மனுநீதிச் சோழனின் மனுதர்மத்தை ஏற்பதா?

-பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

மனுநீதிச் சோழன் செய்தது நீதியா? அநீதியா? ஒரு அநீதியைக் கூட, நீதி போல சித்தரிக்கும் சூழ்ச்சியை செய்தவர்கள் யார்? உண்மையான பின்னணி என்ன..? நவீன மானுடகுல நீதி பேசுவோர்கள் நிச்சயம் இந்த மாற்றுச் சிந்தனையை பரிசீலிக்க வேண்டும்..!

இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தின் சிற்பி அம்பேத்கர் படங்கள் தமிழக நீதிமன்றங்களில் இருப்பது குறித்த சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. தேசத் தந்தை காந்தி, தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான தெய்வப் புலவர் திருவள்ளுவர் படங்களோடு, அம்பேத்கர் படமும் இருக்க வேண்டும் என்ற குரல் வலுப்பட்ட காரணத்தால், தமிழக அரசின் விருப்பமாகவும் இருந்ததால் அம்பேத்கர் படமிருக்கும் சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஏற்றுக் கொள்ள முடியாத நீதியின் சின்னமாக விளங்குகின்ற  மனுநீதி சோழன் சிலை குறித்த சர்ச்சை போதுமான கவனம் பெறாமல் போனது துர் அதிர்ஷ்டமே!.

தமிழ் இலக்கியங்களில், திருவாரூரில் இருந்து கொண்டு சோழநாட்டை ஆண்ட மனு எனும் பெயர் கொண்ட அரசன், பசுவின் கன்று தன் மகன் ஓட்டி சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்து விட்டது என்பதற்காக தன் மகனை தானே தன் தேர்க்காலில் கிடத்தி கொன்று தாய் பசுவுக்கு நீதி வழங்கியதாக கூறுகின்றன. ஆனால், இதற்கு வரலாற்று சான்று என எதுவும் இல்லை.

இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம்  கிமு 205 இருந்து 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த எல்லாளன் எனும் தமிழ் சோழமன்னனை மனுநீதி சோழனாக கூறுகிறது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாக இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவன்.

எல்லாளனின் ஆட்சியில் நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டை வாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒளி  எழுப்பினால், மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான். எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும்  இருந்தனர். மகன் பெயர் வீதிவிடங்கன்.

ஒருநாள் ஊரை உலாவர எல்லாளனின் மகன் பயணப்பட்ட போது வழியில் ஒரு கன்று துள்ளி ஓடி பாதையை கடக்க முயன்றது. திடீரென்று கன்று பாதையின் குறுக்கே வந்ததால், தேர் சக்கரம் கன்றின் மீது ஏறி கன்று அந்த இடத்திலேயே இறந்து போனது. கன்றை இழந்த தாய்ப்பசு எல்லாளன் கோட்டையில் இருந்த ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து நீதி கேட்டதாம். தாய் பசுவிடம் நடந்ததை கேட்டறிந்த எல்லாலன் தாய்ப் பசு படும் துயர் போல தானும் அந்த துயரத்தை அனுபவிக்க வேண்டும். அதுதான் சமநீதி.  அந்த சம நீதியை வழங்க தன் மகனை தானே தேர்க்காலில் ஏற்றிக் கொன்றான்’ என்று மகாவம்சம் கூறுகிறது.

எல்லாளனின் சம நீதியை பறைசாற்ற மகாவம்சத்தில் இது போன்ற வேறு சில கதைகளும் உண்டு. பாம்பு,பறவையெல்லாம் மன்னனிடம் நீதி கேட்டதாக சொல்லப்படுகிறது. இது போல ஒரு வயதான பாட்டி வீட்டு வெளியில் வெயிலில் அரிசி காய வைத்துக் கொண்டு இருந்தபோது, திடீரென்று மழை பொழிந்து அரிசி முழுவதுமாக அழிந்து போகிறதாம். அந்த வயதான கிழவி எல்லாளனிடம் ஆராய்ச்சி மணி அடித்து முறையிடுகிறாள். எல்லாலன் வருணபகவானிடம்  வேண்டி வாரத்திற்கு ஒருமுறை மட்டும் மழை பெய்யும்மாறு செய்கிறான். இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

மேல் கூறிய நிகழ்வுகளில் இருந்து நமக்கு தெரியவருவது மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஒருவன் வாழ்ந்தான் என்பதற்கான எந்த சரித்திர சான்றும் இல்லை. அவன் பசுவிற்கு நீதி வழங்க தன் மகனை  கொன்றதற்கு எந்த சான்றும் இல்லை. எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டான் என்பதற்கு சரித்திர சான்றுகள் உள்ளன. ஆனால் பசு மாட்டிற்கும், பறவைக்கும் நீதி வழங்கிய கதைகள் உண்மையாக நடந்திருக்க வாய்ப்பில்லை. சாத்தியமும் இல்லை. அவையாவும் புனையப்பட்ட கதைகள்.அந்த காலங்களில் நல்ல கருத்துக்களை மக்களிடம் சொல்வதற்கு கதைகளை புனைந்து கூறுவது உண்டு. ஆனால், சில சமயங்களில் அநீதிகளையும் கூட, சிலர் புனை கதைகள் மூலம் பரப்புவதுமுண்டு.

