ஜனநாயகத்தைக் கண்டே அஞ்சும் பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றம் தொடர்ந்து விவாதிக்கவே வாய்ப்பின்றி முடங்கியுள்ளது! நாடாளுமன்றத்தைக் கண்டு இவ்வளவு அச்சப்படும் ஒரு பிரதமரை இதற்கு முன் இந்திய வரலாறே  கண்டதில்லை. இந்த அமளிகளைச் சாதகமாக்கி, இத்தனை சட்டவிரோத மசோதாக்கள் நிறைவேறுகின்றனவே..!

ஒரு அரசாங்கம் தன் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விளக்கி தன்னை வெளிப்படுத்த வேண்டிய இடம் நாடாளுமன்றம். ஆனால், அங்கே வருவதற்கே பயப்படும் பிரதமராகத் தான் மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாள் மற்றும் கடைசி நாட்களில் மட்டுமே அவர் கலந்து கொள்கிறார். முதல் நாள் பெரிதாக விவாதம் நடக்க வழியில்லை. கடைசி நாளும் விபரமாக விவாதிக்க வழியில்லை. இந்த வகையில் வெறும் ஒரு அட்டனன்ஸ் தந்து தன் இருப்பை தக்க வைத்துக் கொள்வதோடு, தப்பித்து விடுகிறார்.

இது ஜனநாயகத்தின் மீதான அவரது அச்சத்தை மட்டுமல்ல, தன் சுயத்தின் மீதே அவருக்குள்ள அச்சத்தையே காட்டுகிறது! தன்னைத் தானே வெளிப்படுத்த துணியாதவர், ஜனநாயக அமைப்பின் மீதே மரியாதை இல்லாதவர்.. எப்படி நாட்டுக்குத் தலைவராக இருக்க முடியும்…?

குஜராத் இஸ்லாமிய படுகொலைகளை மிஞ்சும் வகையில், மணிப்பூரில் குக்கி பழங்குடிகளை மைத்தி இனத்தவருக்கு வெறியூட்டி, அரசு ஆதரவையும், ஆயுதத்தையும் நல்கி, பாஜக அரசு நடத்தியுள்ளது என்பதை அந்த மாநிலத்தின் குக்கி இன பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளனர்.

வெளியான ஒரே ஒரு காணொளிக்கே உலகம் இவ்வளவு அதிர்ந்துள்ளது! ஆனால், இது போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் அங்கு நடந்த செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. காங்போக்பி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை கூட்டுப் பாலிலியல் பலாத்காரம் செய்து, மிகக் கொடூரமாகத் தாக்கி, சம்பவ இடத்திலேயே கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், இந்த கொடூரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ளன. இதில் இருந்தே இது போன்ற வன்முறைகளை அரசே ஊக்குவிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும், முன்னதாக இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஒரு கூட்டத்தாரால் அழைத்து வரப்பட்டும் காணொளி வெளியானதில் பெரும் பதற்றத்துக்குள்ளான மத்திய பாஜக அரசு, அந்தக் காணொளியை வெளியிட்டது யார் என்பது தொடர்பாக கண்டறிய சி.பி.ஐயை முடுக்கிவிட்டுள்ளது. ஆக, குற்றங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அதை அம்பலப்படுத்துவோர் மீது பாய்ந்துள்ளது பாஜக அரசு!

ஆக, இவ்வளவு கொடூரங்களுக்கு பின்புலமாக தங்கல் ஆட்சி உள்ளதால்  நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு ஒத்துக் கொண்டு ஏதாவது குண்டக்க, மண்டக்கப் பேசியோ அல்லது பதில் சொல்ல திரானியில்லாமல் திணறியோ அம்பலப்பட்டுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்கட்சிகள் வலியுறுத்தியும் கூட பிரதமர் ஓடி ஒளிகிறார். இந்த முறை ஏதேனும் வெளி நாட்டில் பயணப்பட்டால், அங்கே உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் மணிப்பூர் குறித்த கேள்விகள் வெளிநாட்டு ஊடகங்களால் எழுப்படும் என்பதால், அதையும் தவிர்த்து உள்ளுருக்குள்ளேயே மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்.

”பிரதமர் வர வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள். இதோ நான் இருக்கிறேன். என்னிடம் கேளுங்கள்” என்றார் அமித்ஷா.

