நெல்லிக்காயில் இத்தனை நன்மைகளா..!

-விஜய் விக்ரமன், MD(siddha)

நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்களும், வந்த நோயை விரட்ட நினைப்பவர்களும், முதுமையை வெல்லத் துடிப்பவர்களும் அதிக காசு செலவில்லாமல் உடல் நலம் பேண விரும்புபவர்களும் நெல்லிக் காயில் என்னென்னவெல்லாம் நன்மைகள் எனத் தெரிந்து கொள்ளுங்க.!

தமிழ் சங்கப் பாடல்கள் பலவற்றில் அதிகம் பேசப்பட்ட கனிகளில் ஒன்று நெல்லிக்கனி.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன்  தனக்கு கிடைத்த   சிறப்புமிக்க  முதுமையை தள்ளி வைக்கும் அரிய வகை நெல்லிக்கனியை ‘ஞானப்பெண்ணான’  ஔவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.  அதனைப் பெற்று  அதன் சிறப்பையும்,  மன்னனையும் வாழ்த்தினார் ஒளவை பிராட்டியார்.

உண்மையில் நெல்லிக்கனி வயது முதிர்வை தள்ளி வைக்கும் அரிய மூலிகை தான்.

நவீன ஆய்வுகளில் அது உயிராற்றல் மிக்கதும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துவதும், புற்றுநோய்க்கு சிறந்ததும், நீரிழிவு நோய்க்கு சிறந்ததும், நுண்ணுயிரி எதிர்ப்பு சக்தி நிறைந்த ஒன்றே என ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. [antioxidant, anti-inflammatory, anticancer, adaptogenic, anti-diabetic, nootropic, antimicrobial and immunomodulatory potential ]

அத்தகைய சிறப்புமிக்க நெல்லிக்கனியை கொண்டு பல மருந்துகள் சித்த மருத்துவத்தில் செய்யப்படுவதுண்டு,   திரிபலா சூரணம், மஞ்சள் நெல்லி மாத்திரை, நெல்லிக்காய் தைலம், நெல்லி தேனுரல் போன்ற பல மருந்துகள் உண்டு.

அவற்றுள் சிறப்பு மிக்க ஒன்று’ நெல்லிக்காய் லேகியம் ‘ஆகும்.

இது முக்கியமாக குழந்தைகளுக்கு உண்டாகும் ஆஸ்துமா,  நுரையீரல் சம்பந்தமான  பிரச்சனைகள், உடல் சூட்டால் உண்டாகும் இருமல், சளி போன்றவற்றை சரி செய்கிறது.

பெண்களுக்கு உண்டாகும்உடல்  வறட்சி,  உடல் சூட்டினால் முடி கொட்டுதல், மாதாந்திர சுழற்சி கோளாறு, இரத்த சோகை, போன்றவற்றை நீக்குகிறது.

பெரியவர்களுக்கு உண்டாகும் ,  பசிமந்தம், செரிமான கோளாறு , வாய்வு மலச்சிக்கல், சிறுநீர் கழிவதில் பிரச்சனை, சிறுநீர்த் தொற்று, சொட்டு சொட்டாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனை போன்றவற்றிற்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.

மொத்தத்தில் இது மிகச்சிறந்த குடும்ப நல மருந்தாக செயல்படுகிறது.

நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் உலக மருந்து மற்றும் உணவு  சந்தை வணிகமானது பல்லாயிரம் கோடிகளை தாண்டுகிறது.

வணிக நோக்கத்திற்காக செயற்கை நிறமி, மனம் , சுவை,  சேர்க்கப்பட்ட ஆரோக்கிய உணவு வகைகள், நெல்லிக்காய் சாறு,  ஜாம் வகைகள் பல சந்தையில் கிடைக்கப் பெற்றாலும், அவற்றின் மருத்துவ பயன்  கேள்விக்கு உள்ளானது.

நாம் நேரடியாக  நமக்கான உடல் நல உணவு பண்டங்களை  தற்சார்புடன் செய்து கொள்வதே மிகச் சிறந்ததாகும்.

