இளம் வீரர்களுக்கு ஈகோவும், திமிரும் உள்ளது – கபில்தேவ்

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் கபில்தேவ். மிகுந்த நேர்மையாளர். சமரசமற்றவர். இதனால் அவர் இழந்தது அதிகம். மனதில் பட்டதை  உடனே வெளிப்படுத்துபவர். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் குறித்தும், கிரிக்கெட் வாரியம் குறித்தும் கபில்தேவின் விமர்சனம் கவனம் பெற்றுள்ளது.

தற்போது நமது சொந்த மண்ணிலும் நடைபெறப் போகும் உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?  2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இரண்டு முறையும் அரையிறுதியில் தோல்வியை தழுவியது. இதேபோன்று 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்தியா வெற்றி பெறவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

இந்தச் சூழலில் கபில்தேவ் மனம் திறந்து பேசியுள்ளார்; தற்போதெல்லாம் வீரர்களுக்கு  பணம் கொழிக்கும் ஐ.பி.எல்லில் தான் அதிக நாட்டம். நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதிக அளவு காசு, பணம் வந்துவிட்டதால், ஈகோவும், திமிரும் கூடவே வந்து விட்டது. இதனால் கிரிக்கெட்டில் நமக்கு எல்லாம் தெரியும். நமக்கு யாருடைய உதவியோ, ஆலோசனையோ தேவையில்லை என்று நினைகிறார்கள்…” என்றெல்லாம் கபில்தேவ் வைத்த விமர்சனங்கள் பலனளித்துள்ளது.

இந்தச் சூழலில் அயர்லாந்து சுற்றுப் பயணம் சென்று டி20 போட்டிகளிலும் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று இரவு அறிவித்தது. அதில் சுமார் ஓராண்டாக காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த சிறந்த வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா தான் கேப்டன் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


2023 உலகக் கோப்பை இந்தியாவிலும் போட்டிகள் நடைபெற உள்ளது . 2011-க்குப் பிறகு உலகக் கோப்பையை 3-வது முறையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், உலகக் கோப்பைக்கே தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் காயமடைந்துள்ளதாக காரணம் கூறி ஓய்வு எடுத்துக் கொண்டனர்.விளையாட வரவில்லை. இதனால் அணிக்குத் வீரர்கள் தேர்வில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்நிலையில், கபில் தேவ் மனம் திறந்து  முன்வைத்துள்ள விமர்சனம் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரது உள்ளத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் இலக்கை விரட்டும்போது 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 2வது ஒருநாள் போட்டியில் தோற்றே போனது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களைக் கையாள்வதில் சோடை போயுள்ளது என்று தான் கூற வேண்டும்.

“ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில், அவரை நம்பி பயன் இல்லை. அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் அனாவசியமாக கால விரயம் செய்கிறோம் என்றே பொருள்.

ரிஷப் பந்த் காயமடைந்ததால் நம் டெஸ்ட் கிரிக்கெட்டும் சற்றே பின்னடைவு கண்டுள்ளது, ரிஷப் பண்ட் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர். நான் காயமடையாமல் ஆடினேன் என்று சொல்வதற்கில்லை. ஆண்டவன் கருணையால் எனக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 மாதங்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். சந்தேகத்தின் பலனை இதற்கு அளித்தோமானால் அனைவரும் தங்கள் உடம்பை தாங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் ஆண்டு முழுவதும் விளையாடும் போட்டிகளின் அளவை ஆராய வேண்டும்

ஐபிஎல் முக்கியம் தான்; ஆனால், அது வீரர்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவதும் உண்டு. இதனால், தேசத்திற்காக ஆடும் விளையாட்டுகளில் பின்னடைவே ஏற்படுகிறது.

கொஞ்சம் காயமடைந்தாலும் கூட ஐபிஎல் ஆட முடிகிறது. ஆனால், நாட்டுக்காக ஆட முடிவதில்லை. பிரேக் கேட்கிறார்கள். நான் இந்த விஷயத்தில் ஓபனாகவே இதைத் தான் கேட்கிறேன். சிறிய காயம் என்றால் முக்கியமான போட்டி என்று ஐபிஎல் போட்டியில் ஆட முடிகிறது. ஆனால், நாட்டுக்காக என்று வரும் போது ஓய்வு கேட்கின்றனர், விடுப்பு கேட்கின்றனர்.

வீரர்களால் எத்தனை போட்டிகளில் ஆட முடியும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அடிக்கோடு. இன்று வள ஆதாரங்கள், பணம் இருக்கலாம்; ஆனால், 3 அல்லது 5 ஆண்டுகால கிரிக்கெட் காலண்டர் உங்களிடம் இல்லை. கிரிக்கெட் வாரியத்திடம் ஏதோ தவறு இருக்கின்றது” என்று கபில் தேவ் சூசகமாக விமர்சித்துள்ளார்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time