என்எல்சியும், அரசியல் கட்சிகளின் நாடகங்களும்!

-சாவித்திரி கண்ணன்

இன்னும் ஓரிரு வருடங்களில் அதானிக்கு தாரைவார்க்கவுள்ள என்.எல்சிக்கு விளை நிலத்தை தாரை வார்க்க, அரசியல் கட்சிகள் ஆடும் நாடகங்கள்  அசத்தலானவை!  நேரத்திற்கு ஒரு பேச்சு! காலத்திற்கேற்ப ஒரு கோலம்…! அரசியல் என்பதே மக்கள் ரத்தம் உறிஞ்சும் வேட்டைக் களமோ..?

சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடான – அதிக செலவு ஏற்படுத்தும் – நிலக்கரி மூலமான மின் உற்பத்தி வழக்கொழிந்து வரும் வேளையில், என்.எல்.சி விரிவாக்கம் எதற்கு என்பதே புரியாத புதிராக உள்ளது. நிலம் தான் நமது மூலாதாரம். இந்த நிலம் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக பல தலைமுறைகளுக்கு சோறு போட்டு வாழ்வளித்து வருகிறது. ஆனால், ஒரு நிலக்கரி சுரங்கம் 35 ஆண்டுகளில் அந்த நிலத்தின் ஒட்டுமொத்த  உயிர்துடிப்பையும் அழித்து, அந்த நிலத்தை எதற்குமே பயனற்றதாக்கி விடுகிறது! முதல் சுரங்கத்திற்காக கொடுத்த 37,256 ஏக்கர் நிலங்கள் தற்போது முற்றிலும் பாழ்பட்டுப் போயுள்ளது!

அந்த 37,256 ஏக்கர் நிலங்களை தந்த 25,000 குடும்பங்கள் எத்தனை தலைமுறைகளாக அவற்றில் பசியாறி வந்தனர். அதில் எத்தனை லட்சம் விவசாயக் கூலிகளின் வாழ்வாதரமாக இருந்துள்ளது! அதில் விளைவித்த நெல்மணிகளும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவையும் பரந்துபட்ட தமிழ் சமூகம் அனைத்திற்கும் தானே உணவாக இருந்தன. இனி அவை இல்லை என்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இன்றைக்கு மின் உற்பத்தி செய்வதற்கு சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத காற்றாலைகள், சூரிய மின் உற்பத்தி ஆலைகள்..என பல மாற்று வாய்ப்புகளை நாம் அடையாளம் கண்டு, அபரிமிதமாக மின் உற்பத்தி செய்து வருகிறோம். அப்படி இருக்க, ‘தமிழகத்திற்கு என்.எல்.சியின் சேவை போதும்’ என தமிழ்நாட்டு அரசு முடிவு எடுக்கலாமே! இத்தனைக்கும் இன்றைக்கு ஆட்சி செய்யும் திமுக, கடந்த காலங்களில் என்.எல்.சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய கட்சி தானே!

பாழ்பட்டு எதற்கும் பயனற்ற என்.எல்.சி யின் கைவிடப்பட்ட முதல் சுரங்கம்.

2002 ஆம் ஆண்டே என்.எல்.சியை தனியார்மயமாக்க  வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டு காய் நகர்த்திய போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தியது. ஆனால்,  தற்போதைய மோடி அரசோ நாடாளுமன்றத்திலேயே என்.எல்.சியை தனியாருக்கு தரவுள்ளதாக அறிவித்த நிலையில் தான், இத்தனை அக்கிரமங்களும் நடந்தேறி வருகிறது.

நிலக்கரி மூலமான எடுக்கும் அனல் மின்சாரம் என்பது அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பான வழிமுறையாகும். தற்போதோ நிலக்கரி மூலமான மின் உற்பத்தி அனேகமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் வழக்கொழிந்துவிட்டது! காரணம், புவி வெப்பமயமாதலுக்கு அதிக அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் தான். அதிலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால், சுற்றுச்சூழலுக்கு அதிக தீமையானது. புவி வெப்பமடைதலைத் தடுக்க  நிலக்கரி அனல் மின் நிலையங்களை இனி ஊக்குவிக்கப் போவதில்லை என இந்திய அரசு சர்வதேச சுற்றுச் சூழல் மாநாடுகளில் வாக்குறுதிகளை அள்ளி இறைத்துள்ளது!