மனுநீதி சோழன் கன்றை தன் மகன் கொன்றதற்காக தேர்க்காலில் தன் மகனை தானே ஏற்றி கொன்றதற்கு வேறு ஒரு கதையும் வழக்கில் உண்டு. ஒரு முறை சோழநாட்டு இளவரசன்  அந்தணர்கள் வாழும் தெருவில் தன் தேரை ஓட்டி கொண்டு செல்லும் போது, அந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கன்றின் மேல் ஏற்றி விடுகிறான். அந்தக் கன்று அங்கேயே இறந்து விடுகிறது. இதற்கு நீதி கேட்டு அந்தணர்கள் அரசனிடம் முறையிடுகின்றனர். ”இளவரசனால் பசுங்கன்று கொல்லப்பட்டதால் மகாபாவம் வந்துவிட்டது, நாட்டிற்கு ஆபத்து” என்கின்றனர். ”அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? ” என்று அரசர் அந்தணர்களிடம் கேட்கிறார்.

அதற்கு அந்தணர்கள், ”பசுவின் கன்றை தேர் ஏற்றி இளவரசன் கொன்றது போல், இளவரசனையும் தேர்க்காலில் ஏற்றி கொன்று விட்டால் பழி தீர்ந்து , பாவம் தொலைந்து விடும்” என்று ஆலோசனை கூறுகின்றனர். அரசனும் அவ்வாறே தன் மகன் இளவரசனை தேர்க்காலில் ஏற்றி கொன்று விடுகிறானாம்…!

இந்தக் கதை ஓரளவு நம்பும் படியாக உள்ளது. முதலாவதாக, இதில் குற்றம் செய்தவன் மனிதன். நீதி கேட்டவர்கள் மனிதர்கள். நீதி வழங்கியது மனிதன். எனவே, இப்படி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மற்ற  கதைகளில் நீதி கேட்பது பசு, பறவை போன்றவை, ஒரு கதையில் நீதி வழங்குவது வருண பகவான்.

மனுநீதி சோழன் அளித்ததாக கூறப்படும் இந்த அநீதியான தீர்ப்பிலும் ஒரு நீதியை கண்டுபிடிக்கின்றனர். அதாவது, மனுநீதி சோழன் நீதி தவறாதவன் எல்லா உயிர்க்கும் சமமான நீதியை வழங்க கூடியவன், தன் மகனே என்றாலும் எல்லா உயிர்க்கும் போல் அவனுக்கும் தண்டனை கொடுப்பவன் என்பதாகும்.

பொது நீதி என்பது அது சம்பந்தப்பட்ட ஒரு தனி நபர் உரிமைக்கான நீதியோடும் பொருந்திப் போக வேண்டும். அதேபோல் தனி மனிதனுக்கான நீதி, பொது  நீதியோடு பொருந்திப் போக வேண்டும். மனுநீதி சோழன் தன் வாழ்நாளில் இந்த பசுமாட்டிற்கு நீதி வழங்கியது போல் பல சம்பவங்களுக்கும் நீதி வழங்கி இருந்தால்.. கற்பனை செய்வதற்கே அச்சமாக உள்ளது..!

ஒரு சம்பவத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒருவன், தன் பக்கத்து வீட்டுக்காரன், தான் ஊரில் இல்லாத போது தன் மனைவியை கற்பழித்து விட்டான், இதனால், ‘இதுவரை பத்தினியாக இருந்த என் மனைவி பத்தினி தன்மையை இழந்து விட்டாள். அதனால், என் மனைவி பத்தினித் தன்மை இழந்ததால் நான் எவ்வளவு துன்பம்  அடைகிறேனோ, அதே போல் என் பக்கத்து வீட்டுக்காரனும் அவன் மனைவி பத்தினித் தன்மை இழந்து துன்பப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஆராய்ச்சி மணியை அடிக்கிறான். இந்த வழக்கிற்கு மனுநீதி சோழன் என்ன தீர்ப்பை  வழங்குவான்? .