இதற்கு பதில் அளித்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “மணிப்பூர் விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் சபைக்கு வந்தால், வானம் இடிந்து விடாது. உலகம் முழுவதும் – ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வரை, இது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இது உள்துறை அமைச்சகத்துக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. எனவே, பிரதமர் மோடி அவசியம் அவைக்கு வரவேண்டும்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது மைக்கை ஆப் செய்து விட்டனர். பல தடைகளுக்கு இடையிலும் நாக்கை பிடுங்கி நாண்டுக்கிற மாதிரி எதிர்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பினர். மக்களவையில் ஓம் பிர்லாவும், மாநிலங்கள் அவையில் ஜெகதீப் தன்கரும் சர்வாதிகாரமாக நடந்து அனைத்தையும் சமாளித்தனர். ஆம் ஆத்மி உறுப்பினர் ஒருவரை கூட்டத் தொடர் முழுவதற்குமாக தடை செய்துவிட்டனர். நமது தமிழக எம்.பிக்கள் ஒரு நாள் கறுப்பு உடை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஓம் பிர்லா, ஜெகதீப் தன்கர்

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது. இதனால், அவர்கள் ஆட்சி கவிழ்ந்துவிடாது என்ற போதிலுமே கூட, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவே எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

26 எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற பேனரின் கீழ் இயங்க ஆரம்பித்துள்ளதானது பாஜகவை எந்த அளவுக்கு அச்சப்படுத்தியுள்ளது என்பது தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அம்பலப்பட்டுவிட்டது.

மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி நரேஷ் பன்சால், “இந்தியா என்கிற பெயர் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது. அரசியல் சாசனத்திலிருந்து இந்த பெயர் நீக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 1வது பிரிவை திருத்தியமைத்து நாட்டிற்கு ‘பாரதம்’ என பெயர் வைக்க வேண்டும். இந்தியா என்ற பெயரைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார். உலக அரங்கில் பாரதம் என்றால் யாருக்கும் தெரியாது. இந்தியா என்றே நம் நாடு உலகில் அறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11 வரை நடக்கும் நிலையில், ‘மணிப்பூர் மக்களைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் சொல்லும் நோக்கில் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள்  அம்மாநிலம் செல்வார்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அவர்கள் மணிப்பூரில் மக்களை சந்திப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எதிக்கட்சிகளின் கடுமையான அமளியைப் பயன்படுத்தி மக்கள் விரோத மசோத்தாக்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது தான் கொடுமையிலும்,கொடுமை!

வனப் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா (வனப் பகுதிகளை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க)

மாநிலங்களுக்கான கூட்டுறவு சங்க மசோதா

உயிரியல் பன்முகத்தன்மை சட்டத் திருத்த மசோதா

சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் பட்டியல் திருத்த மசோதா

ஹிமாச்சல பிரதேசத்தில் சில சமூகங்களுக்கு பழங்குடியின அந்தஸ்த்து தரும் மசோதா ( இதனால் அங்கு என்ன கலவரம் ஏற்படுமோ..?)

காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றபட்ட பல சட்டங்களை நீக்கும் மசோதா

ஜம்மு காஷ்மீர் பழங்குடியின சட்ட திருத்த மசோதா

ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா

திரைப்பட திருட்டு தடுப்பு மசோதா

கிரிமினல் குற்றங்களை அணுகும் ஜன் விஸ்வாச மசோதா

சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறை திருத்தம்) மசோதா 2023,

தேசிய செவிலியர் மற்றும் மருத்துவர் ஆணைய மசோதா 2023,

தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா 2023

இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா

தபால் சேவைகள் மசோதா,

பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா,

சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா,

தற்காலிக வரி வசூல் மசோதா,

தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா,

தேசிய பல் ஆணைய மசோதா,

மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா,

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா,

பத்திரிகை பதிவு மசோதா

இந்தப் பட்டியலில் முதல் ஒன்பது மசோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்றவையும் இந்த அமளியைப் பயன்படுத்தி, விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை.

இதே போலத் தான் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவிய போது அதிரடியாக விவாதங்களின்றி ஒரிரு நிமிடங்களில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ‘வாழ்க ஜனநாயகம்’!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time