அழித்தொழிக்கப்படும் காந்திய அடையாளங்கள்!

-சாவித்திரி கண்ணன்

பாரம்பரியமிக்க காந்திய நிறுவன இடம் உ.பி அரசாங்கத்தால் பறிக்கப்பட்டுள்ளது! சபர்மதி ஆஸ்ரமத்திற்கு சவக்குழி பறித்த பாஜக அரசு, தற்போது காந்தியின் சீடர் வினோபாவே நிறுவிய சர்வோதய நிறுவனத்திற்கு சீல் வைத்து காந்தியவாதிகளைக் கைது செய்துள்ளது! படிப்படியாக காந்தியத் தடயங்கள் தகர்க்கப்படுகின்றன..!

தேசத் தந்தை காந்தியடிகள் மறைந்தவுடன் காந்தியப் பணிகளை நாடு தழுவிய அளவில் தொடர்ந்து முன்னெடுக்க 1948 ல் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் சர்வோதய இயக்கமாகும். இந்த சர்வோதய அமைப்பிற்கு தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. இந்த சர்வோதய மண்டல் முன்னெடுப்பில் அன்றைய பிரதமர் நேரு, குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத், ஜே.சி.குமரப்பா, காகாசேப் காலேல்கர், ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆகியோர் வினோபாவேவுக்கு உறுதுணையாக நின்றனர்.

இந்த இயக்கத்தின் தலைமையகத்திற்கான இடம் வாரணாசியில் தேடிய போது இந்த இடத்தை கண்டறிந்தனர். இடத்தின் உரிமை ரயில்வே வசம் இருந்ததால் முறைப்படி அணுகி உரிய பணம் கொடுத்து வாங்கித் தந்தவர் பிரபல தொழில் அதிபர் ஜமன்லால் பாஜாஜின் உறவினர் கிருஷ்ணா பஜாஜ்! மொத்தம் உள்ள எட்டு ஏக்கரும் 1960,61,70 காலகட்டத்தில் படிப்படியாக பணம் செலுத்தி பெறப்பட்டன. அதற்கான பத்திரப் பதிவும் உள்ளன! இங்கே காந்திய நூல்களுக்கான பதிப்பகம், ஏழை மாணவர்கள் படிக்கும் கட்டணமில்லா பள்ளிக்கூடம், நூலகம், இயற்கை மருத்துவ மையம், இளைஞர் பயிற்சி மையம், ஆகியவை இயங்குகின்றன. இங்கு வேலை செய்யும் 30 ஊழியர்களுக்கான வீடுகளும் இதில் உள்ளன. காந்திய ஆய்வுப் பணியில் ஈடுபடுவர்கள் இங்கு வந்து நிறைய ஆய்வுப் பணிகள் செய்துள்ளனர். காந்தியவாதிகள் வந்தால் தங்கி செல்லும் சில அறைகள் இங்குள்ளதால் இந்த இடத்திற்கு வராத முக்கிய தலைவர்களே இல்லை எனச் சொல்லலாம்.

தூக்கி வெளியே வைக்கப்பட்டுள்ள சாமான்கள்!

இவ்வளவு புகழ்பெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் ‘ரயில்வேயிடம் இருந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது’ என அதிரடியாக வெளியேற்றி உள்ளனர். ‘’ஒரு காந்திய இயக்கம் அரசு நிலத்தை களவாடலாமா? எனவே, நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுங்கள்’’ என உ.பி. யோகியின் பாஜக அரசு ஜீன் 27 ஆம் தேதி ஒரு நோட்டீஸ் தந்தது! இதைக் கண்டு கலவரமான காந்தியவாதிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

அங்கு பாஜக மோடி அரசின் ரயில்வே அந்த இடம் எங்களுடையது. காந்திய அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லி உள்ளது. ஆனால், ரயில்வே ஆண்டுக்காண்டு நடத்தும் நில சர்வேயில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அறிவித்து நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் கடந்த 63 ஆண்டுகளாக ரயில்வே தன் சர்வேயில் இந்த இடத்தை சர்வோதய இடமாகவே குறிப்பிட்டு வந்துள்ளது. என காந்திய அமைப்புகள் வாதிட்டனர்.

அப்படியானால்  அரசாங்கத்தின் கெஜட் அறிவிப்பு உள்ளதா? எனக் கேட்டுள்ளனர். அது ரயிலே துறையிடம் இருக்க வேண்டுமே என காந்தியவாதிகள் சொல்லி உள்ளனர். எங்களிடம் அது இல்லை என இன்றைய அரசியல் நிலைமைக்கு ஏற்ப ரயில்வே கைவிரித்துவிட்டது. உயர் நீதிமன்றம் இது ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எனச் சொல்லவும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்களோ லோக்கல் மாவட்ட கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என நிராகரித்துவிட்டனர். அந்தப்படி மாவட்ட கோர்ட்டிலே வழக்கு நடக்கும் போது மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நோட்டீஸ் தந்து அதிரடியாக காந்திய அமைப்பை காலி செய்துவிட்டது.

