பத்ரி சேஷாத்திரி போட்ட அரசியல் கணக்கு!

-சாவித்திரி கண்ணன்

ஏதோ அவசரப்பட்டு நிதானமின்றி பத்ரி சேஷாத்திரி பேசவில்லை. திட்டமிட்டே தன் எதிர்கால அரசியல் கணக்கிற்கான துவக்கமாகவே பேசினார். அவர் எதிர்பார்த்ததும், அவரது நீண்ட கால ஆசையும் தற்போது நிறைவேறியுள்ளது! பத்ரி சேஷாத்திரியின் நுட்பமான செயல்களையும், தொடர் நகர்வுகளையும் அவதானித்தால்..,

எல்லா பிரச்சினைகளிலும் கருத்து சொல்லும் பொது மனிதனைப் போல தோற்றம் காட்டி வந்தவர் பத்ரி சேஷாத்திரி! நடுநிலையானவர் போல நிதானமாகவும், பதற்றமில்லாமலும் பேசுவார். மோசமான கருத்தைக் கூட சொல்லும் தன்மையில் ஏற்றுக் கொள்ள வைத்துவிடும் சாமார்த்தியமுள்ளவர். நெய் ஊறித் திளைத்து, நம்மை ஈர்த்து சாப்பிடத் தோன்றும் அல்வாவிற்குள் வைக்கப்பட்ட விஷத்தைப் போல, இந்துத்துவ சித்தாந்தத்தை தருவதில் கை தேர்ந்தவர்.

‘இவ்வளவு மென்மையாகவும், நுட்பமாகவும் பேசியும், செயல்பட்டும்,  வெகுஜனதளத்தில் பெரிதும் அறிமுகமான நிலையிலும் கூட பாஜக தலைமை தன்னை கவனிக்கவில்லையே…’ என கொஞ்ச காலமாகவே மன வருத்ததில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு பதிப்பகத்தில் எழுதி முக்கியத்துவம் பெற்ற ம.வெங்கடேசன் என்பவருக்கு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் பதவி கிடைக்கும் போது, எனக்கு எம்பி. பதவி தரக் கூடாதா…? என்ற ஆதங்கமெல்லாம் வெளிப்படுத்தி உள்ளார்.

”அப்போது அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் அதிரடியாகவும், குரூரமாகவும் பேசினாலும், எழுதினாலும் தான் பாஜக டெல்லித் தலைமையில் முக்கியத்துவத்தை பெற முடியும்’’ எனச் சொல்லியதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்தே சமீப காலமாக அதிரடி காட்டி வந்தார்.  ‘இந்தி மொழியில் ஒன்றும் பெரிதாக இல்லை’ என எப்போதோ சொன்ன அறிஞர் அண்ணாவை ‘இடியட்’ என்றும், தமிழர்களை ‘பொறுக்கிகள்’ என்றும் தாறுமாறாகப் பேசி வந்தார்.

அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த பத்ரி சேஷாத்திரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 2004 ல் கிழக்கு பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கினார். தொடக்கத்தில் பா.ராகவன் பதிப்பாசிரியராக இருந்தார். ‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என அம்பானி புகழ்பாடும் நூலில் ஆரம்பித்தது இந்த பதிப்பகம். ஆரம்பம் முதலே இந்துத்துவ கருத்தோட்டத்தில் ஆழ்ந்த பிடிமானம் இருந்தாலும், ஒரு பொதுத் தன்மை கொண்ட வியாபார நிறுவனம் போன்ற தோற்றம் காட்டுவதற்காக பலதரப்பட்ட மாற்றுக் கருத்தாளர்கள், எழுத்தாளர்களின் நூல்களைக் கூட ஆரம்ப காலத்தில் போட்டனர்.

பாஜகவின் கொள்கை பிரச்சார பீரங்கியாக கிழக்கு பதிப்பகத்தின் நூல்கள்!

பொதுவாக பார்ப்பன அறிவுஜீவிகளிடம் இருக்கும் விசேஷ குணமே தங்கள் ‘ஹிட்டன் அஜந்தாவை’ வெகு சமார்த்தியமாக மறைத்துக் கொண்டு, பொதுத் தன்மை கொண்டவர்களைப் போல தங்கள் இமேஜை வளர்த்துக் கொள்வது தான்! சோ.ராமசாமி, மாலன், தினமணி வைத்தியநாதன், கார்டூனிஸ்ட் மதன்.. இப்படி பலரை சொல்லலாம். அந்த வகையில் சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் ஒரு வெற்றிகரமான பதிப்பாளாராக இந்துத்துவ கொள்கைகளை தமிழ் சமூகத்தில் பரப்பி இயங்கி வந்தவர் தான் பத்ரி சேஷாத்திரி.

ஐந்து வருடங்களிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை பதிப்பித்து கவனத்தை ஈர்த்த பத்ரி வெளியிட்ட நூல்கள், அதன் ஆசிரியர்கள் பட்டியலை பார்த்தாலே இந்தப் பதிப்பகம் இந்துத்துவ விதைகளின் நாற்றங்காலாக இருந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.

ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்கள்!

