக்கு ஒரு தடவை மூன்று முதல் நான்கு  முறை  இம்மருந்தினை வழங்கலாம்.

இந்த மருந்தானது எல்லா சித்த மருந்து கடைகளிலும் கிடைக்கும்.எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாதது.

இம்மருந்தானது சித்த மருத்துவ தத்துவங்களின் படி  உடல் வலிக்கு காரணமான கீழ்நோக்கு ”சூதக வாயுவை” வெளியேற்றி, உடலை சீர் செய்கின்றது, இதனால் வலி  குறைகிறது.

இந்த மாதவிடாய் கால  உடல் நல பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் வலி நிவாரண   மாத்திரைகளே  எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்றன. இது பக்க விளைவுகளை உருவாக்கி மேலும் சிக்கலாக்கும்.

உணவு முறை   மாதவிடாய் காலங்களில்  உடலின் வாய்வுத் தன்மையை அதிகரிக்க கூடிய,  உருளைக்கிழங்கு, வாழைக்காய் கொண்டைக்கடலை, மொச்சை கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மாவு பண்டங்கள், அதிக புளிப்பு, காரம் உள்ள உணவு வகைகள், மீன் குழம்பு, புளி குழம்பு போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இளஞ்சூடான கஞ்சி வகை உணவுகள், ஆவியில் அவித்த உணவு பண்டங்கள். [இட்லி இடியாப்பம் புட்டு]   எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளலாம்.

அளவுக்கு அதிகமாக உணவுகள் உட்கொள்ளுதல் காரணமாகவும், பசிக்கும் நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் வயிற்றைக் காயப் போட்டாலும்.. கூட நாம் வாயு சார்ந்த இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

பொதுவாகவே செரிமான கோளாறு காரணமாக வருவது பலருக்கும்  வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லைகள் வரக்கூடும். இதற்கு தண்ணீரில் சிறிதளவு சீரகத்தை  போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகி வர வயிற்று பொருமல்,வாயுதொல்லை ஓரளவு நீங்கும்.

பொதுவாக கிராமங்களில் இருக்கும் மூதாட்டிகள் வயிற்று பொருமல், வாயுதொல்லை நீங்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம் செய்து தருவார்கள். சீரகம்,வசம்பு மற்றும் கருப்பட்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து சிறிதளவு நீர் விட்டு கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து தருவார்கள். இது சாப்பிட சற்று சுவையாகவும் இருக்கும்.

உடலில் இருந்து கழிவுகள் சரியாக வெளியேறாமல் தேங்கினாலும், வாயு அதிகமாகும். வயிற்றுப் பொருமல் உருவாகும். மலச்சிக்கல் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் முக்கியம். நார்ச்சத்துள்ள பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சூதக வலிக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் உலக சந்தை மதிப்பு  இந்திய ரூபாயில் 5,000  கோடிக்கு மேல். [Global Dysmenorrhea treatment market  value].

தற்சார்பு மருத்துவ அறிவை மீட்போம்!

பாரம்பரிய மருத்துவ அறிவை காப்போம்!

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன், MD(siddha)

சித்த மருத்துவ செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time