இன்னும் ஓரிரண்டு வருடங்களில் யாரோ அம்பானி அல்லது அதானிக்கு தரவுள்ள ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிகாக மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து, முழு அதிகார பலத்தையும் பயன்படுத்தி விவசாய நிலங்களை பறிப்பது என்ன நியாயம்?

ஆனால், ஒன்று! இதில் எல்லா அரசியல் கட்சிகளும் நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுகின்றன!

மோடி ஸ்டைலில் ஸ்டாலின்;

அதிமுக ஆட்சியில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்திய போது, ஸ்டாலின் ஆவேசம் கட்டினார்!  ‘அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் கொத்தடிமையாக மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி தருவதாகப்’ பேசினார். ”நியாயப்படி ஒரு ஏக்கருக்கு விவசாயிகளுக்கு ஒரு கோடி இழப்பீடு தர வேண்டும். என்.எல்.சியில் ஏன் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது..?’’ என்றார்.

இப்போதும் வேலை மறுக்கப்பட்டு தான் வருகிறது. 99 சதவிகித அதிகாரிகள், பொறியாளர்கள் பணி வட மாநிலத்தவருக்கே தரப்படுகிறது. அடித்தட்டு வேலைகளுக்கு கூட வட மாநிலத்தவருக்கு கணிசமான வாய்ப்புகள் தரப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு கொந்தளிப்பு நிலையிலும் ஸ்டாலின், மோடி ஸ்டைலில்  என்.எல்.சி பிரச்சினை குறித்து பேசவே இல்லை. மோடியாவது மணிப்பூர் விவகாரத்தில் 78 நாட்கள் கடந்து வாய் திறந்தார். ஆனால், ஸ்டாலின் இரண்டேகால் வருஷமாக தனக்கு சம்பந்தமில்லாத ஒன்று, எங்கோ நடப்பதை போல பாவனை காட்டி வருகிறார்

எடப்பாடி பழனிச்சாமியின் நடிப்பு;

தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்; கடலூர் மாவட்டத்தில், நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காமல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல், தற்போது விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற என்.எல்.சி. நிறுவனத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான காவல் துறையினர் துணையுடன் மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி, விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் செயலுக்கு துணை போகின்ற விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது விடியா திமுக அரசின் முதலமைச்சரானவுடன் ஒரு நிலைப்பாடு. மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்எல்சி விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். இது தான் திராவிட மாடல் அரசு.

இப்படி ஸ்டாலினை வெளுத்துக் கட்டிய எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசை நோக்கி எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல், ஏதோ என்.எல்.சி நிறுவனம் பாஜக அரசுக்கு சம்பந்தப்படாததைப் போல,‘’பிரதமர், மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவைகளைப் பெருக்குவோம்; இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரித் தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும்’’ என்கிறார்.

பாமகவின் பகல் வேஷம்;

எங்களது நோக்கமே என்எல்சியின் பிடியில் இருந்து, கடலூர் மாவட்டம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான். என்எல்சி நிறுவனம் 1956 ல் தொடங்கப்பட்ட போது கடலூரில் நிலத்தடி நீர் 8 அடியில் இருந்தது. இன்றைக்கு நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு போயிருக்கிறது. இதற்கு ஒரே ஒரு காரணம் என்எல்சி நிர்வாகம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிந்து கடலில் அனுப்பி அதற்கு கீழே இருக்கின்ற அந்த லிக்னைட்டை எடுத்து எரித்து சாம்பலாக்கி நமக்கு கொஞ்சம் மின்சாரம் கொடுக்கிறது. இதற்கு மாவட்டத்தையே அழித்து விட்டது. காற்று மாசு ஆகி விட்டது. நிலம், நீர் அழிந்து விட்டது. அதில் இருந்து காப்பாற்ற வேண்டும். அழிச்சது போதும், தமிழ்நாட்டிலிருந்தே என்.எல்.சியை வெளியேற்ற வேண்டும்.