இது குறித்து வாரணாசி மாவட்ட ஆட்சியரான ராஜலிங்கம் அவர்களை தொடர்பு எடுத்து பேசினேன். அதற்கு அவர், சார், இது என் லிமிட்டில் முடிவு எடுக்கும் விவகாரமல்ல. ரயில்வே துறை நிலத்தை மீட்டுத் தரக் கேட்டது! ஏற்கனவே அலகாபாத் கோர்ட் ரயில்வேக்கு சாதகமாகத் தான் ஆர்டர் கொடுத்துள்ளனர். ஆகவே, அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூசனை வைத்து அவர்கள் முயற்சித்தனர். அங்கு மனுவை நிராகரித்துவிட்டனர். வெறுமனே சேல் டீட் இருந்தால் போதாது. அவர்களுக்கு நிலம் தரப்பட்டதற்கான ஜீ.ஒ வேண்டும். அது இல்லையே! காந்திய அமைப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நானும் அறிவேன். ஆனால், ஒரு கவர்மெண்ட் சர்வண்ட்டான நான் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது என்றார்.

இதற்கிடையே காந்தியவாதிகள் வாரணாசி பிரதமர் தொகுதி என்பதால் அவரிடம் முறையிட முயற்சித்துள்ளனர். ஆனால், மோடி காந்தியவாதிகளை சந்திக்க மறுத்துவிட்டார்.

உத்திரப்பிரதேசத்தின் சர்வோதய அமைப்பு வட்டாரத்தில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் கூறியதாவது; இந்த நிலம் ரயில்வேக்கு முறைப்படி பணம் செலுத்தி பெறப்பட்டது. அதற்கான ஆவணங்களைத் தான் நாங்கள் காட்ட முடியும். அரசாங்க ஜீ.ஓ அவங்ககிட்ட கண்டிப்பாக இருக்கணும். அதை மறைக்கிறார்கள்! ஒரு காந்திய நிறுவனம் அரசு நிலத்தை ஆக்கிரமிக்காது. அதுவும் காந்தியின் சீடர் வினோபாவே பூமிதான இயக்கத்தை இங்கிருந்து தான் தொடங்கினார். அப்போது இந்தியா முழுக்க இருந்த பெரும் செல்வந்தர்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாகத் தந்தனர். அவற்றை நிலமற்ற ஏழை உழவர்களுக்கு தந்தது தான் இந்த இயக்கம். சில பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கு தர சில இடங்களில் அரசிடமே ஒப்படைத்து உள்ளோம். இந்த தேசத்தையே நேசிக்கும் நாங்கள் அரசின் எட்டு ஏக்கர் நிலத்தையா ஆக்கிரமிப்போம்..? இந்த திருட்டுப் பட்டம் அவமானகரமானது. இடம் தேவை என்றால், எடுத்துக் கொள்ளட்டும். ஒரு சின்ன இழப்பீட்டை கொடுத்து வெளியேறச் சொல்லி கேட்டு இருக்கலாம். அதுவும் தராவிட்டால் கூட எந்த வருத்தமும் இல்லை. இந்தப் பழிச் சொல் மிகக் கொடூரமானது.

வெளியே வீசப்பட்டுள்ள ஜெயப் பிரகாஷ் நாராயணன் போட்டோ

இது வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். மிகப் பெரிய வரலாற்று நிகழ்வுகள் இங்கே நடந்துள்ளன. இந்திராகாந்தி அம்மையார் எமர்ஜென்ஸியை அமல்படுத்திய போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் அன்றைய தேசியத் தலைவர்கள் கூடி பேசி போராரட்டங்களை முன்னெடுத்த இடமும் இது தான்! மீண்டும் இந்திரா பிரதமர் ஆன போது கூட, காந்திவாதிகளை பழிவாங்க நினைக்கவில்லை. இந்த இடத்தை பறிக்கத் துணியவில்லை.

ஆனால், பாஜக அரசு காந்தியக் கொள்கைகளை தனக்கு எதிரானதாக கருதுவதால் தான் இத்தனையும் நடக்கிறது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தை அழிக்க முயற்சித்து அதை சுற்றுலா தளமாக்க திட்டமிட்டு அங்குள்ளோரை வெளியேற்றினர். ஆனபோதிலும் அந்த இடத்தை ஆடம்பர சுற்றுலா பிரதேசமாக்கும் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை போட்டுவிட்டது. இந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியை அவர்கள் வாஜ்பாய் காலத்திலேயே எடுத்துவிட்டனர். இந்த கேம்பசில் உள்ள வித்தியாஸ்ரமத்திற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரை நிர்வாகியாக்கினார் வாஜ்பாய். அன்றிலிருந்தே பல குடைச்சல்களை தந்து எங்களை வெளியேற்றவும், இடத்தை அபகரிக்கவும் திட்டம் போட்டனர்.

இடையில் பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி வந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மோடி பிரதமரானதும் சர்வோதயாவுக்கு எதிராக அவர்கள் கோர்ட்டுக்கு சென்றனர். அரசாங்கம் அவர்கள் வசம் இருப்பதால் ஆவணங்களை ஒளித்து வைத்து ‘எங்களை ஆக்கிரமிப்பாளர்’ என அறிவிக்கிறார்கள். மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர். உத்திரபிரதேசத்தில் பாஜக தவிர்த்து அத்தனை அரசியல் கட்சிகளும் இந்த அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இடம் பறிபோவதால் காந்தியச் செயல்பாடுகள் தடைபடலாமே தவிர நிறுத்த முடியாது. காந்திய அடையாளங்களை இந்த தேசத்தில் இருந்து முற்ற முழுதாக அகற்ற முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் சாத்தியமில்லை. இன்னும் அதிக வீரியத்துடன் காந்தியச் சிந்தனைகளும், செயல்பாடுகளும் நடந்தே தீரும்” என்றனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time