அரிசி உற்பத்தியில் ஏன் இந்த வீழ்ச்சி..?

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவில் அதிக மக்களின் உணவாக அரிசி உள்ளது. அரிசி விளைச்சல் சமீபமாக வீழ்ச்சி அடைந்துள்ளது! இதனால், உள் நாட்டில் அரிசி பற்றாக்குறை நேருமோ…, அரிசி பற்றாகுறை என்பது அரசியல் வீழ்ச்சியாகிவிடுமே.. என்பதால், மத்திய பாஜக அரசு வெளி நாடுகளுக்கான அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. என்ன நடந்தது..?

இந்திய மக்களின் முக்கிய உணவான அரிசியில் பற்றாகுறை ஏற்பட்டு, அதன் மூலம் உள்நாட்டில் அரிசி விலை தாறுமாறாக ஆகுமானால், அது 2024 நாடளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தடுக்கவே முடியாத படுபயங்கர சரிவை உருவாக்கிவிடும்… என்ற பயத்தில் மத்திய பாஜக அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.!

உலகின் அரிசி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் அரிசி ஏற்றுமதியில் உலகில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது! உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் 42 சதவிகிதத்தை இந்தியா மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது பாசுமதி தவிர்த்த சாதாரண சாப்பாட்டு அரிசியின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு. இதனால், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பதற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் அரிசி வாங்க நீண்ட வரிசையில் மக்கள்!

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் புரவிஷன் ஸ்டோர்களில் அரிசி வாங்க நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்கும் காணொளிகள் பரவலாக வெளிவந்து கொண்டுள்ளன. அமெரிக்காவில் சென்ற மாதம் 10 கிலோ அரிசி 20 டாலர்களுக்கு (ரூ1,640) கிடைத்ததாம். அதுவே, தற்போது 40 டாலர்களுக்கு (ரூ3,280) உயர்ந்துவிட்டதாம்! அதுவும், நீண்ட வரிசையில் நின்றாலும் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 25 கிலோவிற்கு மேல் கிடையாதாம்..! அடுத்த மாதம் இதைவிட அதிகமாக விலை ஏறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்திய அரசு ஏற்றுமதி அரிசிக்கான தடையை சுலபத்தில் விலக்கிக் கொள்ளாது. அதற்கான சூழல்கள் தற்போது இந்தியாவில் இல்லை.

அரிசி உற்பத்தியில் வீழ்ச்சியா?

மத்திய மாநில அரசுகளின் விவசாயக் கொள்கைகள், கொள்முதல் விலை நிர்ணயம், நீர் மேலாண்மைக் கொள்கை.. ஆகியவற்றால் இந்திய விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் இயற்கை பேரிடர்களும், வறட்சியும் மாறி, மாறி தாக்குவது ஒருபுறமுமாக விவசாயம் இக்கட்டான நிலையில் தான் உள்ளது.

இந்தியாவில் வலிந்து திணிக்கப்பட்ட பசுமை புரட்சி இன்று இந்திய விவசாய நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பங்கை மலடாக்கிவிட்டது. இருக்கும் நிலத்தில் செய்யப்படும் விவசாயத்தில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக சுமார் 3,000 கிலோ அரிசி மட்டுமே எடுக்க முடிகிறது! இதுவே, இயற்கை விவசாயம் நடந்த காலகட்டத்தில் மண் வளமாக இருந்த காரணத்தால் 5,000 கிலோ அரிசி எடுக்க முடிந்தது! ரசாயன உரத்திற்கு மாறாமல் தங்கள் நிலத்தை பாதுகாத்தவர்கள் நிலங்களில் தற்போதும் 5,000 கிலோ நெல் எடுக்க முடிகிறது என்றாலும் கூட, இயற்கை விவசாயம் செய்பவர்கள் ஒரு சதவிகிதம் தேறுவதே அபூர்வம் என்ற நிலை தான் உள்ளது.

நம்மைவிட மிகக் குறைந்த நிலப்பரப்பில் தான் சீனாவில் நெல் பயிரிடப்படுகிறது என்றாலும், நம்மைவிட அதிக விளைச்சலை அவர்கள் எடுக்கிறார்கள்! காரணம், அங்கே ரசாயன உரப் பயன்பாடு மிகக் குறைவாக உள்ளதேயாகும்.