நான் சொல்லும் வாதங்கள் எல்லாம் தமிழ்நாடு இன்றைக்கு மின்மிகை மாநிலமாக மாறி விட்டது. தமிழ் நாட்டின் ஒருநாள் மின்சாரத் தேவை 18 ஆயிரம் மெகாவாட். தமிழ்நாட்டின் உற்பத்தி 36 ஆயிரம் மெகாவாட் உயர்ந்துவிட்டது. தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. என்எல்சி நிலத்தையும், மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் அழிச்சிட்டு இருக்காங்க. வயல்வெளியில் ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு பயிரை அழிக்கும் காட்சியைப் பார்த்து இருப்பீங்க, கதிர் விடும் நெல்லை அழிப்பது கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பது போல! எவ்வளவு வன்மம் அது. இன்னும் தமிழக அரசு அமைதியா இருக்கு. முதலமைச்சர் அமைதியா இருக்காரு. நான் விவசாயிகளின் தோழன் என முதலமைச்சர் சொல்கிறார். என்ன தோழன்? எதற்கு வேளாண் நிதிநிலை அறிக்கை போடுறீங்க?

என்.எல்.சி போராட்டத்தில் கல்வீச்சில் ஈடுபட்ட பாமகவினர்.

என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு உடந்தையாக உள்ளது. பல விஷயங்களில் மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு என்.எல்.சி விவகாரத்தில் மட்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதில் ஏதோ ரகசியம் உள்ளது. என்.எல்.சி. நிறுவனம் இனி நிலத்திற்காக, 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும், ஒரு பிடி மண்ணை கூட கொடுக்க மாட்டோம்.’’ என என்.எல்.சி விவகாரத்தில் மற்ற எந்தக் கட்சித் தலைவர்களைக் காட்டிலும், அதிக அக்கறை காட்டுவது போல பேசும் அன்புமணி, இந்த நியாயங்களை தாங்கள் பல வருட நெருக்கமாக உள்ள பாஜக தலைமையிடம் பேசி தடுக்க முயற்சித்து இருக்கலாமே! என்.எல்.சி விவகாரத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பாமக பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போதெல்லாம், திடீரென்று களத்திற்கு வந்து ஒரு நாள் அதிரடி ஷோ காட்டி, ஆவேசமாகக் பேசி அடுத்து சைலண்ட் மூடுக்கு போய்விடும். அதற்கு பின் மத்திய அரசு மனம் கோணாமல் தைலாவரம் தோட்டத்திற்குள் முடங்கிவிடுவார் அன்புமணி.

கம்யூனிஸ்டுகளின் கையறு நிலை;


இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றிதான் நிலக்கரி எடுக்கிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவுக்கு குறைந்துள்ளது. குடிநீருக்காகவும், காற்று மாசுபாட்டாலும், வீடுகள் விரிசல் விழுந்துள்ளன. இந்நிறுவனத்தால் ஒவ்வொரு நாளும் இப்பகுதி மக்கள் வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அப்படியிருக்க வேலைவாய்ப்புகளின் போது கூட குறிப்பிட்ட சதவீதம் இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அழிப்பது கண்டிக்கத்தக்கது. காவல்துறையை வைத்து மிரட்டி விவசாயிகளையும், கிராமப் புற மக்களையும் வஞ்சிக்கும் என்.எல்.சி நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆனால், என்.எல்.சி நிறுவனத்தை வெளியேறச் சொல்லும் கோரிக்கை ஏற்புடையது அல்ல”என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன்.

காவல்துறையை வேலை வாங்கும் அதிகாரம் என்.எல்.சிக்கு கிடையாது. தமிழக அரசுக்கே உண்டு. அதே போல தமிழக அரசின் மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும், தாசில்தாரும் உள்ளிட்ட அதிகாரிகள்   களத்தில் இறங்கி இவ்வளவும் நடக்கிறது! ஆனால், காவல்துறையையும், என்.எல்.சி நிர்வாகத்தையும் கண்டித்துவிட்டு ஸ்டாலின் மனம் கோணாத வகையில் ஒரு அறிக்கை தருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். ‘தனியாருக்கு தாரை வார்க்கடபடவுள்ள இவ்வளவு மோசமான ஆலையை வெளியேற்றக் கூடாது’ என்றும் குறிப்பிடுகிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என இரண்டுங்கெட்டான்தனமாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசனோ, ”என்.எல்.சி. மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், நிலத்தை கையகப்படுத்துவது மாநில அரசு தான். அறுவடை முடியும் வரை வாய்க்கால் வெட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ”கால அவகாசம் தந்து கழுத்தை அறுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார். அதாவது நிலத்தை தருவதில் ஆட்சேபனை இல்லை.

காங்கிரஸ் கட்சி குறித்து என்.எல்.சி விவகாரத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆகவே மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது போல மத்திய பாஜக அரசின் நிலைபாடே காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது என்ற முடிவுக்கே நாம் வரலாம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time