நெல்லிக்காய் லேகியம் செய்முறை;

தேவையான பொருட்கள் :

நெல்லிவற்றல் – 500 கிராம் ( நெல்லிக்காயை வாங்கி கழுவி, கொட்டைகளை நீக்கி, பொடியாக நறுக்கி, வெயிலில் உலர விட்டு எடுப்பதே வற்றலாகும். )

தண்ணீர் – 1000 மி.லி

நாட்டு வெள்ளம் – 500 கிராம்

அதிமதுரம் – 70 கிராம்

உலர் திராட்சை – 100 கிராம்

பேரீச்சம்ப்பழம் – 100 கிராம்

திப்பிலி – 50 கிராம்

தேன் – 200 கிராம்

நெய் – 200 கிராம்

நெல்லி வற்றலை தண்ணீரில் போட்டு, அடுப்பில் நன்றாகக் கொதிக்க வைத்து எட்டுக்கு ஒன்றாய் சுண்ட வைத்து, இந்த கசாயத்தில் சர்க்கரையை சேர்த்து, பாகு செய்து, அதில் அதிமதுரம், உலர் திராட்சை, பேரீச்சம்ப்பழம், திப்பிலி இவைகளை அரைத்து சேர்த்து, நெய்விட்டுக் கிண்டி, மெழுகு பதத்தில் தேன் விட்டு பிசைந்து இறக்கி வைக்கவும்.

சாப்பிடும் அளவு:

5-10 கிராம் அளவு வீதம் இரண்டு வேளை  உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளவும்.

முன்பு சென்னை தாம்பரத்தில் செயல்படும்  அரசு  TB சானிடோரியம் மருத்துவமனையில் டாக்டர் சி.என்.  தெய்வநாயகம்  அவர்களால்  பெருமளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் செயல்பட்ட மிகப்பெரிய HIV  சிகிச்சை மருத்துவமனை இதுவே ஆகும்.

அங்கு RAN  therapy  (RasagandhiMezhugu, AmukkuraChooranam, NellikaiLegiyam)  என்ற பெயரில் நெல்லிக்காய்  லேகியத்துடன் மற்ற சித்த மருந்துகளையும் இணைத்து நோயாளிகளுக்கு   வழங்கப்பட்டு மிகச் சிறப்பான முன்னேற்றங்கள் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

டாக்டர் சி.என்.தெய்வநாயகம்

ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு பெறப்பட்ட   முடிவுகள் குறித்து டாக்டர் தெய்வநாயகம் மிகச் சிறப்பான ஆய்வு கட்டுரைகளை எழுதினார். அவை உலகப் புகழ் பெற்ற மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டன.

அந்த ஆய்வின் மூலம் நெல்லிக்காய் லேகியத்தின் மருத்துவ குணம் உலக அளவில்  தெரியவந்தது.  பல ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாள்  பல ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

இதன் மூலம் சங்க இலக்கியம் புறநானூறு பாடலில் ”ஔவை”  கூறிய  இறப்பை தள்ளி வைக்கும் மூலிகை நெல்லிக் கனி என்ற செய்தி பொய்யல்ல, என்று

மருத்துவர் சி.என்  தெய்வநாயகம் ஆய்வின் மூலம் நவீன யுகத்திலும் நிரூபிக்கப்பட்டது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த நெல்லிக்காய் லேகியத்தை நாமே சுயமாக  தயாரிப்பது நல்லது. இவ்வளவு மெனக்கிட முடியாதவர்கள் ஏதாவது ஒரு வகையில் நெல்லிக்கனியை சாப்பிடுவது பல விதங்களிலும் ஆரோக்கியம் மேம்படவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும். உடல் வெப்பத்தை தணித்து, கண்களுக்கு குளிர்ச்சி தரும். குடல் வாயுவை அகற்றும்.

நெல்லிக்கனியை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது துண்டு, துண்டாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து, தண்ணீர் கலந்து ஜுஸ் ஆக்கி சற்று தேனைக் கலந்து உட் கொள்ளலாம்.

நெல்லிக்காயை விதை நீக்கி, நன்கு வெயிலில் உலர வைத்து, பிறகு  அரைத்து எடுத்து அதை காற்று புகாத பாட்டிலில் வைத்து கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது வெட்டிய நெல்லிக் கனியை பாட்டிலில் போட்டு தேனில் ஊற வைத்து, சற்று வெயிலில் உலற வைத்து தினசரி கொஞ்சம் எடுத்து உண்ணலாம்.

குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்துவோம்.

தற்சார்பு அறிவே  நிறைவான வாழ்வு!

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன், MD(siddha)

சித்த மருத்துவ செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time