சாவர்க்கரின் அந்தமான் சிறை அனுபவங்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும், ஆர்.வெங்கடேசின் ‘மோடியின் இந்தியா’, ‘யோகி – ஒரு ஆன்மீக அரசியல்’, ரங்கராஜ் பாண்டேவின் ‘கறுப்பு,சிவப்பு, காவி’, ‘ஆன்மீக அரசியல்’, ‘புதிய கல்விக் கொள்கை’.. உள்ளிட்ட நூல்கள், மாரிதாஸின், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்..’ உள்ளிட்ட நூல்கள் கிருஷ்ணசாமியின் தேசமே உயிர்த்தெழு, ம.வெங்கடேசனின், ‘இந்துத்துவ அம்பேத்கர்’, ‘மறைக்கபடும் ஈவெ.ரா’ போன்ற அம்பேத்கர், பெரியார் குறித்த விஷமத்தனமான கருத்துக்களைக் கொண்ட நூல்கள்..எனப் பல கொண்டு வந்துள்ளார்.

தொடக்க காலம் முதலே அவரது பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கவனித்து வருபவர்களுக்கு அவர் சமரசமற்ற ஒரு சனாதன ஆதரவாளர் என்பதில் சந்தேகமே வராது. ஆனால், இவ்வளவு மதி நுட்பமும், சாதூர்யமும் கொண்ட அவருக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ‘அவதூறுகளை அள்ளிவீசியும், அநீதிகளை அப்பட்டமாக அதரித்தும் பேசினால் தான் இன்றைய பாஜகவிடம் பதவி அங்கீகாரம் கிடைக்கும்’ என திட்டமிட்டு தான் பத்ரி, தாங்கொணா அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியையே தரக் குறைவாக விமர்சித்துள்ளார்.

”அது காம்பளஸ் ஆன மலைப்பாங்கான இடம். அப்படியான இடத்துல இப்படித் தான் கொலைகள் நடக்கும், எல்லாம் நடக்கும். இரண்டு சமூகம் அடிச்சிகிட்டாங்க..ஏன் அடிச்சிகிட்டாங்க.. அதையெல்லாம்  முன் கூட்டியே தடுத்திருக்க முடியுமா ? முடியாது. அங்கென்ன சூழல் எனத் தெரியாமல் சம்மந்தா சம்பந்தம் இல்லாமல் பேசக் கூடாது.. சுப்ரீம் கோர்டு என்ன பேசறது.. அரசு செய்யறதுல என்ன குறை கண்டீங்க என்னவோ இவரு.. ( நீதிபதி) துப்பாக்கிய எடுத்துட்டு போக வேண்டியது தானே.. ” என திட்டமிட்டு பொறுப்பில்லாமல் பேசி, வன்முறைகளை நியாயப்படுத்தி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கினார்.

இப்படி அப்பட்டமாக வன்முறையை,கொலையை ஆதரித்ததால் அவர் நினைத்தபடியே தமிழக மக்கள் கொந்தளித்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுப் பெற்றது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. இதைத் தான் பத்ரி எதிர்பார்த்தார். அவரை கைது செய்யும் போது முகம் நிறைய சிரிப்போடு கைதானதை நாம் கவனிக்க வேண்டும். அவரது கைதுக்கு எதிராக பாஜக முக்கியஸ்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். அகில இந்திய கவனத்தை பெற்ற வகையில், இந்த கைது அவரது எதிர்காலத்திற்கு  ஒரு பெரிய நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது! தற்போது சிறையில் இருந்து கொண்டே அண்ணாமலை பாத யாத்திரை தொடர்பான போட்டோகளை ரீடிவிட் செய்துள்ளார்.

”பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தேன், ஏனோ, அதிகம் சந்தோஷப்பட்டேன்..” என்றும், எல்லா வகையில்ம் மத்திய ஆட்சியை ஆதரித்தும், திராவிடம், இட ஒதுக்கீடு, தமிழ் உணர்ச்சி போன்றவற்றை கொச்சைப்படுத்தியும் பேசி வந்த போதிலும், தமிழ் இணைய கல்வி கழகத்தில் ஒரு உறுப்பினராக பதவி கொடுத்து பத்ரியை பெருமைபடுத்தியது திமுக அரசு. இது சமீபகாலமாக திமுகவினர் மத்தியிலேயே கடும் அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இப்படி மனிதாபிமானமற்ற வகையில் பெண்களை நிர்வாணபடுத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்டதை ஆதரிக்கதக்க வகையிலும், உச்ச நீதிமன்ற நீதிபதியை இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய பத்ரி சேஷாத்திரியை கைது செய்ய வேண்டும் என்ற ஆவேச மனநிலை மக்களுக்கு ஏற்பட்டது.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்

தன் நோய் போல் போற்றாக்கடை!

எவ்வளவு அறிவு இருந்தென்ன? மற்றவர் துன்பத்தை உணர முடியாத இதயம் வாய்த்த பத்ரி போன்ற மனிதர்களுக்கு! எவ்வளவு ஆதிக்க மனோபாவம்! எவ்வளவு ஆணவம்!

எனினும், இந்த காவல்துறை கைது பத்ரி சேஷாத்திரியின் ஆதாய அரசியலுக்கே வாய்ப்பாகிவிட்டது. பத்ரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வைத்திருந்தால், அந்த கைதுக்கு இன்னும் நியாயம் சேர்ந்திருக்கும். அது அவரது அரசியலுக்கு செக் பாயிண்டாக ஆகியிருக்கும். அவருக்கு ஆதரவாகப் பேச யாருக்கும் துணிவு வந்திருக்காது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time