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த போது  என் மனைவி முதன்முதலாக மனுநீதி சோழன் சிலையை பார்த்தார். என் குழந்தைகள் அந்த சிலை அருகே விளையாட சென்ற போது, என் மனைவி தன்னையும் அறியாமல், ”ஐயோ! அவன் தான் பெற்ற பிள்ளையையே கொன்றவன், அங்கே போகாதீர்கள்…”  என்று பிள்ளைகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்து சென்று விட்டார். பிறகு அவர் என்னிடம், ”மனுநீதி சோழன் சிலை ஒரு அநீதியின் சின்னம். அதை எப்படி உயர் நீதிமன்றத்தில் நிறுவியுள்ளனர்? நான் அந்த சிலையை உயர்நீதிமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடுக்க போகிறேன்” என்றார்.

குடியரசு தின ஊர்வலத்திலும்..!

2013 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் திரு. ஆர். கே. அகர்வால் அவர்கள், ஒரு நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மனுநீதி சோழன் சிலையை கடந்து சென்றார். அந்த சிலையை பார்த்த அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் தன் நண்பர்களிடம் அந்த சிலையை பற்றி கேட்கிறார்.

அவர்கள் அது மனுநீதி சோழன் சிலை என்றும், அவன் 2000 ஆண்டிற்கு முன்பு சோழ நாட்டை ஆண்டவன் என்றும் கூறுகின்றனர். மேலும், அவன் கன்றை இழந்த பசுவிற்கான நீதியை வழங்கியவன் என முழுமையாக கதை சொல்லி  விளக்கம் அளித்தனர். மனுநீதி சோழனின் கதையை கேட்ட நீதிபதி அகர்வால் மனுநீதி சோழன் நீதி தவறாதவன் என்று வியப்பில் ஆழ்ந்தார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள இந்த மனுநீதி சோழனின் சிலையை முதல் முறையாக நான் பார்த்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நீதிபதி அகர்வாலுக்கு ஏற்பட்டதுபோல் எனக்கு வியப்பு ஏற்படவில்லை. எனக்கு விழிப்புணர்வே ஏற்பட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை பின்னால் பார்ப்போம்.

என் மனைவி வழக்கறிஞர்  கோ.பிரவீனா அவர்கள்  2014ஆம் ஆண்டு, ‘உயர் நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள மனுநீதி சோழன் சிலையை அகற்ற வேண்டும்’ என்று ஒரு பொதுநல வழக்கை தொடுத்தார். இந்த வழக்கு  சம்பந்தமாக அவர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், ‘நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன் முதலில் மனுநீதி சோழன் சிலையை கடந்து சென்றபோது அந்த சிலையை பார்த்ததும் மனுநீதிசோழன் ஒரு சிறுவனை தன் தேர்க்காலில் ஏற்றி கொலை செய்யும் செயலை கற்பனை செய்து பார்த்து  அதிர்ச்சிக்கு உள்ளானேன். இந்த சிலை அநீதியின் சின்னம் எனவே இந்த சிலையை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இளவரசன் தன் கன்றை தேர் ஏற்றி கொன்று விட்டான் என்று நீதி கேட்ட பசுமாட்டிற்கு தன் கன்றை இழந்து வாடும் பசு போல் தானும் தன் மகனை இழந்து வாட வேண்டும், அதுதான் சரியான நீதி என்று தன் மகனை இளவரசனை தானே தன் தேர்க்காலில் ஏற்றி கொன்று நீதி வழங்கியதாக இந்த கதை கூறுகிறது. இதனால் மனுநீதி சோழன் நீதியின் சின்னமாக கருதப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் அவனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஒரு பசுங்கன்று இளவரசன் தேர்க்காலில் தெரியாமல் அடிபட்டு இறந்து போனதற்கு இளவரசனை தேர்க்காலில் வைத்து கொடூரமாக மனிதாபிமானம் இல்லாமல் கொள்வது என்பது ஏற்கவே முடியாத அநீதியாகும்.

இது திடீரென்று பசுங்கன்று குறுக்கே ஓடி வந்ததால் ஏற்பட்ட விபத்து. இதற்கு எப்படி ஒரு அரசன் மரண தண்டனை கொடுக்க முடியும்? பசுங்கன்று குறுக்கே ஓடி வந்ததால் ஏற்பட்ட விபத்திற்கு தேரை ஓட்டியவன்  மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும்? இளவரசன் வேண்டுமென்று கன்றை கொடுமைப்படுத்தி கொலை செய்யவில்லை. இதற்கு எப்படி மரண தண்டனை கொடுக்க முடியும்?இது திடீரென்று பசுங்கன்று குறுக்கே ஓடி வந்ததால் ஏற்பட்ட விபத்து. இதற்கு எப்படி ஒரு அரசன் மரண தண்டனை கொடுக்க முடியும்? பசுங்கன்று குறுக்கே ஓடி வந்ததால் ஏற்பட்ட விபத்திற்கு தேரை ஓட்டியவன்  மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும்? இளவரசன் வேண்டுமென்று கன்றை கொடுமைப்படுத்தி கொலை செய்யவில்லை. இதற்கு எப்படி மரண தண்டனை கொடுக்க முடியும்?

இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான வாழ்வு உரிமையை பாதிக்கும் இந்த தீர்ப்பு எப்படி சரியான நீதியாகும்? நீதி கேட்டு வந்த பசுவிற்கு சிறுவனை கொன்று  மனு நீதி சோழன் நீதி வழங்கினான் என்றால், சிறுவனின் தாய் நீதி கேட்டு வந்தால், யாரைக் கொல்வது?

இந்த கதையில் எந்த நீதியும் இல்லை. மனுநீதி சோழன் சிலை, இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான (ஆர்டிகள் 14, 21)  சட்டத்தின் முன் எல்லோரும் சமம், வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது. எனவே,  மனுநீதி சோழன் சிலையை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்ற உத்தரவிட்டு நீதி வழங்குமாறு கோ. பிரவீனா அவர்கள் தன் பிரமாணப் பத்திரத்தில் கோரியிருந்தார்.

வழக்கறிஞர் கோ.பிரவீனா

மனுநீதி சோழன் சிலையை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என என் மனைவி தொடுத்த பொதுநல வழக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி  அப்போது  தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் திரு. சதீஷ் அக்னிஹோத்ரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுநீதி சோழன் சிலையை அகற்ற கோரி தொடுத்த பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2014 ஆம் ஆண்டு என் மனைவி கோ.பிரவீனா அவர்கள் மனுநீதி சோழன் சிலையை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்ய சென்ற அன்று நானும் அவருடன் சென்றேன்.  மனுநீதி சோழன் சிலை தெற்கு வாசல் வழியில்  உள்ளது. அங்குதான் வழக்கை தாக்கல் செய்யும்  அலுவலகப் பிரிவு உள்ளது.

இந்த சிலையை என் மனைவி கோ.பிரவீனா அவர்கள் பார்த்த போது ஒரு தாய் என்ற முறையில், ‘நீதி என்ற பெயரால் தான் பெற்ற மகனையே கொல்கிறானே மனுநீதி சோழன்’ என்று அதிர்ச்சி அடைந்தார்.  மனுநீதி சோழனின் சிலை முதன்முதலாக நான் பார்த்தபோது சில வினாடிகள் அதை உற்று பார்த்தேன், அதை பார்க்கப் பார்க்க நான் விழிப்புணர்வு அடைந்தேன்.

ஐந்தறிவு படைத்த பசுமாடு கன்று இறந்ததற்கு நீதி கேட்டது என நான் நம்பினால் நான் ஒரு முட்டாள். நான் அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், முட்டாள் இல்லை.  ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த போது, அவர்களுக்கு இருந்த ஒரே உடைமை மாட்டு கூட்டம் தான். அவர்கள் பசுவை தெய்வமாக கருதுவார்கள். தங்களுடைய சொத்தான பசுமாட்டிற்கு, அதன் உயிருக்கு ஒரு ஆபத்து என்றால், அது அரசனின் மகனே ஆனாலும், அவன் தலை உருளும். இது தான் அவர்களுக்கு வேண்டிய நீதி. இதைத்தான் இந்த கதையின் மூலம் அவர்கள் நிலைநிறுத்த விரும்புகின்றனர்.

எனக்கு இந்த விழிப்புணர்வு வந்தவுடன் நான் நினைப்பது சரியா, தவறா என்று சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் சிலை இருக்கும் இடம் சென்னை உயர் நீதிமன்ற வளாகம். இங்கு 50 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருந்தால் அதில் குறைந்தபட்சம் 40 நீதிபதிகளாவது தமிழர்களாக இருப்பார்கள். அப்படி இருக்க எனக்கு வந்த இந்த விழிப்புணர்ச்சி மாதிரி அவர்களுக்கு எதுவும் தோன்றி இருக்காதா?அதுவும் மனுநீதி சோழன் சிலை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ளது.

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நான் இதுபற்றி பலரிடம் பேசினேன். குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த தமிழரல்லாத என் நண்பர்கள், என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் மனு நீதி சோழன் கதையை கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள  சிலையையும் கூறி அதைப் பற்றி என்னுடைய புரிதல் என்ன என்பதையும் கூறினேன். எல்லோரும் என் புரிதலை ஏற்றார்கள். பசுவை பாதுகாக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு நீதி கதை இது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். யோசித்துப் பார்க்கும் போது, இன்றைக்கும் பசுவின் பெயரால் பல படுகொலைகள் அரங்கேறுகின்றன! இதற்கான மூலம், இங்கே மனு நீதி சோழன் கதையை கட்டமைத்ததில் இருந்து தொடங்குவதாகத் தோன்றுகிறது.

கட்டுரையாளர்; பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

துணை ஆணையாளர்

சரக்கு மற்றும் சேவைவரித் துறை

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time