இந்தியாவில் ஒரு பக்கம் அதீத மழை, வெள்ளம் ஏற்படுகிறது. மறுபக்கம் வறட்சி நிலவுகிறது. நீர் மேலாண்மை, நீர் பகிர்வு ஆகியவற்றில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது. சென்ற ஆண்டு காரிப் பருவத்தில் மட்டுமே 12 மில்லியன் டன் அரிசி உற்பத்தி குறைந்து போனது. இதனால் அரிசி ஏற்றுமதிக்கு சென்ற ஆண்டே மத்திய அரசு 20 சதவிதம் வரிவிதித்தது. மேலும், கார்ப்பரேட்டுகள் விவசாயத்தை சுரண்டிக் கொழுக்கும் வண்ணமாகவே விவசாயக் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்படுகின்றன. உரங்களுக்கு கார்ப்பரேட்டுகளை சார்ந்து இயங்கும் நிலைக்கு விவசாயிகளை அரசாங்கம் தள்ளியுள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லொணா துன்பங்களை சந்தித்து தான் விவசாயம் செய்கிறார்கள். அரிசியை பொறுத்த அளவில், ‘விவசாயி வீழ்கிறான். வியாபாரி வாழ்கிறான்’ என்பதே இந்திய நிலைமையாகும்!

தமிழகத்தை பொறுத்த அளவில் அரிசி ஒரு அரசியல் கருவியாக்கப்பட்டது தான் விபத்தாகும். முதலில் ஒரு கிலோ ரூ 2 என்றாகி பிறகு முற்றிலும் இலவசமானது. அரிசி அரசியல் அதிகாரத்தை பிடிக்கும் சூத்திரமாக்கப்பட்டது. அரிசியை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு தரும் ஒரே மாநிலமாக தமிழகம் தான் உள்ளது! சொந்த மண்ணில் விலையில்லாமல் போகும் ஒரு பயிரை விளைவிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு சற்று காலம் ஆர்வம் குறைந்து போனது. மேலும், காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்காதது ஒருபுறமென்றால், நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் தருவதில்லை என்பது மற்றொரு கொடுமையாகும். இதனால், அரிசி உற்பத்தியில் முன்னணியில் இருந்த தமிழகம் தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் தமிழகத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்கிறது. நம்மை காட்டிலும் சிறிய மாநிலமான தெலுங்கானா தமிழகத்தை விடவும் 50 சதவிகிதம் அதிகமாக அரிசி உற்பத்தி செய்கிறது.

தமிழகத்தின் மொத்த அரிசித் தேவை 91 மெட்ரிக் லட்சம் டன்கள்! ஆனால், உற்பத்தியாவதோ வெறும் 72 மெட்ரிக் லட்சம் டன்கள் தாம்! ஆகவே, பற்றாகுறையை நாம் ஆந்திரா, கேரளம் கர்நாடகம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து கையேந்தி வாங்கித் தான் சமாளிக்கிறோம்.

தமிழக அரசு வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களுக்கும் லாபகரமான விலையை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்துவது, கொள்முதல் செய்வது போன்றவற்றை மேற்கொள்ளாததால், தமிழக விவசாயிகள் அவற்றை சாகுபடி செய்வதில் விருப்பம் காட்டாமல் நெல் சாகுபடி செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் நெல் விளைச்சல் சற்று அதிகமாகி உள்ளது  உண்மை தான் என்றாலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை மணிக்கணக்கிலும், நாள் கணக்கிலும் காக்க வைப்பது, மூட்டைக்கு முப்பது முதல் நாற்பது ரூபாய் வரை லஞ்சம் வாங்குவது ஆகியவை நெல் விவசாயிகளை பெரும் சோர்வுக்கு உள்ளாக்குகிறது. இத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்காத காரணத்தால், ஆண்டுதோறும் பல்லாயிரம் மூட்டை நெல் மணிகள் வீணாகின்றன.

மேற்படி குறைகள் யாவும் சரி செய்யப்படும் பட்சத்தில், இந்த உலகத்திற்கே இந்தியா சோறு போடக் கூடிய தகுதியைக் கொண்டதாக இருக்கும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time